சலிப்பு, கடிதம்

 

காந்தியால் இளைஞர்களுக்கு என்ன பயன்?

அன்புள்ள ஜெ,

காந்தியை வைத்து சலிப்பை வெல்வது குறித்து எழுதியிருந்தீர்கள்.  முழுமையறிவு அமைப்பு வழியாக மெய்தேடலுள்ள இணை மனங்களை கண்டடைவது குறித்தும் எழுதியிருந்தீர்கள்.

இந்த வருட காவிய முகாமிற்கு பிறகு கம்பராமாயண வாசிப்பு குழுவில் இணைந்து அமர்வுகளில் பங்கெடுக்க ஆரம்பித்தேன்.  சோம்பலும் சலிப்பும் நிறைந்த என்னுடைய இயல்புப் படி ஓரிரண்டு அமர்வுகளில் நின்று விடுவேன் என நினைத்திருந்தேன். ஆனால் அமர்வுகளில் பங்கெடுக்க ஆரம்பித்த பிறகு முற்றிலும் எதிர்பாராத விதமாக சலிப்பு அகன்று ஒரு இனிமையை உணர்கிறேன். கம்பனுடைய கவித்துவத்தின் இனிமையோ , ராமாயணத்தின் வலிமையோ அல்லது நண்பர்களுடன் இணைந்து வாசிக்கையில் எழுந்து வரும் செந்தமிழின் சுவையோ – எதுவென்று தெரியாவிட்டாலும் கம்பனை வாசிப்பதிலும் விவாதிப்பதிலும் உள்ள ஆனந்தம் இனிதானது.  இப்பொழுது அமர்வுகளில் பங்கெடுக்க வேண்டாம் என நினைத்தாலும் என்னால் முடிவதில்லை.

வீடணன் அடைக்கலப் படலத்தில் ஒரு பாடல் மீதான எனது வாசிப்பு இது. குழுமத்திலும் பகிர்ந்துள்ளேன். பிழைகளுடனும் குறைகளுடனும் இருந்தாலும் மிக நீண்ட பயணத்திற்கான தொடக்க அடிவைப்பு இது என நினைக்கிறேன்.

***

ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை வாசிப்பதன் நோக்கம் என்னவென்று கேட்டால் ஒரே பதில் கிடைக்காது. நமது பண்பாட்டு கலாச்சார பொக்கிஷமான அவற்றிலிருந்தே ஒரு மாபெரும் மரபின் தொடர்கண்ணிகளுள் ஒன்று என்பதை அறிந்து கொள்கிறோம். நமது முதாதைகளின் பெருமை மற்றும் வீழ்ச்சியை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாலான நிகர் வாழ்வாக வாழ்வதன் மூலம் அனுபவித்து அறிகிறோம். இன்றைய‌ நடைமுறை வாழ்க்கையில் நமது இடம் என்ன- நமது தத்தளிப்புகள் – சந்தேகங்கள் – இவற்றிற்கு விடை கிடைக்குமா என நோக்குகிறோம்.

ஆனால் இவையனைத்திற்கும் அடியில் இருப்பது – நம்மை இறுக்கி வைத்திருக்கும் தற்போதைய நடைமுறை வாழ்வின் எல்லைகளை கடந்து எல்லையின்மை நோக்கி வளர துடிக்கும் ஆன்மாவின் வேட்கையே. நம்முடைய ஒவ்வொரு செயலும் எல்லையற்ற இருப்பு-அறிவு-ஆனந்தமயமாகிய நாம் அதை அனுபூதியில் அடைவதற்கான முயற்சியே. அந்த முயற்சியில் முழுமையாக வெற்றியடைந்தவர்களே அவதார புருஷர்கள் எனப்படுகிறார்கள்.

இனி, அவதார புருஷர்கள் கருவிலே திருவாக பிறக்கிறார்களா இல்லை உருவாகிறார்களா என்பது வெகுகாலமாக இருக்கும் கேள்வி. ராமனை திருமாலின் அவதாரம் என சொல்லி விடுவது அவனது சிறப்புகள் அனைத்தும் இயல்பாக அவனுக்கு கிடைத்தவை என பொருள்படும். கர்மயோகத்தின் படி செயல் இல்லாமல் பலன் மட்டுமே நிகழும் இந்த கூற்று பொருந்தாத ஒன்று. ராமன் எவ்வாறு பெரும் அவதார புருஷன் ஆனான் என்பது அவனது கர்மத்தை – செயலைப் பொறுத்தது. பலநூறு பிறவிகளில் அவன் செய்த கர்மத்தின் பலனாக ராமனாக பிறந்து, எண்ணிப்பார்க்க இயலாத சங்கல்ப ஆற்றலால் / மனவலிமையால் பெரும் செயல்கள் புரிந்து, இன்று வரைக்கும் நம்மிடம் ஆதிக்கம் செலுத்துகிறான். புத்தர், இயேசு, கிருஷ்ணர், முகமது நபி என அனைத்து அவதார புருஷர்களும் இவ்வாறே.

ஒரு சாதாரண மனிதனை ராமனாக ஆக்குவது எது என்னும் கேள்விக்கு இராமனை வைத்து ஒரு விடையை கம்பர் அளிக்கிறார்.

தருமமும்‌ ஞானமும்‌ தவமும்‌ வேலியாய்‌

மருவரும்‌ பெருமையும்‌ பொறையும்‌ வாயிலாய்க்‌,

 கருணை அம்‌ கோயிலுள்‌ இருந்த கண்ணனை

 அருள்‌ தெறி எய்திச்‌ சென்று அடி வணங்கினான்‌.

அறம், ஞானம், தவம், கருணை,பொறுமை – இவற்றை தொடர்ந்த தனது கர்மத்தினால் தனது இயல்பாகவே ராமன் கொண்டிருக்கிறான். ஆக , ராமனைப் போல ஆக வேண்டும் என விரும்புபவர்கள் அல்லது பின்பற்ற விரும்புவர்கள் செய்ய வேண்டியது – மேற்சொன்ன விழுமியங்களை முழு வாழ்க்கையிலும் கடைபிடித்து தமது முழு இயல்பாக மாற்ற முயல்வதே. அனுமன் ராமனுக்கு மிக அருகில் நின்றிருக்கிறார். அவரிலிருந்து பெருகும் ஒரு நிரை இந்தியாவெங்கும் பரவி பல நூற்றாண்டுகளாக நீடிக்கிறது. ராமனின் ஆற்றலாலேயே பலநூறு தாக்குதல்களை தாங்கி அழியாமல் இன்றும் முழு ஆன்ம பலத்துடன் ஹிந்து மதம் வாழ்கிறது.

பின் குறிப்பு:

விவேகானந்தரின் கர்மயோகம் :

காலங்காலமாகத் தொடர்ந்து செய்து வந்த செயல்களின் மூலம் பெற்ற ஆற்றல் வாய்ந்த தங்கள் சங்கல்பத்தால் உலகையே மாற்றி அமைக்க வல்ல மாபெரும் மனிதர்களாக இருந்தார்கள் அவர்கள்.

புத்தருக்கும் ஏசுவிற்கும் இருந்தது போன்ற மாபெரும் சங்கல்பம் ஒரே பிறவியில் கிடைத்து விடுவதில்லை.

விவேகானந்தரின் உரையாடல் ஒன்று:

  1. கட்டிட வேலை நடைபெறும் மடம், 1899

சீடர்: ‘சுவாமிஜி! நம் சமுதாயமும் நாடும் ஏன் இவ்வளவு மோசமான நிலைக்கு வந்துவிட்டது?’

சுவாமிஜி: ‘நீங்களே அதற்குப் பொறுப்பு.’

சீடர்: ‘அது எப்படி? ஆச்சரியமாக இருக்கிறதே!’

சுவாமிஜி: ‘நெடுங்காலமாகத் தாழ்ந்த வகுப்பினரை வெறுத்து ஒதுக்கினீர்கள், அதன் பயனாக இன்று உலகால் வெறுக்கப்படுபவர்களாகி விட்டீர்கள்.’

..

சீடர்: ‘ஆனால் சுவாமிஜி, மனுவும் யாஜ்ஞவல்கியரும் மீண்டும் இந்த நாட்டில் பிறக்காமல் அத்தகைய காரியங்களைச் செய்ய முடியாது?’

சுவாமிஜி: ‘அடக் கடவுளே! புனிதமும் தன்னலமற்ற உழைப்பும்தானே அவர்களை மனுவாகவும் யாஜ்ஞவல்கியராகவும் ஆக்கியது! இல்லை, வேறு ஏதாவது அவர்களை அப்படி ஆக்கியதா? நாமும் முயன்றால் அந்த மனுவையும் யாஜ்ஞவல்கியரையும்விட மகத்தானவர்கள் ஆகலாம். அப்போது நம் கருத்துக்கள் ஏன் பின்பற்றப்படாது?’

நன்றி

இ.ஆர்.சங்கரன்

முந்தைய கட்டுரைஎன் பெயர்
அடுத்த கட்டுரைசெபாஸ்டியன், பாவண்ணன் கடிதம்