புல்நுனிப் பனித்துளியின் நிரந்தரம்

குமரகுருபரனின் கவிதைகளின் முழுத்தொகுப்பு வெளியாகும் இந்த நேரத்தில் அவர் ஒரு அடையாளமாக மாறிவிட்டிருக்கிறார். அவர் பெயரால் வழங்கப்படும் விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது அவருக்கு கவிதை எழுதும் இளைய தலைமுறையினர் அனைவருக்கும் உரிய ஒரு முகத்தை அளித்துள்ளது. குமரகுருபரனின் கவிதைகளை ஒவ்வொரு ஆண்டும் இவ்விருதின் காலகட்டத்தில் ஆங்காங்கே என நான் தொட்டுச் செல்வதுண்டு. நல்ல கவிதை வாசகனின் வாசிப்பென்பது வண்ணத்துப்பூச்சி மலர்களில் அமர்ந்தெழுவது போலத்தான். உண்மையிலேயே அருந்துகிறதா விளையாடுகிறதா என்ற ஐயம் எழும். ஒவ்வொரு மலரையும் தொட்டு ஏற்கிறதா, மறுத்து எழுகிறதா என்ற மயக்கம் உருவாகும்.

கவிதைத் தொகுப்பை அருகில் வைத்து, கைபோன போக்கில் சிக்கும் சில கவிதைகளைப் படித்து, கடந்து செல்வது எனக்கு என்றும் இனிய பொழுதுகளில் ஒன்று. அவ்வாறு குமரகுருபரனின் கவிதைகளைப் படிக்கையில் இன்று ஓர் உவமை நெஞ்சில் எழுந்தது. இன்னொரு கவிஞனின் கவிதை வரியையே அதற்கு உரியதாக்குவேன். ’புல்நுனிப் பனித்துளியின் நிரந்தரம்’ என்று தேவதேவன் ஒரு கவிதையில் சொல்கிறார். குமரகுருபரனின் கவிதைகள் மிகச்சிறிய ஓர் உலகத்தைச் சார்ந்தவை. பொதுவாகவே கவிஞர்கள் பரந்துபட்ட வாழ்க்கைப் பார்வை கொண்டவர்களாக இருப்பதில்லை. குவிதலும் தீவிரமுமே கவிதைகள் ஆகின்றன. மிகப்பெரிய காவிய ஆசிரியர்கள், ஒரு காலகட்டத்தின் திருப்பு முனையாக அமைந்த பெருங்கவிஞர்கள் மட்டுமே நாவலாசிரியர்களுக்குரிய விரிந்த களமும் கூடவே தீவிரமான கவித்துவமும் கொண்டவர்களாக இருப்பார்கள். அவ்வாறன்றி விரிந்த களம் கொண்ட கவிஞர்கள் வெறும் எண்ண வெளிப்பாட்டையே கவிதையாக எழுதும் எளிய வெளிப்பாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.

கவிதையின் உலகமே சிறியது என்கையில் நவீன கவிஞனின் உலகம் மேலும் சிறியது. சில தருணங்களிலேனும் உறவு- பிரிவு- தனிமை என்னும் மூன்று பிரிவுகளில் நின்றுவிடுவது தான் தமிழ் நவீனக் கவிதையோ என்று எண்ணத் தோன்றும். குமரகுருபரனின் உலகம் அதினும் சிறியது, ஒரு புல்நுனி பனித்துளியளவுக்கே. அதில் ஓர் மனுட உச்சத்திற்கான ஏக்கமும், அதை எய்த முடியாதென்ற உணர்வில் உருவான சலிப்பும் உள்ளது. அந்த உச்சம் மானுட உறவொன்று தன் இயல்பான நிலையில் பேரழகும் கனிவும் கொள்கையில் நிகழ்வதென்று குமரகுருபரன் உருவகிக்கிறார். அறிந்த ஒன்று அடையப்படவே இயலாது என்ற நிலையில் சலிப்பை ஆற்றும் பொழுதுகளாக மதுவின் களியாட்டத்தை முன் வைக்கிறார். ஆற்றாமையும், மதுவும், அமுதும், அது திரிந்த நஞ்சும். அந்த மீச்சிறு துளி மிக விரிவாக எழுதப்பட்டிருக்க முடியாது அவ்வாறு விரித்திருந்தால் அது வெளிறி பொருள் இழந்திருக்கும் அது துளியாக செறிவு கொண்டிருப்பதனாலேயே ஒளியுடன் உள்ளது. முத்தென தோற்றமளிக்கிறது

பனித்துளியின் பொழுது சில நிமிடங்களாக இருக்கலாம். அது அத்தருணத்தில் தன்னுள் விண்ணைச் சூடியிருக்கிறது. பெருங்கடல்களைப்போல் முடிவின்மையை அதற்கு அந்த வானம் அளிக்கிறது. அதனூடாக அது அழிவற்ற நிரந்தரம் ஒன்றையும் அடைந்துள்ளது.

குமரகுருபரனின் கவிதைகள் எனக்கு பிறிதொரு உவமையாக மாறுகின்றன. நான் ஒரு முறை தேர்வு எழுதுவதற்காக சென்றமர்ந்த சாய்ந்த மேஜையில் ஒரே ஒரு மைத்துளி சொட்டியிருந்தது. அங்கு எனக்கு முன் அமர்ந்திருந்தவர் எவர்? அந்த ஒரே ஒரு மைத்துளி சொட்டி அங்கு பதிந்திருந்தது எதன் பொருட்டு? எழுத்தாக மாறியிருந்தால் எதை எழுதியிருக்கக்கூடிய மை அது? அந்த வயதில் அதை ஓர் அழகிய பெண்ணாக நான் கற்பனை செய்து கொண்டேன்.  மிக இனிய  ஒரு வரியை அவள் எழுதுவதாக விரித்துக் கொண்டேன். தமிழ்க் கவிதையின் பரப்பில் விழுந்த ஒருதுளி மை அது. எழுதியிருக்ககூடிய வரிகள் என்று விரியவும் செய்கின்றன.

ஒரு துளியென இங்கு நிகழ்ந்து அழிவின்மையை அடைந்து சென்ற கவிஞனினுக்கான அஞ்சலிகள் இத்தொகுப்பின் முன்னுரை ஆகுக.

ஜெயமோகன்

10.06.2024

முந்தைய கட்டுரைபட்டுக்கோட்டை பிரபாகர்
அடுத்த கட்டுரைஇன்று குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழா