அவ்வப்போது சில எழுத்தாளர்கள் தன் இலக்கியம் வேறு , தன் வாழ்க்கை வேறு என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். மிகச்சரியாக அதைப் பகுத்து வைத்திருப்பவர்களும் உண்டு. அதற்கான தேவைகளும் நம் சூழலில் அவர்களுக்கு இருக்கலாம். அதை குறைசொல்ல முடியாது. என் வரையில் வாழ்க்கையும் எழுத்தும் வேறுவேறல்ல என்றே எண்ணுகிறேன்.
ஆனால் வாழ்க்கை ‘அப்படியே’ இலக்கியம் அல்ல. வாழ்க்கையின் மிகக்கூரிய ஒரு பகுதி மட்டுமே இலக்கியமாகிறது. ஒருபோதும் எழுத்தாளனின் வாழ்க்கை இலக்கியமாக ‘பதிவு’ ஆவதில்லை. பதிவு ஆகும் எழுத்தில் எப்போதும் புறவுலகத்தரவுகளே உள்ளன. அவை இலக்கியத்திற்கு எவ்வகையிலும் முக்கியமல்ல. எழுத்தில் புறவுலகின் இடம் இரண்டே நிலைகளில்தான். வாசிக்கையில் ஒரு நிகர்வாழ்வை வாசகன் கற்பனைசெய்யத் தேவையான தகவல்களாக அமைதல், குறியீடுகளாக ஆழம் கொள்ளுதல். மற்ற எந்த தரவுகளும் இலக்கியத்தில் தேவையில்லாத சுமைகளே.
எழுத்து வாழ்விலிருந்து முளைக்கிறது. மரத்தில் கனி என. மரம் மண்ணில் விளைகிறது. எழுத்தில் வாழ்க்கை உருமாற்றம் அடைகிறது. அது திரிபு அல்ல. ஓர் உலோகத்தின் கூர்முனை ஒளிகொண்டிருக்கிறது , வேறு வண்ணம் அடைகிறது என்பதனால் அதை அவ்வுலோகத்தின் திரிபுநிலை என்போமா என்ன? அவ்வுலோகத்தின் உச்சநிலை என அதைச் சொல்லலாம்.
இரு படைப்பாளிகளைப் பார்க்கலாம். வைக்கம் முகமது பஷீரின் படைப்புகளை அவருடைய வாழ்க்கையின் நேர்ப்பதிவுகள் என மேலோட்டமான வாசகர்கள் எண்ணுவதுண்டு. அவர்மேல் கடும் விமர்சனங்களை முன்வைத்தவர்கள் (உதாரணம் உப்பூப்பான்றெ குய்யானகள். ஏ.வி.ரகுநாதன் நாயர்) அவர் தன் வாழ்க்கை வரலாற்று குறிப்புகளை மட்டுமே எழுதியவர் என்றனர். அவருடைய ரசிகர்களும் பலர் அவர் வாழ்க்கையை அப்படியே எழுதினார் என்றனர். இரண்டுமே அபத்தமானவை.
பஷீர் தன் கதைகளில் தான் எழுதுபவை தன் வாழ்க்கை என்று சொல்கிறார். பேட்டிகளிலும் உண்மை வாழ்க்கையை மட்டுமே எழுதியிருப்பதாகச் சொல்கிறார். இன்னொரு பக்கம் எம்.டி.வாசுதேவன் நாயரின் படைப்புகளில் அவர் தன்னை கூடுமானவரை ஒளித்துக்கொண்டு கதையுலகை உருவாக்குகிறார். அவற்றில் தன் வாழ்க்கைக்கூறு இல்லை என்றே சொல்கிறார். ஆனால் விமர்சகர்கள் அதில் அவருடைய வாழ்க்கையை அதில் தேடிக் கண்டடைகிறார்கள்.
பஷீரின் படைப்புகளை ஒட்டியே அவருடைய வாழ்க்கையைப் பார்க்கும் வழக்கம் மலையாளத்தில் வேரூன்றியது. பஷீர் பற்றி எழுதப்பட்ட குறிப்புகளிலும் பஷீரின் பார்வையே நீடிக்கிறது. பஷீர் அவருக்காக புனைவுலகில் உருவாக்கிக் கொண்ட ஆளுமையை திரும்பக் கொண்டுசென்று பஷீரில் ஏற்றுகிறார்கள். இலக்கியத்தில் அது பெரும் பிழை. பஷீர் மீது விமர்சகனுக்கு மதிப்பிடுக்கலாம். ஆனால் விமர்சகன் பஷீர் உருவாக்கும் மாயத்திற்கு தன்னை அளித்துவிடக்கூடாது. விமர்சனம் எப்போதுமே கூர்மையான தர்க்கத்தன்மை கொண்டதுதான்.
மேலைநாட்டில் என்றால் பஷீர் தன்வரலாறாக தன் புனைவிலும் வெளியிலும் சொல்லும் விஷயங்களின் தகவலுண்மைகளை விரிவாக ஆராய்ந்து பதிவுசெய்திருப்பார்கள். கேரளத்தில் கொண்டாட்டம் மட்டுமே உள்ளது. பஷீர் பற்றி மட்டுமல்ல; பி.குஞ்ஞிராமன் நாயர், ஜான் ஆப்ரகாம், ஏ.ஐயப்பன் அனைவரைப் பற்றியும் பிம்ப உருவாக்கமே நிகழ்கிறது. ஏனென்றால் அங்கே அந்த பிம்ப உருவாக்கத்தை நிகழ்த்துபவர்கள் இதழாளர்கள், அவர்களுக்கு அது தேவையாகிறது. விமர்சகர்கள் அதை வாங்கியே ஆகவேண்டியுள்ளது.
பஷீரின் விமர்சகர்கள் சிலர் பஷீரின் தன்வரலாற்றுக் குறிப்புகளிலுள்ள புனைவம்சம் பற்றி பதிவுசெய்துள்ளனர். நான் உண்மைகண்டறியும் முயற்சிகளில் ஈடுபட விரும்பவில்லை. ஆனால் பஷீரின் உலகமென்பது அவர் தன் வாழ்க்கையில் இருந்து கூர்தீட்டி எடுத்துக் கொண்ட ஒன்று என்று சொல்ல விரும்புகிறேன்.அவருடைய வாழ்க்கை அல்ல அது, அவருடைய வாழ்க்கையின் ஒரு முகம். அதில் வருவது பஷீர் என்னும் மனிதன் அல்ல, பஷீர் என்னும் கதாபாத்திரம்.
அதன் மறுபக்கமே எம்.டி.வாசுதேவன் நாயர். அவருடைய எல்லா மையக்கதாபாத்திரங்களிலும் அவர் உண்டு. விக்ரகத்தில் அதை நிறுவுபவனின் மூச்சுத்தான் தெய்வமாக நிலைகொள்கிறது என்பதுபோல. அவர் தன்னை இன்னொருவராக ஆக்க முயல்கிறார். அசுரவித்து நாவலின் கோவிந்தன்குட்டி தன்னுடைய ஒரு மாமா என்று அவர் என்னிடம் சொன்னார். ஆனால் அது எம்.டி.அல்ல என்று நாம் சொல்லமுடியுமா?
நல்ல வாசகன் எழுத்தாளனின் தனியாளுமையே படைப்பிலும் வெளியிலும் வெளிப்படும் ஆசிரியனின் ஆளுமை என மயங்க மாட்டான். ஆனால் அவையிரண்டும் முற்றிலும் வேறுவேறு என நம்பவும் மாட்டான். அவையிரண்டுக்கும் நடுவே ஒரு ஆழமான நடனம் உள்ளது. ஒன்றையொன்று புனைந்தும் அழித்தும் ஆடும் விளையாட்டு உள்ளது. அதை உணர்பவனே உண்மையில் ஆசிரியனை அணுகிச்செல்கிறான்
(மலையாள இலக்கிய விமர்சக நண்பருக்கு எழுதிய கடிதம்)