செபாஸ்டியன் மலையாளத்தின் முதன்மையான நவீனக் கவிஞர்களில் ஒருவர். கொடுங்கல்லூரில் காய்கறி மொத்தவணிகம் செய்பவர். ஆழமான உணர்வுகள் வலுவான படிமங்களில் வெளிப்படும் செபாஸ்டியனின் வரிகள் கேரள இலக்கியத்தின் சாதனைகளாகக் கருதப்படுபவை. செபாஸ்டியன் குற்றாலம் தமிழ் மலையாள கவிதை அரங்கிலும் பின்னர் ஊட்டி குரு நித்யா காவிய அரங்குகளிலும் கலந்துகொண்டிருக்கிறார்.
23 ஜூன் 2024 அன்று சென்னையில் நிகழும் குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழாவில் கலந்துகொள்கிறார்
வேளாண்மை
உள்ளங்கையில் நெல் பயிரிடும் ஒருவர்
இருக்கிறார் என்றார்கள்.
நூற்றியாறு வயது
பார்த்தால் எண்பதுதான்
மூன்றேக்கர் நிலம் இருந்ததாம்
கடனுக்கு கொஞ்சம்
சாலை விரிவாக்கம் மிச்சம்
என போயிற்று
விடிவதற்குள் எழுகிறார்
விரித்த உள்ளங்கையில்
ஏர்பூட்டுகிறார்
விதைக்கிறார்
உரமிடுகிறார்
பிடுங்கி நடுகிறார்
நீர் பாய்ச்சுகிறார்
கொக்கும் நாரையும் தவளைகளும்
அதில் நிறைகின்றன
வெயில் சாயும் பொழுதில்
விளைந்து தழைந்த வயலை
தனியாக அறுவடை செய்கிறார்
நெல்லடிப்பதும் அளப்பதும் அந்தியில்
இரவில் அவர்
தன் கையில் விளையவைத்த
புதுநெல்லரிசிக் கஞ்சியை
அந்தக் கையாலேயே
அள்ளிக் குடிக்கிறார்
ஒருநாள்
அவரைச் சென்று பார்த்தேன்
இரவு
கஞ்சி குடித்து முடித்து
தூங்கச் சென்றுகொண்டிருந்தார்
மங்கிய வெளிச்சத்தில்
அந்த உள்ளங்கையில்
அறுவடை முடிந்த விரிந்த வயல்வெளி
சில உதிரி கொக்குகள்
அவற்றின் குரல்கள்.
நிகழ்த்துகலை
உள்ளிருந்து ஒரு சீழ்க்கை ஓசை கேட்கிறது
என்னுள்ளில் இருந்து அல்ல.
உன்னுள்ளில் இருந்தும் அல்ல.
யாருடைய உள்ளில் இருந்து என்று தெரியவில்லை
துளைத்துத் துளைத்து ஊடுருவி நுழைந்து செல்கிறது
கூரிய ஒரு சீழ்க்கை.
வெறுப்பு வாய் திறந்ததோ
அன்பு ஒரு எட்டு பின்னுக்கு வந்து
முன்னால் பாயந்ததோ?
ஓர் உறுமல் அதில் இணைகிறது.
விறுவிறுப்பாக விரிந்து விரிந்து
அணுகி வருகிறது
பிரமையா என்று திகைத்தேன்
அப்போது
வானமும் பூமியும் பிரபஞ்சமும்
காதுகள் பொத்தி கண்மூடி நிற்கும்
ஒரேயொரு காட்சி மட்டுமே கொண்ட
வாழ்க்கையின் திரைச்சீலை உயர்கிறது
உள்ளிருந்து எழுகின்றன
சீழ்க்கைகள் !
பதில் கடிதம்
‘அன்பிற்குரிய நண்பர் செபாஸ்டினுக்கு…’
என்று தொடங்கும் இந்தக் கடிதத்தை
1927ல் அனுப்பியிருக்கிறீர்கள்.
எனக்கு கிடைப்பது இந்த
2024 மார்ச் 25 ஞாயிற்றுக்கிழமை.
கடிதத்தில் மற்ற எல்லா வரிகளையும்
ஒளிபெறச் செய்தபடி
அந்த அழைப்பு
எழுந்து நிற்கிறது
‘அன்பிற்குரிய நண்பர் செபாஸ்டினுக்கு’
அடக்கமுடியாத ஆவலுடன்
உங்கள் கடிதத்தை வாசிக்கிறேன்
லோர்க்கா,
உதிரும் ஆயுளில் இலைகளுக்கு மேல்
ஓடியோடி
ஒரே மூச்சில் அதை வாசித்தேன்
காலம்தான் என்ன மாயம் காட்டிவிட்டது!
எங்கெங்கோ ஒத்தி வைக்கப்பட்டு
ஒளித்துவைக்கப்பட்டு
எப்படி இப்போது இந்தக் கடிதம்
இந்த யாசகனின் கைக்கு வந்து சேர்ந்தது!
நன்றியுடன் நான் பதில் எழுதுகிறேன்
உங்களுக்கு இது எப்படி எங்கே கிடைக்கும் என்றெல்லாம்
எண்ணிப்பார்க்கவே இல்லை.
இப்போதும் விழித்திருந்து பாடும்
இந்த கோடிகோடி சில்வண்டுகளின் நடுவே
இருக்கிறீர்கள் நீங்கள்
உங்கள் குரலை மட்டும்
நான் கவிதையென தனித்து கேட்கிறேன்.
உங்களை முடித்துவிட்டோம் என எண்ணி
ஆறுதலடைந்தவர்களால்
எப்படி மகிழ முடியும்?
கோழைகள்.
கல்லறைகளில்
உன் பெயரை எழுதி வைப்பதற்கும் அஞ்சினர்.
ஆனால்
நாங்கள் அதை கேட்கிறோம்.
கோடிகோடி சில்வண்டுகளின் பாடல்களில் இருந்து
பிரித்தறிகிறோம்
எங்கள் முடிவிலா கனவின் தொடர்ச்சியாக
இந்தப் பதிலை உங்களுக்கு எழுதத் தொடங்குகிறேன்
‘அன்புள்ள லோர்க்கா…’
(Frederico Garcia Lorca to Sebastian Gasch)