குருநித்யா ஆய்வரங்கு – ஒரு பதில்கடிதம்: கடலூர் சீனு

குரு நித்யா காவிய முகாம் பதிவு – ரம்யா

இனிய ஜெயம்

2024 நித்யவனம் காவிய முகாம் குறித்த நீலி இரம்யா அவர்களின் பதிவு கண்டேன். அதில் பஷீர் படைப்புலகம் சார்ந்த அமர்வு குறித்து என் மீது கீழ்கண்ட முறையில் விமர்சனம் வைத்திருந்தார்.

நாவல் அரங்கில் இரண்டாவதாக சீனு பஷீரின் சப்தங்கள் நாவல் பற்றி பேசினார். அது ஒட்டுமொத்தமாக பஷீரின் படைப்புகளை அறிமுகப்படுத்தும் விதமாக அமைந்தது. அந்த அமர்வில் உங்களை நோக்கியே கேள்விகளை அவர் கேட்டு கேள்விகளிலிருந்து தப்பித்துக் கொண்டார். தனக்கு வரும் கேள்விகளிலிருந்து தப்பித்துக் கொள்ள ஒரு நல்ல உத்தி இது 

காவிய முகாம் வந்த வாசகர்கள் அங்கே நிகழ்ந்ததை அறிவார்கள். காவிய முகாம் வராமல் இந்த பதிவு வழியே பஷீர் அமர்வு குறித்து வாசிக்கும் வெளி வாசகர்களுக்கு, ரம்யா எழுதிய மேற்கண்ட வரிகளை என் திராணி இன்மை என்றே அர்த்தம் கொள்வார்கள் என்பதால் இது சார்ந்து ஒரு சிறு விளக்கம் அளிக்கும் நிலையில் இந்த எதிர்வினையை எழுதுகிறேன்.

காவிய முகாம் அமர்வில் வாசகர்கள் வாசித்து வர வேண்டிய சிலபஸ் அமைப்பதில் எப்போதும் இரண்டு சிக்கல் எழும் முதலாவது, வாசிக்கத் தேவையான கால அளவினை, அரங்குக்கு வாசித்து விட்டு வர வேண்டிய பிற படைப்புகளின் அளவினை கருத்தில் கொள்ளாது ஹெவி சிலபஸ் அளிப்பது. உதாரணமாக சில ஆண்டுகள் முன்பு தாஸ்தாவ்ஸ்கி அமர்வுக்கு  ஒரு வாசகர் கரமசோவ் சகோதரர்கள் இரண்டு வெர்ஷன்களை வாசித்து விட்டு வர சொன்னார். நாவல் அளவு 1500 பக்கம். இரண்டாவது, காவிய அரங்கு நிகழும் நாளுக்கு அதில் பங்கேற்போர் 2 வாரம் முன்பாக வாசகருக்கு வாசிக்க வேண்டியவற்றை அளிக்க தவறி இறுதி நேரத்தில் அவற்றை அளிப்பது.

நான் இந்த இரண்டையும் தவிர்க்கும் விதமாக காவிய முகாம் நாளுக்கு சரியாக 2 வாரம் முன்னரே, சப்தங்கள் நாவலை அடிப்படையாக கொண்டு பஷீர் படைப்புலகை அணுகும் அரங்கு என்பதை பங்கேற்பவர்களுக்கு தெரிவித்து விட்டேன். நாவல் கையில் இல்லா விட்டாலும் ஆர்டர் போட்டால் 4 நாளில் கைக்கு வந்து விடும். நாவல் 90 பக்கங்களுக்கும் குறைவு. அமர்ந்தால் ஒரு மணி நேரத்தில் வாசித்து முடித்துவிட முடியும்.

அடுத்த நிலையில் முந்தய வகுப்புகள் வழியே கற்றபடிக்கு, அமர்வுவுக்கு முன்பாக அரங்குக்கு வெளியே பொது உரையாடலில் எப்படி வாசித்திருக்கிறார்கள் என்னென்ன கேள்விகள் எழும் என்பதையும், உரையாடல் முடிந்த பின்னர் அரங்க அமர்வுக்கு வெளியே பேசியவை முழுமையாக சரியாக போய் சேர்ந்திருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வேன்.

அந்த வகையில் இந்த பஷீர் அமர்வுக்கு வந்த வாசகர்கள் மூன்று நிலையில் இருந்தார்கள். முதல் நிலை முன்பே வாசித்தவர்கள். இரண்டாம் நிலை இந்த அமர்வுக்காக வாசித்து விட்டு வந்தவர்கள். மூன்றாம் நிலை இந்த அமர்வுக்கு பிறகு பஷீர் உலகுக்குள் நுழையலாம் என்ற முடிவில் இருப்பவர்கள். (ரம்யா மூன்றாவது நிலையில் இருந்தார்). இந்த மூன்று நிலையினருக்கும்  எனக்கு அளிக்கப்பட்ட 20 நிமிடத்துக்குள்ளும், கேள்வி பதிலுக்கு அளிக்க பட்ட 40 நிமிடத்துக்குள்ளும் வைத்து பஷீர் குறித்த முழுமை நோக்கை அளித்து விட வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். அதை நோக்கி என்னுடைய தீசிஸை கீழ்கண்ட கான்செப்ட்கள் வழியே முன்வைத்தேன்.

சப்தங்கள் நாவலை முன்வைத்து பஷீர் உலகை மறு வாசிப்பு செய்த காரணம்.

மறு வாசிப்பு நிலையில் கண்ட இடர்.

படைப்பாளி கொண்ட படைப்பு தொழில் வழியே உள்முகமாக அவருக்குள் நிகழும் பிராஸஸ்.

பஷீரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது தனிப்பட்ட குணநலன்கள்.

பஷீரின் படைப்புகளில் வடிவம், உள்ளுறை வாழ்வு, மனிதர்கள், மொழி எவ்விதமானது

பஷீர் படைப்புகள் வழியே கேரள சமூகம் தங்கள் சாரமாக பிரதிபலித்து பார்த்து கொண்ட விஷயங்கள்.

கால வரிசைப்படி பஷீர் ஆக்கங்களை அமைக்கையில் அதில் சப்தங்கள் கதை அமையும் இடம்.

சப்தங்கள் நாவல் சித்தரித்து காட்டும் உலக பொது பகைபுலம். எந்த காலத்துக்குமான அடிப்படை கேள்விகள். நாவல் சென்று தொடும் மானுட இருளின் ஆழம்.

பஷீர் படைப்புகளின் ஒளியை இந்த இருள் எவ்விதம் சமன் செய்கிறது.

பஷீர் படைப்புகளின் இருளும் ஒளியும் அதன் வளர்ச்சி நிலையில் தமிழில் எவ்விதம் வெளிப்படுகிறது.

இந்த இருளையும் ஒளியையும் அஜிதன் எழுதிய மருபூமி ஆக்கம் எவ்விதம் ஒரு பாலம் போல நின்று இணைத்து காட்டுகிறது.

பஷீர் ஆக்கங்களை தனித்துவம் கொள்ள வைக்கும் அதில் உள்ள சூஃப்பி தன்மை.

இதையே எனக்கான இருபது நிமிடத்தில் முன்வைத்தேன்இந்த தீஸிஸை முழுமை செய்யும் ஆண்ட்டி தீஸிஸ் என்பது வாசகர்கள் தங்கள் கேள்விகளை ஜெயமோகன் வசம் கேட்பது வழியாகவே சாத்தியம் என்பதை கேரள இலக்கிய வாசிப்பு சூழலுடன் இரண்டற கலந்த உங்கள் வழியாகவே சாத்தியம் என்பதை அரங்கில் இருந்த அனைவருமே அறிவர். அவர்களின் பிரதிநிதியாக நின்றே நான் உங்கள் வசம் கேள்விகளை கேட்டேனே அன்றி ரம்யா குறிப்பிடுவது போன்ற நிலையில் அல்ல.

எனது தீஸிஸ் முன்வைத்த கான்செப்ட்களை நீங்கள் கீழ் கண்ட வரிசையில் எதிர் கொண்டீர்கள்

பஷீரை அறிய அவரது வாழ்க்கை வரலாறு முக்கியம்தான், ஆனால் அந்த வரலாறு என்பது அவர் சொன்னது. அது உண்மை வரலாறா அல்லது பஷீர் சொல்லும் கதைகளில் ஒன்றா என்று அறிய வழி இல்லை.

எந்த எழுத்தாளரும் எதை தனது ஆக்கமாக முன் வைக்கிறார் எதை பின்னிழுத்து கொள்கிறார் என்பதை வாசகர் கணக்கில் கொள்ள வேண்டும். அந்த வகையில் பஷீர் அழித்து விட விரும்பிய கதைகளில் ஒன்றே சப்தங்கள். என்று சொல்லி அவரது இருள் கதைகளில் முக்கியமான இன்னொரு கதையை சொன்னீர்கள்.

பஷீர் கைக்கு மீறி அவரது பார்க்கவி நிலையம் திரைகதை, காதல் கடிதங்கள் எவ்விதம் வெளியானது என்று சொன்னீர்கள்.

பஷீர் உலகின் நகைச்சுவைக்கும், வினோத ரஸ பாத்திரங்களுக்கும் தொடர்ச்சியாக அமைந்த இரண்டு மலையாள எழுத்தாளர்களை குறிப்பிட்டீர்கள்.

இன்று பஷீர் கதைகளில் எந்தெந்த விஷயங்கள் முற்றிலும் அவுட் டேட் என்பதையும் அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டீர்கள்.

பஷீர் படைப்புலகம் சார்ந்து முக்கியமான எதிர் விமர்சகர் யார் (அவரது பைபிள் ஆய்வு உங்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொண்டது என்பதையும்) பஷீர் உலகின் நெகட்டிவ் அம்சங்கள் குறித்து அதில் உள்ள முக்கியத்துவம் குறித்து இன்று விமர்சன மதிப்பீட்டு சூழலை உருவாக்குபவர் யார்  என்பதையும் குறிப்பிட்டீர்கள்.

இன்றைய சூழலில் கேரளத்தில் அடிப்படைவாத புழுதிக்குள் பஷீர் புதைக்கப்பட்டு இளம் வாசகர்கள் அவரை அணுக அது தடையாக இருப்பதையும், இவற்றை உதறி பஷீர் படைப்புகள் அவை கொண்ட தனித்துவம் வழியே மீண்டும் உயிர்த்தெழும் என்ற உங்கள் நம்பிக்கையையும் தெரிவிக்கஅரங்குக்கு ஒதுக்கப்படியிருந்த ஒரு மணி நேரத்துக்குள் நான் வைத்த தீதிஸ் நீங்கள் வைத்த ஆன்டி தீஸிஸ் வழியே பஷீர் உலகம் குறித்த அடிப்படையான முழுமைப் பார்வையை எட்ட முடிந்தது.

அரங்கின் நோக்கு முழுமையாகவே நிறைவேறியது, வாசகருக்கு அது சரியாகவே சென்று சேர்ந்தது என்பதை அரங்குக்கு பிறகான வாசகர்கள், எழுத்தாளர்கள் அஜிதன், அகர முதல்வன் போன்றோர்கள் அளித்த எதிர்வினைகள் வழியே அறிந்தேன்.

நன்றி.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைகாதலும் யதார்த்தவாதமும்
அடுத்த கட்டுரைகிறிஸ்தவ இலக்கிய சங்கம்