வே.நி.சூர்யா: விடுவித்துக்கொள்ளும் கவிதை – கண்டராதித்தன்

கவிதைகள்- வே.நி.சூர்யா சிறப்பிதழ்

ஒளிமிக்க ஒவ்வொரு கவிதையும் மரணத்தையும் பிறப்பையுமே தன்னுள் கொண்டபடி பிறிதொரு கவிதைக்காகவே ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறது. 

                                                        தேவதேவன்

மேலே சில்லுச் சில்லாக நட்சத்திரங்கள்

பூமியிலேயே கட்டக்கடைசியான 

ஆள் என்ற நினைப்பில்

தன் கரங்களையே தலையணையாக்கி

மணலில் அயர்ந்திருக்கிறான் ஒருவன்.

காற்றுக்கும் அலைகளுக்கும் குறைவேயில்லை

ஆனாலும் ஒரு நிச்சலனம்

சட்டென்று அவன் எழுந்து உட்கார

ஒட்டுமொத்த அண்ட சராசரமும் 

அமர்ந்திருக்கிறது தேநீர் மேசையின் எதிர்புறத்தில்.

மொழியின்றி, 

பேச்சைத் துறந்து, 

என்னவோ பேசிக்கொள்கிறார்கள் இருவரும். 

ஓரிரு நிமிடங்கள் நீள்கின்றது அந்த ரகசிய அமர்வு.

பின் கடற்கரை ஒரு மெத்தை என்றாகச் 

சோர்ந்து சுருண்டு 

தனக்கு வெளியே படுக்கத்துவங்குகிறான். 

மேலே 

அங்கொன்று இங்கொன்று

பின் அங்கு என 

அச்சுஅசலாய் 

மானுட உருவில் 

ஓர் உடுத்தொகுதி.

உலகம் மகிழ்ச்சியானதாக,இரசனைக்குரியதாக,அனுபவிக்கப் போதுமானதாக எல்லோருக்கும் அமைவதில்லை.பலர் அன்றாட வாழ்க்கைப்பாடுகளோடு மட்டுமே தங்கள் வாழ்நாளை விரும்பிக் கரைத்துக்கொள்வதுண்டு.அவர்கள் தங்களைத் தங்களோடு மட்டுமே அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.

    தன் நிலபுலன்களை விற்று ஐந்து பெண்குழந்தைகளை வளர்த்துத் திருமணம் செய்துகொடுத்த ஒருவர்,தன் மனைவி மறைந்த பின்னர் பிறருடன் பேசுவதை நிறுத்திக்கொண்டார்.மாலையானால் ஏரிக்கரையில் அமர்ந்து தனியாக பேசிக்கொண்டிருந்துவிட்டு வீடு திரும்பி விடுவார்.அவர் மறைந்து முப்பது வருடங்களாகிவிட்டது என்றாலும் .ஏரிக்கரையின் அந்தபகுதிக்கு இப்போது சென்றாலும் அவர் அமர்ந்திருப்பதும், சன்னமான அவரது குரலும் நினைவிற்கு வந்துவிடும்.

   தெண்பெண்ணையில் அமைந்துள்ள கபிலர் குன்றைக் கடக்கும்போதெல்லாம் அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் பாடலும்

பாரிமகளிர் குரலும் கேட்பதுபோல் ஒரு பிரமை தோன்றும்.பொதுவாக கவிதை அல்லது கவிதையின் ஒரு வார்த்தை நம்மை எதனுடன் தொடர்பு படுத்தும்,எதனை நினைவுபடுத்தும் என்பதெல்லாம் புதிரானது.ஒளிமனிதன் கவிதை எனக்கொரு மனிதனை,அவனது வாழ்வை,அவனது நிராசையை அதனோடு இயைந்து வாழ்ந்த குணத்தினை நினைவிற்கு கொண்டுவந்தது.சூர்யாவின் கவிதையில நிகழும் தனிமை 

தன்னைத் தனிமைப்டுத்திக்கொள்வதோடு மட்டுமல்லாமல் வாசகனையும் தனிமைப்படுத்தும் வசியம் கொண்டது. 

       வே.நி.சூர்யாவின் முதல் தொகுப்பான கரப்பானியம்  உள்முகத்தன்மையான மொழிநடையுடனும்

கூடுதலான அகவிசாரணையுடனும் இருந்தது.அதன் இருண்மையான மொழிநடை அவருக்கு தனித்துவமான கவனத்தைக் கொடுத்தது. தொடர்ச்சியான வாசிப்பும் எழுத்தும் கரப்பானியம் தொகுப்பிற்குப் பிறகு அவருக்கு ஒரு மாற்றத்தை கொடுத்திருக்கும் எனக் கருதுகிறேன்.அந்தியில் திகழ்வது தொகுப்பில் உள்ள கவிதைகளின் வடிவத்திலும், அதன்   சொற்தேர்வு போன்றவற்றில் நிகழ்ந்த மாற்றம் குறிப்பிடத்தகுந்ததாகவும், ஒரு நவீன கவி மேற்கொண்டு நகரும் திசையையும் அடையாளம் காட்டுவதாகவும் உள்ளது

   .நவீன கவிதைக்கு வந்திருக்கும் புதிய தலைமுறைக் கவிஞர்களுள்ளான சமகாலத்தில்  எழுதப்படும் அல்லது தனித்தனியாக நிகழும் தற்போதைய கவிதையாக்கங்களுக்கு மாற்றாக அவரது கவிதைகள் வெளிப்பட்டன. அவரிடமிருந்து வெளிப்பட்ட தனித்திறன் கொண்ட கவிதைகள் உத்தேசமான  தத்துவார்த்த அம்சத்தையும்,அறிவுதளத்தையும் தன்னுள் கொண்டிருக்கிறது.

விதி

இதோடு இரண்டாவது முறை

நான்தான் உள்ளே இருக்கிறேன் என்பதையே 

மறந்துவிட்டு

வீட்டைப் பூட்டிவிட்டு  சென்றுவிட்டார்கள்

இப்போதே நானும் எனது கசங்கிய நிழலும்

இன்னும் பதினைந்து நிமிடத்தில்

நான் செல்லவிருந்த கடற்கரையில்

காணவிருந்த நாயும்

திரும்பும் வழியில் 

என்னைச் சந்திக்கவிருந்த மயிலும்

அதன்பிறகு

என்னை எதிர்கொள்ள இருந்த ஊகிக்கவேயியலாத

எனது அத்தனை அத்தனை வருங்காலச் சம்பவங்களும்

வெறுமனே வீட்டிற்குள்ளிருந்தபடி 

காலாட்டிக்கொண்டிருக்கிறோம்

சாவியுடன் எப்போது வருவார்கள் என எதிர்பார்த்தபடி.

.

இதோடு இரண்டாவது முறை என்று  இக்கவிதை தொடங்கும்போதே ஒரு புகாருடன் தொடங்குகிறது.உள்ளேயிருக்கும் ஒருவனை மறந்து வீட்டைப் பூட்டிக்கொண்டு போவது எப்போதாவது நிகழ்வதுதான்.தினமும் வெளியில் போகும் ஒருவருக்கு குறிப்பிட்ட நேரத்தில் வெளியில் செல்ல முடியாமல் போவது கடும் சித்திரவதைக்குள்ளாவதைப்போல வாதை வேறில்லை.என்றாலும் இக்கவிதை வீட்டிற்குள் பூட்டப்பட்டு இருக்கும் ஒருவனுக்கு அவனுக்குள்ளாக கரைந்திருக்கும் புற உலகுடன் அறைக்குள் காத்திருக்கத்தொடங்குகிறான்.

   வீடு திறக்கப்படுமா இல்லையா என்ற கவலை இல்லை அனைத்தும் தனக்குள் கரைந்துபோகும் அத்வைத அனுபவமும்,வெறுமனே வீட்டிற்குள்ளிருந்தபடி காலாட்டிக்கொண்டிருக்கிறோம் என்ற வரி நிகழ்காலத்தை துக்கமாக,ஏமாற்றமாக இல்லாமல் எவ்வாறு இருக்கிறதோ அவ்வாறே ஏற்கிறது. 

வெளிப்படுத்துதல்

கோடிக்கணக்கான போதிசத்துவர்கள்

கோடிக்கணக்கான மரத்தடியில் தியானத்திலிருக்கிறார்கள்

அதிலொரு போதிசத்துவனுக்கு பைத்தியம் பிடிக்கிறது

ஊழ்கத்தின் கடைசிப் படிக்கட்டை 

விட்டிறங்கி

இன்மையின் முதல் படிக்கட்டில் 

கால்வைக்கிறான்

ஆனந்த த்தின் அடிவாரத்திலிருக்கும் கிராமத்தில்

சிங்கம் பசுவுடன் நடக்கத் துவங்கியது

அத்தனை ஞானத்துடனும்

அத்தனை துயரத்துடனும்.

தன்னை வெளிப்படுத்திக்  கொள்வதிலிருந்து ஞானிகள்,அறிஞர்கள்,த த்துவவியலாளர்கள் எனச் சமூகத்தின் மேன்மையான படிகளில் தங்களைப் பொருத்திக்கொள்பவர்கள் முதல் கீழ்மட்ட குற்றச்செயல்பாடுகளில் ஆத்மார்த்தமாக  ஈடுபடுபவர்கள்,ரோகிகள்,உலோபிகள் வரை யாரும் தங்களை விடுவித்துக்கொள்வதில்லை.ஆகவே தன்னை வெளிப்படுத்தலில் இருக்கும் அதீத ஆர்வம் தன்னை விடுவித்துக்கொள்ளுதலில் இருப்பதில்லை என்பதே உண்மை.

 சூர்யாவின் வாசிப்பும் ரசனையும் சித்தர்பாடலகள்,தனிப்பாடல் திரட்டு,ஓஷோ,லா வோட்சு,நீட்ஷே,உலக இசை,வரலாறு,பாடல்கள் என கலவையானத் தேர்வைக் கொண்டது.ஆகவே அவை இவரது படைப்பாக்கத்தில் ஸ்தூலமான அம்சமாக நிறைவதையும் நாம் காணமுடிகிறது.  

இறந்தவர்கள் எனது சுமைகளைத் தூக்கிவருகிறார்கள்,

நான் அவர்களைத் தூக்கிக்கொண்டு செல்கிறேன்

அமைதியாக இரு

அமைதியாக இரு

இந்த அகத்துடனும் சரீரத்துடனும்

நான் 

இப்போதுதான் பிறந்திருக்கிறேன்.

 நல்ல கவிதை தனக்கேயான பிரத்யேகமான அனுபவத்தைக் கொண்டிருக்கும்.அதனளவில் வாசகனுக்கு இட்டு நிரப்பும் இடைவெளியையும்  தரும் என்ற வகையில் மேற்கண்ட கவிதை உள்ளது.

பொதுவாக சூர்யாவின் கவிதைகளில் ஒளி,மின்னல்,வெளிச்சம்,சூர்ய உதயம்,நிலா போன்ற இருண்மைக்கும்,இருளுக்கும் எதிரான கூறுகள் பல்வேறு அவதாரங்களாக வந்துபோகின்றன.அவை ஒவ்வொன்றும் ஒரே விதமான பொருளைத் தாராமல் போனாலும் அது தனிமை,அமைதிகொள்ளல்,விலகியிருத்தல் என பல அம்சங்களைக் கொண்டதாகவே கருதுகிறேன்.

குறிப்பாக,

கோப்பையினுள் மீளமீள இட்டு

எடுக்கப்படும்

தேயிலைப் பையெனத் தொலைவில்

அமிழ்ந்துகொண்டிருக்கிறான்

சூரியன்

நான் மட்டும்

கரைந்தபடியே

மெல்ல நகர்ந்துகொண்டிருந்தேன்

எங்கே

எதற்காக?

நீண்டநாட்களுக்குப் பின்பு

வெளிச்சம் என்னை ஊடுருவிக் கடக்கிறது

என பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டு போகலாம்,ஆனாலும் அதன் உச்சமாக

மின்மினி தாவுகிறது இன்னொரு மின்மினியினுள்என்றொரு அற்புதமான வரியும் கிடைக்கிறது.

நளிர்த்துளி போல் ஒரு இரவு

ஏதோ இருளே சிறகசைத்துப் பறந்துசெல்வதுபோல 

ஒரு காகம் புறப்படுகிறது

ஒட்டுமொத்த உலகையும்

உலுக்கவேண்டுமென்று எதிர்பார்த்து நிற்கும் அசைவின்மை.

கருநீலவிசும்பில் விமானம் இட்டுச்சென்ற புகை நெடுஞ்சாலை

அச்சாலையின் இருமருங்கிலும் நட்சத்திர மரங்கள்,

சற்றே உற்றுப்பார்க்கிறேன்

!அங்கே யாரோ ஒருவர்

தன் மகளுடன் வந்துகொண்டிருக்கிறார்

தான்தான்

இப்பிரபஞ்சத்திற்கே வைத்தியம் பார்த்தவர் என்ற மிடுக்குடன்.

அவருக்கு ஒரு ஹலோ சொல்லிவிட்டு

படுக்கைக்குத் திரும்பினேன்.

தம் பாடல்களைச் சாளரளத்தினூடே

அனுப்பி ஆர்பரித்தன பூச்சிகள்

நானொன்றும் தீவு இல்லை அல்லவா.

இவ்வாறாக இளம் கவிஞரான சூர்யா நம் பொதுமனப்பான்மைக்கு எதிரான அல்லது அதற்கு மாறான நிலையில் இருந்து,புதிய அழகியலையும்,அர்த்தங்களையும் கொண்டுவந்து தருகிறார்.தனித்து இயங்குதல்,விலகியிருத்தல்,நுட்ப அழகியல்,பொதுவெளிக்கு தட்டுப்படாமலிருத்தல் ஆகியவற்றின் வழியாக  தன் இலக்கியச் செயல்பாடுகளை வரையறுத்துக்கொண்டவர் வே.நி.சூர்யா என்ற இளங்கவி.இவரை  வாசிக்க, காதுகொடுத்துக் கேட்க நம் அனுபவங்களில் இருந்து  நம்மை நாம் விடுவித்துக்கொள்ள வேண்டும்.

                                               கண்டராதித்தன்

                                                கண்டாச்சிபுரம்.

முந்தைய கட்டுரைTwenty Fingers 
அடுத்த கட்டுரைகஸ்தூரிரங்கன்