அண்ணா ஹசாரேவும் ஆர்.எஸ்.எஸ்ஸும்

அன்புள்ள ஜெ,

உண்மையான பிரச்சினை அன்னா அசாரேவின் இந்த போராட்டத்திலே ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஊடுருவியிருக்கிறதென்பதனால்தானே? இந்த போராட்டமே அவர்கள் நடத்துவதனால்தானே பிரச்சினை? இதற்கு நீங்கள் பதில் சொல்லவேண்டும்

குமார் அருணாச்சலம்

அன்புள்ள குமார்

உங்கள் கேள்வியின் முக்கியமான அம்சம் என்று துணைக்கேள்விகளில் இருந்து நான் ஊகிப்பதென்னவென்றால் நீங்கள் எனக்கு புதிய வாசகர் என்பதுதான். வாழ்க.

உங்கள் இந்த ‘குற்றச்சாட்டை’ ஆவலோடு நாளை வாங்கிக்கொள்ளப்போகிறவர்கள், வரலாற்றில் உரிமைகோரப்போகிறவர்கள் ஆர்.எஸ்.எஸ்காரர்களே. இதற்கிணையான ஒரு பெரும்நற்பணியை அவர்கள் வரலாற்றில் செய்திருக்கம்மாட்டார்கள். அவர்கள் எதையும் மறுக்கப்போவதில்லை.

இன்று பாரதியஜனதா மேல் ஆர்.எஸ்.எஸின் ஒரு தரப்பு கடுமையான அதிருப்தியில் உள்ளது என்பது ரகசியம் அல்ல. ஐந்தாண்டுக்கால ஆட்சியின் விளைவாக பாரதிய ஜனதாவின் உச்சியில் ஒரு ’கார்ப்பரேட் ரத்தசொந்தங்கள்’ உருவாகி அக்கட்சியை கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். நிதியை, கட்டமைப்புகளை. ஆர்.எஸ்.எஸ் கையில் இருந்து பாரதிய ஜனதா விலகிச்சென்றுவிட்டது. இன்று அது ஆர்.எஸ்.எஸ்ஸை நம்பி இல்லை என நினைக்கிறது.

அடிப்படை ஆர்.எஸ்.எஸ் தொண்டன் தன் கொள்கைகளில் உறுதியானவன், அவற்றுக்காக வாழ்க்கையைச் செலவிடுபவன் — அந்த கொள்கைகள் எப்படிப்பட்டவையானாலும். பாரதிய ஜனதாவின் இந்த ’ஹைடெக்’ தலைமை அவனுக்கு மிக அன்னியமானதாக இருக்கிறது. ஒவ்வொருநாளும் வெளிவரும் பாரதிய ஜனதாவின் ஊழல்கள், அதைவிட பலமடங்கு பெரிதான காங்கிரஸின் தேசிய ஊழல்களில் பாரதிய ஜனதாவின் தலைமை காட்டும் விசித்திரமான இணக்கப்போக்கு, அல்லது குழப்பிக்கொண்டு விலகியிருக்கும் போக்கு, அல்லது அண்ணா ஹசாரேவின் சொற்களில் ‘தீவிரமின்மை’ அவனை மிகவும் கொந்தளிக்கசெய்திருக்கிறது.

அவர்களில் ஒருசாரார் அண்ணா ஹசாரே போராட்டத்தில் பங்கெடுக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் நாடெங்கும் இதில் ஈடுபடும் பெரும் கூட்டம் இன்றுவரை அரசியல்மயப்படுத்தப்படாத நடுநிலை மக்கள். அவர்கள் இருவகை. செய்தித்தாள்களில் பெரும் ஊழல்களைக் கண்டு தினமும் கொந்தளிக்கும் மக்கள். சொந்தவாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஊழலுக்கு இரையாகும் மக்கள்.

ஆர்.எஸ்.எஸை விட இந்த இயக்கத்தில் இடதுசாரிகள் அதிகமிருப்பதை நேரில் சென்று கண்டால் அறியலாம். இன்று மூன்று வெவ்வேறு போராட்டங்களைக் கண்டேன். பெரும்பாலும் மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சி முகங்கள். உண்மையில் இவ்விஷயத்தில் இதுவரை கம்யூனிஸ்டுகளே வெளிப்படையான ஆதரவுடன் இருக்கிறார்கள் – அவர்களுக்கு மடியில் கனம் இல்லை என்பதனால்.

இரு கட்டுரைகள் உங்கள் கவனத்துக்காக . ஒன்று இடதுசாரிகளின் பங்கேற்பைப்பற்றி. இடது சாரிகள் நடத்திய ஊழலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இன்னொன்று இதில் நடுத்தர வர்க்கம் ஏன் பங்குகொள்கிறது என்பதைப்பற்றி. பேராசிரியர் வைத்தியநாதனின் கட்டுரை. கிட்டத்தட்ட எல்லா கருத்துக்களும் நான் ஏற்கனவே எழுதியவைதான்.

இந்த தருணம் , இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் பிரம்மாண்டமான திருப்புமுனை , நம்மில் சிலருக்கே தெரிகிறது. இது ஒரு சட்டத்துக்காக நிகழும் ஒரு உண்ணாவிரதம் அல்ல. இதுவரை அரசியல்படுத்தப்படாத பெரும்பான்மை முற்றிலும் வேறு வகையில் அரசியல் படுத்தப்படுவதன் சித்திரம் இது. இது உடனடியாக முடியக்கூடியதல்ல. இந்தியாவின் அரசியல் போக்குகளில் ஆழமான மாற்றத்தை உருவாக்கக்கூடிய ஒரு தொடக்கப்புள்ளி இது. இதில் யார் என்ன சொன்னார்கள் என்பதெல்லாமே வரலாறுதான்.

இந்த போராட்டத்தை ஒடுக்கும் உத்தியாக இந்த ஆர்.எஸ்.எஸ் புரளியை காங்கிரஸ் ஊடகங்கள் முன்னெடுக்கின்றன. அப்படி வரலாற்றின் ஒரு முக்கியமான தருணத்தை ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு பட்டாபோட்டு கொடுத்தால் அவர்களைப்போல அதிருஷ்டசாலிகள் வேறு இல்லை.

ஜெ

அண்ணா ஹசாரே தமிழ் இணையதளம்

முந்தைய கட்டுரைகள்


அண்ணா ஹசாரே கட்டுரைகளின் ஆங்கில மொழியாக்கம்

அண்ணா ஹசாரே ஜனநாயகக் கேள்விகள்

அண்ணா வெல்வாரா?

அண்ணா ஹசாரேவின் அரசியல்

அண்ணா ஹசாரே மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?

அண்ணா எதிர்வினைகள்

அண்ணா ஹசாரே,ஞாநி,சோ

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2

அண்ணா ஹசாரே கடிதங்கள்..

அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…

அண்ணா ஹசாரே,வசைகள்

அண்ணா ஹசாரே-2

அண்ணா ஹசாரே-1

முந்தைய கட்டுரைஅண்ணா ஹசாரே- ஊழலை மேலிருந்து ஒழிக்கமுடியுமா?
அடுத்த கட்டுரைஅண்ணா ஹசாரே- காந்திய போராட்டமா?