தவளையின் பாடல் – கடிதம்

வெண்முரசு  முழுத்தொகுப்புகள் ஜூலையில் வெளியிடப்படும். தொடர்புக்கு

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம்.

கடந்த வெள்ளியன்றுடன் மழைப்பாடல் வாசித்து முடித்தேன்.

சிலவற்றில் சொகுசை எதிர்பார்ப்பது எனது வழக்கம் . அதிலொன்றுஎதையும் புத்தகமாகதான் வாசிப்பேன்என்பது.அதாவது மின்னூலாகவோ இணையத்திலோ வாசிப்பது ஒரு முழுமை தராது என. அந்த கொள்கையின் அடிப்படையிலேயே வெண்முரசு முழுத் தொகுப்பிற்கு முன்பதிவு செய்தேன்.

ஆனால் தினமும் பல்வேறு கோணங்களில் பாடங்களையும் , தரிசனங்களையும் , கவிதைகளையும் கண்டிப்பையும் , வழிகளையும் , தயக்கத்தையும் ,  கோபத்தையும் , வீரத்தையும் , விவேகத்தையும், சூழ்மதியையும்   மற்றும் எண்ணிலடங்கா எண்ணவோட்டங்களையும் மறுசீராய்வுகளையும்  என்னில் நல்வண்ணம் விதைப்பது இணையத்தில் நான் வாசித்து வரும் வெண்முரசு தான்.

உலகின் நீண்ட நாவல் வரிசையில்  இருபத்திஆறில் இன்னும் இருபத்திநான்கு மட்டுமே மீதமென சொல்லத் தோன்றுகிறது.

இப்போது மழைப்பாடலைப் பற்றி சில வரிகள் . அது என்னில்  பொழிந்தது என்ன? மொழிந்தது என்னஎன்று ..

நடனமிடுபவன் அந்நடனமாகவே இருந்தான் என்ற வரியுடன் துவங்கும் இந்நாவல் நாராயணகுருவின் அறிவை மின்னல் போல கண்முன் காட்டி முன் அழைத்து சென்றது.

எங்களூரில்விடக்கட்ட தெரியாதவன்என சிலரை சொல்வார்கள். ஆனால் மிகத் துல்லியமாக எங்கு விட வேண்டும் எங்கு கட்ட வேண்டும் எனக் கற்பித்தார் பீஷ்மர். திருதராஷ்டிரனுக்கு பெண் பார்க்க செல்வதில் தொடங்கி சகுனியுடனான அவரது உரையாடல் . தன்னை முன்னிறுத்தாமல் தனது செயலை முன்னிறுத்தும் விதம் என ஏராளம் உண்டு அவர் பொழிந்தது.

விதுரன் ஒரு சிறந்த ஆட்சியாளன் அவனைப் பற்றி சொல்ல நிறைய உள்ளது என்றாலும் அவன் இடத்தில் என்னை வைப்பேன் அல்லது தவறிய நாட்களில் அவனை நினைத்து என்னை மறுபடியும் கட்டுத்தறிக்கு கொண்டுவருவேன் என்றால் அது ‘அன்றைய வாசிப்பில் எஞ்சும் ஒரு கவிச்சொல்லுடன் காலைச்சூரியனின் பொன்னொளியைப் பார்ப்பதே வாழ்க்கையின் பேரின்பம்‘ என்று அவன் உணர்வதனாலேயே.  அதோடு ரதிவிஹாரி என்ற சொல் என்னுள் பல நாட்கள் கிடந்து அழுத்தியது. அது காமத்திலாடுபவன் என்ற விளக்கத்தினால் அல்ல . எதில் ஆடினாலும் அதில் மட்டும் அது மட்டுமாக மாறி ஆடுகிறோமா என என்னை நான் கேட்டுக்கொண்டதால்.

சத்யவதி குந்தியிடம் அவளின் அரசியல் கலந்த நடவடிக்கைகளை ஆச்சர்யத்துடன் வியந்து மகிழ்ந்தாலும் ‘ சிறுமியாக சற்று பேதமையுடன் இரு‘ என சொல்வதெல்லாம் கிடைத்தற்கரிய  ஞானமன்றி வேறொன்றுமில்லை.

திருதராஷ்டிரன் , பாண்டு . இவர்கள் இருவரை வைத்து சதுரங்க விளையாட்டுகள் தொடர்ந்த வண்ணமிருக்க . அவர்களின் நெருக்கமும் பாசமும் படித்த அன்று ஒரு வரப்பிற்க்காக தம்பியை வெட்ட மகனை ஏவிய , பக்கவாதத்தால் மறைந்த உறவினர் ஒருவர் கனவில் வந்து சென்றார். தற்போது இல்லாத  தனது தம்பியையும் தேடிக்கொண்டுநான் வாசிக்கவில்லையே இது போன்ற கதைகளை என அம்பிகை, அம்பாலிகை உறவை சொல்லுவது போல தோன்றும் வருத்தம் தோய்ந்த முகத்துடன் .

காந்தாரிகள் வன்மம் தெறிக்க உலாவரும் இடங்களில் எல்லாம் ஏனோ தெரியவில்லை நான் அனுதாபமே கொண்டேன் . அது முதலில் பெருந்தன்மையாக சகுனியை காந்தாரி வழிநடத்தியதாலோ அல்லது இசையில் மயங்கி திருதராஷ்டிரனின் அகத்தில் சென்றமர தனது கண்ணை கட்டிக்கொண்டதாலோ அல்ல. அவர்களை இந்த வன்மத்தில் திளைப்பதற்கு காரணம் உண்மையிலேயே அவர்கள் அல்ல என்பதாலேயே.

குந்தி கர்ணனை பெறுவதும் , பின்பு மதுராபுரி இளவரசனிடமிருந்து தற்குறிகள் கண்ணில் மண் தூவி தப்பி வருவது என வரும் பகுதிகள் அவளின் உயரத்தை நாம் நன்குணர முடிந்தது.

அரசகுலப்(பெரிய இடத்துப்) பெண்கள் விரும்புவது அல்லது விரும்பவைக்கப்படுவது  அழகிய ,  அறவுணர்வு கொண்ட , வீரமும் விவேகமும் கலந்த ஆண்மகனை அல்ல அன்பு காட்டும் உறவுகளை அல்ல ,.. மாறாக ஒரு அரசியல் ஒப்பந்தத்தையே என உணர்த்தினார்கள் சத்யவதி, அம்பிகை , அம்பாலிகை , காந்தாரி(கள்) , குந்தி, மாத்ரி. நீள்கிறது இன்றும் இவ்வரிசை வெவ்வேறு வடிவில் .

தருமனின் எழுச்சித் தருணங்கள் என்னை எழுந்து நின்று கைகூப்ப வைத்தது, கண்ணீர் சிந்த வைத்தது  . நான் என் வாழ்வில் சந்தித்த தருணங்களை நினைவூட்டியது. தந்தை சிதையேறிய நாள் நான் உணர்ந்தது உறவுகள் எத்துனை  உடனிருந்தாலும் தந்தையை மட்டுமல்ல   உற்ற நண்பனை  இழந்த நான் இனி தனியனே என . அதே போல ‘அந்தவிழிகளில் இருந்த துயரையும் தனிமையையும் எந்த விழிகளிலும் அவள் கண்டதில்லை. இனி வாழ்நாளில் எப்போதும் அவன் அந்தத் தனிமையிலிருந்து மீளப்போவதில்லைஇது எனக்காகவே எழுதியது போன்றிருந்தது. அது மறுக்க முடியாத உண்மை!

ஆனால் நான்  தனியனா என்றால்.. இல்லை.  ஆசானின் வரிகள் என் தோள் தொட்டு  துணைகொண்டு நடைபோடுவதால்.

தவளையை சொல்லும்போது கூட தவளை வேதம்‘,  ‘தவளை வைதிகர் என்று சொல்வதெல்லாம் முடிவிலா பிரபஞ்சத்தின் மீது மாபெரும் பித்து கொண்ட காதலுடன் ஞானத்தை எய்துபவரன்றி வேறெவர் எழுத முடியும். இந்த இடத்தில் எனக்கு தோன்றியது  ஒரு குறள்  

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை

முன்நின்று கல்நின் றவர்.’

நாவலில் கீழ்கண்ட வரிகளை போல விரவிக்கிடக்கிறது பொன்னிறப் பாதை காட்டும் ஆசானின் தூறல்கள்.

*தம்பி, அந்த மேடையில் நம்முடைய நிமிர்வும் கனிவும் நட்பும் முன்வைக்கப்படட்டும்

*ஒரு கனியை உண்ணும்போது அந்த முழுமரத்தையும் சுவைக்கத்தெரியாதவன் உணவை அறியாதவன்

*அரசே, இதுதான் நடக்கிறது. இங்குள்ள பழங்குடிகள் தங்களுக்கு மகற்கொடை மறுக்கிறார்கள். தாங்கள் விழியிழந்த அமங்கலர் என்று குற்றம்சாட்டுகிறார்கள்என எப்போது சொல்ல வேண்டுமோ அதுவரை விதுரன் பொறுமை காப்பது

*சூரசேனர் சொன்னார்நீ உன் அறத்தை தேடிச் செல்கிறாய். அரசியல் உனக்கானதென்றால் அவ்வாறே ஆகுக. ஆனால்…”சற்று தயங்கியபின் அவர் தொடர்ந்தார்கண்ணீரினாலும் குருதியினாலும்தான் எப்போதும் அரசியல் ஆடப்படுகிறது. பிறருடைய கண்ணீரும் குருதியும் என்றே நாம் நினைப்போம். அவை நம் கண்ணீரும் குருதியும் என அறியும் கணம் ஒன்று வரும்…”

*தன்னுள் நிறைவை அறியாத பெண்மனம் பிற எதிலும் நிறைவைக் காண்பதில்லை.

*தாழ்வாரத்தில் நடக்கும்போது அவனுள் புன்னகை விரிந்தது. எத்தனை அச்சங்கள். மானுட உறவை இயக்கும் அடிப்படை விசையே அச்சம்தானோ? பிறன் என்னும் அச்சம். தன்னைப்பற்றிய பேரச்சம். கொலையும் அச்சத்தாலேயே. அஞ்சுவதற்கேதுமில்லை என்றால் இவர்களின் உலகமே வெறுமைகொண்டு கிடக்கும்போலும். எளியமனிதர்கள். எளியமனிதர்கள். மிகமிக எளிய மனிதர்கள். காலக்களியில் நெளியும் சிறுபுழுக்கள். (இந்த வரிகள் இன்றும் என்னில் ஓடிக் கொண்டே இருக்கிறது அந்தக் கூட்டத்தில் நான் ஒருவனாகி விடக் கூடாது என்ற விழிப்புடன் :) )

*அவன் எங்கும் இருக்கலாம் என்பதனாலேயே எங்கும் இருந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது.

* சூழ்ந்திருந்த அனைத்துப் பனிமலைப்பரப்புகளும் வெண்முரசுகளாக மாறி அதிர்ந்து ஓய்ந்தன

*மண்ணில் விழும் ஒவ்வொரு மழைத்துளியும் ஓர் உயிரின் வேண்டுதலுக்கிணங்கவே விழுகிறது என்கின்றன நூல்கள்

*சத்யவதி அழகிய வெண்ணிறப் பற்கள் தெரிய புன்னகைசெய்தபோது சியாமையும் புன்னகைத்தாள்

*மண் மீண்டும் புதியதாகப் பிறந்தெழட்டும். உயிர்கள் மீண்டும் புதுநம்பிக்கை கொள்ளட்டும்.

அறமும் , மறமும் அகலாமல் கவித்துவ தருணங்கள் நிரம்பி வழிய , இயற்கையை செயற்கை கலக்காமல் அகமும் புறமும் குளிரக்  கண்டு மழைப்பாடலை இசைக்கலாம் பலமுறை இன்னும் நம் வாழ்வில்.

கனல் சற்று தணிய இதமான தாளத்துடன் மண்ணையும் மனதையும் ஈரப்படுத்தி பண்படுத்தியது மழைப்பாடல்.  

உடன் வாசிக்கும் வாசிப்பை நேசிப்போம் நண்பர்களுக்கு மனமார்ந்த  வாழ்த்துக்கள்!

அருகிருந்து அனுதினமும் ஆசிதரும் ஆசானுக்கு பாதம்பணிந்த நன்றிகள் !

அன்புடன்

கே.எம்.ஆர்.விக்னேஸ்

முந்தைய கட்டுரைகவிஞரிடமிருந்து தியானம் பயில்தல்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் எனும் அலை