ஓர் உண்மையான கேள்வி. உங்களுக்கு ஆலோசனை சொல்பவர்கள், உங்கள் கருத்துக்களுக்கு மேற்கொண்டு விளக்கம் அளிப்பவர்களைப் பார்க்கையில் ‘என்னை விட உனக்கு ஜாஸ்தி தெரியும்னு எப்டிரா நினைக்கிறே’ என்று சொல்லிக்கொள்வதுண்டா? நண்பர்களிடம் சொன்னதுண்டா?
ஜாஸ்
அன்புள்ள ஜாஸ்,
உண்டு. ஆனால் கோபத்துடன் அல்ல. அது சென்ற முப்பதாண்டுகளாக நான் ரசித்து வரும் ஒரு வேடிக்கை.
அரசியல் , அது எதுவாக இருந்தாலும், அதன் தொண்டனுக்கு அளிப்பது ஒரு தன்னம்பிக்கையை. தான் ‘சரியான’ இடத்தில் இருப்பதாகவும்; பிறரை திருத்தி கண்டித்து வழிகாட்டும் பொறுப்பும் தகுதியும் கொண்டவன் என்றும் அவனை அது நம்பச் செய்கிறது. மதநம்பிக்கையும் அதையே செய்கிறது. அரசியலென்பது நவீன மதம், இரண்டுக்கும் மனநிலையும் செயல்பாடும் ஒன்றே. அரசியலும் மதமும் இத்தனை செல்வாக்குடன் இருக்க முதன்மைக் காரணம் ஒன்றும் தெரியாதவனுக்கு அவை அளிக்கும் இந்த அபாரமான தன்னம்பிக்கைதான்.
அத்துடன் அவ்வப்போது முகநூல் எழுத்துக்களை எவரேனும் சுட்டிக்காட்டி வாசிக்க நேர்கையில் உருவாகும் துணுக்குறுதலும் உண்டு. பலரை நேரில் எனக்கு தெரிந்திருக்கும். மிகமிகச் சாதாரணமான அறிவுத்திறனும், எளிமையான கற்பனையும், மிகக்குறைவான வாசிப்பும் கொண்டவர் என நான் மதிப்பிட்டிருக்கும் ஒருவர் முகநூலில் முற்றிலும் ஞானம் தேடிய மேதை போல கலையிலக்கிய அறிவை பரிமாறிக்கொண்டிருப்பார். லட்சக்கணக்கான ‘ரசிகர்களால்’ பின் தொடரப்படுபவர் என்னும் பாவனையும் கொண்டிருப்பார். அப்படி ஒரு இருபதுபேராவது எனக்குத்தெரிய உண்டு. அந்த துணுக்குறலும் தொடந்து வரும் வெடிச்சிரிப்பும் என் கொண்டாட்டங்களில் ஒன்று. அதில் சிலர் எனக்கு ‘அடக்கமாக’ இருக்கவேண்டும் என அறிவுரையும் சொல்லியிருப்பார்கள்.
ஜெ
அன்புள்ள ஜெ,
அண்மையில் சிற்றிதழொன்றில் தொடர்ச்சியாக தமிழ்ச் சிற்றிதழ் இலக்கிய இயக்கத்தை மட்டம்தட்டி சிலர் பேசுவதும் எழுதுவதும் வெளியாகிக்கொண்டிருக்கிறது. அவர்கள் திராவிட இயக்கம் அல்லது இடதுசாரி இயக்கம் சார்ந்தவர்கள். அந்தக் கூற்றுக்களை சிற்றிதழ் சார்பில் எவரும் எதிர்கொள்ளவில்லை. உங்கள் என்ணம் என்ன? என்னிடம் ஒரு நண்பர் இதைக் கேட்டார்.
ரகுராம் மாணிக்கம்
அன்புள்ள ரகுராம்,
அவை சிற்றிதழிலக்கியச் சூழலால் பொருட்படுத்தப்பட வேண்டிய நபர்களால் கூறப்படவில்லை. எதிர்த்தரப்பே ஆனாலும் அங்கே எதையாவது பொருட்படுத்தும்படி எழுதினால்தான் அக்கருத்துக்கு மதிப்பு. வெட்டி வம்புகளுக்கு விவாதத் தகுதி இல்லை. அவர்களுக்கு புரிவதே அவ்வளவுதான். அதற்குமேல் அவர்களிடம் எவரும் எதிர்பார்ப்பதுமில்லை.
உங்கள் ‘நண்பரிடம்’ சொல்லுங்கள். அந்தக் கருத்துக்களைச் சொல்பவர்கள், அல்லது அதையெல்லாம் ஆதரிக்கும் அந்த தரப்பினர் எழுதியிருப்பவற்றை வாசிக்கும்படி. அவற்றுக்கு அடிப்படையான சிந்தனைத் தரமோ படைப்பூக்கமோ இருப்பதாக அவருக்கு தோன்றினால் அவர் அவற்றையே தொடர்ச்சியாக வாசித்து அந்தத் தரப்பில் ஈடுபட்டு வாழலாம். அவர் சிற்றிதழ் சார்ந்த தீவிரஇலக்கியத்தை பொருட்படுத்தவேண்டியதே இல்லை. இங்கே வந்தாலும் அவருக்கு ஒன்றும் பிடிபடப் போவதில்லை. கடைசிவரைக்கும் அவர் திகைத்துக் கொண்டுதான் இருபபர்.
உண்மையிலேயே அந்த எழுத்துக்கள் முக்கியமானவை என்றும், அவற்றை எழுதுவோர் பொருட்படுத்தத் தக்கவர்கள் என்றும், ஒருவருக்கு தோன்றினால் அவரிடம் எதையுமே விவாதிக்கவும் புரிந்துகொள்ளச் செய்யவும் முடியாது. அவர் அங்கே இருப்பதே நல்லது. அவருக்கு அவரைப்போன்ற தரம் கொண்டவர்களின் சுற்றம் அமையும். கூட்டமாகச் செயல்படுவதன் பாதுகாப்பு கிடைக்கும். அவரால் என்ன இயலுமோ அதை தன்னம்பிக்கையுடன் செய்துகொண்டே இருக்க முடியும். கொஞ்சம் கூச்சநாச்சம் இல்லாதவராக மாறினால் அரசியலில் ஏதேனும் தரப்பில் முண்டியடித்து சின்னச்சின்ன அதிகாரங்களைக்கூட அடைந்துவிட முடியும்.
அவ்வாறன்றி அவற்றை வாசிக்கையில் ஓர் ஒவ்வாமை அல்லது போதாமை ஒருவருக்கு தோன்றுமென்றால் மட்டுமே அவர் இலக்கியத்துக்குள் வரும் தகுதி கொண்டவர். நான் இது வரை அவதானித்த ஒன்று உண்டு. இயல்பிலேயே நுண்ணுணர்வு கொண்டவர் ஏற்கனவே வாழ்க்கை சார்ந்த கூர்ந்த நோக்கு கொண்டிருப்பார். மிகத் தொடக்க காலத்திலேயே அவர் இந்த வகை அரசியல் சார்ந்த எழுத்துக்களின் உள்ளீடின்மையை எப்படியோ உணர்ந்திருப்பார். அவை வாழ்க்கையின் நுட்பங்களைச் சொல்லாமல் மோட்டாவான சித்தரிப்பைக் கொண்டிருப்பவையாக, அழகியல் கட்டமைப்பு அற்றவையாக, அரசியலமைப்புகளின் பிரச்சாரங்களையே திரும்பச் சொல்வனவாக, எளிய வெறுப்புகளை மட்டுமே வெளிப்படுத்துவனவாக எண்ணியிருப்பார். அவரிடம் மட்டுமே மேலே பேசமுடியும். அவர் மட்டுமே இலக்கியத்துக்குள் வர முடியும்.
இந்த வகை வரட்டு அரசியல் எழுத்துக்களை , கட்சியரசியலின் வம்புகளை அடையாளம் காண எவருமே சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. சொல்லிக்கொடுக்காமலேயே கண்டடைபவர் மேற்கொண்டு தேடும்போது அவருக்கு இலக்கியத்தை அறிமுகம் செய்யலாம். அதிலுள்ள பல்வேறு தரப்புகளை பயிற்றுவிக்கலாம். அதன் நுணுக்கங்களை அவர் வாழ்நாள் முழுக்க கற்றுக்கொள்ள முடியும். தமிழில் சிற்றிதழ் சார்ந்த நவீன இலக்கியம் அவர்களுக்குரியது. மற்றவர்கள் வெளியே நின்றுகொண்டு அவர்களுக்கு முற்றிலும் அப்பாற்பட்ட ஒன்றைப்பற்றிய திகைப்பை வெறுப்பாகவும் காழ்ப்பாகவும் வெளிப்படுத்திக்கொண்டிருப்பார்கள். அவர்கள் நேற்றும் இருந்தனர், இன்றும் இருக்கின்றனர். அவர்கள் நூறாண்டுகளாகப் பேசிவருவது ஒரே குற்றச்சாட்டுகளையும் பிலாக்காணங்களையும்தான். சொற்றொடர்களும் மொழிநடையும்கூட அதேதான். அவ்வளவுதான் அவர்களின் எல்லை.
ஜெ