குமரகுருபரன்: பாந்தியன் சாலை நினைவுகள்:செல்வ புவியரசன்

பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணியாற்றும்போது எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான சிக்கல் என்னவென்றால் பக்கங்களை இறுதிசெய்யும்போது அந்தப் பக்கங்களுக்குப் பொறுப்பேற்றிருக்கும் மூத்த இதழாளர்கள் கடைசி நேரத்தில் அவற்றை மாற்றச் சொல்வதுதான். சில சமயங்களில், உள்ளடக்கம் அவர்களுக்குத் திருப்தியளிக்காமல் இருக்கலாம். அது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். மிகச் சில சமயங்களில் பத்திரிகையை நடத்தும் நிர்வாகத்துக்கு அது ஏற்றுக்கொள்ள முடியாததாய் இருக்கலாம். அதைத் தவிர்க்கவும் முடியாது. சில அரிதான சந்தர்ப்பங்களில் மூத்த இதழாளர் தன்னுடைய அதிகாரத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பாகவும் அதைக் கையாள்வது உண்டு. அத்தகைய சூழல்கள் வரும்போது புதிய உள்ளடக்கங்களுக்காகக் கடைசி நேரத்தில் படுத்தியெடுத்துவிடுவார்கள். புதிதாக ஒன்றை எழுதச் சொல்வார்கள். அப்போது இயன்றதையெல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து எழுதித்தான் ஆக வேண்டும். கடைசி கட்டத்தில் அதற்கு ஒப்புதலும் கிடைத்துவிடும். ஒரு சிலர் மட்டும் விதிவிலக்கானவர்கள்.

தினமலர் இணைப்பிதழ்ப் பிரிவில் பணியாற்றியபோது குமரகுருபரன் அந்த அணியின் ஒருங்கிணைப்பாளராகவும் ஆசியராகவும் இருந்தார். பக்கங்கள் திருப்தியாக இல்லாதபட்சத்தில் எழுதுவதற்காகப் பயன்படுத்தும் நியூஸ் ப்ரிண்ட் தாள்களை எடுத்துவரச் சொல்லி அங்கேயே உட்கார்ந்து முழு உள்ளடக்கத்தையும் எழுதிக்கொடுத்துப் போய்விடுவார். அடித்தல் திருத்தல் இல்லாத தெளிவான கையெழுத்து அவருடையது. வாசிப்புக்குச் சுவையான நடை. புதிய தகவல்கள். பொருத்தமான மேற்கோள்கள். இதழாசிரியர் என்பவர் ஓர் உள்ளடக்கம் தேவை என்கிறபோது எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் உடனடியாக அதை அளிப்பதற்குத் தகுதியுள்ளவராக இருக்க வேண்டும் என்பதை அனுபவபூர்வமாக நான் உணர்ந்துகொண்டது அவரின் வழியாகத்தான். முன்தயாரிப்புகள் எவையுன்றி எந்தச் சூழலிலும் எழுத முடியும் என்பதற்கான அர்த்தம், எப்போதும் அதற்குத் தன்னைத் தயாராக வைத்திருப்பதுதான்.

அடிப்படையில் அவர் கால்நடை மருத்துவர். அடுத்து நான் குமுதம் குழுமத்தில் பணியாற்றியபோது கவிஞர் வசந்த் செந்தில் என் ஆசிரியராக இருந்தார். அவர் மருத்துவர். அதன் பின்பு புதிய தலைமுறைக் குழுமத்தில் பணியாற்றியபோது மொழிபெயர்ப்பாளர் ந.கல்யாணராமனும் கரு.ஆறுமுகத்தமிழனும் என்னுடைய துறைத் தலைவர்களாக இருந்தார்கள். இவர்கள் எல்லோருமே எழுத்துக்காகக் காத்திருப்பவர்கள் இல்லை. குறுகிய அவகாசத்தில் செறிவாக எழுதக்கூடியவர்கள். சிறந்த தலைமைத்துவம் கொண்டவர்கள். இவர்கள் யாரும் முழுநேர இதழாளர்கள் இல்லை. எனக்குப் பணியாற்றும் வாய்ப்புகளை அவர்கள் வழங்கியதும் அதனால்தானோ என்று நினைக்கிறேன்.

என் வாழ்வில் முதல் நேர்காணல் தினமலர் அலுவலகத்தில்தான். இணைப்பிதழ்ப் பிரிவில் பயிற்சி நிலைச் செய்தியாளர் பணி. அப்போது நான் சட்டப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மாணவன். அறைத் தோழரும் எழுத்தாளருமான வேட்டை பெருமாள், எழும்பூர் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று என்னை அறிமுகம் செய்துவைத்தார். குமரகுருபரன் சார்தான் நேர்காணல் நடத்தினார். கடைசியாகப் பார்த்த படம் என்று முதல் கேள்வி.

அப்போது ராயப்பேட்டை சத்யம் சினிமாவில் ப்யூர் சினிமா என்று ஒரு திரையிடல் வரிசையைத் தொடங்கியிருந்தார்கள். முதலாவது படம், ஹோட்டல் ருவாண்டா. சில நாள்களுக்கு முன்புதான் அந்தப் படத்தைப் பார்த்திருந்தேன். அதைச் சொன்னதும் பேச்சு படத்தைக் குறித்து நகர்ந்தது. கடைசியில், எழுத்துத் தேர்வுக்காக ஒரு பேட்டிக்கான கேள்விகளைத் தயாரிக்கச் சொன்னார். இயக்குநர் சேரனை நேர்காணல் எடுக்க வேண்டும் என்றால் என்ன கேள்விகளோடு செல்வீர்கள் என்பதுதான் எனக்கான எழுத்துத் தேர்வு. சில கேள்விகளை எழுதிக்கொடுத்தேன். சொல்ல மறந்த கதையில் தங்கர் பச்சான் உங்களைக் கதைநாயகனாக்கினார், நீங்கள் அவரைக் கதைநாயகனாக்குவீர்களா என்று ஒரு கேள்வியையும் அதில் எழுதிக்கொடுத்தேன். மற்ற கேள்விகள் எவையும் இப்போது நினைவில் இல்லை.

நாளேடுகள், வார, மாத இதழ்கள், இணையம், தொலைக்காட்சி, சிற்றிதழ்கள் என ஏறக்குறைய 16 ஆண்டுகள் (2006-2022) நான் முழுநேரமாகவும் வெளியிலிருந்தும் பணிபுரிந்துள்ளேன். என்னைச் செதுக்கியதில் பத்திரிகை அலுவலக அனுபவங்களுக்கும் கணிசமான பங்கு உண்டு. முதன்முதலாக, தினமலர் இணைப்பிதழ்ப் பிரிவில் பயிற்சி செய்தியாளராகப் பணிபுரிந்த நிலையில் என் படிப்பு தடைபடாதவாறு மதிய வகுப்புகளுக்குச் செல்வதற்கு நிர்வாக அனுமதியை வாங்கித்தந்தார் குமரன் சார். எழும்பூர் தினமலர் அலுவலகத்தின் நிர்வாகியான கோபால்ஜி அவர்கள் வழக்கறிஞர் என்பதால் அவர் படித்த சட்ட நூல்கள் சிலவற்றை எனக்குக் கொடுத்து ஊக்கப்படுத்தினார். இருபது வயதுகளின் தொடக்கத்தில் தலைவர்களையும் திரைநட்சத்திரங்களையும் சந்தித்து உரையாடும் வாய்ப்புகள் பலவற்றை உருவாக்கிக்கொடுத்தது அந்த அலுவலகம். குமரன் சாரின் நம்பிக்கையும் ஊக்குவிப்பும் பரிந்துரைகளும்தான் அதற்குக் காரணம்.

பத்திரிகை அலுவலகத்தில் நுழைகிறபோது அவர் கையில் அந்த வாரத்தில் வெளியான ஆங்கில முன்னணி வார இதழ்கள் இருக்கும், இலக்கிய நூல்கள் இருக்கும். கூடவே, கிங்ஸ் பாக்கெட் ஒன்றும். ஆனால், பேனா மட்டும் எடுத்துவர மாட்டார். நியூஸ் பிரிண்ட் தாள்களை எடுத்துவரச் சொல்லி எழுதி முடித்துப்போகும்போது அந்தப் பேனா நமக்குத் திரும்பி வராது. படிப்பை முடிப்பதற்காக நான் விடுப்பெடுத்து பிறகு அந்தப் பணியிலிருந்தே விலகியும் விட்டேன். ஆனாலும், ப்ரீலேன்ஸ் எழுத்தாளராக என்னைத் தொடர்ந்து எழுதவைத்ததோடு மட்டுமின்றி, அந்தந்த மாதம் எழுதிய உள்ளடக்கங்களுக்கு அந்த மாத இறுதியிலேயே மொத்தமாக சன்மானம் கிடைக்கவும் ஏற்பாடு செய்தார் குமரன் சார். ஒரு ப்ரீலேன்ஸ் எழுத்தாளராகத் தமிழில் ஒருசில வாரங்களுக்குக்கூட ஜீவிக்க முடியாது என்ற நிலை இன்னும் தொடரத்தான் செய்கிறது. அது குறித்து யோசிக்கும் வேளைகளில், குமரன் சாரின் அன்பும் அக்கறையும் என்னை இன்றும் நெகிழவே வைக்கிறது.

பத்திரிகைகளில் எழுதுவது எனக்குப் பள்ளிக் காலத்திலிருந்து தொடரும் விருப்பம். அப்பா தமிழாசிரியராக இருந்தார் என்பதால் தடைகளும் பெரிதாக எதுவுமில்லை. குமரன் சாரும் கல்லூரிக் காலத்திலிருந்தே எழுதத் தொடங்கியவர். கல்லூரி நண்பர்கள் தொடங்கிய பத்திரிகைகளில் எழுதத் தொடங்கி, படிப்பு முடிந்தவுடனே பிரபல வார இதழ்களில் இணைந்து பணியாற்றியவர். பிரபல நாளேட்டின் இணைப்பிதழ்ப் பிரிவுகளின் ஒருங்கிணைப்பாளராக இருந்தபோதும், அவர் அந்தப் பணிக்காக அங்கு சேரவில்லை. தொலைக்காட்சி ஒன்று தொடங்குவதற்கான ஏற்பாட்டில்தான் அவர் பங்கெடுத்துவந்தார். அந்தப் பணிகள் தாமதமாகிக்கொண்டே இருக்க, இடைப்பட்ட காலத்தில் அச்சு ஊடகத்திலும் தொடர்ந்தார். அவருடைய பிரதான விருப்பம் என்பது காட்சி ஊடகமும் குறிப்பாக சினிமாவும்தான்.

சினிமா குறித்து அவர் எழுதிய கட்டுரைகளை ‘இன்னொருவனின் கனவு’ என்ற தலைப்பில் நூலாக அந்திமழை வெளியிட்டுள்ளது. அந்தப் புத்தகத்திற்கு ஜெயமோகனின் முன்னுரை வேண்டும் என்று அவர் விரும்புவதாக ’அந்திமழை’ அசோகன் சார் சொன்னார். அது ஒரு டிசம்பர் மாத இறுதி. ஜனவரி முதல் வாரத்தில் சென்னை புத்தகக்காட்சியையொட்டி புத்தகம் வெளிவந்தாக வேண்டும். ஜெயமோகன், மகாபாரத நாவல் வரிசையை எழுதத் தொடங்கியிருந்த நேரம் என்பதால் அலைபேசியை அணைத்துவைத்திருந்தார். கோவை அரங்கசாமியைத் தொடர்புகொண்டு தகவலைச் சொல்லி ஜெயமோகனுக்குத் தனியாக மின்னஞ்சல் ஒன்றும் அனுப்பிவைத்தேன். நீங்கள் சொல்லி மறுப்பேனா என்ற பதிலோடு அடுத்த சில நாள்களில் முன்னுரையை அனுப்பிவைத்தார். முக்கியமானதொரு நேரத்தில் என்னுடைய இதழியல் வழிகாட்டி ஒருவருக்கு உதவ முடிந்ததில் மனநிறைவு பிறக்கிறது. அடுத்த சில மாதங்களில் அதே பாந்தியன் சாலையில் அருங்காட்சியக அரங்கில் நற்றிணை சார்பில் புத்தக வெளியீட்டு விழா. ஜெயமோகனும் குமரகுருபனும் நெருக்கமாகியிருந்தார்கள். செயலூக்கம் கொண்ட இருவரின் நட்புறவு.

ஜெயமோகனுடைய நண்பர்கள் குழாம், குமரகுருபரனின் நினைவாக ஆண்டுதோறும் இளங்கவிஞர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து விருதளித்துப் பாராட்டிவருகிறது. தமிழில் இளங்கவிஞர்களைக் கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டிய தேவை இருப்பதால் இப்படியொரு முடிவை எடுத்திருக்க வேண்டும். இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருந்தாலும் குமரகுருபரனுடைய விருப்பமும் தேர்வும் கவிஞராக இருப்பதோ, அவ்வாறு அறியப்படுவதோ அல்ல. அவர் எழுதிய கவிதைகளைவிடவும் அருமையான சொற்றொடர்களைத் தனது பத்திரிகைக் கட்டுரைகளில் நிறைய எழுதியிருக்கிறார். சற்றே மனம் சோர்ந்த நிலையில் அவர் தன்னை உற்சாகப்படுத்திக்கொள்ள ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் கவிதைகளாக எழுதிக்குவித்தார் என்றே நான் நினைக்கிறேன்.

முதலில் அவருடைய கவிதைகள் ‘உயிர்மை’ இதழின் இணையதளத்தில் வெளிவந்ததாக நினைவு. அவரது பெயருக்கு முன்னால் டாக்டர் என்ற அடைமொழியுடன். தமிழ்ப் பேராசிரியர் யாரோ ஒருவர் எழுதியிருப்பதாக நினைத்துவிடப்போகிறார்கள் என்று நான் அவரைக் கேலிசெய்தேன். அது தோழி அனுப்பிவைத்தது என்று உண்மையைச் சொன்னார். வெவ்வேறு பெயர்களில் ஒரே நேரத்தில் பல தொடர்களைத் தொடங்குவது அவரது வழக்கம். முதல் இரு வாரங்களுக்கு ஒரே மூச்சில் எழுதியும் தருவார். அடுத்த சில வாரங்களில் அந்தத் தொடர்கள் எந்த அறிவிப்பும் இல்லாமல் நின்றுவிடும். அவரது கவிதை முயற்சிகளும் அப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கக்கூடும். குமரன் சாரின் நினைவைப் போற்ற வேண்டுமெனில் அச்சு, காட்சி ஊடகங்களில் பணியாற்றும் நம்பிக்கைக்குரிய இளம் ஆளுமைகளைக் கண்டறிந்து ஊக்குவிப்பது பொருத்தமாக இருக்கும். அதற்காக, அவர் கவிஞர் என்பதை மறுத்துவிட முடியாது.

முந்தைய கட்டுரைகுருகு, 14
அடுத்த கட்டுரைதிருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்