சலிப்பு

Boredom PAVEL FILIN

காந்தியால் இளைஞர்களுக்கு என்ன பயன்?

அன்புள்ள ஜெ

சலிப்பு பற்றிச் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். அது அப்பட்டமான அனுபவ உண்மை என என்னுடைய தலைமுறையைச் சேர்ந்த அனைவருக்குமே தெரியும். ஆனால் இந்த அளவுக்கான சலிப்பு எப்படி இன்றைய வாழ்க்கையில் உருவாகியிருக்கிறது? உலகியல் வாழ்க்கையில் எப்போதுமே ஒரு monotony உள்ளதுதானே? இன்றைக்கிருந்த சலிப்பு இதற்கு முன்னால் இருந்தது இல்லையா?

ரவிக்குமார் எம்

அன்புள்ள ரவிக்குமார்

உலகியல் வாழ்க்கை ஒரே மாறாச்சுழற்சி கொண்டது. அது அப்படித்தான் இருக்க முடியும். ஏனென்றால் அதில் இயற்கையின் பரிணாமம் உள்ளது. ஓர் இல்லத்தை நடத்த வேண்டும். குழந்தைகளை பெற்று வளர்க்க வேண்டும். அதெல்லாம் ஒரு மரம் வளர்வது போலத்தான். மாற்றம் என்பது கண்ணுக்குத்தெரியாத ஒன்றாக மட்டுமே நிகழும். மாற்றமின்மையே அன்றாடமாக இருக்கும். சீரான, மாற்றமில்லாத நிகழ்வுகளாலான அன்றாடமேநிம்மதிஎன்று நம்மால் சொல்லப்படுகிறது. 

அது ஒன்றும் தவறு அல்ல. அதிலும் ஓர் இன்பம் உள்ளது. வாழ்க்கை என்பது எப்போதும் பரபரப்பு, உத்வேகம் கொண்டதாக இருந்தாகவேண்டும் என்பதில்லை. பரபரப்பு , உத்வேகம் ஆகியவை அலைபோல. எழுந்த வேகத்திலேயே இறங்கும் தன்மையும் கொண்டிருக்கும். 

வாழ்க்கையில் எந்த ஒரு விஷயமும் நீண்டகால அளவில் தொடர்ச்சியாக நிகழ்ந்தாகவேண்டும். அவ்வாறென்றால் மட்டுமே அதில் உண்மையான வளர்ச்சி நிகழும். ஆகவே எந்தப் பயிற்சியும் மாறாத சுழற்சித்தன்மை கொண்டதுதான். எந்த சாதனையும் நீண்ட கால அளவிலான ஒழுங்கா அன்றாடச் செயல்பாடு வழியாக அமைவதுதான். 

அன்றாடத்தில் ஓர் அம்சமாக சலிப்பு இருந்துகொண்டுதான் இருக்கும். அந்தச் சலிப்பு உண்மையில் படைப்புத்தன்மை கொண்டது. அந்தச் சலிப்பின்போது நம் மேல்மனம் ஓய்வாக இருக்கிறது, அசைவில்லாது இருக்கிறது. அந்த அசைவின்மையையே சலிப்பு என்கிறோம். ஆனால் ஆழ்மனம் விழித்திருக்கிறது. கூர்மைகொண்டிருக்கிறது. நாம் சின்னச்சின்ன விஷயங்களை கவனிப்பது அந்தஆழ்ந்த சலிப்புநிலையில்தான். 

ஆழ்நிலையை சலிப்பாகவே சாமானிய உள்ளம் உணரும். அவ்வாறன்றி அதை கவனிக்கவும், அதில் நீடிக்கவும், அதில் மகிழ்வும் பயிற்சி பெறுதலையே தியானம் என்கிறார்கள். 

இன்றைய சலிப்பு என்பது முற்றிலும் வேறு. அது இன்றைய மாபெரும் ஊடகச்சூழல் உருவாக்குவது. ஊடகம் இன்று மிகப்பெரிய வணிகம். செய்தி ஊடகம்,கேளிக்கை ஊடகம், சமூக ஊடகம் மூன்றுமே இன்று இருக்கும் முதன்மையான வணிகங்களைச் சேர்ந்தவை. அத்துடன் வேறு வணிகங்களின் நுகர்பொருட்களையும் ஊடகங்களே விளம்பரம் செய்கின்றன.

நுகர்பொருள் உற்பத்தியில் முதலீடு செய்யப்படும் கோடிக்கணக்கான ரூபாயை எப்படி லாபத்துடன் திரும்ப ஈட்டமுடியும்? அதற்கு கோடிக்கணக்கான நுகர்வோர் வேண்டும். நுகர்வோர் என்பவர் ஒரு பொது ஆளுமை. அந்தப் பொது ஆளுமையை உருவாக்காமல் எந்த வணிகமும் நீடிக்க முடியாது.

நுகர்வோர் என்பவர் யார்? அவர்  பொதுவான ரசனையும் அறிவுத்திறனும் கொண்டிருக்கும் ஒரு திரள்தான். வெற்றிகரமான ஒரு நுகர்பொருள் என்பது ஒரே மாதிரியான பலகோடிப்பேரால் விரும்பப்படுவது. அத்தகையோரை உருவாக்கினால் மட்டுமே லாபம் உருவாகும். 

ஆகவே மொத்தச் சமூகமும் நுகர்வோர் ஆக மாற்றப்படுகின்றன. உக்கிரமான பிரச்சாரம் வழியாக ஒரேவகையான ரசனையும் அறிவுநிலையும் கட்டமைக்கப் படுகின்றன. விளம்பரங்கள் வழியாக, கேளிக்கை வழியாக, சமூகவலைத்தளங்களின் உரையாடல்கள் வழியாக இது நிகழ்கிறது.

இந்த பிரம்மாண்டமானசராசரிப்படுத்தல்தான் இன்றைய சலிப்புக்கான ஆதாரம்.  இயல்பிலேயே சராசரிகள் உண்டு. அவர்களின் அறிவு, ரசனை எல்லாமே சராசரிதான். அவர்கள் அந்த பொதுச்சராசரியில் சரியாக இணைந்துகொள்வார்கள். ஆனால் கொஞ்சம் ரசனையும், அறிவுத்திறனும் கொண்டவர்களுக்கு அந்த பொதுச் சராசரி உடனடியாகச் சலிப்பூட்டுகிறது. மற்றவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாகச் சலிப்பு உருவாகிறது.

நீங்கள் டிவி பார்த்தால் ஓரிரு நாலிலேயே  சலிப்பு உருவாகிறது. வணிக சினிமா கொஞ்சநாளில் சலிப்பூட்டுகிறது. மற்றவர்களும் காலப்போக்கில் சலிப்பை அடைகிறார்கள். எல்லாவற்றிலும் அந்தச் சலிப்பு நிகழ்கிறது. ஆனால் ஊடகம் உடனே அடுத்ததை அளிக்கிறது. நுகர்வோர் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு கொண்டுசென்றுகொண்டே இருக்கிறார்கள்.

எண்ணிப்பாருங்கள். 20 ஆண்டுகளுக்கு முன் அத்தனைபேரும் உலகசினிமா என்று பேசிக்கொண்டிருந்தனர். அதைப்பற்றி எத்தனை கட்டுரைகள், எத்தனை நூல்கள். அது டிவிடி காலகட்டம். அதன்பின் இணையம் வந்ததும் இணையத்தொடர்கள் பற்றி எழுதிக்குவித்தனர். இன்று அவையும் சலித்துவிட்டன. ஆனால் அடுத்த அலையாக நீங்களே செய்துகொள்ளும் ரீல்ஸ் போன்றவை வந்துள்ளன. அவையும் சலிக்க ஆரம்பித்துவிட்டன.

30 ஆண்டுகளுக்கு முன் இணையத்தில் சாட் ரூம் என்னும் வசதி வந்தபோது  அதில் விழுந்து கிடந்தனர். பின்னர் ஆர்க்குட் போன்றவை வந்தன. அடுத்து முகநூல் வந்தது. ஒவ்வொன்றாக சலிப்பூட்டின. இன்று இன்ஸ்டாகிராம் கூட சலிப்பாகிவிட்டது. அது ரீல்ஸை ஒளிபரப்பும் ஊடகம் மட்டுமாக ஆகிவிட்டன். அடுத்தது வரும்.

ஊடகமே ஊடகம் மேல் சலிப்பை உருவாக்குகிறது. ஊடகம் மிகப்பெரியதாக இருப்பதனால் உங்களுக்கு அளிக்கப்படுவதும் அதிகம். இன்று எதுவுமேஓவர்டோஸ்தான். ஐம்பதாண்டுகளுக்கு முன் ஒரு சினிமாப்பாட்டுஹிட்ஆனால் அது சலிப்பூட்ட ஓரிரு ஆண்டு ஆகும். இன்று ஒரு மாதம்கூட வேண்டியதில்லை.

ஊடகப்பெருக்கத்தின் விளைவாக உருவாக்கப்படும் சராசரித்தனம்தான் சலிப்புக்குக் காரணம். மிகமிக தாழ்ந்த நிலை அறிவும் ரசனையும் உடையவர்கள் சலிப்புற்றதும் ஊடகம் அளிக்கும் அடுத்தடுத்த வாய்ப்புகள் நோக்கிச் செல்கிறார்கள். மேலே இருப்பவர்களுக்கு ஒட்டுமொத்தமாக ஊடகமே சலிப்பாகிவிடுகிறது.

அந்தச் சலிப்பினால் தன் வாழ்க்கையை எவ்வகையிலேனும் தீவிரப்படுத்திக் கொள்ளவே மக்கள் அரசியல்சார்ந்த எதிர்மனநிலை, போதை, சூது என இறங்குகிறார்கள். அவர்களிடம் பேசிப்பாருங்கள். அவர்கள் ஊடகங்களில் கொஞ்சநாள் ஈடுபட்டு, அதில் சலித்து, மேற்கொண்டு நகர்ந்திருப்பார்கள். 

அண்மையில் ஓர் சமூக ஆய்வாளர் சொன்னார். சூதாட்டச் செயலிகளில் சிக்கி தற்கொலை செய்துகொண்டவர்கள் பெரும்பாலானவர்கள் பல ஆண்டுகளாக இணைய அடிமைகள். ரீல்ஸ் போன்றவற்றில் மூழ்கியிருப்பவர்கள். அது சலித்துப்போய் சூதாட ஆரம்பித்தனர். குடும்பத்தினர் அவர் வழக்கம்போல ரீல்ஸ்தான் பார்க்கிறார் என நினைத்துக் கொண்டனர். சூதாட்டம் அபாயமானது என அவர்களுக்குத் தெரியும், அந்த அபாயமே அவர்களைதிரில்ஊட்டி உள்ளே இழுக்கிறது.

நான் இந்த நவீனச் சலிப்பைப் பற்றியே பேசுகிறேன். இது அழிக்கும் சலிப்பு. ஒரு சமூக நோய். இதில் இருந்து மெய்யாகவே மீள்வதற்கான வழி என்பது சராசரித்தனத்தில் இருந்து வெட்டிக்கொண்டு விலகுவதுதான். தனக்குரிய உலகை உருவாக்கிக் கொள்வது. தனக்கான ரசனையை கற்றுக்கொள்வது. தனக்கான அறிவுச்சூழலை கண்டடைவது. தனக்கு நிறைவளிக்கும் செயல்களைச் செய்ய ஆரம்பிப்பது.

நான் சராசரி அல்ல என உணரத்தொடங்கினாலே சலிப்பு மறைந்துவிடும்.

ஜெ

 

முந்தைய கட்டுரைஜான் மர்டோக்
அடுத்த கட்டுரைIs Hinduism a savage religion?