கொற்றவை

மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,


வணக்கம்.


அண்மையில் “கொற்றவை” வாசித்தேன். ஒவ்வொரு வரியையும் வாசித்தவுடன் கடந்து செல்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. வாசகனை தன் எழுத்தலைகளுக்குள் சிக்க வைத்து திக்குமுக்காட வைக்கிறது. கடலுக்குள் இத்தனை அதிசயங்களா.. என்று வியந்து நிற்கும் அறிவியல் உலகம் போலவே நானும்..! தமிழகத்தின் தெருவெங்கும் இருக்கும் தாய்த்தெய்வங்களின் குரல் நம்முடன் கலந்துவிடுகிறது. எழுத்துத்தவம் என்று மற்றவர்கள் சொல்லக்கூடும். தவம் என்ற சொல்லாடல்களில் மீது ஏற்றப்பட்டிருக்கும் அர்த்தங்கள் என்னை அப்படிச் சொல்ல விடாமல் தடுக்கின்றன. எழுத்தே தானாகி கரைந்து போதல் என்று சொல்லலாம்.


என் இத்தனை ஆண்டுகால வாசிப்பு அனுபவத்தில் நான் மிகவும் அதிகமாக நாட்களை எடுத்துக்கொண்டது கொற்றவைக்குத்தான். இன்னும் மறுவாசிப்பு செய்தால் புதிய வாசல்கள் திறக்கும்.. பொதுவாக எந்தப் படைப்பையும் வாசித்துவிட்டு அந்தப் படைப்பாளருடன் உடனே பேசவேண்டும் என்றெல்லாம் எப்போதுமே நான் நினைத்ததில்லை. ஆனால் கொற்றவையை வாசித்துவிட்டு தொடர்பு கொள்ள நினைத்தேன் உங்களுடன்.

வாசித்தவுடன் ஒரு சந்தேகம் வந்தது.

வழக்குரைகாதை பக் 407ல்

என் சிலம்போ மணியரி பெய்து வடித்த அணி.. யாவரும் நோக்குக..” என்று கண்ணகி தன் பொற்சிலம்பை வெண்கல் தரைமீது வீசினாள். தன் என ஒலித்து அது உடைந்து திறக்க மணியரி ஒன்று தெறித்துப் பாண்டியன் இதழ்மீது மோதியது.. துடித்தெழுந்த அவன் சித்தம் முழுக்கப் பொருளிழந்து சிதறிய சொற்கள் கொந்தளித்து நுரைத்தடங்கிய ……. அங்கேயே விழுந்து இறந்தான் ” என்று எழுதியுள்ளீர்கள்.

இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் வழக்குரைகாதையில்

நற்றிரம் படராக் கொற்கை வேந்தே

வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்

சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு

என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்

கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி

கண்ணகி யென்பதென் பெயரேயெனப்; பெண்ணணங்கே

கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று

வெள்வேற் கொற்றங் காண்என ஒள்ளிழை

நற்றிறம் படராக் கொற்கை வேந்தே

என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே, எனத்

தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி

யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே

தருகெனத் தந்து தான்முன் வைப்பக்

கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப

மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே, மணி கண்டு

தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்

பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட

யானோ அரசன் யானே கள்வன்

மன்பதை காக்குந் தென்புலங் காவல்

என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுளென

மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன்

கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக்

கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று

இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி.

இவ்விடம் “யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே ருகெனத் தந்து தான்முன்வைப்பக் ண்ணகி அணிமணிக் காற்சிலப் புடைப்ப” என்றுதான் சொல்லப்படுகிறது. நீங்கள் கண்ணகி தன்னிடம் எஞ்சியிருந்த இன்னொரு காற்சிலம்பை உடைத்து வழக்காடியதாகச் சொல்ல இளங்கோவோ பாண்டியன் அவையில் கோவலனிடமிருந்து பெற்ற சிலம்பை கண்ணகி உடைத்தாள் என்பதைச் சுட்டும் வகையில் பாண்டியன் தருகெனத் தந்து தான்முன்வைப்ப கண்ணகி அதை எடுத்து உடைத்தாள் என்று வருகிறது. வழக்கில் உண்மையை நிலைநாட்டவும் கண்ணகி கோவலனிடமிருந்து கவரப்பட்ட சிலம்பை உடைத்தாள் என்பதுதான் சரியாக இருக்கமுடியும்.

அவள் தன்னுடன் எடுத்துச் சென்ற சிலம்பு வழக்குக்கு ஓர் ஆதாரமாகவே இருக்கமுடியும். இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கும் எனினும் கொற்றவையில் கண்ணகி தான் கொண்டுவந்தச் சிலம்பை உடைத்தாள் என்று சொல்வதற்கான

காரணங்கள் என்ன? அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

ஏற்கனவே இதைப் பற்றி எழுதியிருந்தால் அதைத் தெரியப்படுத்தவும்.

நட்புடன்,

புதியமாதவி,

மும்பை

888

அன்புள்ள புதியமாதவி,
நன்றி. கொற்றவை சிலப்பதிகாரத்தை தொட்டுத்தொட்டு விலகிச்செல்லும் ஒரு ஆக்கம் என்பதை உணர்ந்திருப்பீர்கள். அதை முழுக்க விளக்கக் கூடிய நிலையில் நான் இல்லை– அதை எழுதிய மன எழுச்சி விலகிய பின் இப்போது நானும் அதற்கொரு வாசகனாகவே இருக்கிறேன்.
நீங்கள் சொன்னதுபோல சிலப்பதிகாரத்தில் கோவலனிடமிருந்து கவர்ந்து சான்றாதாரமாக அவையில் வைக்கப்பட்ட சிலம்பை கண்ணகி உடைத்தாள் என்றுதான் சொல்லபப்ட்டிருக்கிறது. அது மிக நடைமுறைசார்ந்த ஒரு வழக்குவிசாரணை முறையை காட்டுகிறது– அத்துடன் அக்கால நீதிமுறையில் வழக்குகள் துல்லியமாக வாதிடப்பட விதத்துக்கும் ஆதாரமாகிறது.

ஆனால் நான் அந்த வழக்கின் தருணத்தை இன்னும் விரிவான ஒரு தளத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறேன். அங்கே நடந்த விசாரணனையி கோவலன் கள்வனா அல்லனா என்ற கேள்வியில் இருந்து கண்ணகியின் ‘கொற்றவை’ தன்மையை நோக்கிக் கொண்டுசெல்வதே நோக்கம். அந்தக் காட்சியில் கோவலனின் வழக்கைப்பற்றிய பேச்சு குறைவாக இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.

சிலப்பதிகாரத்தில் சிலம்பு கண்ணகியும் கோவலனும் மதுரைக்குக் கிளம்பும் இடத்தில்தான் வருகிறது. இறுதியில் வழக்குக்கு மைய ஆதாரமாக ஆகிறது. ஆனால் ‘கொற்றவை’யில் இன்னும் விரிவான பொருளில் மிகத்தொன்மையான காலம் முதலே தொடர்ந்து வருவதை நீங்கள் வாசிக்கலாம். சிலம்பு அவர்களின் தொல்குலத்து வரலாற்றுக்கு அடையாளமாகவே சொல்லப்படுகிறது. கடல்கொண்ட குமரிநிலத்துப் பேரன்னையின் அணிகலன்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குலத்திற்கு இலச்சினையாக ஆயின என்று நாவல் முதலிலேயே முன்வைக்கிறது. அன்னையின் இரு கால்சிலம்புகளும்  மன்னர்- வணிகர் குலங்களுக்கு முறையே இலச்சினைகள் ஆயின என்று குறிப்பிடுகிறது.

ஆக, வழக்கு பாண்டியன் அவைக்கு வந்தபோது மன்னன் கண்டுகொண்டது கோவலன் குற்றவாளி அல்ல என்று அல்ல. தாங்கள் ஒற்றைப்பெருங்குலத்தின் வேர்களும் விழுதுகளுமே  என்றுதான். அதுவும் குலப்பிரிவினைகள் முதிர்ந்து ஒடுக்குமுறையும் போராட்டமுமாக நகரம் எரியும் தருணத்தில் அந்தக் கண்டடைதல் ஒரே கணத்தில் நாவல் சொல்லும் தொன்மையான வரலாற்றின் ஒட்டுமொத்த விரிவையும் அவனுக்குக் காட்டிவிடுகிறது. அவன் இறக்கிறான்.

சிலப்பதிகாரத்தில் பாண்டியன் இறப்பது நீதிவழுவிய குற்றவுணர்ச்சியால். கொற்றவையில் அதைவிடவும் பெரிய ஒரு சிறுமையுணர்ச்சியால் அவன் இறக்கிறான். இதுதான் சிலப்பதிகாரத்தில் இருந்து நாவல் மேற்கொண்டுள்ள மேலதிகப்பயணங்களில் முக்கியமானது. நாவலில் தொடக்கம் முதல் பேரன்னையின் அணிகளும்  அவற்றில் சிலம்பும் எப்படி எல்லாம் குறிப்பொருள் அளிக்கப்பட்டு முன்னெடுத்துவரப்படுகின்றன என்று வாசித்தால் வழக்குரைகாதையில் அதன் உச்சத்தை காணலாம்.

ஜெயமோகன்

கொற்றவை – ஒருகடிதம்

தமிழ்நேயம்-31.’கொற்றவை’ சிறப்பிதழ்

தமிழின் நல்லூழ்:இரா. சோமசுந்தரம்

இளங்கோவடிகள்தான் ஐயப்பன்: கொற்றவையில் ஜெயமோகன்:மரபின் மைந்தன் முத்தையா

ஜெயமோகனின் கொற்றவை – திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து”:அ.ராமசாமி

கொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை. ராமபிரசாத்

கொற்றவை, கோசாம்பி மற்றும் திரு.ஜெயமோகன் : அரவிந்தன் நீலகண்டன்

முந்தைய கட்டுரைசங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-2
அடுத்த கட்டுரைஆதிச்சநல்லூர் சிதம்பரம்