தூக்கிலிரு​ந்து மன்னிப்பு

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனையை ஜனாதிபதி உறுதி செய்திருக்கிறார். கருணைமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மரணதண்டனை நிறைவேற்றப்படலாம் என்று தெரிகிறது.

இந்திய நீதிமன்றங்களில் பொதுவாக ஊழல்களும் தவறுகளும் உண்டு என்பது ரகசியமல்ல. ஆனால் அவை பெரும்பாலும் குற்றவாளிகளை சட்டத்தின் ஓட்டைகள் வழியாக வெளியேவிடுவதிலேயே உள்ளன. சந்தேகத்தின் பலன் [benefit of the doubt ] போன்று அதற்கு வசதியான சில சந்துகளும் நம் சட்டத்தில் உள்ளன. பிரம்மாண்டமான இந்த தேசத்தின் பெருகிவரும் வணிகம் மற்றும் சமூக உறவுச்சிக்கல்களை சமாளிக்கும்படியாக இந்திய நீதித்துறை நவீனப்படுத்தப்படவில்லை. அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் இல்லை. ஆகவே இங்கே நீதி எப்போதும் மிகமிகத் தாமதமாகவே வருகிறது. அது அநீதிக்குஇணையாகிவிடுகிறது.

ஆனால் இந்திய நீதித்துறையின் உயர் மட்டத்தில் நீதிபதிகள் அடிப்படைநேர்மையுடனும் நீதிபதி என்ற இடம் குறித்த பெருமிதத்துடனும்தான் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். சமீபத்திய பல வழக்குகளை அதற்கு உதாரணமாகக் கூறலாம். திருப்பூர் சாயக்கழிவு வழக்கு முதல் ஸ்பெக்ட்ரம் வழக்கு வரை கோடிகளைக் கொட்டத் தயாராக இருக்கும் குற்றவாளிகளால் நீதிபதிகளை நெருங்கவே முடியவில்லை என்பதே அதற்குச் சான்று. இன்றும் அரசாங்கத்தின் ஏகாதிபத்தியப்போக்கையும் அரசியல்வாதிகளின் ஆணவத்தையும் கட்டுப்படுத்தும் சக்தியாக நம் நீதிமன்றங்கள் இருப்பது எத்தனையோ வழக்குகள் வழியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்திய நீதித்துறை இன்றைய ஊழல்மிக்க இந்தியாவின் பெருமிதம் மிக்க முகங்களில் ஒன்றுதான்.

ஆகவே எனக்கு இந்திய நீதிமன்றங்கள் மேல் நம்பிக்கை உண்டு. இந்திய நீதித்துறையின் உச்சிவரை சென்ற ஒரு வழக்கில் அநீதி இழைக்கப்பட்டிருக்க வாய்ப்பு மிகமிகக் குறைவு. அதிலும் சர்வதேச கவனம் பெறும் வழக்குகளில் அந்த வாய்ப்பு கண்டிப்பாகக் கிடையாது. போதிய ஆதாரங்களைக் கொடுக்காமல் நீதிமன்றத்திலிருந்து ஒருவரை அரசால் தப்பவைக்கமுடியும், ஆனால் ஒரு நிரபராதியை அப்படி எளிதாக தண்டிக்கச் செய்யமுடியாது.

ஒரு குறிப்பிட்ட இன-மொழி-சமூகக் குழுவைச் சேர்ந்தவர்கள் தண்டிக்கப்படும்போது, அது எவ்வளவு பெரிய சமூகக் குற்றமாக இருந்தாலும், அதை உணர்வுபூர்வமான ஒரு விஷயமாக அந்தக் குழுவினர் எடுத்துக்கொண்டு இந்திய நீதித்துறைக்குக் களங்கம் கற்பிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அப்சல் குரு போன்று  பாராளுமன்றத் தாக்குதலில் எளிய மக்களைக் கொன்று குவித்த தேசவிரோத சதிகாரர்களைக்கூட உச்சநீதிமன்றம் வரை எல்லா வாய்ப்புகளும் வழங்கப்பட்டு தண்டிக்கப்பட்ட பின்னரும் இந்திய அரசு தண்டிக்க தயங்குகிறது. காரணம் அது இங்கே மதப்பிரச்சினையாக ஆக்கப்பட்டுவிட்டது.

இந்தப்போக்கு மிகமிக ஆபத்தானது. காலப்போக்கில் நீதிநடைமுறைப்படுத்தப்படுவதையே இல்லாமலாக்கும். நீதி நிகழும் என்ற நம்பிக்கையை சமூகத்தில் இருந்து அழிக்கும். ஆகவே இம்மூவரும் நிரபராதிகள் என்றும்,நீதிமன்றம் இந்திய அரசின் கைப்பாவையாக அநீதியில் ஈடுபட்டுள்ளது என்றும், வடவர் தமிழரைக் கொல்கிறார்கள் என்றும் இன்று செய்யப்படும் பிரச்சாரம் மிகப்பிழையானது.  இந்த காலியான உணர்ச்சிவேகம் நடைமுறையில் இன்று மரணமுனையில் நிற்கும் இம்மூவருக்கும்கூட பெரும் தீங்கு செய்யக்கூடியது.

ஆகவே ராஜீவ்காந்தி கொலைவழக்கின் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இங்கே எழுப்பபடும் நீதிமன்றம் மீதான அவதூறும் சரி, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு பிரிவினைவாதக் கசப்புகளை உருவாக்கும் குறுகிய அரசியல்முயற்சிகளும் சரி, அதை ஒட்டி உருவாகும் மனக்கொந்தளிப்புகளும் சரி என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாதவையே.

ஆனால் இந்த மூவரும் இரண்டு காரணங்களால் மன்னிக்கப்படலாமென நான் நினைக்கிறேன். ஒன்று, கிட்டத்தட்ட கால்நூற்றாண்டுக்காலம் இவர்கள் சிறைக்குள் இருந்திருக்கிறார்கள். அது மிகப்பெரிய தண்டனை. அதன்பின் தூக்கு என்பது ஒரே குற்றத்துக்கு இரு தண்டனை ஆகும். ஏற்கனவே இந்திய நீதிமன்றங்கள் இதற்கிணையான சந்தர்ப்பங்களில் பெருந்தன்மையாகச் செயல்பட்டிருக்கின்றன. நான்குமுறை தூக்கு தண்டனை ஒத்திவைக்கப்பட்ட ஒரு குற்றவாளி அடைந்த மனவலியையே தண்டனையாக எடுத்துக்கொண்டு அவருக்கு தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட தருணம் இங்குண்டு.

இரண்டாவதாக, இவர்கள் அரசியல் குற்றவாளிகள். சாதாரணக் குற்றவாளிகளுக்கும் அரசியல் குற்றவாளிகளுக்கும் கண்டிப்பாக வேறுபாடுண்டு. அரசியல்குற்றங்கள் என்பவை இலட்சியவாதத்தாலும் கருத்தியலாலும் தூண்டப்படுபவை. இவர்கள் அக்குற்றங்களை எந்த சுயநலத்துக்காகவும் செய்யவில்லை. அவர்கள் நம்பி ஏற்ற ஒரு கொள்கைக்காகவே செய்திருக்கிறார்கள். கருத்தியல் என்பது மனிதனின் பகுத்தறிவை, கருணையை எல்லாமே மறைக்கும் வல்லமை கொண்டது. அதிலும் குறிப்பாக இளம்வயதில்.

இவர்கள் இக்குற்றங்களில் ஈடுபட்டிருக்ககூடிய அந்தக் காலகட்டத்தில் அந்த வயதில் நானும் இதே கருத்தியலை நம்பக்கூடியவனாக, இதே உத்வேகங்களும் உணர்ச்சிகளும் கொண்டவனாகவே இருந்தேன். எண்பதுகளில் தமிழக இளைஞர்களில் முக்கால்வாசிப்பேர் அப்படித்தான் இருந்திருப்பார்ககள். இளமையின் வேகத்தில் இவர்கள்செய்தவற்றை எல்லாம் செய்திருக்கக் கூடியவனாகவே நானும் இருந்திருக்கிறேன். இவர்கள் செய்தார்கள் என்பதே வேறுபாடு.

ஆகவே இவர்கள் செய்த குற்றத்துக்கு இவர்களை மட்டுமே பொறுப்பாக்க முடியாது. அதனாலேயே இவர்கள் கருணைக்குரியவர்கள். இந்த நிலைப்பாட்டை இந்திய அரசும் நீதிமன்றமும் நாகா, மணிப்பூர் தீவிரவாதிகளின் விஷயத்தில் பலமுறை எடுத்திருக்கிறது.

உடனே, தீவிரவாதிகளை அரசியல்குற்றவாளிகளாகக் கருதலாமா என்று கேட்கலாம். அந்தத் தீவிரவாத அமைப்பும் கிளர்ச்சியும் நீடிக்கும்போது அப்படிக் கருதமுடியாது போகலாம். ஆனால் அந்த அமைப்பே அழிந்து வரலாற்றின் பக்கங்களில் ஒன்றாக ஆனபின்னர்,   அவர்களைத் தீவிரவாதிகளாகக் கருத முடியாது. அவர்கள் இனிமேல் செய்வதற்கொன்றும் இல்லை.

ஆகவே இந்த மூவரையும் விடுதலைசெய்வதே இந்திய அரசும் நீதிமன்றமும் செய்யக்கூடிய மாண்புக்குரிய செயலாக இருக்கும். குறைந்தபட்சம் இவர்களின் மரணதண்டனையை ரத்துசெய்யலாம். இவர்களை எதிரிகளாக அல்ல, தவறிழைத்தவர்களாகவே இந்திய அரசும் நீதிமன்றமும் கருதவேண்டுமென நினைக்கிறேன். இந்த விஷயத்தில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோரின் உணர்வுகளை அரசு கணக்கில்கொள்ளவேண்டும். இந்த விஷயத்தில் நிகழும் எல்லா சமூகப்போராட்டங்களையும் நான் ஆதரிக்கிறேன்

இம்மூவருக்கும் தண்டனை வழங்கப்பட்ட காலத்துக்கும் இப்போது நிறைவேற்றம் நெருங்கிய காலகட்டத்துக்கும் இடையேயான நீண்ட இடைவெளியை கருணைக்கான ஒரு முகாந்திரமாக நீதிமன்றத்தில் முன்வைத்து மீண்டும் ஒரு மறுபரிசீலனை மனு தாக்கல்செய்ய வாய்ப்புண்டு என்றே நினைக்கிறேன், சமானமான இரு வழக்குகள் பற்றி வாசித்தது நினைவில் வருகிறது.

வழக்கம்போல இந்தியப் பொதுச்சமூகத்தின் மனசாட்சியை நோக்கி இந்த விஷயத்தைக் கொண்டுசெல்லும் அறிவுஜீவிகள் நமக்கில்லை என்பதை இத்தருணத்திலும் பெரும் குறையாகவே உணரமுடிகிறது. மொழியரசியலையும் சாதியரசியலைலும் பிரிவினைவாத அரசியலையும் பேசும் நம் முதிர்ச்சியற்ற எழுத்தாளர்கள் இவ்விஷயத்தின் மனிதாபிமான அம்சத்தை மழுங்கடித்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறேன். தேசிய ஊடகங்களில்கூட  வெறும் பரபரப்புக்காக இந்திய எதிர்ப்பு நிலைப்பாடுகளைக் கக்கும் வெற்றுக் கட்டுரையாளர்களின் வரிகள் எந்த சலனத்தையும் உருவாக்காது, தீங்கையே இழைக்கும். வி.ஆர்.கிருஷ்ணையரின் குரல் மட்டுமே இந்த தளத்தில் இன்று மதிக்கத்தக்கதாக ஒலிக்கிறது. இந்த ஆதரவுத்தளத்தை விரிவடையச்செய்யவேண்டும்

இது வெற்றிபெறவேண்டுமென்றால் இக்கோரிக்கை எந்த மனிதரும் மறுக்கமுடியாத தூய மனிதாபிமான அறைகூவல் என்றே முன்வைக்கப்படவேண்டும். அரசியலாக அல்ல.அது இன்று நிகழவில்லை. என் நண்பர்களான மலையாள, கன்னட எழுத்தாளர்களும் இதழாளர்களும் இந்த விஷயத்தின் இதுவரை எழுந்த குரல்களை வன்முறையை மொழிவெறி காரணமாக நியாயப்படுத்தும் முயற்சியாகவே இதைக் காண்கிறார்கள். அவர்கள் இருபது பேருக்கு எழுதிய கடிதத்தின் சாரமே இக்குறிப்பு.

இந்த மூவரின் உயிரும் முக்கியமானவை. அவற்றுக்கான போராட்டம் இன்னும் வேகம் பிடிக்கவேண்டும். பொதுவாக அதீதமாக உணர்ச்சிவசப்பட்டுவிட்டு உடனே விலகிவிடுவது தமிழ் இயல்பு. தமிழின் உதிரி இளைஞர்களுக்கு அப்பால் சிவில்சமூகம் அரசியலுக்குள் வருவதே இல்லை, கவனிப்பதும் இல்லை. மேலும் பெரும்பாலும் பெண்கள் அடங்கிய நம் சிவில்சமூகம் தமிழக மண்ணில் ராஜீவ் கொல்லப்பட்டமையாலேயே அக்கொலையாளிகள் மீதும் விடுதலைப்புலிகள் மீதும் கடுமையான கசப்புடன் இன்னமும் இருக்கிறது. முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து சில நாட்களிலேயே தமிழக மக்கள் காங்கிரஸுக்கே வாக்களித்தார்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது.

ஆகவே இப்போது வெறும் அறிக்கைகள் ,  அதிகார அரசியல்வாதிகளின் செப்படிவித்தைகள் போன்றவை உதவாது. அவை ஒரு சிறிய அலையை உருவாக்கி மறைந்து போகும். இந்தப் போராட்டத்தில் பிரிவினைக்கோரிக்கைகளை எழுப்புவதும் வெறுப்பின் மொழியைக் கக்குவதும் இம்மூவரையும் மேலும் மரணம்நோக்கி தள்ளவே உதவும்.  உடனடியாக தேசிய கவனத்தை ஈர்க்கும்பொருட்டு கட்சி அரசியலுக்கும் இனமொழிக் காழ்ப்புகளுக்கும் அப்பாற்பட்ட, மனித உரிமைகள் விஷயத்தில் தன் அர்ப்பணிப்பை நிரூபித்த சிலர் ஒரு உண்ணாவிரதத்தை ஆரம்பித்தால்கூட நல்லதென்றே நினைக்கிறேன்

ஓர் எழுத்தாளனாக என் எளிய சொற்களும் ஒரு பொதுக்கருத்தை உருவாக்க உதவட்டும்.

முந்தைய கட்டுரைஅண்ணா ஹசாரே- காந்திய போராட்டமா?
அடுத்த கட்டுரைஅண்ணா -ஓர் உரையாடல்