சினிமா நண்பர்களுடனான ஓர் உரையாடலில் பல்வேறு நடிகர்கள் பற்றிய பேச்சுக்கள் வந்தன. ஒருவர் என்னிடம் நான் விரும்பும் ‘ஸ்டைல் நடிகர்’ யார் என்று கேட்டார்.
இலக்கியத்தில் ஸ்டைலிஸ்ட் என சிலர் உண்டு. உள்ளடக்கம், வடிவம் என்பதற்கு அப்பால் நடையால் மட்டுமே முதன்மை பெறுபவர்கள். ஆங்கிலத்தில் ஜோசப் கான்ராட், விளாடிமிர் நபக்கோவ், ஹெமிங்வே, கர்ட் வான்காட், ஜான் அப்டைக் என சிலர் உண்டு. தமிழில் முதன்மையாகச் சுஜாதா.
அதேபோல நடிகர்களிலும் உண்டு. பெரிய நடிகர்கள் அல்ல. விதவிதமான கதைமாந்தர்களை நடிப்பதில்லை. வெவ்வேறு வகையான வெளிப்பாடுகளும் இருப்பதில்லை. ஆனால் அவர்களுக்கென ஒரு ஸ்டைல் இருக்கும். பெரும்பாலும் அவர்களின் தோற்றம், நடை, முகபாவனைகள் என அது அமைந்திருக்கும். நமக்கு அவர்களைப் பிடித்துவிடும்.
அப்படி ஒருவரை பிடித்திருப்பதற்கான காரணங்கள் நம்மால் எளிதில் ஊகிக்க முடிவதாக இருக்காது. மிகச்சிக்கலான சமூகவியல், உளவியல் ஊடுபாவுகள் கொண்டது அந்த ஏற்பு. ஒருவரின் தோற்றம் நமக்குப் பிடிப்பதற்கு அவருடைய இன அடையாளம் காரணமாக இருக்கலாம். அவருடைய தோற்றம் அந்த இன அடையாளத்தின் நீட்சி.
இனஅடையாளத்தை நாம் விரும்புவதற்கே சிக்கலான காரணம் உண்டு. நம்முடைய அதே இன அடையாளம் நம்மால் விரும்பப்படலாம். அதிலும் நம்முடைய இன அடையாளத்தில் மிகச்சிறந்தது நம்மால் விரும்பப்படலாம். நம்முடைய இன அடையாளத்தில் சராசரியும் நம்மால் விரும்பப்படலாம். மிக அரிதான தோற்றப்பொலிவு நம்மால் விரும்பப்படலாம். அடிக்கடி கண்ணில் படுவதனாலேயே ஒரு தோற்றம் விரும்பப்படலாம்
அதேபோல நாம் உள்ளூர விரும்பும் இன்னொரு இன அடையாளமும் நம்மால் ஏற்கப்படலாம். எல்லா இனமும் இன்னொரு இனம்போல் ஆக விரும்புகிறது என ஒரு கோட்பாடு உண்டு. உதாரணமாக, மலேசியச் சீனர் கொரியர்கள் போல ஆக விரும்புகிறார்கள்.
தமிழகத்தில் ரஜினியும் விஜயும் ஏற்படைவது எதனால், கூடவே கமல்ஹாஸனும், அஜித்தும் ஏற்படைவது எதனால் என யோசிக்கலாம். ஆனால் எளிமைப்படுத்த ஆரம்பித்தான் அசட்டுத்தனமான முடிவுகளுக்குச் செல்வோம்.
தனிப்பட்ட ரசனை என்பது உளவியல் சார்ந்தது. நம்முடைய இளமைக்கால அனுபவங்களும் நினைவுமீட்சிகளும் மிகப்பெரிய பங்களிப்பாற்றுகின்றன. ஒருவர் இளமையில் நம்மைக் கவர்ந்த இன்னொருவரின் சாயல் கொண்டிருப்பார். அல்லது சம்பந்தமே இல்லாமல் அவரை நினைவூட்டுவார். சில சமயம் நாம் மிக உகந்த ஒரு மனநிலையில் ஒரு சினிமாவைப் பார்க்கும்போது அதில் நடித்த ஒருவர் நம்முள் நிலைகொள்வார். அந்த இனிய நினைவின் பகுதியாக அவர் ஆனமையாலேயே நமக்கு அவரைப் பிடிக்கும்.
அப்படி வெறுமே தோற்றம் மற்றும் அசைவுகளாலேயே எனக்குப் பிடித்த நடிகர்களில் முதன்மையானவர் லீ வான் க்ளீஃப்.நான் அந்தப்பெயரைச் சொன்னதும் எவருக்குமே அந்நடிகர் நினைவுக்கு வரவில்லை. நான் அவர் நடித்த புகழ்பெற்ற கதாபாத்திரத்தைச் சொன்னேன். செர்ஜியோ லியோனி இயக்கிய The Good, the Bad and the Ugly படத்தின் கெட்டவர். படத்தில்’Angel Eyes’ என்று அவருக்குப் பெயர். சட்டென்று அறையிலிருந்த அனைவருமே எழுந்து விட்டார்கள். “யோ யோ யோ!’ என அந்த படத்தில் என்னியோ மோரிகோன் அமைத்த புகழ்பெற்ற பின்னணி மெட்டை பாடியபடி லீ போலவே ஒருவர் சுட்டுக் காட்டினார்.
அதன் பின் ஆளுக்கு ஆள் அவரைப்பற்றிப் பேச ஆரம்பித்தனர். செர்ஜியோ லியோனியின் For a Few Dollars More படத்தில் கர்னல் டக்ளஸ் மார்ட்டிமர்தான் லீ சர்வதேசக் கவனம்பெற காரணமாக அமைந்த கதாபாத்திரம். ஆனால் அது நல்ல கதாபாத்திரம். அடுத்த படமான ’நல்லவன், கெட்டவன், அசிங்கமானவன்’ அவரை நிதானமான, கறாரான, இரக்கமே அற்ற, மிகக்கூர்மையான வில்லனாகக் காட்டியது. அதன்பின் அவருடைய பெரும்பாலான படங்களில் லீ அந்த கதாபாத்திரத்தையே நடித்திருக்கிறார்.
லீ ‘வன்மேற்கு’ படங்களின் தவிர்க்கமுடியாத முகம். ‘மிக விரும்பப்பட்ட வில்லன்’ என அவரைப்பற்றிய குறிப்புகள் சொல்கின்றன1925 ல் பிறந்த லீ அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி பல பதக்கங்களை வென்றவர். பின்னர் நாடகநடிகர் ஆனார். திரைவாய்ப்புகள் வந்தன. அறியப்பட்ட முகமாக ஆனபோது நிகழ்ந்த விபத்தில் மூட்டு ஒடிந்தது. குதிரையில் ஏறமுடியாது என்று மருத்துவர்கள் சொன்னார்கள். மனைவி விவாகரத்து வாங்கி சென்றார். படங்கள் இல்லாமல் பொருளாதாரச் சிக்கலுக்கு ஆளாகி உடலுழைப்புப் பணிகளுக்குச் செல்ல நேர்ந்தது.
அப்போதுதான் செர்ஜியோ லியோனியின் பட வாய்ப்பு வந்தது. அது அவர் வாழ்வில் மாபெரும் திருப்புமுனை. அதன்பின் அவர் ஓரு சர்வதேச முகம் ஆக மாறினார். குட் பேட் ஆண்ட் அக்லி நாகர்கோயிலில் நூறுநாட்கள் ஓடிய படம் (பயோனியர் முத்து திரையரங்கில்). லீக்கு திருவரம்பில் கூட ஒரு தீவிர ரசிகர் இருந்தார். சவரக்கடை வைத்திருந்த கண்ணன்.
ஆனால் வறுமையில் ஒரு வாய்ப்பு வந்தபோதுகூட லீ தனக்கான கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ளவில்லை. ஃபர் எ ஃப்யூ டாலர்ஸ் மோர் படத்தில் கெட்டவன் சாகும் காட்சி முதல் வடிவில் எழுதப்படவில்லை. ஆனால் ஒரு கெட்டவன் செத்தே ஆகவேண்டும் என லீ வாதிட்டார், கதாபாத்திரம் மாற்றப்பட்டது. லீ கெட்டவர்கள் வாழக்கூடாது, பெண்களையும் குழந்தைகளையும் தாக்குவதுபோல் நடிப்பதில்லை என பல கொள்கைகளை வைத்திருந்தார். உண்மையில் லீ போட்ட அந்நிபந்தனைகளே செர்ஜியோ லியோனிக்கு பிடித்திருந்தன. ஏனென்றால் கர்னல் மார்ட்டிமர் அப்படிப்பட்ட ஒரு கொள்கைஉறுதி கொண்ட மனிதர்.
லீ பெரும்பாலான அவருடைய படங்களில் காட்டப்படுவதுபோல நிறைய புகைபிடிப்பவர். 1989ல் அவர் மறைந்தபோது சாவுக்கான காரணம் புகைபிடித்தலின் விளைவான புற்றுநோய். லீ அவருடைய படங்களில் வருவதைப்போலவே மிகச்சிறந்த துப்பாக்கி சுடும் நிபுணர். ஆனால் அவருக்கு சினிமாவுக்கு வருவதற்கு முன் குதிரையேறத் தெரியாது. அவர் விவசாயப்பின்னணி கொண்டவர், ‘ரேஞ்ச்’ எனப்படும் பண்ணையில் வாழ்ந்தவர். ஆனால் நியூஜெர்ஸியின் சாமர்வெல் பகுதியில் அன்றே டிராக்டர்களும் டிரக்குகளும் வந்துவிட்டன, அவர் குதிரையுடன் பழகவே நேரிடவில்லை.
லீயை ஏன் எனக்குப் பிடிக்கும்? ஒரு காரணம் என இன்று தோன்றுவது எனக்கு 11 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் கற்பித்த தங்கையா நாடாரின் சாயல் அவருக்கு இருந்தது என்பதுதான். தங்கையா சார் ஆறடிக்குமேல் உயரம், நல்ல வெள்ளை நிறம், சற்றே வளைந்த கழுகுமூக்கும் , சுருக்கங்கள் கொண்ட சிறிய கண்களும் கொண்டவர், பக்கவாட்டில் பார்த்து புன்னகைப்பார்.
லீயின் சிறப்பு என நான் எண்ணுவது அவருடைய நேரான உடலும், சீரான நடையும். ராணுவ நடை. மிதப்பான, கவனமான, உறுதியான நடை அது. அவருடைய சுருக்கம் விழுந்த சிறிய கண்களில் மின்னும் சிறு புன்னகை. குட் பேட் ஆண்ட் அக்லி படத்தில் முதல் காட்சியில் ஒருவனை கொல்ல வந்து, அவனுடைய உணவைச் சாப்பிட்டபடியே, அவனிடம் உரையாடும்போது அவருடைய கண்களில் தெரியும் அந்தச் சிரிப்பு. ஓர் ஈட்டியின் கூர்முனை ஒளிபோல.
ஒரு காட்சியில் குடிநிலையத்தில் கிளின்ட் ஈஸ்ட்வுட் பார்வையில் லீ மரப்படிகளில் நிதானமாக இறங்கி வருவார். அந்த நடைக்கே நாங்களெல்லாம் அன்று விசில் அடித்தோம். அதுதான் நடை.