- மானஸாவின் காலடியிலிருந்து…
- மழைப்பாடகர்கள்
- எஞ்சும் நிலங்கள்
- தெய்வத்தளிர்
- பெண்பேராற்றல்
- முகிலில் எழுதல்!
- எண்முக அருமணி
- வில்துணை வழிகள்
- அளித்துத் தீராதவன்
- படைக்கலமேந்திய மெய்ஞானம்
- காட்டின் இருள்
- முடிவிலி விரியும் மலர்
வெண்முரசு நாவல்கள் மறுபதிப்புகள் வரும்போது புதிய முன்னுரைகள் எழுத நேர்கையில் என்னை வந்து தொடும் விந்தை ஒன்று உண்டு. இப்போது அந்த நாவல்களில் இருந்து நெடுந்தூரம் விலகி வந்திருக்கிறேன். அந்நாவல்களின் மொழிநடைக்கும் இம்முன்னுரைகளின் மொழிநடைக்குமே பெரிய வேறுபாடு இருக்கிறது. பிறிதொருவர் எழுதிய முன்னுரையோ என எதிர்கால வாசகர்கள் ஐயம் கொள்ளவும் கூடும். இப்போது அந்நாவல்களின் உணர்வுகளின் அலைகளில் நான் இல்லை. அவை எழுத நேர்ந்த கணங்களின் கொந்தளிப்புகளைக்கூட மிக மெல்லிய நினைவாகவே தொட்டுக்கொள்ள இயல்கிறது. இன்று அவற்றை ஒரு வாசகனின் நிலையிலிருந்து பார்க்கிறேன். எவ்வகையிலோ அவற்றை எனக்கென மறுவரையறை செய்துகொள்ள முயல்கிறேன். அப்போது பல இடர்களும் பல புதுக்கண்டுபிடிப்புகளும் எனக்கு நிகழ்கின்றன. முன்னுரைகளில் அத்தகைய சில கண்டறிதல்கள் பதிவாகும்போது மீண்டும் வெண்முரசு நாட்களில் ஒரு சிறு சாரல் வந்து என்னை நனைத்துச் செல்வது போல உவகை உருவாகிறது.
நீர்க்கோலம் வெண்முரசு நாவல்களில் தனித்துவம் கொண்ட ஒன்று. எல்லா வெண்முரசு நாவல்களிலும் உளமயக்குத் தருணங்கள் உள்ளன. புலன்கள் மயங்கி பிறிதொன்றைக் கண்டடையும் புனைவுநிலைகள். அவை பல்வேறு கனவுகளாக இருக்கலாம். அல்லது உச்சகட்ட உணர்வுநிலைகளில் நிகழ்வனவாக இருக்கலாம். அகப்பயணத்தின் சில தருணங்களாக இருக்கலாம். அரிதாக உளமயக்கும் சில மூலிகைகளால் நிகழ்ந்ததாக இருக்கலாம். இப்புனைவில் அவற்றுக்கு மிகப்பெரிய இடமுண்டு ஏனெனில் மகாபாரதத்தில் உள்ள விந்தைப்புனைவு அம்சத்தை நான் தவறவிட விரும்பவில்லை. அவை ஓர் மனித உள்ளம் செல்லும் உச்சங்களையும் ஆழம் கண்டறியும் மெய்மைகளையும் சென்று தொடுவன. உலகம் முழுக்கவே மீபுனைவுகளிலேயே இலக்கியத்தின் உச்சம் நிகழ்ந்துள்ளது. அப்புள்ளிகளில் இருந்தே மதங்கள் தோன்றி, மெய்யியல்கள் கிளைத்து, மானுடன் அடுத்தகட்ட பயணத்தை நிகழ்த்தியுள்ளான். அப்பயணத்திலிருந்து மீண்டும் பேரிலக்கியங்கள் உருவாகியுள்ளன.
புனைவு, அன்றாட வாழ்வில் அதன் தர்க்கங்களுடன் நிகழ்வதென்பது வாசகனில் ஒரு நம்பிக்கையை உருவாக்குவதற்கு மட்டுமேயன்றி அதற்கப்பால் பெரிய மதிப்பு கொண்டதல்ல. அன்றாட வாழ்க்கையின் மெய்யான இடர்களைக்கூட அன்றாட வாழ்க்கைக்குள் வைத்து சரியாகப் புனைந்துகொள்ள முடியாதென்பதை நல்ல எழுத்தாளன் அறிந்திருப்பான். ஆகவே தூய யதார்த்தவாதத்தை எழுதுபவன் கூட பேரிலக்கியவாதியின் கனவுத்தருணங்களினூடாக, அல்லது மீறல் தருணங்களினூடாக , அல்லது மீபுனைவு தருணங்களினூடாக அந்த யதார்த்தவாதத்தை மீறிச் செல்லவும்; அங்கு சென்று சிலவற்றை தொட்டு அறிந்து கொண்டு வந்து சேர்க்கவும் முயன்றிருப்பான். தல்ஸ்தோய் சிறந்த உதாரணம்.
நான் வெண்முரசு நாவல்களை முழுக்க புராணக்கற்பனையாக அல்லது மீபுனைவாக நிறுத்த முயலவில்லை. இன்றைய வாசகனுக்கும் இனி வரவிருக்கும் வாசகனுக்கும் அவனுடைய நம்பகத்தன்மை குலையாமலிருக்கும் பொருட்டு புனைவின் அன்றாட தளத்தை யதார்த்தத்திலேயே நிலைநிறுத்த முயன்றேன். ஆகவே எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் மூல மகாபாரதத்தில் உள்ள மிகைபுனைவுத் தளங்களை எல்லாம் யதார்த்தத்தில் வைத்து விளக்கவும் முயன்றிருக்கிறேன். அவ்வாறன்றி மிகைபுனைவு களங்களை அவ்வாறே தக்கவைத்துக்கொண்டோ மேலெடுத்துக்கொண்டோ செல்லும் இடங்கள் எல்லாம் அவற்றினூடாக மெய்த்தரிசனமொன்று துலங்குவதாக இருக்கவேண்டும் என்று உளம் கொண்டேன். அர்ஜுனனின் பயணங்களோ, யுதிஷ்டிரனின் பயணங்களோ அவ்வாறு மிகை புனைவுக்குள் சென்று மீண்டது அதன் பொருட்டே. அவற்றில் மிக நீண்ட மெய்யியல் கனவு நிகழ்ந்திருக்கும் நாவல் இதுதான்.
இதை எழுதும்போது எவ்வாறு இந்த தளத்தை நான் அடைந்தேன் என்பதை நெடுங்காலத்துக்குப்பிறகு இன்று என்னிலிருந்து நினைவாக மீட்டுக்கொள்கிறேன். நான் என் இளமையில் ஒரு துறவியுடன் சென்று ஒளிரும் காடொன்றைப் பார்த்திருக்கிறேன். அவர் என்னிடம் முழுக்காடும் பொன்னொளி கொள்ளும் இடம் ஒன்று உள்ளது என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். என்னை அழைத்துச் செல்வதாக சொல்லளித்தார். நான் திரும்பத்திரும்ப அதைக்கேட்டு அவரைத் தூண்டவே என்னை அழைத்துச் சென்றார். ஆனால் நான் செல்லும்போது அந்தக்காடு அவ்வாறு முழுக்க ஒளி கொண்டிருக்கவில்லை. கங்கோத்ரி செல்லும் பாதையில் ஒரு தேவதாருக்காடு அது. பனி ஒளியில் சில மரங்களில் இளநீல ஒளிப்பூச்சொன்று இருப்பது போல் எனக்குத் தோன்றியது. அது பனியின் ஒளியா அன்றி வேறொன்றா என்று இன்றும் எனக்கு ஐயம்தான். ஆனால் அது அவர் தானாக ஒளிரும் மரம் என்று அழுத்திச் சொன்னார். பின்னர் அதைப்பற்றி ஆராய்ந்தபோது மரங்களின் மேல் உருவாகும் ஒரு தொற்றுயிரி (Fungus) அவ்வாறு ஒளிவிடும் என்று தெரிந்துகொண்டேன். மெய்யாகவே முற்றிலும் ஒரு காட்டை அவர் பார்த்திருக்க வாய்ப்புண்டு.
மீண்டும் பலகாலம் கழித்து ஊட்டியில் நித்யா குருகுலத்தில் இருக்கையில் அங்கே கிடைக்கும் மயக்கூட்டும் காளான்களைப் பற்றி அறிந்துகொண்டேன். அதை நுகரும்பொருட்டு ஒவ்வொரு முறையும் பெயரறியாத போதை அடிமைகள் அங்கு வருவதுண்டு அவர்களில் சிலர் வன்முறையில் ஈடுபடுவதும், காவல்துறை தலையிடும் அளவுக்கு நிலைமைகள் கைமிஞ்சி போவதும் உண்டு. ஆயினும் அவ்வாறு வருபவர்களைத் தடுக்கலாகாது என்ற கொள்கை குரு நித்யாவுக்கு இருந்தது. ஏனெனில் மேலோ கீழோ பொதுச் சமூகத்திலிருந்து புறம் நிற்பவருக்குரியது ஒரு குருகுலம் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. துறவிகள், ஞானிகள் போலவே குற்றவாளிகள், கைவிடப்பட்டவர்கள், உளம்பிறழ்ந்தவர்களும் அங்கு வரவேண்டும் என்று அவர் விரும்பினார். எப்போதும் அத்தகையோர் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அங்கு இருந்துகொண்டிருந்தனர். அவர்களிடம் இருந்து அந்தக்காளான்களைப் பற்றி தெரிந்துகொண்டேன். அவர்களில் ஒருவருடன் சென்று அந்தக்காளான்களை அவர் வாங்கி நுகர்ந்து தன் எல்லையைத் தானே கடந்து களிநடனமிட்டு விழுந்து பற்கள் உடைபட்டு குருதி வழியக்கிடப்பதையும் கண்டேன். அந்த இரு காடுகளும் என் உள்ளத்தில் ஒரு காடாயின. ஒளிரும் காடு உளம் பிறழச்செய்யும் காடு. அக்காட்டில் நிகழ்வது இப்புவியின் ஆழுள்ளத்தில் நிகழ்வது. இயற்கை தன்னுள் மறைத்து வைத்திருக்கும் ஒரு பித்து.
இந்நாவலின் இரண்டு பெரும் கதைப்போக்குகள் அத்தகைய ஒரு மாயவெளியில் இரு நிலைஆடிகள் என ஒன்றையொன்று காட்டி ஒரு முடிவிலியை உருவாக்குகின்றன. அதுதான் இப்போது இந்நாவலின் தனிச்சிறப்பென்றும், இவை அடைந்த உச்சமென்றும், வெண்முரசு நாவல்களில் மிக அரிதான ஒரு பகுதி என்றும் எண்ணத் தோன்றுகிறது. இந்நாவலின் மறுபதிப்பு வெளிவருகையில் அதை எழுதிய அந்த கைமீறிய நிலையை சொல் மட்டுமே துணை இருந்த அத்தனிமையை எண்ணிக்கொள்கிறேன். உறுதியாகத் திரும்பிவருவோம் என்று அறிந்தபின் நாம் செல்லும் பித்து போல இனிய பேரனுபவம் பிறிதொன்றில்லை. அது தவத்தோர் சென்றடையும் ஆழ்நிலைக்கு சற்றும் குறைந்ததுமல்ல.
இந்நாவலை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் இதன் முந்தைய பதிப்புகளை வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்திற்கும் என்னுடைய நன்றிகள்
ஜெ
27.05.2024
(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : [email protected]
Phone 9080283887)
‘நீர்க்கோலம்’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்
நீர்க்கோலம் – A Journey of Un-becoming