இஸ்லாம், இன்றைய சூழல்- கடிதம்

இஸ்லாமிய -சூஃபி மரபை அறிதல்

அன்பின் ஜெ!

இன்று ஒருவர்ஏன் இஸ்லாமிய  சூஃபி மரபை கற்கவேண்டும்?’ என்று கேட்டுவிட்டு நான்கு காரணங்களை வரிசைப்படுத்தி இருந்தீர்கள். முஸ்லிம் சமூகப் பின்னணியில் ஐம்பது வயதை கடந்த எனக்கே இஸ்லாமிய அடிப்படையைக் குறித்த புரிதல் முறைசாரா வழியில் (அதாவது நூல்களை வாசித்ததன் மூலம், சுயமாக) ஈட்டிக் கொண்ட சிறுபகுதி மட்டுமே உள்ளது. மற்றபடி முறையான மார்க்கம் அல்லது மதம் பற்றிய கல்வியறிவு இல்லை என்பதே உண்மை. அதற்கான நிறுவனம், அமைப்பு இங்கு இல்லையா என்றால்சிறிய அளவில் இருக்கிறது, பெரும்பாலும் அனாதைக் குழந்தைகளுக்காக நடத்தப்படும் மதப் பள்ளிக்கூடங்களான அவை காலத்தால் உறைந்துபோன பாடத்திட்டங்களும், உடல் மொழியும், சீருடையையும் கொண்டவை.

வேதாந்தக் கல்வி எதற்காக? (இன்று தமிழகத்தில் தூய அறிவென வேதாந்தத்தை அதன் மெய்வடிவில் கற்க ஓர் இடம் உள்ளதா?) தளிர்மேல் பாறை  (வேதசகாயகுமார்கள் உருவாவது எளிதல்ல) ஆகியவற்றை வாசித்தேன். கடைசியாக இன்று நித்யாவின் தொழுகை, ஊட்டி குருகுலம்கடிதம் வேலாயுதம் பெரியசாமியின் கட்டுரையைப் படித்தேன். ஒரே மாத இடைவெளிக்குள் இதுபோல் பரஸ்பர உரையாடல், புரிந்துணர்வுக்கான முன்னெடுப்பு நிகழ்ந்து கொண்டிருப்பது ஆரோக்கியமான அம்சமென்பேன். 

அடிப்படையில் eclectic-க்கான (அதை எப்படி தமிழ்ப்படுத்துவது?)  உண்மையின் நதிமூலத்தை பார்க்கும் வழக்கமில்லை என்பதால் கூடுமானவரை தனித்துச் செல்லவே இயல்கிறது. கிறிஸ்தவம், இந்துமதம்ஏன் கம்யூனிஸ்ட்களும்கூட ஒரே ஒரு அமைப்பாக இல்லையோ, அதுபோலவே இஸ்லாமும் பலவிதமாக உள்ளது. அதில் நானறிந்து மூன்று பெரும் பிரிவாக வகைப்படுத்தலாம். இது மெக்காவில் ஹஜ் பயணத்தில் இலட்சக் கணக்கான புனிதப் பயணிகள் கூடும் காலம். நான் அங்கிருந்த 14 ஆண்டுகளில் ஒரு வருடம் ஹஜ் செய்த ஆண்டைத் தவிர எஞ்சிய 13 ஆண்டுகளும் இந்த பயணிகளுக்கு உதவும் தன்னார்வல தொண்டர் அணியில் இருந்துஇவர்கள் அத்தனை பேர்களை மிக அணுக்கமாக கவனித்துள்ளேன். எத்தனையோ மொழி, எத்தனை நிறம், எத்தனை வகையான உடலமைப்பு, பண்பாடு, உணவுப் பழக்கவழக்கம் என இருந்தாலும் கீழ்க்கண்ட இந்த வகைப்படுத்த இயலும் என்பதை அனுபவப்பூர்வமாக கண்டிருக்கிறேன்.

  • ஆசார முறையை தழுவி ஒழுகும் சன்னி அல்லது  ஷிஆ பிரிவு மரபுக் குழுவினர். (Orthodox) 
  • (அரபு நாடுகளில் கடந்த சில நூற்றாண்டுகளாக) செல்வாக்குடன் உள்ள புத்துருவாக்க சலஃபிகள், இக்வானிய பிரிவைச் சேர்ந்த நவீனத்துவர்கள். (Modernist)
  • இந்த இரண்டு தரப்புக்கும் இடைப்பட்ட சூஃபிய சமரசவாதிகள்  (பக்தி மார்க்கிகள் / ஜென் போன்ற இயக்கத்தினர்)

பொதுவாக வழிபாடுகள் வெறும் சடங்குகளாக எஞ்சிய நிலையைக் கண்டு சலிப்புற்று உள்ளர்த்தத் தேடல் கொண்ட எனக்கு சூஃபிய நெறி சிறிய இளைப்பாறுதலைத் தந்துகொண்டிருக்கிறது. அதிலும்கூட நிறுவனமயமான பொறிமுறை எதற்குள்ளும் சிக்கிக் கொள்ளும் திட்டம் எதுவும்  என்னிடமில்லை. தர்கா, கான்காஹ், தைக்கா, ஸாவியா என்று சூஃபிய வெளிக்குள் புழங்கும் கலைச்சொற்களின் நுண்வேறுபாடு முஸ்லிம்களாலேயே சரிவர விளங்கிக் கொள்ளப்படவில்லை.

பா. தாவூத் ஷா (1885 – 1969) என்றொருவர் இங்கு கதாகாலட்சேபம் செய்திருக்கிறார், அவருக்கு பெயரேஇராமயணசாயபுஎன்பது. யாரோ பெயர் தெரியாத, படிப்பறிவில்லாத பட்டிக்காட்டான் கிடையாது. அந்தக் காலத்தில் பி.. படித்தவர், .வே.சாமிநாதையர். (1855 – 1942), சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1888 – 1975) போன்றவர்கள் சென்னை மாநிலக் கல்லூரியில் ஆசிரியர்களாக இருந்தபோது  அங்கு பயின்றவர். கணிதமேதை சீனிவாச ராமானுஜமும் (1887 – 1920) இவரும் கும்பகோணத்தை சொந்த ஊராக கொண்டவகையில் சக மாணவர்களாக இருந்துள்ளனர். 

மு.மு. இஸ்மாயில் (1921 – 2005) சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை பொறுப்பில் இருந்தவர், பிற்காலங்களில் இவரையும் கம்பராமாயண சாயபுஎன்பார்கள்.

எங்கள் ஊரிலுள்ள நாகனாத சுவாமி வளாகங்களில் அப்பொழுதெல்லாம்அதாவது 1980-களின் பிற்பாதியில் வாரியார் சாமிகள் (1906 – 1993); குன்றக்குடி அடிகளார் (1925 – 1995) என ஏராளமான பெரியவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வாணியம்பாடி அப்துல்லதீப் (1936 – 2001) அவர்களுடன் கோயிலில் பேசக் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்பொழுது அதுவெல்லாம் அருகிவிட்டது.  இன்றைய நாளில் கோயிலில் பேசுவது என்பது பெரிய இலக்கு, வெறும் பார்வையாளனாகக்கூட கலந்துகொள்ள அனுமதி கிடைக்குமா என்று தெரியவில்லை. இந்த நிலையில் என் சிறிய பங்களிப்பாக ஹெர்மன் ஹெஸ்ஸெவின்சித்தார்த்தாநாவல் முஸ்லிம்கள் பெருமளவில் இருக்கும் கூட்டு வாசிப்புக் குழுமத்தில் எடுத்துக் கொள்ளவும், சமணம், பௌத்தம் போன்ற இந்திய தத்துவ மரபைக் குறித்த புரிதலை உருவாக்கிக் கொள்ளவும் மெனக்கெட்டிருக்கிறேன்.

சந்தேகம், அவநம்பிக்கை என்பதும் பேரிடர் காலத்தில் நாம் கண்ட தொற்றுநோயைப் போன்றது. கல்லறையை உள்ளிருந்து திறக்க முடியாதுஎன்பார்களே, நாம் இரண்டு பக்கத்திலிருந்தும் திறக்க ஏதும் செய்ய வேண்டியிருக்கும். அமலன் ஸ்டேன்லி  தியான மரபை அதன் புறவயமான மத வேறுபாடுகளைக் கடந்து அணுகக் கூடியவர், சென்னையின் சூஃபி தர்காக்களில், குறிப்பாக தஸ்தகீர் பாபாவின்மீது பெருமதிப்பு கொண்டவர், ஆன்மிகம், உலக இலக்கியம் ஆழக் கற்ற என் இனிய நண்பர். அதேபோல் பைபிளின் மீதும், இயேசுவின் மீதும் பெரும் ஈர்ப்புடன் ஏராளமாக படித்துவருகிறேன். 

ஈரோடு மலைத்தங்குமிடத்தில் நடந்த / நடக்கப் போகிற பைபிள், பௌத்த, இந்து தத்துவ நிகழ்வில் கலந்துகொள்ள ஒவ்வொருமுறையும் நான் விரும்புவேன். நேரம், பொருள், உடல்நலம், தொழில் என லௌகீக தடைகள் முன்னெழுந்து அவற்றை தள்ளிப்போட வைக்கும். ஆனால் என்றேனும் நிச்சயம் அவற்றை மீறி இவை அனைத்தைக் குறித்து அமலன் ஸ்டேன்லி, சிறில் அலெக்ஸ், சாந்திகுமார சுவாமிகள்,  மரபின்மைந்தன் முத்தையா என எல்லோரிடமும் ஏதேனும் ஒன்றை அறிந்துகொள்ள எனக்கும் ஆசை.

தாங்கள் குறிப்பிட்டபடி, தமிழ் இஸ்லாம் என்றொன்று உள்ளது, நிஷா மன்சூர் அந்த மரபில் கிளைத்தவர்களில் ஒருவர். அதுபோக 1994 முதல் கலாப்ரியா, கணையாழி என தீவிர இலக்கியச் சூழலில் உள்ளவர். முஸ்லிம்களின் வழக்கப்படி தொழில்நிமித்தம் பயணத்தில் கடந்த முப்பதாண்டுகளாக இருந்துவருவதால்தமிழ்நாட்டை குறிப்பாகவும், இந்தியாவை பொதுவாகவும் குறுக்க, நெடுக்க கடந்தவர். மரபிலக்கியத்தில் பயிற்சியும், நவீன கவிதையில் தேர்ச்சியும் கொண்ட நண்பர் எடுக்கும் வகுப்பில் வாய்ப்பு அமைந்தால் நேரில் சந்திப்போம்.

கொள்ளு நதீம்

ஆம்பூர்.

 

இஸ்லாமிய மெய்யியல் அறிமுகப் பயிற்சி முகாம்

ஜூலை 12 13 மற்றும் 14 (வெள்ளி மாலை முதல் ஞாயிறு மதியம் வரை)

ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு [email protected]

முந்தைய கட்டுரைகஸகிஸ்தான், கடிதம்
அடுத்த கட்டுரைகே.டி.பால்