செபாஸ்டியன் கவிதைகள்-2

மலையாளக் கவிஞர் செபாஸ்டியன் எழுதிய கவிதைகள். செபாஸ்டியன் 23 ஜூன் 2024 அன்று சென்னையில் நிகழும் குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்கிறார்.

செபாஸ்டியன் கவிதைகள்1

முளைக்காதிருத்தல்

 

ஒரு விதை தப்பிவிட்டிருக்கிறது.

 

அதிலிருந்து  விடுதலை

இனி எப்படி சாத்தியம்?

 

ஒரு மரமாக வளர்ந்து

பூக்களும் காய்களும்

அளிப்பதன் வழியாகவா?

மண்ணில் புதைந்து போன

தாங்குதல்களை

நீரூற்றி ஊறவைத்து

விரித்துக்கொண்டா?

 

அந்த விதை எங்கு சென்றது?

 

பூமியின்

ஓட்டுக்கு வெளியே எங்கோ

மழை பெய்துகொண்டிருக்கிறது.

அங்குதானா

இனி அது தன் துடிப்படக்கி

ஒடுக்கப்போகிறது?

 

அல்லது, ஆதி மௌனத்தின்

நிலவறைக்கு அடியிலா?

 

அதோ முடிவிலா வெறுமையில்

ஏதோ கையையும் காலையும் அடித்துக்கொள்கிறது.

அந்த விதையா அது?

யாருக்கு தெரியும்?

 

ஒரு விதை தப்பிச்சென்றிருக்கிறது

என்பது மட்டுமே உண்மை

துடிக்காதது

 

இரண்டுபேர் துடுப்பிடும் ஒரு

சிறு படகு

தேசிய நெடுஞ்சாலையில்

உந்தி உந்திச் செல்கிறது

 

வண்டிகள்

சீறிக்கடந்து செல்கின்றன

 

ஒருவர் துடுப்பிடுவதை நிறுத்திவிட்டு

எழுந்து நின்று சுற்றும் பார்த்து

ஒரு வலையை

சாலையில் வீசிப்பரப்புகிறார்.

 

வலைவீசி இழுக்கிறார்

துள்ளும் மீன்கள்!

அவற்றை படகில்

அள்ளிப் போடுகிறார்

 

ஒரு பெரிய

கண்டெய்னர் லாரி

உரசியபடி கடந்து சென்றது

அலைகளில்

தோணி தள்ளாடியது

 

வலைவீசியும் மீன் அள்ளியும்

தோணியை நிறைப்பது

நடந்துகொண்டே இருந்தது

 

திடீரென்ற ஓர் எண்ணத்தில்

ஒரு தூண்டிலில்

தன்னை வைத்து

வீசியெறிந்தார்

 

பெரிய ஏதோ

சிக்கிக்கொண்டது

கடலின்

குருதி ஒழுகும் சடலம்

ஓய்வுநேரத்தில் ஒரு வேடிக்கை

ஜன்னல் வழியாக

பார்த்துக்கொண்டிருந்து

வாழ்க்கையை

ஜன்னல் அளவுக்கே வெட்டி எடுக்கவேண்டும்

 

அதன்பின்

சுரண்டியோ வண்ணம்பூசியோ

அவற்றிலுள்ள துயரங்களையும் பதற்றங்களையும்

அழித்துவிட வேண்டும்.

 

அதன்பின் அவற்றை

ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்க வேண்டும்.

 

வண்ணத்துப்பூச்சிகளை அழைத்து

அவற்றின் கொண்டாட்டத்தின் நிறங்களை

கிளிகளைக் கூப்பிட்டு

நம்பிக்கையின் ஒலிகளை

கவர்ந்துகொள்ள வேண்டும்

 

அடுக்கி வைக்கப்பட்ட சட்டகங்களில்

அவற்றை பரப்பி

சீராக வளர்க்கவேண்டும்

 

ஒரே அளவில் வளர்ந்த அவற்றை

வானத்திற்கு பறக்கவிட்டு

சூரியனின் சன்னல்களை

மூடிவிடவேண்டும்

 

இரவு

என்னும் அறிவுப்புப்பலகை

வைக்க தவறக்கூடாது

அப்போதுதான் விண்மீன்கள் நிறையும்

 

அதன்பின் அந்த ஜன்னலை திறக்கவேண்டும்

 

அவ்வாறு உலக முடிவு வரை

பகலும் இரவும் செய்து விளையாடுவதற்கான

ஓர் எளிய வழிமுறை இது.

முந்தைய கட்டுரைஜெர்மானிய தத்துவம், கடிதம்
அடுத்த கட்டுரைஅரங்க இராமலிங்கம்