கஸகிஸ்தான், கடிதம்

கசகிஸ்தான், சென்றதும் மீண்டதும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

உங்கள் பயண கட்டுரைகளை நான் மிகவும் விரும்பி படிப்பேன். ஒரு ஊரில் நீங்கள் செல்லும் இடங்கள் அவற்றை நீங்கள் ரசிக்கும்/அனுபவிக்கும் விதம் ஆகியவை எனக்கு பெரும் திறப்பாக அமைந்துள்ளன. அதில் உள்ள தகவல்கள் மற்றும் இட வரிசையை வைத்து நான் சில பயணங்களை செய்துள்ளேன். “நூறு நிலங்களின் மலைலடாக்கிற்கும், “கதிரவனின் தேர்ஒரிஸ்ஸாவிற்கும் சமீபத்தில்எழுகதிர் நிலம்அருணாச்சல பிரதேசத்திற்கும் என்னை செல்ல வைத்தது. ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா செல்லும் கனவையும் உங்கள் கட்டுரைகளே விதைத்தன.

கசகிஸ்தான் பயணம் பற்றிய அறிவிப்பை கண்டதும் மிகுந்த உற்சாகம் அடைந்தேன். உங்கள் பயண கட்டுரைகள் வந்தவுடன் அதை அடிப்படையாக வைத்து செப்டம்பரில் அங்கு செல்லலாம் என்று இருந்தேன். டெல்லியில் இருந்து எந்த விமானம் என்று கூட பார்த்துவைத்தேன். உங்கள் கட்டுரையை இன்று படித்தபோது பெரும் பதற்றமாக இருந்தது. நீங்கள் இந்தியா மீண்டேன் என்று கூறும் வரை அது நீடித்தது.

ஆனால் இந்த மோசமான அனுபவத்திலும் நீங்கள் வெளிநாட்டு பயணம் பற்றிய மூன்று முக்கியமான குறிப்புகளை கொடுத்துள்ளீர்கள்இந்தியாவுடனான உறவு, ஜனநாயகம் மற்றும் ஆங்கில புழக்கம். இந்த மூன்று அடிப்படைகளில் சரியில்லாத நாடுகளுக்கு செல்ல விரும்பினால் பிரபல சுற்றுலா நிறுவனங்களின் “Group Tour Package” ஐ தேர்வு செய்வதே வழி என நினைக்கிறேன். அவர்களின் அட்டவணை நம் ரசனையுடன் முழுதும் ஒத்துப்போகாமல் இருக்கலாம். ஆனால், எகிப்து போன்ற நாடுகளில் நிறுவனத்தின் ஆட்களே குடியேற்ற அதிகாரியின் அருகில் இருந்து எங்களுக்கு “On Arrival Visa” எடுத்து கொடுத்தனர்.

பிற நண்பர்களுக்கு கசகிஸ்தானில் வேறு எவ்வித பிரச்சனையும் இன்றி பயணம் அமைந்தது என்று நம்புகிறேன். உங்கள் மேலும் பல பயண கட்டுரைகளை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்.

அன்புடன்

கார்த்திக்

கிருஷ்ணன்கோயில், நாகர்கோயில்  

முந்தைய கட்டுரைபடுகளம், வாசிப்பு
அடுத்த கட்டுரைஇஸ்லாம், இன்றைய சூழல்- கடிதம்