இருத்தலிடங்கள்

சின்னஞ்சிறு வெளி

இன்றைய மலர்

லோகிததாஸ் ஒருமுறை பேசும்போது சொன்னார். “அமர்வதற்கான இடங்கள் எனக்கு என்றைக்குமே பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்றன. நான் காரில் செல்லும்போது அமர்வதற்கு உகந்த ஓர் இடத்தைப் பார்த்தால் உடனே நிறுத்தச் சொல்லி சற்றுநேரம் அமர்ந்துவிட்டுச் செல்வேன். வீடு கட்டும்போது நான் பொறியாளரிடம் சொன்னது ஒன்றே ஒன்றுதான், வீட்டில் அமர்வதற்கு நிறைய இடம் வேண்டும்”

லோகியின் வீடு அத்தகையதுதான். ஏராளமான திண்ணைகள், இடைநாழிகள், விதவிதமான நாற்காலிகளை வாங்கிப் போட்டிருந்தார். ஓர் அறையில் தரையிலமர்வதற்கான மெத்தையும் திண்டுகளும் போட்டிருந்தார்.

லோகி சொன்னதை நான் நித்யாவிடம் சொன்னபோது அவர் சிரித்து “அதே மனநிலைதான் எனக்கும். நான் எங்கெல்லாம் வாழ்ந்திருக்கிறேனோ அங்கெல்லாம் விதவிதமான இருக்கைகளை உருவாக்கியிருக்கிறேன். இங்கே குருகுலத்தில்கூட சிமிண்டிலும் கல்லிலும் பல இருக்கைகள் உள்ளன. ஓர் இருக்கையில் இருந்து இன்னொன்றுக்குச் செல்வது எனக்கு பொழுதுமாற்றம், உளநிலை மாற்றம்” என்றார்.

“அமர்விடங்கள் நிம்மதியை குறிக்கின்றன. விடுபட்ட நிலையை குறிக்கின்றன. இந்த உலகம் ஓடிக்கொண்டிருக்கிறது, அமர்ந்திருப்பவன் அதிலிருந்து விடுபட்டவன். அவனுக்கு நேற்றும் நாளையும் இல்லை. இன்று மட்டுமே உள்ளது. அமர்ந்து மட்டுமே கற்க முடியும்.பாடமுடியும், வரையமுடியும், தியானிக்க முடியும். அமர்ந்திருக்க கற்றவர்களால் உருவாக்கப்பட்டது இந்த உலகம்” என்றார் நித்யா.

நானும் இருக்கைகள் மேல் பெரும் பிரியம் கொண்டவன். எனக்கே உரிய இருக்கைகள் பல. நான் தங்கும் மலைத்தங்குமிடத்தில் ஏராளமான கல்பெஞ்சுகள் பல்வேறு இடங்களில் உள்ளன. மரங்களுக்கு அடியில், திறந்த வெளியில். அமர்ந்திருப்பதற்கே உரிய பாறை இருக்கை ஒன்று உண்டு. நான் தங்கும் விடுதிகளிலும் எனக்குப் பிரியமான இருக்கைகள் உண்டு.

என் வீட்டிலும் வெவ்வேறு இருக்கைகளை உருவாக்கி வைத்திருக்கிறேன். எழுத, படிக்க, கனவுகாண எல்லாவற்றுக்கும் வெவ்வேறு இருக்கைகள். மதியவெயில் கொளுத்துகையில் உணவுக்குப்பின் நன்றாகக் காற்றுவீசும் ஒரு வாசலருகே அமர்ந்து வெயிலைப் பார்த்தபடி இருக்கையில் வாழ்க்கை அசாதாரணமான ஓர் இனிமை கொண்டதாகத் தோன்றுகிறது. இருத்தல் அன்றி வேறேதும் இங்கே பெரியதல்ல என்று எண்ணமுடிகிறது

நமக்கிருக்கும் வார்த்தைகளும் அழகியவை. அமர்தலுக்கும் இங்கே உயிர்கொண்டிருத்தலுக்கும் ஒரே சொல்தான் – இருத்தல். தமிழில் நாம் சென்றுகொண்டே இருக்க முடியும். செய்துகொண்டே இருக்க முடியும். வாழ்ந்துகொண்டே இருக்கமுடியும். இரு என்னும் விகுதி அழகியது, சிறந்தது என்றபொருளும் கொண்டது. ‘இருந்தமிழே உன்னால் இருந்தேன்!’

அமர்தலும் நல்ல சொல்லே. அமை என்பது அதன் வேர்ச்சொல். அமைதல் என்பது ஒத்திசைதல். ஒன்றாதல். அலைவுக்கு நேர் எதிர்ச்சொல் அது. அதிலிருந்தே அமைதி என்னும் சொல் வந்தது. அமைதி என்றால் நம் பேச்சுவழக்கில் நிம்மதி, பரபரப்பின்மை, ஓசையின்மை. இலக்கியப்பொருளில் இசைந்திருத்தலே அமைதி. காவிய அமைதி என்றால் காவியகுணங்களின் ஒத்திசைவு.

என் மொட்டைமாடியில் புதிய ஓர் இடம் அமைந்தது. கீழே நின்றிருக்கும் மஞ்சள்கொன்றை, கொய்யா, வேம்பு மூன்றும் மொட்டைமாடியில் தழைந்திருக்கும். அண்மையில் கடும்கோடையில் பிற இரண்டும் சற்றே சுணங்க, கோடையில் தழைக்கும் வேம்பு அவற்றை வென்று கவிந்துவிட்டது. அங்கே அழகிய பசுநிழல்குடை. அதன்கீழே ஒரு நாற்காலியைப் போட்டேன். அழகிய ஓரிடம். மதியவெயிலில்கூட குளிர்ந்தது.

அங்கே அமர்ந்து சும்மா வேடிக்கைதான் பார்க்கவேண்டும் என முடிவுசெய்தேன். வேடிக்கைபார்ப்பது என்றால் காமிக்ஸ் படிப்பதும்கூடத்தான்.

ஓர் இடம், கடிதம்

அடவியும் அறைகளும் 

அந்த அறை

புதிய வாசிப்பறை 2009

முந்தைய கட்டுரைகே.டி.பால்
அடுத்த கட்டுரைDoes Hinduism worship cows and trees?