அன்பு

அன்பு நான் சென்னையில் இருக்கும்போது பார்க்க வருவார். பலசமயம் பொதுவான இலக்கிய விழாக்களில் சந்தித்துக் கொள்வோம். நான் அவரை “என் பாலியகால தோழர்” என பிறருக்கு அறிமுகம் செய்வேன். பலர் உடனே என் பள்ளித்தோழர் என நினைப்பார்கள். ஆனால் அன்பு என்னைவிட இளையவர். நான் அவரைச் சந்திக்கும்போது எனக்கு 30 வயது. முப்பத்திமூன்று வருட நட்பு. அன்று நான் பாலியத்தில் இருந்தேன் என எண்ணிக்கொள்கிறேன்.

அன்பு அன்றும் அமைதியான ‘சாதாரண’ வாசகராக எனக்கு அறிமுகமானார். அன்று என்னைக் கவர்ந்தது அவருடைய கட்டான உடல். எடைதூக்கும் பயிற்சி செய்து திரண்ட தோள்கள். உடலாற்றல் மிக்கவர்கள் பொதுவாக மிக அமைதியானவர்களாக, எதையும் உணர்ச்சிகரமாக எடுத்துக் கொள்ளாதவர்களாக இருப்பார்கள் என்பது என் புரிதல்களில் ஒன்று. (நாள்தோறும் விதிவிலக்குகளையும் பார்க்கிறேன்) அன்பு அந்த அமைதி கொண்டிருந்தார். பெரும்பாலும் மெல்லிய குரலில் ஓரிரு சொற்கள், புன்னகை, அவ்வளவுதான் உரையாடல்

அத்துடன் அன்பு குறித்து அன்று எனக்கு உருவான பெருமதிப்பென்பது அவர் ஜெயகாந்தனுக்கு அணுக்கமானவர் என்பது. அவர்தான் என்னை ஜெயகாந்தனிடம் அழைத்துச்சென்றவர். அன்பு ஜெயகாந்தனை அப்பா என அழைப்பவர். ஜெயகாந்தன் வந்து நின்று நடத்திவைத்த திருமணம் அன்புவுடையது. என்னிடம்கூட இல்லாத ஓர் உரிமையை அன்பு ஜெயகாந்தனிடம் எடுத்துக்கொள்வார். ஜெயகாந்தனுடனே இருந்தாலும் அன்புவுக்கு எந்தவகையான பழக்கவழக்கங்களும் இல்லை. ஏனென்றால் ஜெயகாந்தன் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்.

அன்பு அன்றே நல்ல வாசகர். ஜெயகாந்தனை முழுமையாக வாசித்தவர். அதன் பின் சுந்தர ராமசாமி வழியாக ஓர் இலக்கியப்பயணம். நான் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு வினா உண்டு. இலக்கியத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் எல்லாம் இலக்கியவாதி ஆக நினைப்பவர்கள், இலக்கியவாதிகள் என்னும் உளப்பிம்பம் எழும். இலக்கியவாசகர்கள் பெரும்பாலானவர்கள் ஒரு கட்டத்தில் வாசிப்பை நிறுத்திவிட்டு இலக்கிய வம்புகளில் திளைக்க ஆரம்பிப்பார்கள். இதற்கப்பால் இலக்கியத்தை அழகியல் மகிழ்வுக்காக, தன் வாழ்வு நிறைவுக்காக மட்டுமே வாசிப்பவர்கள் உண்டா?

அத்தகைய வாசகர்களை நான் சந்திக்காத நாளே இல்லை. ஆனால் அந்த ஐயம் இருந்துகொண்டே இருக்கும். அதற்குக் காரணம் வாசகர்கள் என நாம் நினைத்தவர்கள் சட்டென்று எளிய வம்புப்பிழைப்பாளர்களாக வெளிப்படுவதையும் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம் என்பதுதான். வாசிப்பில் இருந்து வாசகன் என்னும் அகங்காரத்தை ஈட்டிக்கொள்பவர் கடைசியாக வம்பாளராக சென்று முடிவார். அது ஓர் ஒற்றைவழிப்பாதை. அதற்கான எல்லா வாய்ப்புகளும் ஈர்ப்புகளும் இங்குள்ளன.

அன்பு இலக்கியத்தைக்கொண்டு வாழ்க்கையை நிறைத்துக்கொண்டவர். இலக்கியத்தின் வல்லமையின் வாழும் நிரூபணங்களில் ஒருவர். மதநம்பிக்கை கொண்டவர் அல்ல. அன்புவின் ஆன்மிகம் இலக்கியமே. சினிமா உள்ளிட்ட வேறெந்த கேளிக்கையிலும் கலையிலும் ஈடுபாடு கொண்டவர் அல்ல. அவருடைய உலகம் இலக்கியம், தீவிர இலக்கியம். சென்ற முப்பதாண்டுகளில் அன்பு வாழ்வில் பல சோதனைகள் வழியாக கடந்துசென்றுள்ளார். பல நெருக்கடிகளைச் சந்தித்துள்ளார். ஒரு கணமும் குன்றாத மானுட மேன்மையுடன் அவர் கடந்து வந்தார். இலக்கியம் அந்த ஆற்றலை அவருக்கு அளித்தது.

இலக்கியத்தை வம்பு எனப் பார்க்க ஆரம்பித்ததுமே அது அப்படி மட்டுமே தெரிய ஆரம்பிக்கிறது. இலக்கியத்தை அவநம்பிக்கையின், கசப்பின் பெரும் விளைநிலமாகக் காண்பவர்களுண்டு. அப்படியே இலக்கியம் அவர்களுக்குத் திகழ்கிறது. முதல்வகையினர் சழக்கர்களாகவும் இரண்டாம் வகையினர் வரட்டுக்கிண்டல் கொண்டவர்களாகவும் ஆகிறார்கள். இலக்கியத்தின் அழகையும், அதன் சாரமான நன்னம்பிக்கையையும் ஏற்பவர் அவற்றையே அதிலிருந்து பெற முடியும்.

என் நண்பர்களுக்கெல்லாம் அன்பு எனக்கு எந்த அளவுக்கு அணுக்கமானவர் என தெரியும். அவர் என்னிடமிருந்து பெற்றுக்கொண்ட இலக்கியத்தைப் பற்றி அவர் சொல்லி அறிந்திருப்பார்கள். நான் அன்புவிடம் பெற்றுக்கொள்வது அதைவிடப்பெரிய ஒன்று. ஒவ்வொரு முறையும் அவரைச் சந்திக்கையில் தோளுடன் தழுவிக்கொள்கிறேன். மூழ்குபவன் தெப்பத்தைப் பற்றிக்கொள்வதுபோல. இந்த எதிர்ச்சூழலில், சோர்வலைகள் நடுவே அன்பு நான் கொள்ளும் நம்பிக்கையின் பெரும் பற்றுகோடு.

படங்கள் அம்ரே கார்த்திக்

முந்தைய கட்டுரைபசுபதீஸ்வரர் ஆலயம்
அடுத்த கட்டுரைநவீனவாசகனுக்கு பக்தி இலக்கியம் அளிப்பது என்ன?