https://vishnupuram.com/ நாவல் பற்றிய பார்வைகளுக்காக
விஷ்ணுபுரம் வாங்க
வணக்கம்
ஒரு சின்ன குழந்தை தனக்கு பிடித்த ஒன்றை சுவைத்த பிறகு அந்த மகிழ்ச்சியை சொல்ல தெரியாமல் சிரித்தும் ஓடியும் உதிரி சொற்களால் அதை விவரிக்க முயல்வது போல தான் என் நிலை இப்போது இருக்கிறது.
நான் விஷ்ணுபுரத்தை பற்றி சில ஆண்டுகளாக கேள்வி பட்டு வந்தாலும் ஏனோ அதை படிக்க தோணவில்லை. வெண்முரசு அளவுக்கு அது எனக்கு சுவாரசியமாக தோணவில்லை. ஆனால் சில மாதங்களுக்கு முன்னாடி படிக்க தொடங்கினேன். அந்த சமயம் எனக்கு வாழ்வில் சில துக்கங்கள் இருந்தன, நல்ல நூல்களை வாசித்தால் அதை கடக்கலாம் என்ற எண்ணம். ஆனால் முதல் பகுதியான திருவடியை முடித்ததும் எனக்கு வாழ்கையே பொருளற்றதாக தோன்றியது. குறிப்பாக அனிருத்தனின் சாவும், சங்கர்ஷனனின் தோல்விகளும் என்னை பெரிதாக பாதித்தன. ஒரு விதத்தில் என்னை நான் சங்கர்ஷனனாக தான் பார்த்தேன். அந்த பகுதி முடிவில் எனக்கே கேள்வி எழுந்து விட்டது. கவிஞனாகவோ எழுத்தாளனாகவே ஆக முடியுமா என்ன என்ற சந்தேகம் என்னை பற்றி கொண்டது.
ஆனால் அந்த வெறுமையையும் அவநம்பிக்கையையும் அடுத்த பகுதி துடைத்து விட்டது. பவதத்தர் தான் எனக்கு அதில் மிக பிடித்த மனிதர். ஞானத்திற்கும் அறிவுக்கும் நேரடி தொடர்பில்லை என்று உணர்த்தும் சித்தரும் காஷ்யபனும் மிக அழகான கதைமாந்தர்கள்.
கடைசி பகுதி எவ்வாறாக இருக்கும் என்ற சந்தேகம் இருந்து கொண்டே தான் இருந்தது. என்னவோ அந்த சாதிலங்களும் மங்கி போன நகரமும் முதல் பகுதி போன்ற வெறுமையை உருவாக்கவில்லை. காலத்தை ஏற்று கொள்ளும் பக்குவம் வந்ததா அல்லது இதை போன்ற சிதிலம் அடைந்த மாபெரும் கட்டிடங்களை பார்த்து பழகி விட்டதா என்று தெரியவில்லை. கதை முடித்ததும் ஒரு வெறுமை ஒரு அமைதி.
பல பேர் விஷ்ணுபுரம் எதை பற்றியது என்று கேட்டால் எனக்கு அதை சொல்ல தெரியவில்லை. எது சொன்னாலும் அதற்கு ஒரு படி மேலாக தான் இருக்கிறது. என் வாழ்க்கையில் விஷ்ணுபுரம் ஒரு பெரிய தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது. அதன் பிறகு சைவதிருமுறை வகுப்பு, ஆலய கலை வகுப்பு , கவியரங்கம் என்று தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறேன். விஷ்ணுபுரம் போன்ற ஒரு பிரம்மாண்ட படைப்பை உருவாக்க வேண்டும் என்ற ஒரு கனவு இருக்கு. அதற்கான ஒரு கருவும் இருக்கு. உங்கள் ஆசியுடன் அது நிகழ வேண்டும்.
தேஜஸ்