கிறிஸ்துவின் இமைக்கணம்- கடிதம்

அன்புள்ள ஜெ,

இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இலக்கிய ஆக்கங்களில் ஒன்றானதும், மிகவும் விமரிசிக்கப்பட்டதுமான The Last Temptation of Christ நாவலை சென்ற மாதம் வாசித்து முடித்தேன். நீகாஸ் கசந்த்சாகீஸ் பற்றி பூன் முகாமிலும், வேறு பல நிகழ்விலும் நீங்கள் தந்த அறிமுகத்தால் உந்தப்பட்டிருந்தாலும், தலைப்பிலேயே மிகத் தீவிரமாகத் தோன்றிய இந்த நாவலைத் தொட அப்போது மனம் துணியவில்லைஅதனால் சோர்பா என்னும் கிரேக்கன் நாவலை முதலில் வாசித்தேன்.

கசந்த்சாகீஸின் உலகிற்குள் நுழைய சோர்பா நாவல் ஒரு சிறந்த வழியென்று தோன்றுகிறது. அந்த நாவலில் உடலுக்கும் ஆத்மாவிற்குமான தொடர் போராட்டத்தில் சிக்கி அலையும் கதைசொல்லியாக வரும் கசந்த்சாகீஸ், உலகியலிலிருந்து விட்டு விடுதலையாவதற்கு தொடர்ந்து முயன்று கொண்டேயிருக்கிறார். தேங்கிப்போன மதநம்பிக்கைகளும் சுயநலமும் கொண்டு மக்களை ஏமாற்றும் பாதிரியார்களையும் மடத்தையும் எரிக்கும் சோர்பாவில் தொடங்கி, புத்த நிர்வாணம், மார்க்சியம், நீட்சேவின் சுதந்திர மனிதன் எனப் பல்வேறு சித்தாந்தங்களைத் தொடர்ந்து பின்சென்று , இறுதியில் தனக்கே உரிய கிறிஸ்துவை இந்த நாவலில் கண்டடைகிறார். ஒரே சமயம் மானிடனாகவும், அதிமானிடனாகவும் இருக்கும் கிறிஸ்துவின் இருமைநிலையின் மர்மத்தால் வசீகரிக்கப்பட்ட கசந்த்சாகீஸ், இந்த நாவலில் அவ்விரு கூறுகளின் வழியாகவும் கிறிஸ்துவின் இறுதிக்கணம் நோக்கிய பயணத்தை நிகழ்த்தி, கிறிஸ்து பெற்ற அனுபவங்களை வாசகனுக்கும் கடத்தி, எது நாசரேத்தின் இயேசுவை என்றென்றும் மனிதகுலத்தின் பக்கம் நிற்கும் இறையாக்குகிறதென உணரச்செய்கிறார்.

இந்த நூலில் நாம் காணும் கிறிஸ்து, விண்ணுலகிலிருந்து இறங்கிவந்து மாயமந்திரங்கள் நிகழ்த்தி புன்னகையோடு மீண்டும் விண்புகும் தெய்வ உருவகம் அல்ல. மாறாக நாசரேத்தின் எளிய மரத்தச்சன் ஜோசப்புக்கும் மேரிக்கும் மகனாகப் பிறந்து வளர்ந்த சாதாரண மனிதன் தான். ஆனால் அவர் அசாதாரணமானவரும் கூட. சிறுவயதிலேயே யேசுவிற்கு கேட்கத்தொடங்கும் பிதாவின் குரல், ரோமானியர்களின் கீழ் அடிமைகளாய்ச் சிக்குண்டு தவித்து, காலங்காலமாகக் காத்திருக்கும் இஸ்ரேலிய யூதர்களின் மீட்பர் அவரே என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறது. தன் ஆன்மாவின் அழைப்பையும் பிறவி நோக்கத்தையும் உணர்ந்திருந்த போதும், ஒரு சராசரி மனிதனாக வாழ்வியலில் அவருக்கிருக்கும் நாட்டமும் தன் எளிய உடல் மீதிருக்கும் பயமும், இயேசுவை ஆன்மாவிற்கும் சதைக்குமிடையேயான கடும் போராட்டத்தில் தள்ளுகிறது. விளைவாக கடவுளின் குரல் கேட்கும் ஒவ்வொரு முறையும் அதை அஞ்சி, அதிலிருந்து தப்பி ஓடி, வலிப்பு கண்டு, ஊர் மக்கள் முன் ஒரு பித்தனைப்போலாகிறார். மீட்பராக அஞ்சி, கடவுளையும் தன்னையும் ஏமாற்றிக்கொள்வதற்காக யூத விடுதலைப் போராளிகளை சித்திரவதை செய்யும் ரோமானியர்களுக்காக அவரே மரச்சிலுவைகளை செய்து தந்து, யூதர்களின் வெறுப்பிற்கும் இகழ்ச்சிக்கும் ஆளாகிறார்.

இதனால் கடும் வேதனைக்குள்ளாகும் அன்னை மேரி, எல்லோரையும் போல் தன் மகனும் ஒரு சராசரி யூதனைப் போல் நடந்து, மணம் முடித்து மகிழ்வாக வாழமுடியாதவென ஏங்குகிறாள். ஒரு திருமணம் நடந்தால் எல்லாம் சரியாகிவிடும் என நினைத்து, இயேசுவை அழைத்துக்கொண்டு மக்தலா கிராமத்திற்கு செல்கிறார். முறைப்பெண்ணான மேரி மக்தலேனா மீது பிள்ளைப்பிராயம் முதல் தீராக்காதல் கொண்டவர் இயேசு. மேரியின் மனதிலும் அவர்தான். ஊர் மக்கள் முன் மேரியிடம் தன் காதலைச் சொல்லுமிடத்தில், கடவுளின் குரல் அவர் தலைக்குள் ஒலித்து அவரை மீண்டும் பித்தனாக்கி வலிப்பு கொண்டு விழச்செய்கிறது. வெட்கமும் அவமானமும் கொண்டு அனைவரிடமிருந்தும் தப்பி மீண்டும் ஓடுகிறார். இதனால் தீராக்கசப்பும் வலியும் கொண்ட மேரி, இயேசுவைத் தன் மனதிலிருந்து தொலைப்பதற்காக, அவரை வேறு எந்த ஆணிலாவது மீண்டும் கண்டுகொள்வற்காக ஒரு பரத்தையாக வாழத்தொடங்குகிறாள். இந்த குற்ற உணர்ச்சி இயேசுவின் வேதனையை மேலும் பன்மடங்காக்குகிறது

ஒரு எளிய மனிதனைப்போல் வாழ விழைவு கொண்டு அதற்காக முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் கடவுளின் குரல் அவரைத் தொடர்ந்து வந்து, அவரை ஆன்மவதைக்குள்ளாக்குகிறது. அந்த தொடர்வதையின் ஏதோ ஒரு கணத்தில், இயேசு தன்னை கடவுளிடம் முற்றாக ஒப்புவிக்கிறார். வீட்டிலிருந்து வெளியேறி ஊரெல்லாம் அலைந்து தொலைதூரத்தில் பாலைவனத்தின் நடுவே, மிகக்கடுமையான நோன்புகளைப் பேணும் ஒரு மடாலயத்தில் சென்று சேர்கிறார். அங்கு மரணத்தின் விளிம்பில் இருக்கும் தலைமை மதகுரு இயேசுவை மீட்பராக அடையாளம் கண்டுகொண்டு, நிறைந்த மனதுடன் உயிர் பிரிகிறார்.    

கடவுளின் குரலுக்குத் தன்னை முழுதாக அர்ப்பணித்த கிறிஸ்து, தன் சீடர்களை கண்டுகொண்டு, ஒவ்வொரு ஊருக்கும் சென்று புத்துலகம் வரவிருப்பதை அறிவிக்கிறார். ஏழைகளும், கைவிடப்பட்டோரும், நோயுற்றோருமே அவரை முதலில் தங்கள் ரட்சகர் என அடையாளம் கண்டு அவர் பின் திரள்கின்றனர். ஆனால் அவர்கள் வேண்டுவதெல்லாம் கிறிஸ்து மாயமந்திரங்களின் மூலம் தங்கள் பசியைப் போக்கி, நோயையும் வலியையும் இல்லாமலாக்கி, செல்வந்தர்களின் உடைமைகளைப் பறித்து அவற்றை தங்களுக்கு கொடுக்கவேண்டுமென்பதுதான். மாறாக கழுதையின் மீது ஊர்வலம் செல்லும் யூதர்களின் அரசன் கிறிஸ்து அவர்களுக்கு ஒவ்வாமையைத் தருகிறார். ஆயிரமாண்டுகளாகத் தேங்கிப்போன சம்பிரதாயங்களைக் கட்டி அழும் ஜெருசலேத்தின் பொற்கூரையிட்ட கோவிலைத் தகர்த்து எறிந்து, அந்த இடத்தில் புத்துலகத்தின் ஆலயத்தை உருவாக்கக்கோரும் கிறிஸ்து, மக்களின் கடுமையான எதிர்ப்பிற்கும் மத நிந்தனை குற்றத்திற்கும்  ஆளாகிறார். விளைவாக யூத மதகுருக்கள், ரோமானிய ஆட்சியாளர்களுடன் சேர்ந்து அவரை சிலுவையிலேற்றும் தண்டனையை விதிக்கின்றனர்.  

கிறிஸ்துவிற்கு நிகரான இன்னொரு வலுவான கதாபாத்திரம் யூதாஸ். வழக்கமான விவிலியக் கதைகளில் வரும் யூதாஸ் அல்ல கசந்த்சாகீஸின் யூதாஸ். அவன் பாலைவனத்தில் பிறந்து, தனித்து வளர்ந்த வீரன். யூத விடுதலைக்காக உயிரைக் கொடுக்கவும், உயிரை எடுக்கவும் தயங்காதவன்விடுதலைப் போராளிகளைக் கொல்வதற்காக சிலுவைகளை செய்து தரும் இயேசுவைக் கொல்லும்பொருட்டு அவரைப் பின்தொடர்ந்து பாலைவன மடாலயத்திற்கு வந்து சேர்கிறான். ஆனால் என்னை தயவுசெய்து கொன்று இந்த வதையிலிருந்து விடுவிப்பாயாக என்று தானே முன்வந்து நிற்கும் கிறிஸ்துவைக் கண்டு மனம் மாறுகிறான். எகிப்தியர்களைத் தன் தெய்வீக அற்புதங்கள் மூலம் தோற்கடித்து யூதர்களை விடுவிக்கும் மோசஸைப் போல, ரோமானியர்களிடமிருந்து அரசியல் விடுதலை பெற்றுத் தரும் மீட்பராக கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறான். கிறிஸ்துவின் பிற முதன்மைச் சீடர்கள் பயமும் சுயநலமும் கொண்டு அவரைக் கைவிடும் போது, யூதாஸ் இறுதிவரை அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பதுடன், கிறிஸ்துவை மனமயக்கத்திலிருந்து விடுவித்து அவரை நல்வழிப்படுத்துவபனாகவும் அவனே உள்ளான். ஊர்மக்களின் பாவங்கள் அனைத்தும் ஏற்றிவிடப்பட்ட ஆடு பாலைவனத்தில் விடப்பட்டுதனித்து அலைந்து சித்திரவதையுற்று இறக்கும். அந்த ஆட்டிடம் தன்னை இனம் கண்டுகொள்ளும் கிறிஸ்து, மக்களின் பாவங்களைத்  தான் ஏற்றுக்கொண்டு சிலுவையில் ஏறுவதன் மூலமே அவர்களை மீட்க முடியுமென உணர்ந்து, தன்னைக் காட்டிக்கொடுக்குமாறு யூதாஸிடம் மன்றாடுகிறார். என் நிலையில் நீங்கள் இருந்தால் உங்களால் காட்டிக்கொடுக்க முடியுமாவென கேட்கும் யூதாசுக்கு, “நிச்சயம் முடியாது. நான் எளியவன். அதனால் தான் சிலுவையில் தொங்கும் எளிய பணி எனக்குஎன கிறிஸ்து கூறுகிறார்.

மனிதகுலத்தின் நலனுக்காகத் தன் விழைவுகள் அனைத்தையும் துறந்து தான் பலியாவது மட்டுமே கடமையென உணர்ந்த கிறிஸ்து சிலுவையில் ஏறும் கணம் வரை அதில் உறுதியாயிருக்கிறார். ஆனால் சிலுவையில் அறையப்பட்ட உடன், இறுதியானதும் அனைத்திலும் வலுவானதுமான மனமயக்கத்திற்கு ஆட்படுகிறார். என் தேவனே என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர் (Eli Eli, Lama Sabachthani) என பிதாவைக் கேட்கும் கணத்தில், விண்ணிலிருந்து இறங்கி வரும் தேவதை ஒன்று  அங்கிருக்கும் அனைத்திலிருந்தும் அவரை விடுவித்து அவர் மனம் விழைந்த மகிழ்ச்சியான வாழ்வினை அளிக்கிறது. இனி இந்த உலகில் கிறிஸ்துவிற்கு துன்பங்களே இல்லை, வாழ்வின் அனைத்து இன்பங்களையும் அவருக்கு அளித்து உடனிருந்து காக்கும் பொருட்டு கடவுள் தனக்கிட்ட கட்டளையின் பொருட்டே தான் வந்ததாகக் கூறுகிறது

கிறிஸ்து மேரி மக்தலேனாவை அடைந்து அவளோடு இணைகிறார். இது பாவமல்லவா என்று முதலில் தயங்கினாலும், தன் மனம் எப்போதும் விழைந்த ஒன்றல்லவா இது என உணர்ந்து வாழ்வில் முதன்முறையாக மகிழ்ச்சியை அடைகிறார். கிறிஸ்துவைக் கொல்லும்பொருட்டு அவரைத் தேடி அலையும் திரளிடம் சிக்கிக்கொள்ளும் மேரி அவர்களால் கொல்லப்பட்டு இறந்துபோகிறாள். அந்த வேதனையின் துயரிலிருந்து அவரை மீட்கும் கிறிஸ்துவின் தேவதை அவரை பெத்தானி கிராமத்திற்கு, லாசரஸின் சகோதரிகளான மேரி மற்றும் மார்த்தாவிடம் கொண்டு செல்கிறது. முதலில் இதனை ஏற்க மறுக்கும் கிறிஸ்து, “இதில் தவறேதும் இல்லை, உலகில் நீங்கள் காணும் பெண்கள் அனைவரும் ஒரே பெண்ணின் வேறு வேறு முகங்கள் மட்டுமேஎன்று கூறும் தேவதையின் சொல்லை பின்னர் ஏற்றுக்கொள்கிறார். மேரியையும் பின் மார்த்தாவையும் மணந்து கொண்டு, ஒரு விவசாயியாகவும், தச்சனாகவும், மற்ற எல்லா யூதர்களைப் போலவும் ஒரு எளிய நிறைவான வாழ்வை மனநிறைவோடு வாழ்கிறார். கிறிஸ்து தன் வயதான காலத்தில் ஒருநாள் மீண்டும் தன் பழைய சீடர்களைச் சந்திக்கின்றார். அவர்கள் அனைவரும் பல்லாண்டுகளாக சித்திரவதைக்குள்ளாகி தங்கள் உடலும் மனதும் அழுகிய நிலையில் இருக்கையில், மணமுடித்து பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் பெற்று பல்லாண்டு வாழ்ந்து நிறைந்து கொண்டிருக்கும் கிறிஸ்துவை அவர்கள் துரோகியென்றும், எதிரியென்றும் பழித்து சாபமிட்டு விலகிச்செல்கின்றனர். மற்ற சீடர்கள் அனைவரும் கைவிட்டபோதும், யூதாஸ் மட்டும் கிறிஸ்து நிறைவேற்ற வேண்டிய இறைப்பணியை அவருக்கு மீண்டும் நினைவுறுத்துகிறான். அவனது கடும் சொற்களால் வேதனையுறும் கிறிஸ்து, மீண்டும் இறையை நோக்கி, “தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்என்று மண்ணில் வீழ்ந்து கதறி அழுகிறார். அந்த ஒரு கணத்தில் தன் உடலில் அறையப்பட்ட ஆணிகளின் வலியையும், நெஞ்சிலிருந்து வழிந்தோடும் குருதியையும் உணர்ந்து, தான் இன்னும் சிலுவையில் அறையப்பட்டுத் தொங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்து மகிழ்கிறார். அத்தனை காலம் தான் வாழ்ந்த வாழ்வென்பது, தேவதை போல் வந்த சாத்தான் தந்த கணநேர மனமயக்கமே என்றுணர்ந்து அனைத்திலிருந்தும் விடுபடுகிறார். தன் இறுதி மனமயக்கத்தையும் வென்று மக்களின் பாவங்களுக்காக சிலுவையிலேறி கடவுள் தனக்களித்த பணியை நிறைவேற்றி மனம் நிறைகிறார்.                         

கசந்த்சாகீஸ் இந்த நாவலுக்கு எழுதிய முன்னுரையில் தன் ஆன்மாவின் மீதும், உடலின் மீதும்   தனக்கிருக்கும் பெரும்விருப்பையும், அவ்விரண்டிற்குமான தொடர் போராட்டத்தையும் விளக்கிக் கூறுகிறார். அவையிரண்டும் உண்மையில் எதிரிகளாக இருக்க வேண்டியதில்லை, மாறாக அவை  ஒத்திசைவு கொண்டு இயங்குகையில் மனிதனுக்கு மகிழ்ச்சியளித்து இறைதரிசனத்தைத் தரும் சகபணியாளர்கள் என்கிறார். இயற்கையின் ஆதார விசைகளான இவையிரண்டிற்கும் இடையிலான போராட்டம் கிறிஸ்து உட்பட இங்குள்ள ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. அதனால் தான் கிறிஸ்துவின் துயரானது இங்குள்ள அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதாகவும், நெருக்கமானதாகவும் ஆகிறது. கிறிஸ்து தான் அடைந்திருக்கக்கூடிய ஒவ்வொரு சிறுமகிழ்வையும் துறந்து, எவ்வாறு ஒரு தியாகத்திலிருந்து மற்றொன்றிற்கு என்று தொடர்ந்து சென்று, இறுதியாக அந்த சிலுவையில் ஏறுகிறார் என்பதைப் பின்தொடர்வதனூடாக , அந்த ஆன்மவதையை நாமும் வாழ்ந்து பார்ப்பதனூடாக நமக்கான ஆன்மதரிசனத்தை அடையமுடியுமென காட்டுகிறார். தசைக்கும் ஆன்மாவிற்குமிடையான போராட்டத்திலிருக்கும் ஒரு எளிய மனிதன் சந்திக்கும் அத்தனை  துயரங்களையும் தானும் ஏற்று வாழ்ந்த கிறிஸ்துவினுள் இருக்கும் அந்த மனிதக்கூறு தான், அவரது வலியையும் கண்ணீரையும் நமக்கு அத்துணை நெருக்கமாக உணரச்செய்கிறது. அதனால் தான் அவரது இறுதி வெற்றியை  நமது சொந்த வெற்றியைப்போல் நம்மால் கொண்டாடமுடிகிறது என நிறுவுகிறார்ஒரு வெண்முரசு நாள் கூட்டத்தில் கசந்த்சாகீஸ் ஏன் ஒரு மிகச்சிறந்த எழுத்தாளர் என்று நீங்கள் விளக்கும்போது, வாழ்வின் உயர் விழுமியங்களை ஒரு எளிய வாசகனின் தளத்திற்கு இறக்கி வைத்து நீர்த்துப்போகச் செய்யாது, அவர் வாசகனைத் தான் அடைந்த அந்த உயர்தளத்திற்கு எழுந்து வரச்செய்கிறார் என நீங்கள் குறிப்பிட்டீர்கள். இந்த நாவலைப் படிக்கும் தோறும் அது உண்மையென்பதை மனம் உணர்ந்துகொண்டே இருந்தது.  

இந்த நாவலைப் படிக்கையில் நான் சந்தித்த போதாமைகளில் ஒன்று கிறிஸ்துவ இறையியலில் சரியான அறிமுகம் இல்லாத என் பின்புலம். நம் சமூகத்திலிருந்தும் படித்த சில நூல்களிலிருந்தும் பெற்ற கிறிஸ்துவைப்பற்றிய பொதுவான சித்திரம் மட்டுமே கொண்ட எனக்கு, நாவலில் தொடர்ந்து வரும் பைபிள் கதாபாத்திரங்களையும், நிகழ்வுகளையும் பின்தொடரக் கடினமாக இருந்ததுமேலும் பொதுவாக தமிழிலேயே வாசிக்கும் எனக்கு ஆங்கிலத்தில் இந்த நூலை படித்ததனால் வாசிப்பின்பமும் கொஞ்சம் குறைபட்டுபோனதுஅமேசான் கிண்டிலில் படித்ததன் நற்பலன், வார்த்தைகளுக்கான பொருளையும் பைபிள் கதாபாத்திரங்கள் பற்றிய சிறுகுறிப்பையும் உடனடியாக தெரிந்து கொண்டு வாசிப்பில் முன்செல்ல முடிந்தது. அந்த எளிய அறிமுகத்திலேயே, நான் வளர்ந்த மதுரையின் பெத்தானியாபுரம் முதல் இன்று கலிஃபோர்னியாவில் வீட்டின் அருகிலிருக்கும் பெத்தானி கிராமம் வரை புது அர்த்தத்தில் பொருள்கொள்கின்றனஅதை பற்றி சிந்திக்கும்தோறும்  நீங்கள் முன்னெடுக்கும் முழுமையறிவு வகுப்புகளின் முக்கியத்துவத்தை,பைபிள் அறிமுக வகுப்புகளின் தேவையைப் புரிந்து கொள்ள முடிகிறது.    

இறுதியாக சில கேள்விகளும் எஞ்சுகின்றன

  1. இந்த நூல் கிறிஸ்துவ அமைப்புகளால் தடை செய்யப்பட முதன்மைக் காரணமாக இருந்தது அதில் கிறிஸ்து மிகவும் மனிதப்படுத்தப்பட்டுவிட்டார் என்பது. கண்ணனும், சிவனும், இந்திரனும் மனிதனாக வாழ்ந்து நிகழ்த்தும் அத்தனை லீலைகளையும் ஏற்றுக்கொண்டு அவர்களை இறையாகவும் நாம் காணும் போது, மனிதகுமாரன் என அழைக்கப்படும் கிறிஸ்து ஏன் மனிதனாகக் காட்டப்படக்கூடாதுகசந்த்சாகீஸ் கூறுவதைப் போல அது இன்னும் நம்மை கிறிஸ்துவுக்கு அருகில் அழைத்துச் செல்லுமல்லவா?
  2. கசந்த்சாகீஸ் இந்த நாவலில் கிறிஸ்துவை எளிய மனிதனாக நிகழ்த்திக் காட்டியிருந்த போதும், பைபிள் கதைகளின்படி அவர் நிகழ்த்திய அற்புதங்களையும் அவர் தவிர்க்கவில்லை. ரோமானிய படைத்தலைவனின் மகளைக் குணப்படுத்துவது முதல், லாசரசைக் கல்லறையிலிருந்து உயிர்பிப்பிப்பது வரை  எல்லா அற்புதங்களையும் இந்த நாவலில் வரும் கிறிஸ்துவும் செய்கிறார். கசந்த்சாகீஸின் கிறிஸ்துவுக்கும் இது ஏன் தேவைப்படுகிறது?
  3. சோர்பாவிலும், இந்த நாவலிலும் பல இடங்களில் பெண் என்பவள் மகிழ்ச்சிக்கு விழையும் ஒரு எளிய உயிராக, மனமயக்கம் தரும் ஒன்றாகச் சித்தரிக்கப்படுகிறாள். இன்றைய அறமதிப்பீட்டை வைத்து கடந்த கால மனிதர்களை எடைபோடக் கூடாது எனினும்கசந்த்சாகீஸின் பெண் பற்றிய இந்த பார்வையை எப்படி எடுத்துக் கொள்வது?  

பின்குறிப்பு:

ஒரு தற்செயல் நிகழ்வாக கசந்த்சாகீஸின் இந்த நாவலைப் படிக்கும் முன்தான் ராகுல்ஜியின் வால்கா முதல் கங்கை வரை நூலைப் படித்து முடித்திருந்தேன். அதைப் பற்றி உங்களுக்கு எழுதிய கடிதத்திற்கு நீங்களும் ராகுல்ஜியின் மூன்று அடிப்படை வரலாற்றுப்பார்வைகள் பற்றி விளக்கி பதில் எழுதி இருந்தீர்கள்கசந்த்சாகீஸின் நாவலோடு அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொண்ட போதுமனம் அவரை ராகுல்ஜியோடு ஏனோ ஒப்பிட்டுக்கொண்டே இருந்தது. இருவருமே சமகாலத்தவர்கள். ராகுல்ஜி பிராமணர்வடமொழியிலும் வேதத்திலும் அறிவு கொண்டவர். கசந்த்சாகீஸ் இளமையில் கிரேக்க ஆசாரவாத கிறித்துவப் பின்னணியில் வளர்க்கப்பட்டவர். இருவருமே மார்க்ஸின் கம்யூனிச சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு, ரஷ்யாவின் பொதுவுடை அரசின் மேல் பெரும் மதிப்பு கொண்டிருந்தவர்கள். பௌத்தத்தின் தாக்கம் இருவரின் மேலும் மிக வலுவாக உண்டு. ஆனால் ராகுல்ஜி தான் கற்ற சித்தாத்தங்களின் எதிர்மறை அம்சங்களை மட்டுமே எடுத்து கொண்டு, குறுகிய கண்ணோட்டத்தோடு தன் பார்வையை முன்வைத்துவிட்டு சென்றுவிட்டார்கசந்த்சாகீஸோ ஒவ்வொரு சித்தாந்தத்திலிருந்தும் தன் பார்வையை விரித்துகொண்டு, என்றென்றைக்குமான மனிதகுலத்தின் ஆதார வினாக்களை எழுப்பி, அதற்கு தன் சுயஅனுபவங்களின் மூலம் விடைதேட முயற்சிக்கிறார். இருவரின் வாழ்வையும், அவர்களது படைப்புகளையும் இன்று ஒப்பிட்டு பார்க்கையில், வெறும் பன்மொழியறிவும், பயண அனுபவங்களும் மட்டுமே ஒருவருக்கு காலம் கடந்து நோக்கும் பார்வையையும், ஆன்மிக தரிசனத்தையும் அளித்து விடாது என எண்ணிக்கொண்டேன்.

– சாரதி

முந்தைய கட்டுரைபயணக்கட்டுரைகள், கடிதம்
அடுத்த கட்டுரைலட்சுமிகாந்தன் கொலை வழக்கு