https://venmurasu.in/
வெண்முரசு விவாதங்கள்
அன்புள்ள ஆசானுக்கு,
மீண்டும் மீண்டும் வெண்முரசு என்னும் கடலில் மூழ்கிக் கொண்டே இருக்கிறேன். அதைத்தான் நானும் விரும்புகிறேன் என்றாலும் இந்த முறை பலமான அடி.
வெண்முரசை வரிசையாக அல்லாமல் தோன்றும் நாவலை வாசிப்பதே என் வழக்கம். மீண்டும் மீண்டும் மீள் வாசிப்பு.
இதற்கு முன்பு கூட நான் இந்திர நீலம் வாசித்துள்ளேன். அப்போது அது இளைய யாதவரின் மண உறவு பற்றியது, சியமந்தக மணி பற்றியது என்றே என் உளப்பதிவு.
மீண்டும் தொடங்கி இன்று நான் கடைசி பக்கம் முடித்த போது மண்டையில் யாரோ அடித்த ஒரு உணர்வு. இந்திர நீலம் நிச்சயமாக அது மட்டும் அல்ல. திருஷ்டத்யும்னன் ஆக இந்த முறை நான் இருந்தேன் என்பதை சுப்ரையின் கண்கள் நினைவுக்கு வந்த போது தான் தோன்றியது. அந்த நீளவிழி கண்களில் என்னென்ன கண்டிருப்பான் அவன். அவளுடனான கணம் மட்டுமே போதும் எந்த இழி நரகுக்கும் செல்ல சித்தமாகலாம்.
திருஷ்டத்யும்னன், சாத்யகி கொண்ட பெரு நட்பு ஒரு தீரா காதலே அல்லவா ஆசானே. கண் மூடும் தருணம் நமக்கென காண ஒரு முகம், நமக்கென மட்டுமேயான ஒரு முகம் நிச்சயம் வேண்டும். ஆனால் எல்லோருக்கும் அப்படி வாய்ப்பதில்லை.
தீரா காதலும், பெரும் நட்பும், மாறா எதிரியும் கிடைக்கப்பெற்றவன் வாழ்வில் ஆசீர்வதிக்கப்பட்டவன். திருஷ்டத்யும்னன் வாழ்வு அப்படித்தானே.
இளைய யாதவரும், எட்டு திருமகள்களின் தவமும், காதலும் என் மண்டைக்குள்ளே குடைந்து கொண்டே இருக்கின்றன.
இந்திர நீல கடல் என்னை அப்படியே சுழற்றி அடித்து விட்டது ஆசானே. அதிலிருந்து மீள மீண்டும் அதிலேயே மூழ்கலாம் என எண்ணினேன். ஒவ்வொன்றின் ஊற்றுமுகமும் அதன் மையமே தான் எனும் என்னும் சொற்களை என் முதல் சொல்லாக பெற்றுக் கொண்டேன்
இந்திரன் நீலத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் பார்த்தால் புரியுமாறு படங்களாக, சிறிய குறிப்புகளாக எழுதலாம் என தோன்றியது. இன்று பகுதி ஒன்று மலைமுடித்தனிமை குறிப்பெடுத்தேன். முதல் அத்தியாயம் மட்டுமே நான்கு பக்க குறிப்பாக இருக்கிறது.
குறிப்பெடுத்து முடிந்தவுடன் அயர்ச்சி ஆகிவிட்டது ஆசானே. ஒரே ஒரு அத்தியாயம் நான்கு பக்க குறிப்பாக வந்த பொழுது இந்திர நீலம் மொத்தத்தையும் அப்படி முடிக்க முடியுமா என்று மலைத்துவிட்டேன். தலை பாரமாகிவிட்டது போலானது. வெண்முரசின் மொத்த புத்தகங்களும் என் கண்ணில் வந்து நின்று விட்டன.
ஆனாலும் செயல் மட்டுமே விடுவிக்கும் எனும் உங்கள் சொற்களை காப்பாக கொள்கிறேன் ஆசானே. செய்து கொண்டிருக்கும் செயல்களுடன், தினமும் ஒரு அத்தியாயம் குறிப்பெடுக்க வேண்டும் என்பதும் இனி அடங்கும்.
ஆசானே, நலம் திகழ்க எனும் சொற்களை உங்களின் கடிதத்தில் பார்த்த போது நான் உளமாற உணர்ந்தேன். இனி என்றும் நலமே திகழும் என.
எடுத்த குறிப்புகளை இணைத்துள்ளேன் ஆசானே, இப்படி செய்வது சரியா எனும் எண்ணமும் உள்ளது.
பிரியமுடன்,
சரண்யா
திண்டுக்கல்
அன்புள்ள சரண்யா,
எந்த நூலானாலும் அதை குறிப்புகளாக ஆக்குவது மிக மிக உதவியானது. அது அந்நூலை நம்முடையதாக்குவது. நாம் எழுதுபவை நமது நூல்வடிவங்கள்.
ஒரு நூலில் ஆழமாக ஈடுபடுவதற்கு அதை குறிப்புகளாக ஆக்கிக்கொள்ளும் வழக்கம் என்னிடமும் உண்டு
ஜெ