குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்வு

இவ்வாண்டு விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழா வே.நி.சூர்யாவின் தேர்வு காரணமாகச் சற்று பிந்தி 23 ஜூன் 2024 அன்று நிகழ்ந்தது. வழக்கமான கவிக்கோ அரங்குதான். கவிக்கோ அரங்கு அமைந்தமையால்தான் முழுநாள் நிகழ்வு நடைபெறுகிறது. 

நான் பெங்களூரில் இருந்து வந்தேன். 22 மாலை நான்கு மணிக்குக் கிளம்பி இரவு ஒன்பதரைக்கே சென்னை வந்தேன். ரயிலில் நண்பர் ரகுவைச் சந்தித்தேன். அவரும் நானும் பேசிக்கொண்டே வந்தோம். சதாப்தி எக்ஸ்பிரஸ் வசதியானதுதான், ஆறுமணிநேரம் அமர்ந்திருக்க முடிந்தால் போதும். 

காலை 10 மணிமுதல் நிகழ்வுகள். முதலில் குமரகுருபரனின் முழுக்கவிதைத் தொகுதி (விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடு) வெளியிடப்பட்டது. நண்பர் டோக்கியோ செந்தில் (ரா.செந்தில்குமார் தமிழ் விக்கி) வெளியிட்டார். குமரகுருபரனின் மொத்த கவிதைகளே அவ்வளவுதான் என்பது ஒரு திகைப்பை உருவாக்கியது. அந்நூலின் முன்னுரையை நான் எழுதியுள்ளேன். மின்வடிவில் நூலை வாசிக்கும்போது நூலின் அளவு தெரியவில்லை. நான் அதற்கு முன்னுரை எழுதியுள்ளேன். அம்முன்னுரையிலும் இந்த துளித்தன்மையைச் சுட்டிக்காட்டியிருந்தேன். (புல்நுனிப் பனித்துளியின் நிரந்தரம் )

யுவபுரஸ்கார் விருது பெற்ற லோகேஷ் ரகுராமனுக்கு பாராட்டு

காலை அமர்வுகள் முழுக்க உரையாடல்கள். வாசகர்கள் படைப்பாளிகளுடன் உரையாடுவதற்குரியவை. இந்த வாய்ப்புகளை எல்லா வாசகர்களும் பயன்படுத்திக்கொள்வதில்லை. சில தயக்கங்களால் பேசாமலிருந்து விடுகிறார்கள். சிலருக்கு கேள்விகள் கேட்பதென்பது ஒருவகையில் தன்னை முன்வைப்பது என்ற எண்ணமும் உண்டு. ஆனால் இத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்பவர்கள் சிந்தனைக்கான புதிய வழிகளைக் கண்டடைகிறார்கள்.

நாம் ஓர் அவையில் எழுந்து நின்று ஒன்றைச் சொல்ல ஆரம்பிக்கும்போதுதான் நம் எல்லைகள் நமக்கு தெரியவருகின்றன. நம் சிந்தனைககள் தெளிவாக இருப்பதாக எண்ணிக்கொள்கிறோம். சொற்களை கோக்க தொடங்கும்போதுதான் நமக்கு நம் எல்லைகள் தெரியவருகின்றன. அதேசமயம் ஓரிரு கேள்விகளுக்குப்பின் நம் சாத்தியங்களும் நமக்கு தெரியவருகின்றன. அது நம்மை ஆற்றல்கொண்டவர்களாக உணரச் செய்கிறது. கோவையாக, முக்கியமான ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டோம் என்றால் நம்முள் மிக எடைகொண்ட ஒரு பொருள், நாம் பிறந்தது முதல் அசைவற்றிருந்த ஒன்று நகரத்தொடங்குகிறது.

சம்யுக்தா மாயா, அதியமான், லோகேஷ் ரகுராமன், ஜெயன் கோபாலகிருஷ்ணன்  ஆகியோரின் அரங்குகள். எல்லாருகே சிறப்பாக வினாக்களுக்குப் பதிலளித்தனர். எந்தத் தயக்கமும் இல்லை. கேள்விகளும் அவர்களின் எழுத்துக்களைச் சார்ந்தவையாகவே இருந்தன. வாசிக்கப்படுகிறோம் என்பதுபோல எழுத்தாளர்களுக்கு நிறைவளிக்கும் பிறிதொன்று இல்லை. தொகுத்துவழங்கிய பேரா.பத்மநாபன் நூல்களை விரிவாக வாசித்துவிட்டு வந்திருந்தார். மதார் எப்போதுமே பிறருடைய கவிதைகளைக் கூர்ந்து வாசிப்பவர். அவருடைய நெறியாள்கையும் சிறப்பாக இருந்தது.

க.மோகனரங்கன் விருது வழங்குகிறார்

தெலுங்கு மொழியில் இப்போது தமிழிலக்கியங்களை கவனப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் அவினேனி பாஸ்கர் மற்றும் அனில் சர்வப்பள்ளி. அவர்களை விருந்தினராக அழைத்தமைக்கு முதன்மைக் காரணம் அவர்களுடனான உரையாடல் வழியாக தெலுங்கு இலக்கியம் பற்றிய ஒரு சித்திரத்தை அடைவதுதான். அவர்களின் அரங்கு அந்த நோக்கத்தை முழுமையாகவே நிறைவேற்றுவதாக அமைந்தது.

அவ்வுரையாடலின் படி நாம் அறிய வந்தது இதுதான். தெலுங்கு இலக்கியம் இன்று தமிழ் எண்பதுகளில் இருந்த நிலையில் உள்ளது, அச்சு சூழல் முழுமையாகவே இலக்கியத்தை புறக்கணிக்கிறது. பொதுச்சூழலில் கவனமே இல்லை. ஆனால் இணையம் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை அளிக்கிறது. அவர்கள் வாசிக்கிறார்கள், தரமாக எழுதுகிறார்கள். எதிர்மறைச்சூழல்களில் வணிக எழுத்து அழியும், இலக்கியம் தளிர்விடும் என்பது மீண்டும் நிறுவப்படுகிறது

மேடையில்

மதியம் மாடியிலேயே உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு முழுநாள் நிகழ்வில் மதிய உணவு என்பது ஒரு கட்டாயம். ஆனால் இலக்கியத்தில் செயல்படுவோர் அனைவரும் சேர்ந்தமர்ந்து உணவுண்பதைக் காண்பது எப்போதுமே மகிழ்ச்சியை அளிக்கிறது. நாம் ஒரே குறுஞ்சமூகம் என்னும் எண்ணம் உருவாகிறது.

இந்தவகையான நிகழ்வுகளை இணையத்தில் பார்க்கலாமே என நினைப்பவர்கள் இன்று பெருகி வருகிறார்கள். சென்னையில் ஒரு ஞாயிறன்று கிளம்பி ஒரு நிகழ்வுக்குச் செல்வதென்பது சற்று கடினமானதுதான். கிளம்புவதற்கான சோம்பலே அதை தடுத்துவிடும், அதற்கான சாக்குதான் இணையத்திலேயே உரைகள் வந்துவிடுமே என்பது.

செபாஸ்டின் பணமுடிப்பு வழங்குகிறார்

இணையம் என்பது நேரனுபவம் எதற்கும் நிகர் அல்ல என்றுதான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். இணையம் அளிக்கும் வாய்ப்புகள் பல, அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் நேரனுபவத்திற்குப் பதிலாக அவற்றைக் கொள்பவர்கள் வாழ்க்கையை இழக்கிறார்கள். ஓர் இலக்கிய நிகழ்வு என்பது இலக்கியவாதிகளை நேருக்குநேர் பார்ப்பது, அங்கே வந்திருக்கும் இலக்கியச் சுற்றத்துடன் இருப்பது. கூடுமானவரை அனைவரையும் அறிமுகம் செய்துகொள்பவர் பெரிய அனுபவத்தை அடைகிறார்

நான் சென்ற முப்பதாண்டுக்கால அனுபவத்தில் ஒன்றை உறுதிபடச்சொல்வேன், வாழ்க்கையின் முடிவைநோக்கிச் செல்கையில் ஒட்டுமொத்தமாகத் தொகுத்துச் சொல்ல முடிகிறது. இலக்கியவாழ்க்கையின் மிகச்சிறந்த கணங்களாக நினைவில் நிற்பவை இலக்கியப்படைப்புகளை எழுதிய அனுபவங்களும், இலக்கிய நிகழ்வுகளும்தான். இலக்கிய நிகழ்வுகள் ஒன்றுகூட மறக்கவில்லை. எண்ணிப்பார்க்கையில் அலையலையாக எழுந்து வருகின்றன அவை. வாழ்ந்தேன் என உணரச்செய்கின்றன. அவற்றை ஒத்திப்போடுபவர்கள் வாழ்தலை தவிர்த்து ஒரு மனமயக்கத்தை வாழ்வென எண்ணிக்கொள்பவர்கள்.

மதியத்துக்குமேல் முதல் அமர்வு செபாஸ்டியனுடன் என் உரையாடல். ஏற்கனவே செபாஸ்டியனின் கவிதைகளின் மொழியாக்கம் என் தளத்தில் வெளியாகியிருந்தமையால் வாசகர்கள் பலர் வாசித்துவிட்டு வந்திருந்தனர். (செபாஸ்டியன் கவிதைகள் 4,செபாஸ்டியன் கவிதைகள்-2, செபாஸ்டியன் கவிதைகள் 1செபாஸ்டியன் கவிதைகள்-3 )அத்துடன் கேள்வி கேட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கவிஞர்கள். ஆகவே அரங்கு தீவிரமாக குவிதல் கொண்டிருந்தது

பொதுவாக மலையாளக் கவிஞர்கள் நிறைய அரங்குகளை தொடர்ச்சியாக எதிர்கொள்பவர்கள். ஆகவே அவர்களால் இயல்பாக பேச முடியும். செறிவான பதில்களை அளிக்கவும் முடியும்.செபாஸ்டின் எல்லா வினாக்களுக்கும் திட்டவட்டமான பதில்களை அளித்தார். (பொதுவாக கவிஞர்கள் அவர்கள் எவ்வகைக் கவிதைகளை எழுதுகிறார்களோ அதையொட்டியே கவிதை குறித்த வரையறையையும் அளிப்பார்கள்)

அகரமுதல்வன் தொகுப்புரை

மாலை அரங்கு ஐந்தரை மணிக்குத் தொடங்கி சரியாக ஏழரை மணிக்கு முடிந்தது. அனைவருமே சுருக்கமாகப் பேசினர். அனைத்து உரைகளுமே கவிதை குறித்தவையாக, புதிய ஒன்றை சொல்ல முயல்வனவாக இருந்தன. அகரமுதல்வன் அரங்கை தொகுத்தளித்தார். க மோகனரங்கன் விருதை அளிக்க செபாஸ்டின் விருதுத்தொகையை அளித்தார். சிறப்புரை செபாஸ்டியன் .மதார் மற்றும் நான் இரண்டு வாழ்த்துரைகளை வழங்கினோம். விஜயபாரதி நன்றியுரை வழங்கினார்.

முன்பெல்லாம் நிகழ்வுக்குப் பின் அங்கே பேசப்பட்டவற்றைச் சுருக்கமாக தொகுத்து எழுதுவேன். அவை எதிர்கால வாசகர்களுக்காகப் பதிவாகவேண்டும் என நினைப்பேன். இப்போது சுருதி டிவி உதவியால், நவீனத்தொழில்நுட்பத்தின் உதவியால், அவையனைத்தும் பதிவாகி காணொளியாக உடனடியாக வெளியாகிவிடுகின்றன. அரங்கில் இருப்பவர்களை விட பலமடங்கு பார்வையாளர்கள் வெளியே இருக்கிறார்கள். நாம் பேசுவது அவர்களையும் சேர்த்துத்தான்.

க.மோகனரங்கன் ஒரு காலத்தில் எழுதிக்கொண்டுவந்து முணுமுணுவென வாசிப்பார். இப்போது சுருக்கமாகவும் நேர்த்தியாகவும் பேசுபவராக ஆகிவிட்டார். இயல்பிலேயே ஆசிரியர். எனக்கு வாத்தியார்கள் என்றாலே கொஞ்சம் பயம் உண்டு, என்னை ஒரு காலத்தில் பாடாய்ப்படுத்தியிருக்கிறார்கள். ஆகவே அன்றுமுதல் ஒரு மரியாதையான தூரம் அவரிடம் வைத்திருப்பேன்.

அறையில் இருந்து தன் உரையை எழுதிக்கொண்டிருந்தவர் அதில் முக்கியமான பகுதிகளை அடையாளம் செய்ய சிவப்பு பேனா இருக்கிறதா என்று கேட்டார். நான் ‘A teacher is a teacher’ என்றேன். சிரித்தபடி “இதோ உங்கள் சூட்கேஸ் இருப்பதுபோல ஒருபோதும் என் பெட்டியை என்னால் அடுக்காமல் அள்ளி வைக்கமுடியாது” என்றார். பல கவிஞர்கள் அப்படித்தான். சுகுமாரன் அவருடைய கவிதைகளின் ஒவ்வொரு திருத்தப்பட்ட வடிவையும் நேர்த்தியாக வேறொரு வண்ணப்பேனாவால் எழுதுவார். இப்போது கணிப்பொறியில் எழுதுபவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

எந்த விழாவிலும் என் மகிழ்வுகளில் முக்கியமானது நண்பர்களைச் சந்திப்பது. என் பிரியத்திற்குரிய நண்பர் அன்புவை பெரும்பாலும் இந்த வகை விழாக்களில்தான் சந்திக்கிறேன். அவர் சென்னையில் இருந்தாலும் மிகத்தள்ளி வசிக்கிறார். பல நண்பர்களை இவ்விழாக்களில் சந்திப்பதென்பது விழா முடிந்தபின் ஒரு நிறைவை அளிக்கிறது.

பெங்களூரிலிருந்து தேவதேவன் வந்திருந்தார். அவருடன் இரண்டுநாட்கள் உடன் தங்கி பேசிக்கொண்டே இருந்தேன். தேவதேவனின் அவதானிப்புகள் விந்தையானவை. “செபாஸ்டியன் மலையாளத்தில் பேசும்போது அவர் ரொமாண்டிக்காக ஏதோ சொல்கிறார் என்று தோன்றியது, நீங்கள் மொழியாக்கம் செய்தபோது அவர் கறாரான ஒரு மெட்டஃபிஸிக்கல் உண்மையை முன்வைக்கிறார் என்று தோன்றியது’ என்றார்.

(சண்முகம் மோகனரங்கனுக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார்)

அது உண்மை என எனக்கும் பட்டது. அதற்குக் காரணம் செபாஸ்டினின் கொடுங்கல்லூர் உச்சரிப்பு. கொடுத்தல் என்பதை கொடத்தல் என்றுதான் அவர்கள் சொல்வார்கள். திரிச்சூர் உச்சரிப்புச்சாயல் கொண்டது அப்பகுதி மொழி. ஆகவே ராகமாக நீட்டிப்பேசுவார்கள். அது எல்லாவற்றையுமே ஒருவகை மென்மையான பாட்டுபோல ஆக்கிவிடுகிறது. எனக்கு தோன்றுவதுண்டு, ஆங்கில மொழியில் எதையும் கறாராகத்தான் சொல்ல முடியும் என்று. வேர்ட்ஸ்வெர்த்தின் கவிதைகூட மொழியின் கட்டமைப்பில் ஒரு மின்பொறி போலத் தோன்றுகிறது.

முழுநாள் நிகழ்வில் ஒரு சிறுகதை அரங்கு, ஒரு தெலுங்கு இலக்கிய அரங்கு என இரண்டு மணிநேரம் தவிர்த்தால் கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் கவிதை மட்டுமே பேசப்பட்டது. நவீனக்கவிதைக்கான இத்தனை நீண்ட அரங்குகள் குறைவானவை. வீண்பேச்சு என எதுவும் நிகழவுமில்லை. சம்யுக்தா மாயா, வ. அதியமான் இருவருமே உண்மையாகவும் நேர்த்தியாகவும் தயக்கமில்லாமலும் பேசினார்கள். மதார், க.மோகனரங்கன் இருவருடைய பேச்சும், செபாஸ்டியனின் மலையாளக் கவிதைகள் குறித்த பேச்சுக்களும் செறிவானவை.

விழா முடிந்து நினைவுகளை மீட்டும்போது எஞ்சுபவை கவிதை குறித்த வெவ்வேறு அவதானிப்புகள்தான். என் நினைவில் வலுவாக நீடிப்பது ‘மலையாளக் கவிதை’ என்பது இன்று ‘கேரளக் கவிதை’ என ஆகிவிட்டதைப் பற்றிய செபாஸ்டியனின் அவதானிப்பு. கேரளப் பழங்குடி மொழிகள் மற்றும் துணைமொழிகளில் கவிதைகள் எழுதப்பட்டு அவை ஏற்பு அடையும்போது மலையாளம் என்னும் அடையாளம் இல்லாமலாகிறது. மலையாளமல்லாத, மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டால் மட்டுமே புரிந்துகொள்ளப்படக்கூடிய கவிதைகள் உருவாகின்றன. அவை மலையாளமல்ல, ஆனால் கேரளப்பண்பாட்டின் பிரிக்கமுடியாத கூறுகள்.

தமிழில் இன்னும் அந்த அலை நிகழவில்லை. இங்கே பளியர், முதுவர், சோளகர், தோடர், நரிக்குறவர் மொழிகளில் கவிதைகளும் கதைகளும் எழுதப்பட்டு நூல்களாக வெளிவந்து கல்வித்துறை ஏற்பும் இலக்கிய இடமும் உருவானால் தமிழ்க்கவிதை தமிழகக் கவிதையாக ஆகிவிடுமா? தமிழ் அவற்றில் ஒரு மொழி மட்டுமாக, (முதன்மையான மொழியாகத்தான்) ஆக நேரிடுமா? அந்த ஜனநாயக விரிவை இங்குள்ள தமிழியர்களிம் தமிழ்த்தேசியர்களும் எப்படி எதிர்கொள்வார்கள்?

குமரகுருபரன் கவிதைகள் முழுத்தொகுப்பு வாங்க

முந்தைய கட்டுரைஅகஸ்தீஸ்வரம் ஆலயம்
அடுத்த கட்டுரைMorals in Democracy