தமிழ்விக்கி,தகவல்களின் உரிமை

 

அன்புள்ள ஜெ,

அசல் இது, தமிழ் விக்கி. பக்கத்தொடக்கம் – மே, 2022

சக்ரவர்த்தினி (தமிழ் விக்கி)

நகல் பக்கம். தமிழ் விக்கிப்பீடியா டிசம்பர், 2023

சக்ரவர்த்தினி (தமிழ் விக்கிபீடியா)

இதுபோன்ற பல பக்கங்கள் உள்ளன.

எம்

அன்புள்ள எம்

இந்த களத்தில் இருபத்தைந்தாண்டுகளாக ஆய்வு செய்பவர் எழுதியது மூலக்கட்டுரை.  தமிழ்ப்பண்பாட்டின் இந்த குறிப்பிட்ட பகுதி சார்ந்து அடிப்படையான செய்திகளை முன்வைக்கும் ஆய்வுத்தகுதி கொண்ட ஓரிருவரில் ஒருவர் அவர். அதையறிந்தே  அவரை இப்பணிக்கு அழைத்து வந்தோம். அவர் பங்களிப்பு மிகமிக முக்கியமானது. அவருக்கு தமிழ் விக்கி கடன்பட்டுள்ளது

தமிழ் விக்கியில் இருந்து பதிவுகள் பல விக்கிப்பீடியாவில் நகல் செய்யப்பட்டுள்ளன.  பிற தளங்களிலும் நாளிதழ்கட்டுரைகளிலும் எடுத்தாளப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழ்விக்கியில் பங்களிப்பாற்றும் ஒருவர் மனக்குறைப்பட ஏதுமில்லை. இது பொது இணையக் கலைக்களஞ்சியம். இதில் எழுதும் எவருடைய பங்களிப்புக்கும் தனிப்பட்ட ஆசிரியர் அடையாளம் அளிக்கப்படுவதில்லை. அவர் தன் ஆய்வை பொதுக்களத்துக்கு விட்டுக்கொடுக்கிறார். அது ஒரு பொதுச்சேவை என நினைத்து, அறிவியக்கத்துக்கான தன் பங்களிப்பு எனக் கருதி அதைச் செய்யவேண்டியதுதான்.

தமிழ் விக்கியின் பதிவுகளை எழுதுபவர்கள் சிறந்த வாசகர்கள், ஆய்வாளர்கள். அனைவரையுமே எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும். அவர்கள் உருவாக்கும் பதிவுகளை அந்தந்த துறைகளில் தேர்ச்சிகொண்ட அறிஞர்கள் முறையாக சோதித்துச் செம்மை செய்து அதன்பின்னரே அவை பொதுப்பார்வைக்குச் செல்கின்றன. அதன்பின் அவற்றை அந்த  செம்மை செய்த அறிஞர்களின் ஏற்பின்றி எவரும் திருத்த முடியாது.

மாறாக தமிழ் விக்கிபீடியாவில் பொதுமக்கள் எவரும் எதையும் பதிவிடலாம். எவரும் திருத்தலாம். எவரும் அதை மேற்பார்வையுமிடலாம். பொதுவாக அங்கே பதிவிடுபவர்கள் மேல் எவருக்கும் எந்தக் கட்டுப்பாடுமில்லை. அது சாத்தியமும் இல்லை. ஆகவே வம்புகள், அவதூறுகள்கூட தமிழ்விக்கிப்பீடியாவில் இடம்பெற்றுவிடுகின்றன. பெரும்பாலான பதிவுகளில் அவரவரே போட்டுக்கொள்ளும் மிகைச் சொற்றொடர்களே நிறைந்துள்ளன.

மொத்த விக்கிப்பீடியாவுக்கும் ஒட்டுமொத்தமாக ஓர் அளவுகோல் இல்லை. இருக்க முடியாது. ஏனென்றால் அதற்கென ஓர் பொது ஆசிரியர்குழு இல்லை. ஆகவே விக்கிப்பீடியா வழியாக ஒருவர் முக்கியமானவரா இல்லையா என கண்டுபிடிக்கவே முடியாது. பலசமயம் எந்த முக்கியத்துவமும் இல்லாதவர்களுக்குத்தான் மிக விரிவான, மிகமிக துதிவசனங்கள் கொண்ட பதிவுகள் இருக்கும். இதை ஒன்றும் செய்யமுடியாது, ஏனென்றால் விக்கிப்பீடியா சமூகத்தின் தன்னிச்சையான ஒரு வெளிப்பாடு. சமூகத்தில் என்ன உண்டோ அது அப்படியே விக்கிப்பீடியாவிலும் இருக்கும்.

அதேசமயம் ஒரு குழுவாகச் சிலர் செயல்பட்டு மொத்த விக்கிப்பீடியாவின்மேலும் ஆதிக்கம் செலுத்த முடியும். விக்கிப்பீடியாவில் ஒரு குழு எல்லா பெயர்களையும் தங்களுடைய குறுகலான, பழைமையான மொழிக்கொள்கைப்படி திருத்திக் கொண்டிருக்கிறது. அது விக்கிப்பீடியாவின் கொள்கை அல்ல. தமிழ்ச்சமூகம் கொண்டுள்ள பொதுவான வழக்கமும் அல்ல. அந்த மொழிக்கொள்கைக்கும் தமிழின் அறிவியக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது இங்கே வழக்கொழிந்துபோன ஒரு சிறு குழுவின் கொள்கை. அதைக்கூட சரியாக கற்காமல் தங்களுக்கு தோன்றியபடி செய்கிறார்கள்.

அவர்கள் பிறருடைய உழைப்பால் உருவாக்கப்படும் பதிவுகளை தங்கள் விருப்பப்படி திருத்த தொடங்கினர். பின்னர் பதிவுகளுக்குள் சென்று சொந்தக் கருத்துக்களையும் புகுத்தலாயினர். ஒரு கட்டத்தில் எவர் தேவையில்லை என முடிவெடுக்க ஆரம்பித்து பதிவுகளை அழிக்கவும் தொடங்கினர். அவர்களைப்போல  போல இன்னொரு குழு செயல்பட்டு அவர்கள் செய்வதை தொடர்ச்சியாக திருத்துவதை தவிர இந்த நாசவேலையைத் தடுக்க வேறு வழியே இல்லை. ஆனால் அது மாபெரும் வெட்டிவேலை. ஆகவேதான் தமிழ்விக்கி தொடங்கப்பட்டது.

ஒரு கலைக்களஞ்சியத்தில் உள்ள செய்திகள் என்பவை ‘புதியவை’ அல்ல. அந்த அறிவுச்சூழலில் ஏற்கனவே நிலைகொண்டுவிட்ட செய்திகளையே அது தொகுத்தளிக்கிறது. அப்படியென்றால் கலைக்களஞ்சியத்தின் பங்களிப்பு என்பது என்ன?

  • தகவல்களை அளிப்பதில் உள்ள ஒழுங்கமைப்பு, தகவல்கள் ஒரு குறிப்பிட்ட வகையில் தொகுத்து அளிக்கப்படவேண்டும். தமிழ் விக்கியில் அந்த முறைமை இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்
  • ஆளுமைகள், நிகழ்வுகள் மீதான கலைக்களஞ்சியத்தின் மதிப்பீடு ஒன்று இருக்கவேண்டும். சாண்டில்யன் பொதுவாசிப்புக்கான எழுத்தாளர் என்பது தமிழ்விக்கி ஆசிரியர்குழுவின் மதிப்பீடு. அப்படி ஒரு மதிப்பீடு இல்லையேல் ஒரு கலைக்களஞ்சியம் நடைமுறையில் பயனற்றதாக ஆகிவிடும். சாண்டில்யனுக்கும் சுந்தர ராமசாமிக்குமான வேறுபாடு என்ன என்பதை வாசகன் அப்படித்தான் உணர முடியும். க.ந.சு, எஸ்.வையாபுரிப்பிள்ளை அல்லது டி.எஸ்.சொக்கலிங்கம் அல்லது மு. அருணாசலம் போன்றவர்கள் மிகப்பெரிய பங்களிப்பாற்றிய முதன்மை ஆளுமைகள் என்பது கலைக்களஞ்சிய ஆசிரியர்களால் முடிவெடுக்கப்பட்டு முன்வைக்கப்படுவது. அவர்களைப் பற்றிய பதிவுக்கும் இன்னொரு பதிவுக்கும் அந்த வேறுபாடு உண்டு. அந்த மதிப்பீடு அப்பதிவில் இருக்கவேண்டும். அதற்காகவே ஆசிரியர்குழு உள்ளது

மேற்கண்ட இரண்டுமே தமிழ் விக்கிப்பீடியா போன்ற பொதுத்தளத்தில் இயல்வது அல்ல. அவர்கள் ஒரு முறைமையை முன்வைக்கிறார்கள். ஆனால் அதை பதிவு எழுதுபவர்கள் கடைப்பிடிப்பதில்லை. கடைப்பிடித்தாலும் பிறர் மாற்றிவிடுவார்கள். அவர்களுக்கென ஓர் அளவுகோல் இருக்கமுடியாது. ஏனென்றால் அறியப்பட்ட அறிஞர்கள் இல்லாமல் அந்த அளவுகோலை முன்வைக்க முடியாது.

கலைக்களஞ்சியம் எதுவாயினும் செய்திகள் அனைத்தையும் வெவ்வேறு நூல்களில் இருந்தே எடுத்துக் கொள்கிறது.அவற்றில் சில நெறிகளை அது கடைப்பிடிக்கவேண்டும்

  • தகவல்களுக்கு நம்பத்தக்க நூல்கள் எவை என்பதை பதிவு எழுதுபவர், சரிபார்க்கும் அறிஞர்கள் முடிவெடுக்கவேண்டும். தமிழில் நம்பத்தகாத நூல்களே மிகுதி
  • தகவல்கள் எங்கிருந்தெல்லாம் எடுக்கப்பட்டுள்ளனவோ அவை முழுக்க உசாத்துணையாக அளிக்கப்பட்டிருக்கவேண்டும்.

இவ்விரண்டையும் தமிழ்விக்கி மிகக்கறாராகவே கடைப்பிடிக்கிறது. வெறும் உசாத்துணையாக மட்டும் அளிப்பதில்லை, பலசமயம் அந்த தகவல்களை அளித்த நூலாசிரியர்களுக்கே தனிப்பதிவு போடப்பட்டிருக்கும். உதாரணமாக, தமிழ்விக்கியின் ஆளுமை சார்ந்த பதிவுகள் சாகித்ய அக்காதமி வெளியிட்டிருக்கும் வாழ்க்கைவரலாற்று நூல்களைச் சார்ந்து எழுதப்படுபவை. அப்பதிவிலேயே அந்த நூலின் படமும் இருக்கும். திரு.வி.க வாழ்க்கைப்பதிவு முதன்மையாக சக்திதாசன் எழுதிய நூலை ஒட்டி எழுதப்பட்டது. ஆகவே அவருக்கும் ஒரு தனிப்பதிவு போடப்பட்டுள்ளது.

சில பதிவுகளை நீங்கள் கவனிக்கலாம். அவை ஒரு முழுநூல் அளவுக்கே பெரியவை. (உதாரணம், இளங்குமரனார். மறைமலையடிகள் ) பல நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட செய்திகள் தொகுக்கப்பட்டு, ஒப்பிடப்பட்டு அளிக்கப்பட்டுள்ளன. ஒரு பதிவுக்கே ஒரு மாதகால உழைப்பு செலுத்தப்பட்டதும் உண்டு. பதிவுகளுக்கு இடையே உள்ள இணைப்புகளை தொடர்ந்து வாசிப்பவர்கள் முழுமையான வரலாற்றுச் சித்திரத்தை அடைய முடியும். அந்த இணைப்புக்களைப் போட ஓர் அறிஞர்குழுவின் உழைப்பு தேவை. அவை இயந்திரத்தனமாகப் போடப்படுவன அல்ல.

சரி, இந்த அறிவுழைப்பை அப்படியே இன்னொருவர் தூக்கி பயன்படுத்திக்கொண்டால் என்ன செய்யமுடியும்? பல நூல்கள் தமிழ்விக்கி பதிவின் நேரடி நகல்களாக இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளனர். பல கல்லூரி ஆய்வேடுகள் நகல்களாகவே முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால்  ஒன்றும் செய்யமுடியாது. ஏனென்றால் நம் நோக்கமே அப்படி இந்த தகவல்கள் பரவவேண்டும், அதன் வழியாக வலுவான அறிவியக்கம் உருவாகவேண்டும் என்பதுதான். தமிழ்விக்கிக்கு நன்றி தெரிவிக்கலாம். ஆனால் பலசமயம் பலர் அதைச் செய்வதில்லை. ஆனால் ஒன்றும் செய்ய முடியாது.

அரிதாக, அசலான ஆய்வுகளும் இங்கே பதிவாக வருகின்றன. பல படைப்பாளிகளைப் பற்றிய செய்திகளை நாங்களே நேரில் விசாரித்து அறிந்துகொண்டிருக்கிறோம். பல ஆய்வுகளுக்காக பயணங்கள் மேற்கொண்டிருக்கிறோம். அச்சூழலில் அந்த தகவல்கள் மேல் ஓர் உரிமையுணர்வு உருவாகத்தான் செய்கிறது. ஆனால் அதையும் கடந்தேயாகவேண்டும். ஏனென்றால் அறிவியக்கம் தரமானதாக அமைவதுதான் நம் நோக்கம் என்றால் தகவல்களுக்கு உரிமைகோரக்கூடாது

இப்போது செயுற்கை அறிவு (ஏ.ஐ) வந்துள்ளது. அது என்ன செய்கிறது? ஒரு கேள்விக்கு விடையாக அது இணையத்தில் கிடைக்கும் செய்திகளை எடுத்து தானாக தொகுத்து கட்டுரையாக அளிக்கிறது. இன்று தமிழில் அது இலக்கியம், பண்பாடு சார்ந்து அளிக்கும் செய்திகளில் கணிசமான பகுதி தமிழ்விக்கியில் இருந்து எடுக்கப்படுவது. கூகிளில் தேடி ஒருவர் தமிழ்விக்கி தரவுகளை எடுத்து போடும்போது தமிழ்விக்கிக்கு குறைந்தபட்சம் கூகிளில் ஒரு தேடலாவது அமைகிறது. சாட்ஜிபிடி அதைக்கூட அளிப்பதில்லை. நேரடியான திருட்டுதான். நாம் என்ன செய்ய முடியும்?

அறிவியக்கம் நிகழும்பொருட்டு இதைச் செய்கிறோம். நாம் அனைவரும் செயல்படும் ஒரு பொதுக்களம் அது, நாம் அனைவரும் நின்றிருக்கும் பொதுத்தளமும்கூட.

ஜெ

முந்தைய கட்டுரைஜெயன் கோபாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரைWhat does the word ‘Hindu’ mean?