https://venmurasu.in/
வெண்முரசு விவாதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
நான் சமீபத்தில் வெண்முரசின் பத்தாவது நூலான பன்னிரு படைக்களத்தை வாசித்து முடித்தேன். அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நூலின் இரு அடிப்படைகளாக நான் உணர்ந்தது இணைவது பிரிவதும், பேரன்னை முன் தருக்கி மடியும் ஆணின் ஆணவமும். முதல் அத்தியாயமான சித்திரையில் உள்ள ரம்பகரம்பனில் தொடங்கி ரக்தபீஜனில் முடியும் கதையிலிருந்தே அதை உணர முடிந்தது.
இது வரை கதையில் அவ்வப்போது வந்து சென்ற ஜராசந்தனின் தோற்றக்கதை ஆச்சர்யமூட்டுவதாக இருந்தது. கையில் குழந்தையுடன் உறைந்து நிற்கும் ஜரை அன்னையின் குகை ஓவியம் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இங்கும் ஜராசந்தனின் அன்னையர் அனிகையும் அன்னதையும் இணைந்து பிரிகின்றனர்.
வெண்முரசில் வரும் அமைச்சர் கதாபாத்திரங்களையும் அவர்களின் தர்க்கங்களையும் நான் பெரிதும் விரும்புவேன். இங்கு ஜராசந்தனுக்கும் அமைச்சர் பத்மருக்கும் நடக்கும் ஆட்டத்தில் ஜராசந்தன் தனது ஈவிரக்கமற்ற மூர்கத்தால் வெல்வது திகைப்படைய வைப்பதாக இருந்தது.
அஸ்தினபுரியை காகங்கள் சூழும் அத்தியாயம் எனக்கு விஷ்ணுபுரத்தின் இறுதி பகுதியின் நினைவுகளை தூண்டியது. மழைப்பாடலில் மகத மன்னன் அனுப்பிய குதிரை சவுக்கை சகுனி எடுத்து வைத்தது முதல் இந்த கதை எங்கு முடியும் என்ற ஆவல் என்னுள் இருந்தது. விதுரர் அதை நினைவுபடுத்த சகுனி கணிகரையும் மீறி ஒரு நொடியில் மகதத்தின் படைக்கூட்டை நிராகரித்த போது அதற்கான விடை கிடைத்தது.
மகதத்தின் மழைவிழாவின் போது நாக வேள்வியையை நிறுத்த கண்ணனும், அர்ஜுனனும், பீமனும் செல்லும் அத்தியாயம் ஒரு வேகப்புனைவு போல் இருந்தது. ஜராசந்தன் நாக வேதத்தை மணிபூரகத்தையும் தாண்டிய காட்டில் இருந்து மீட்டதாக படிக்கும் போது அது இன்றைய நாகலாந்தா என்று எண்ண வைத்தது. நாக வேதத்தை மீட்டதில் என்ன தவறு என்று நான் எண்ணியிருந்த போது அதற்கான பதிலை கண்ணனே விரிவாக ஜராசந்தனுக்கும் (எனக்கும்) கூறினான்.
ஸ்நாதக பிராமண வேடத்தில் பீமன் ஜராசந்தனிடம் ஆசிபெரும் போது அவனை மீறி பீமனின் வெற்றிக்கு ஜராசந்தன் வாழ்த்தும் போதும், தன் மகன் சகதேவனுக்கு கண்ணனின் வாழ்த்து கிடைத்தவுடன் ஜராசந்தன் கொள்ளும் நிறைவும் கண்ணீர் வரவைத்தது. “பீமன் – ஜராசந்தன்” மற்போரை படிக்கும் போது சிறுவயதில் பார்த்த தொலைக்காட்சி மகாபாரதத்தில் கண்ணன் ஒரு இலையை இரண்டாக பிய்த்து பொருந்தாத வகையில் மாற்றியமைத்த காட்சி நினைவுக்கு வந்தது. ஜராசந்தன் செய்த அனைத்து கொடுமைகளையும் அறிந்திருந்தாலும் அவனது மரணம் எனக்கு பெரும் துயரத்தையே அளித்தது. நீங்கள் “Jurassic Park” சினிமா பற்றி கூறும் போது அதில் டைனோசர்களின் ஆற்றலே மக்களை ஈர்த்ததாக கூறியிருந்தீர்கள். இங்கும் எனக்கு அதுவே நிகழந்தது.
ஜராசந்தனின் மரணத்திற்கு பிறகு ராஜசூயத்திற்கு தடையாக சிசுபாலன் மட்டுமே எஞ்சுகிறான். அவனுடைய வஞ்சமும் “Butterfly Effect” போல தற்செயல்களின் தொடரால் கம்சனின் இருந்து சுருதகீர்த்திக்கு வந்து அவனிடம் சேர்கிறது. அவன் தந்தை தமகோஷர் வீரம் பற்றியும் ஒரு நாட்டின் அரசன் எதன் பொருட்டு போர்புரிய வேண்டும் என்றும் அவனுக்கு கூறும் அறிவுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நாம் சிலர் மீது கோபத்தில் இருக்கும் போது அவர்களை நேரில் சந்தித்து அவர்களின் ஒரு புன்னகையில் நம் கோபம் இல்லாமலாகிவிடும். பீமனின் அரவணைப்பில் சிசுபாலன் மனம் மாறும் போது அதை எண்ணிக்கொண்டேன்.
ராஜசூய வேள்வியில் பாண்டவர்களும் கெளரவர்களும் இணைந்து இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. இது எவ்வாறு என நான் எண்ணியிருந்த போது கர்ணன் மதுபர்கசடங்கிற்கு பின் அனைத்தும் சுமூகமாக ஆரம்பித்து இறுதியில் இவ்வாறு முடிந்து விட்டதே என கூற நானும் அவனுடன் வருந்தினேன். இந்திரப்ரஸ்த நகர் விழாவில் துரியோதனன் மனவிரிவுடன் இருந்தபோது பாண்டவர் அவனை புறக்கணிப்பதும் இப்போது அதுவே மாறி நடப்பதும் ஊழின் விளையாட்டாக தோன்றியது. துரியோதனன் பானுமதியை அடிக்கும் வரை அவனையும் பாண்டவர்களையும் இணையாகவே கருதி வந்தேன். ஆனால் அதன் பின் என்னுள்ளே அவனது பிம்பம் சரியத்தொடங்கியது.
நூலின் கடைசி அத்தியாயம் படிக்கும் போது ஒரு பெரும் பேரழிவை நோக்கிச்செல்லும் பதட்டத்தையும் பயத்தையும் உணர்ந்தேன். பகடை ஆட்டத்திற்கு முந்தய நாள் திருதராஷ்டிரர் துரியோதனனிடம் வந்து மன்றாடி தோற்றுப்போய் வெளியேறுவது வேதனையாக இருந்தது. கர்ணன் தன் சமநிலையையும் அறவுணர்வையும் மீறி துரியோதனன் போலவே மாறுவது எனக்கு ஆச்சர்யமாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. பேரன்னையரின் உலகில் வஞ்சம் ஏதும் இல்லை என்பது காந்தார அரசியரும் திரௌபதியும் மகிழ்ச்சியுடன் பழகியதில் தெரிந்தது.
பகடை ஆட்டத்தின்போது பன்னிரு படைகளத்தில் உள்ள தெய்வங்களும் கதாபாத்திரங்களாகி வருவதை நான் மிகவும் ரசித்தேன். அப்போது மீண்டும் முதல் அத்தியாயத்தின் நினைவே எழுந்தது. எனக்குள்ளே விகர்ணனின் குரல் இருந்தாலும் மாமாகிடனும் இருப்பதை உணர்ந்தபோது திடுக்கிட்டேன். திரௌபதி துகிலுரியப்படும்போது கண்ணன் எவ்வாறு வருவான் என எண்ணியிருந்த போது துச்சாதனனின் மனைவி அசலை, துரியோதனின் மகள் கிருஷ்ணை மற்றும் பிற கவுரவ அரசியர் மூலம் அவர் தோன்றுவது உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் சிந்தவைத்தது.
அன்புடன்
கார்த்திக்
கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில்
அன்புள்ள கார்த்திக்
பன்னிரு படைக்களம் எனக்கும் ஒரு முக்கியமான நாவலாக இருந்தது. அதை எழுதியபோதுதான் வெண்முரசின் முழுவுருவையும் ஓரளவேனும் என்னால் காணமுடிந்தது. இப்போதும் அந்நாவலை முடிக்கையில் எனக்கிருந்த பதற்றத்தை என்னால் உணரமுடிகிறது.
ஜெ