வனம் அச்சிதழும் முன்வெளியீட்டுத்திட்டமும்

 மின்னஞ்சல் [email protected]

மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,

வனம் சிற்றிதழானது 2021 ஜனவரி முதல் இணைய இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தொடர் இயக்கமும் படைப்பூக்கமுமே இதழின் பயணத்திற்கு எப்போதும் அவசியமாய் அமைந்துவிடுகிறது என்ற உங்கள் வாக்கு இப்போதும் ஞாபகத்திலுண்டு. இம்முறை இரண்டு இதழ்களை அச்சிதழ்களாக  பதிப்பித்துள்ளோம். தமிழகத்திலும் ஈழத்திலும் ஏனைய புலம்பெயர் தேசங்களிலும் படைப்பாக்கம் சார்ந்த தீவிர இலக்கிய வாசகர்களை ஊக்குவிக்கும் முயற்சியாகவே இதைக்கருதுகிறோம்

வனம் இதழின் தொடர் செயற்பாட்டின் போது உங்களது கவனப்படுத்தல்களும் தீவிர உரையாடல்களுக்கு காரணமாய் அமைந்திருக்கிறது. (வனம் இதழுக்கான உங்களது நேர்காணல் தொட்டு இதழ்களில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் மொழிபெயர்ப்பை வெளியிட்டு வைத்ததிலிருந்து உங்களது பங்களிப்பை மனதுக்கு நெருக்கமாக உணர்கிறோம். கா. சிவத்தம்பி பற்றிய தொடர், முக்கியமான சிறுகதைகள், மார்ட்டின் விக்ரமசிங்க மற்றும் சி.மணி பற்றிய சாகிப்கிரான் கட்டுரை வரை உங்கள் கவனப்படுத்தல் வனத்தின் தொடர் வாசிப்பிற்கும் எங்கள் செயலூக்கத்திற்கும் தூணாய் அமைந்தது.)

வனம் இணைய இதழை ஏன் அச்சிதழில் பார்க்க வேண்டும் என்ற அவா உருவானது என்று இத்தருணத்தில் முன்னிறுத்த விளைகிறோம். எழுத்து ,கசடதபற, , அஃகு, சொல்புதிது என சிற்றிதழ் பண்பாட்டின் ஏதோவொரு பாதையின் தொடர்ச்சியாகவே இப்போது வெளிவந்துகொண்டிருக்கும் காத்திரமான இணைய இதழ்களையும் வகைப்படுத்திவிட முடியும். இங்கிருந்த முன்னத்தி ஏர்களுக்கும் இலக்கிய முன்னோடிகளுக்குமான சமர்ப்பணமாகவே இதை கருதுகிறோம். ஈழத்தின் பொருளாதார சூழலும் சாமானியர்களின் இருத்தலியல் சிக்கல்களும் கூட இப்போது இலக்கியத்தை பணம்பெற்றோர் பண்டமாக மாற்றியுள்ளது. அந்தவகையில் இணைய இதழ்கள் எனும் இலக்கிய கலாசாரம் காத்திரமான பங்களிப்பை செய்யக்கூடியதே. இருந்தும் இணையத்தில் மட்டுமே இலக்கியத்தை பேசுவதிலுள்ள சில நடைமுறைச்சிக்கல்கள் கடந்த நான்கு வருடங்களில் வெகுவாக உணரப்பட்டிருக்கிறது. அவ்வகையில் வனத்தின் அச்சிதழானது மீண்டும் ஓர் சிற்றிதழ் பண்பாடு சார்ந்து உண்டாகும் ஒரு மீச்சிறு முயற்சியே.

அச்சிதழுக்கான செய்நேர்த்தியோடு இவ்விதழை  தமிழ்நாட்டிலேயே அச்சிட்டு விநியோகிக்க தீர்மானித்துள்ளோம். விற்பனை உரிமையை யாவரும் பதிப்பகத்தினர் பொறுப்பேற்றுள்ளனர்வாசகர்களுக்கு சென்றடையும் பொருட்டு முன்வெளியீட்டு திட்டத்தில் இலவச அஞ்சலில் 162 பக்கங்கள் கொண்ட இரு இதழ்கள் ரூ.450  இந்திய விலைக்கு கிடைக்க ஆவண செய்கிறோம்.  

தமிழின் முதன்மைப்படைப்பளிகளில் ஒருவரான உங்களுக்கு இந்த இதழ்களை அனுப்பிவைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். உங்களுக்கு வசதியாயின் இதழை வாசித்து பெறுமதியாக உங்கள் பின்னுட்டங்களை அறியத்தந்தால் எதிர்கால முன்னெடுப்புகளுக்கு வசதியாய் அமையும்.

இவ்விதழ்களின் முன் வெளியீட்டுத்திட்டத்தை தாங்கள் அறிவித்து வைக்க மனம் நெகிழ்ந்து வேண்டிக்கொள்கிறோம்.

நன்றி

முந்தைய கட்டுரைகாந்தியால் இளைஞர்களுக்கு என்ன பயன்?
அடுத்த கட்டுரைCONVERSING WITH HATRED