காந்தியால் இளைஞர்களுக்கு என்ன பயன்?

காந்தியம் என்பது என்ன?

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

நலம் விழைகிறேன்.

உங்களின் இன்றைய காந்தி புத்தகத்தின் மூலமாகும் தளத்தில் வெளியாகும் காந்தி பற்றிய கட்டுரைகள் மூலமாகவும் காந்தியை அறிய முயற்சிப்பவன் நான். இன்றைய காந்தி புத்தகத்தின் மூலமாகவே சுனில் கிருஷ்ணன் போன்ற பிற காந்திய எழுத்தாளர்களையும் அறிய  முடிந்தது. 

காந்தியை ஐந்து மதிப்பெண் வினாவாகவும்சுபாஷ் சந்திரபோசை பெருமையாக கூற பயன்படுத்தப்படும் கேளிக்கை பொருளாகவுமே முன்னர் அறிந்திருந்தேன் மேலும் சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி போன்ற நாட்களில் இனையத்தில் காந்தியை பற்றிய வசைகளை தாராளமாக காணலாம்.

காந்தியை போன்ற எளிமையான, வயோதிகரை யாரும் தனது ஆதர்சமான நபர் என்று கூற விரும்பவில்லைஇன்றைய காந்தி இந்த பொது நோக்கிலிருந்து காந்தியை அணுகி அறிய உதவியது. காந்தி என்பவர் ஒரு மனிதராக அல்லாமல் ஒரு தன்மையாக தோன்றினார் முன்பு எப்போதுமிருந்த  தன்மைக்கு அவர் முகமாகிப்போனார்.

பின்னர் நான் அறிந்த காந்தியர்களும் என்னை வியக்கவைக்கிறார்கள்வினோபாவே , கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், லாரி பேக்கர் போன்ற பலரும்அண்மையில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கோடுகள் இல்லாத வரைபடம் என்ற கட்டுரைகளை வாசித்தேன் அதில் சதீஷ்குமார் பற்றிய கட்டுரை என்னை பிரமிக்க வைத்ததுலண்டனில் 1961-62 இல் அணு ஆயுதங்களை எதிர்த்து போராடிய பெட்ரண்டு ரஸ்ஸல் தனது 90 வயதில் கைது செய்யப்பட்டார் இதை அறிந்த சதீஷ்குமாரும் அவரது நண்பர் மேமோனும், வினோபாவேவிடம் விடைபெற்று பணமில்லாமல் காந்தி சமாதியில் தொடங்கி பாகிஸ்தான் வழியா செல்ல முயல்கிறார்கள்.

அப்போது ஒருவர் சில உணவு பொட்டலங்களை கொடுத்து எதிரி நாட்டிற்கு செல்கிறீர்கள் இதை வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னபோது சதீஷ்குமார் அதை மறுத்து இதை நான் வாங்கினால் ச மனிதன் மீதுள்ள  நம்பிக்கையை நான் இழந்து விடுவேன் என்று சொல்லிவிடுகிறார்வழியில் அவரது அமைதிபயணத்தை அறிந்து பலர் அவருக்கு உணவளிக்கிறார்கள்.பின் வெற்றிகரமாக லண்டன் சென்று பெட்ரண்டு ரஸ்ஸலையும்  சந்திக்கிறார் சதீஷ்குமார்அன்றாட வாழ்வில் சக மனிதர்களை வெறுக்கவே நாம் பழகியிருக்கிறோம் இணையத்தில் வெளிப்படும் அத்தனை வசைகளுமே அதற்கு சாட்சி ஆனால் காந்தியம் சக மனிதனின் மீது நம்பிக்கை மலர  ஒரு வாய்ப்பை அளிக்கிறது

மேலும் நண்பர்களுடன் பேசும்போது காந்தியை பற்றி பேச்சு வந்துவிட்டால் உடனே கேலி செய்ய தொடங்கிவிடுவார்கள் “காந்தியை பற்றி தெரிந்து நான் என்ன செய்யப்போறேன்என்ற கேள்விதான் வந்து நிற்கும்

ஒருமுறை காந்தியை பற்றிய உங்கள் பேட்டி ஒன்றை பார்த்தேன் அதில் கேள்வியாளர் இதே கேள்வியை கேட்டிருந்தார்  இன்றைய சூழலில் காந்தியின் தேவை என்ன?

நீங்கள் இரண்டு வியசங்களை குறிப்பிட்டிருந்தீர்கள் 

1. பெருகி வரும் நுகர்வு வெறி 

2. பெருகிவரும் தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதன் தன் கற்பனை திறனை இழப்பது.

முதலில் இந்த நுகர்வு வெறி பூதாகரமாக பெருகி வருகிறது. தான் தேவைக்கு  அதிகம் பயன்படுத்தினால் தான் மற்றவர்களால் மதிக்கபடுவோம் என்ற எண்ணம் பெரும்பான்மையாக காணப்படுகிறது. அதனாலேயோ என்னவோ தனக்கு தேவையில்லாத பொருட்களை கூட அடுக்கி கொண்டிருக்கிறார்கள். எளிமையான வாழ்வு கொண்டவர்களை ஏளனம் செய்கின்றனர் இதனாலேயே அவர்களின் மீதான அழுத்தம் அதிகரிக்கிறது

இன்று பெரும்பாலும் பார்க்கின்ற குப்பைகளும் கூட அதன் ஒரு விளைவு என்று தோன்றுகிறது பெரும்பாலும் உணவுப் பொருட்களை சார்ந்த கழிவுகள், ஒருமுறை மட்டுமே உபயோகிக்கும் பிஸ்கட்களின் கவர்கள், குளிர்பான பாட்டில்களே அதிக குப்பைகளுகான காரணங்கள்.

அடுத்தது AI எனப்படும் Artificial intelligence பெரும்பாலும் ஒரு கடிதம் எழுத கூட Ai தொழில் நுட்பத்தை நாடுகிறார்கள். விரைவில் பெரும்பாலானோர் வேலை இழப்பை சந்திக்கப் போகிறோம்.

இந்த 2024 இல் மனித குலம் சந்திக்கும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு அரை நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த மனிதரின் வாழ்க்கை முறை என்றால் 

இன்றும் காந்தி வாழ்கிறார்.

நன்றி 

தமிழ்குமரன் துரை

அன்புள்ள தமிழ்க்குமரன்

காந்தி பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறேன். இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன. தொகுக்கப்படாத கட்டுரைகள் இன்னும் இருக்குமென நினைக்கிறேன்

காந்தியை நான் அவருடைய இலட்சியவாத நோக்குக்காகவே முன்வைக்கிறேன். 

  • எதிர்மனநிலைக்கு எதிராக ஒருங்கிணைவை முன்வைக்கும் ஆக்கபூர்வப் பார்வை
  • மையங்களுக்கு எதிராக பன்மையை முன்வைக்கும் நவீன ஜனநாயகப்பார்வை
  • கற்பனையான ஒட்டுமொத்தச் செயல்பாடுகளுக்கு மாற்றாக யதார்த்தக் களத்தில் செயல்படுவதை முன்வைக்கும் நுண்ணலகு அணுகுமுறை 

ஆகியவை நான் அவரில் காணும் இலட்சியவாதங்கள்

அவற்றை கொள்கையாக, கோட்பாடாகப் பேசிக்கொண்டிருப்பதை விட்டுவிடுவோம். இன்னொரு வகையிலும் காந்தி முக்கியமானவர். இன்றைய இளைஞர்களுக்கு.

இன்றைய வாழ்விலுள்ள மிகப்பெரிய சிக்கல் என்பது சலிப்புதான். ஒவ்வொருவரையும் சலிப்பு மூடியிருக்கிறது. சலிப்பை வெல்லத்தான் நாம் ஏதேதோ செய்கிறோம். அரசியல் சார்ந்த காழ்ப்புகளில் திளைக்கிறோம். சாகசங்களை மேற்கொள்கிறோம். கேளிக்கை ஊடகங்களில் மூழ்கியிருக்கிறோம். போதைக் களியாட்டுகளை நாடுகிறோம். சூதாடுகிறோம். இவற்றால் நம் வாழ்க்கையை மேலும் எரிச்சலும் துயரும் கொண்டதாக ஆக்கிக்கொள்கிறோம்.

படைப்பூக்கத்துடன் எதையாவது செய்பவர்களால் மட்டுமே இந்தச் சலிப்பில் இருந்து விடுபட முடியும். நாம் செய்வது முக்கியமானது என்னும் உணர்வு உருவாகவேண்டும். அதற்கு  நாம் ஒன்றை கண்கூடாக படைக்கவேண்டும். நாம் நாமே மதிக்கும் ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும். அல்லது நாம் பெருமைகொள்ளும் ஏதாவது ஒரு செயலைச் செய்யவேண்டும். அவ்வாறு செயலாற்றும் மிகச்சிலரிடம் மட்டுமே அந்தச் சலிப்பு மறைந்து ஊக்கம் உருவாகிறது. அவர்கள் மட்டுமே மெய்யான மகிழ்ச்சியை அடைகிறார்கள். அவர்களுக்கு எதிர்மனநிலை இருப்பதில்லை. கேளிக்கைகள், போதைகள் போன்றவற்றில் ஈடுபாடு வருவதுமில்லை.

நாங்கள் (முழுமையறிவு, unified wisdom )  நடத்தும் பல்வேறு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பவர்களிடம் அந்த விடுதலை நிகழ்வதை நாள் தோறும் காண்கிறேன். அவர்களிடம் இருப்பது கற்பதன் மகிழ்ச்சி. தங்களுக்குரிய அறிவுத்துறை ஒன்றை கண்டடைவதிலுள்ள மகிழ்ச்சி. தங்களை விரிவாக்கிக்கொள்வதன் விடுதலை.

வேறு சிலர் சமூகப்பணியாற்றுவதனால் அந்த மகிழ்வை அடையக்கூடும். நாம் வாழும் சூழலுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்னும் எண்ணம் உடையவர்கள் அவர்கள். செயலில் உள்ளது அவர்களின் மகிழ்வும் விடுதலையும். ஆனால் அவர்கள் இன்று எந்த அரசியல் இயக்கத்தைச் சார்ந்து செயல்பட்டாலும் ஆழமான ஏமாற்றத்தையே அடைவார்கள். 

ஏனென்றால் அரசியல் கட்சிகள் எல்லாமே அடிப்படையில் அதிகாரத்துக்கான கூட்டம்சேரல்கள் மட்டுமே. அதிகாரச் சூதாட்டங்கள், அதிகாரச் சமரசங்கள் ஆகியவை மட்டுமே அவற்றிலுள்ளன. அவர்கள் பேசும் இலட்சியங்கள் கொள்கைகள் எல்லாமே அதிகாரத்துக்கு ஆள் சேர்ப்பதற்கான பிரச்சாரக் கருத்துக்கள் மட்டுமே. அவற்றில் நேர்மையான ஒருவரால் ஈடுபட முடியாது.

இருவகையினரே அவற்றில் திளைக்க முடியும். ஒன்று, அதிகாரத்தை விரும்பி அதில் மகிழ்பவர்கள். அவர்கள் அதிகாரத்தை பல்வேறு வழிகளினூடாக அடைய முயன்றுகொண்டே இருப்பார்கள். அந்த முட்டிமோதலே அவர்களின் இன்பம். இரண்டாம் சாரார், வெறுமே கட்சிகட்டல்களில் ஈடுபட்டு கொண்டாடுபவர்கள். மற்றவர்களுக்கு அது ஒரு இருண்ட சுழற்பாதை.  

சென்ற காலங்களில் இடதுசாரி அரசியலமைப்புகளில் சேவைக்கு ஓர் இடமிருந்தது. நேர்நிலை மனம் கொண்டவர்கள் அவற்றில் ஈடுபட்டிருந்தனர். இன்று அவையும் மிக மோசமான அதிகார அரசியலில் ஈடுபட்டுள்ளன. அவற்றில் சென்ற காலங்களில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் உளம் சோர்ந்து விலகியிருக்கிறார்கள். அல்லது கசப்பு நிறைந்த மனிதர்களாக முகநூலில் களமாடிக்கொண்டிருக்கிறார்கள். இடதுசாரி அமைப்புகளில் உள்ள இன்றைய சிக்கல் அவர்கள் இன்று அதிகார அரசியலை மட்டுமே நம்புபவர்களாக ஆகிவிட்டனர் என்பதுதான்.

இன்று, தன் நிறைவுக்காகவும் விடுதலைக்காகவும் செயல்பட விரும்பும் ஒருவருக்கான வழி காந்திய நோக்கிலான நுண்ணலகு அரசியல் மட்டுமே (மைக்ரோ பாலிடிக்ஸ்). அது சூழியல், மாற்று வேளாண்மை, மாற்றுக்கல்வி, மாற்று மருத்துவம் என பற்பல களங்களில் விரிந்து கிடக்கிறது. அதில் சிறிய அளவில், மக்களுடன், நுண்ணிய அலகுகளில் பணியாற்றுவதே மிகச்சிறந்த வழி.

அது நம்மை செயலூக்கம் கொண்டவர்களாக்கும். நம்முடைய வேலை, நம்முடைய குடும்பச் சூழல், அன்றாடத்தின் சலிப்பூட்டும் சுழற்சிக்கு அப்பால் நாம் நமக்கான ஒரு சிற்றுலகை உருவாக்கிக் கொள்ளலாம். அங்கே நாம் ஆற்றும் பணி நமக்கே நம்மைப்பற்றிய நம்பிக்கையையும் நிறைவையும் அளிக்கும்.

அதில் நாம் சிறிய குழுக்களுடன் இணைந்து செயலாற்றலாம். அல்லது நாம் மட்டுமே செயலாற்றலாம். அங்கே நாம் எந்த பெரிய அமைப்பின் பகுதியும் அல்ல. நம்மை எவரும் ஆட்சி செய்வதில்லை, நம்மை எவரும் பயன்படுத்திக் கொள்வதுமில்லை. நம் இயல்புக்கு ஏற்ப, நம் ஊக்கத்திற்கு ஏற்ப நமது பணிகளை ஆற்றலாம். அதற்கு முழுமையாக நாமே பொறுப்பு. 

காந்தியம் வழியாகவே ஒருவர் நுண்ணலகு அரசியலின் களங்களில் செயல்பட முடியும். ஏனென்றால் காந்தி மட்டுமே அதை முன்வைத்தார், அதற்கான மனநிலைகளை உருவாக்கினார். ஒருவர் எந்த அரசியல்கோட்பாடு சார்ந்து செயல்பட்டாலும் நுண்ணலகு அரசியலில் ஈடுபட்டால் காந்திய வழிமுறைகளுக்குள் வந்துவிடுவார். இடதுசாரிகளில், சூழியலாளர்களில் அத்தகைய பலரை நான் கண்டுள்ளேன்.

நான் என் நண்பர் சிவராஜ் ஒருங்கிணைக்கும் குக்கூ நண்பர்கூட்டத்தின் செயல்பாடுகளை கவனிக்கிறேன். அவர்கள் அதிகார அரசியலில் எதனுடனும் தொடர்பு கொள்வதில்லை. ஆகவே எதிர்மனநிலைகள் இல்லை. அவர்களுக்கு அவர்களின் செயற்களம் தவிர்த்து ஈடுபாடுகள் இல்லை. அதிலுள்ள சிறிய வெற்றிகள் வழியாக மகிழ்வடைகிறார்கள். அன்றாடம் செய்யும் செயல்கள் வழியாக அவர்கள் தங்களை கண்டடைகிறார்கள். அந்நிறைவில் அமைந்திருக்கிறார்கள். அவர்களிடமிருக்கும் மகிழ்ச்சியை வேறு இளைஞர்களிடம் கண்டதில்லை.

காந்தி இன்றைய இளைஞர்களில் எவருக்கு படைப்புமனமும் உண்மையான செயலூக்கமும் கொண்டவர்களோ அவர்களுக்கு மிக ஆக்கபூர்வமான ஒரு வழியைக் காட்டுபவர். இன்று இலட்சியவாத நோக்கு கொண்டவர்களுக்கு ஆதர்சமாக அமைபவர்கள் பெரும்பாலும் காந்தியர்களே. தலாய் லாமா முதல் கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் வரை.

ஜெயமோகன்

இன்றைய காந்தி வாங்க

இன்றைய காந்தி மின்னூல் வாங்க

உரையாடும் காந்தி வாங்க

 

முந்தைய கட்டுரைசம்யுக்தா மாயா
அடுத்த கட்டுரைவனம் அச்சிதழும் முன்வெளியீட்டுத்திட்டமும்