குமரகுருபரன் – விஷ்ணுபுரம் கவிதை விருது எட்டாவது ஆண்டாக இந்த ஆண்டு கவிஞர் வே.நி.சூர்யாவுக்கு வழங்கப்பட்டது. அதையொட்டி ஓர் முழுநாள் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.
வழக்கம்போல இந்த கருத்தரங்கும் தற்செயலாக உருவாகி வந்ததுதான். குமரகுருபரன் விருதை வழங்கும் நிகழ்வின்போது வெவ்வேறு ஊர்களில் இருந்து வாசகர்களும் நண்பர்களும் பகலிலேயே வந்துவிடுவார்கள். நிகழ்வு அந்தியில். அது வரை அமர்ந்து பேச இடம் வேண்டும். ஆகவே சற்று பெரிய விடுதிகளை பதிவுசெய்வோம். அங்கே அமர்ந்து உரையாடுவோம். ஒரு கட்டத்தில் தோன்றியது நிகழ்ச்சி நடக்கும் அரங்கையே பகல் முழுக்க பதிவுசெய்தாலென்ன என்று. விசாரித்தபோது அது ஒன்றும் அவ்வளவு செலவேறியதல்ல என்று தெரிந்தது. ஆகவே முழுநாளுக்கும் அரங்கை எடுத்தோம்.
முழுநாளும் என ஆனதுமே அடுத்த எண்ணம் வந்தது. அவ்வாண்டு சுரேஷ் பிரதீப், விஷால்ராஜா போன்ற இளம் எழுத்தாளர்கள் வந்திருந்தனர். அவர்களை வாசகர்கள் சந்தித்து உரையாடச்செய்தாலென்ன? தமிழில் இளம்படைப்பாளிகளைப் பொறுத்தவரை அவர்களே ஒருங்கிணைத்துக்கொள்ளும் வெளியீட்டுவிழாக்களே அவர்களுக்கான மேடைகள். ஒரு பொதுவான மேடை அமைவது அரிது. அப்படி ஒரு மேடையாக ஏற்கனவே விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு முந்தையநாள் அமர்வுகள் இயல்பாகவே உருவாகி வந்திருந்தன. விஷால்ராஜா, சுரேஷ் பிரதீப் இருவருமே அங்கே வாசகர்களுடன் உரையாடியிருந்தனர். அதையே இங்கும் தொடர்ந்தோம்.
எதிர்பார்த்ததுபோலவே அந்த அமர்வுகள் மிகச்சிறப்பாக நிகழ்ந்தன.முழுநாளும் ஓர் இலக்கிய நிகழ்வு நடைபெறும்போது அதை உரைகளாக அமைத்தால் எளிதில் சோர்வுதட்டிவிடும். முழுநாள் அமர்வென்பதனாலேயே சிலர் மிக நீளமாகப் பேசுவார்கள். நாள் முழுக்க பேச்சுக்களைக் கேட்பது கடினம். உரையாடல் தொடர்ச்சியாக இடம் மாறிக்கொண்டே இருப்பது. வாசகர்களும் பங்கேற்பது. ஆகவே சலிப்பூட்டுவதில்லை.
இளம் எழுத்தாளர்களைப் பொறுத்தவரை அவர்களுக்குத் தமிழகத்திலுள்ள மிகப்பெரிய சிக்கலே எதிர்வினைகள் அமைவதில்லை என்பதுதான். சட்டென்று அவர்கள் கண்முன் ஒரு வாசகர்களின் திரள் அமைகிறது. எதிர்வினைகள் உருவாகின்றன. சிலசமயம் சங்கடமாகவும் இருக்கும்தான், ஜெயன் கோபாலகிருஷ்ணனிடம் உங்கள் எழுத்தில் ஆண்மைய நோக்கு வெளிப்படுகிறது என்ற கேள்வி எழுந்ததுபோல. ஆனால் அவர்களுக்கு அது தங்கள் எழுத்தை தாங்களே பார்க்க வழிவகுக்கிறது. தங்கள் தரப்பைத் திரட்டிக்கொள்ள வாய்ப்பளிக்கிறது.
வாசகர்களைப் பொறுத்தவரை கண்முன் ஓர் எழுத்தாளர் அமர்ந்து உரையாடுவதைக் காண்பதென்பது சட்டென்று அந்த எழுத்தாளர் பற்றிய ஓர் உளப்பதிவை உருவாக்குகிறது. உதிரி உதிரியாக படைப்புகளை வாசித்துச்செல்கையில் புதிய எழுத்தாளர்கள் பற்றி ஒரு சித்திரம் உருவாவதில்லை. அவர்களின் தொகுப்பு ஒன்று ஒரு சித்திரத்தை அளிக்கும். ஆனால் நேருக்குநேர் உரையாடல் இன்னும் தெளிவான சித்திரத்தை உருவாக்கிவிடும். அதன்பின் அவர் எழுத்துக்களை வாசிக்கையில் நாம் அவர்களுடன் மானசீகமாக உரையாட ஆரம்பித்துவிடுவோம்.
இந்த அமர்வுகளைப் பொறுத்தவரை முன்னரே பங்கெடுக்கும் படைப்பாளிகள் அறிவிக்கப்பட்டு அவர்களின் படைப்புகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அரங்கினர் பெரும்பாலானவர்கள் அப்படைப்புகளை வாசித்துவிட்டுத்தான் வந்திருப்பார்கள். ஆகவே கேள்விகள் அவர்களின் படைப்புகள் சார்ந்தவையாக, அவர்களை மையம்கொண்டவையாகவே அமையும்.
இதுவரை இந்த அமர்வுகளில் பங்கெடுத்துக்கொண்ட எந்த இளம்படைப்பாளியும் அரங்கில் குறைவாகவோ, தவறாகவோ வெளிப்பட்டதில்லை. ஏனென்றால் வினாக்கள் எழத்தொடங்கும்போதே தங்கள் முன் அமர்ந்திருப்பவர்கள் வாசகர்கள் என்னும் எண்ணத்தை அந்த படைப்பாளிகள் அடைந்துவிடுகிறார்கள். அது அவர்களுக்கு இயல்பான உளநிலையையும் தன்னம்பிக்கையையும் அளிக்கிறது.
எல்லா ஆண்டும் சிறப்பு விருந்தினர்களுடனும் அதேபோல வாசகர்கள் உரையாடும் அரங்கு நிகழும். இவ்வாண்டு ஓர் அரங்கு தெலுங்கு இலக்கியம் பற்றி. ஹர்ஷணீயம் என்னும் இணைய இலக்கிய ஒலிபரப்பை நடத்திவரும் அனில்குமார் சர்வப்பள்ளி, தமிழ்- தெலுங்கு மொழிபெயர்ப்பாளரான பாஸ்கர் அவினேனி ஆகியோர் உரையாடினர். தெலுங்கு இலக்கியச் சூழல் பற்றிய ஒரு விரிவான சித்திரத்தை அளித்த உரையாடல் அது.
சிறப்பு விருந்தினரான மலையாளக் கவிஞர் செபாஸ்டியன் மலையாளக்கவிதைக்கும் தமிழ்க்கவிதைக்கும் இடையே தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் உரையாடலைச் சார்ந்த வினாக்களுக்கு பதிலளித்தார். குற்றாலத்திலும் பின்னர் ஊட்டி குரு நித்யா குருகுலத்திலும் இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு நாங்கள் தொடர்ச்சியாக தமிழ் மலையாளக் கவிதையுரையாடல்களை ஒருங்கிணைத்தோம். ஆண்டில் மூன்று நிகழ்வுகள் வரை நடந்துள்ளன. அன்று அவற்றின் பயன் பற்றி எல்லாம் நினைத்திருக்கவில்லை. அவை அளித்த சுவாரசியமே அவை நிகழ்த்தப்படுவதற்கான உந்துதலாக இருந்தது.
இன்று, கால்நூற்றாண்டுக்குப்பின், மலையாளக் கவிதையின் திசைவழிகளை தீர்மானித்த சந்திப்புகள் அவை என பல விமர்சகர்கள் பதிவுசெய்கிறார்கள். செபாஸ்டினும் அதை குறிப்பிட்டார். அந்த விவாதங்களின் விளைவான முன்னகர்வை தமிழ்க்கவிதையிலும் காண்கிறேன் என்றார்.அந்த நிகழ்வுகளில் கலந்துகொண்ட தேவதேவன், க.மோகனரங்கன் உட்பட பலர் அரங்கிலேயே இருந்தனர். அதற்குள் ஒரு வரலாறாக மாறிவிட்டிருக்கின்றன அந்நிகழ்வுகள். அது ஒரு விந்தையான உளக்கிளர்ச்சியை அளித்தது.