தளிர்மேல் பாறை

அன்புள்ள ஜெ

அண்மையில் நீங்கள் முக்காடுபோட்ட மதவாதம் பற்றி எழுதியிருந்தமையால் இதை எழுதுகிறேன். நான் தமிழ் இலக்கிய வாசகன். தொடர்ச்சியாக இலக்கியப் படைப்புகளை வாசிப்பவன். என் இலக்கிய அறிமுகம் உங்கள் இணையதளம் வழியாகத்தான் நிகழ்ந்தது. நான் விரும்பும் ஆசிரியர்களை அறிமுகம் செய்துகொண்டேன். இலக்கியக் கொள்கைகளை கற்றுக்கொண்டேன்.

நான் இலக்கியச் சர்ச்சைகளைக் கவனிப்பதுண்டு. அவை எந்த அளவில் இருந்தாலும் இங்கே என்னென்ன தரப்புகள் உள்ளன என்பதை அவற்றிலிருந்து நம்மால் ஊகிக்க முடிகிறது. ஆகவே நான் அவற்றை பெரிய அளவில் ஈடுபாடு இல்லாமல் வாசிப்பேன். அதில் நான் கவனித்த ஒரு விஷயம் உண்டு. அது இந்த முற்போக்கு முக்காடு போட்ட மதவாதம்.

இங்கே திமுக, கம்யூனிஸ்டு முக்காடுகளுடன் செயல்படுபவர்களில் மிகுந்த எண்ணிக்கையில் இருப்பவர்கள் முக்காடு போட்ட மதவாதிகள்தான். பொதுவாக எழுதும்போது தாங்கள் பார்வை முற்போக்கு என்றும் பகுத்தறிவு என்றும் பாவனை செய்வார்கள். ஆனால் அவ்வப்போது மதம் பற்றிய பேச்சு வந்தால் தங்கள் மதவெறியைத்தான் முன்வைப்பார்கள். அந்த மதவெறியைக் கொண்டுதான் தங்கள் கருத்துக்களை, மதிப்பீடுகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். காழ்ப்புகளையும் வெறுப்புகளையும் அடைகிறார்கள். ஆனால் அவற்றை முற்போக்குப்பாவனையில் அல்லது திராவிடப்பூச்சுடன் முன்வைக்கவேண்டும் என்பதை ஒரு சூழ்ச்சியாக கையாள்கிறார்கள்.

அண்மையில், அறிவுஜீவி ஒருவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். (அல்லது அப்படி அறிவித்தார்). அதை இங்குள்ள இடதுசாரி, திராவிடக் கட்சிகளைச் சார்ந்த அத்தனை இஸ்லாமியர்களும்  வரவேற்றுக் கொண்டாடினார்கள். இடதுசாரி, அல்லது பகுத்தறிப் பார்வையில் அது தேவையானது அல்ல என்று சொன்ன ஒரே ஒரு இஸ்லாமியர்கூட கண்ணுக்குப்படவில்லை

ஆனால் அவ்வாறு இஸ்லாமியர் கொண்டாடியதைப் பற்றி அவர்கள் சார்ந்திருந்ததாக காட்டிக்கொண்ட முற்போக்கு, திராவிடத் தரப்பைச் சேர்ந்த இஸ்லாமியரல்லாத சில அப்பாவிகள் ஆச்சரியமும் வருத்தமும் பட்டு எழுதியிருந்தனர். ’ஒருவர் மதம் மாறினால் அதில் ஓர் இடதுசாரிக்கு என்ன மகிழ்ச்சி? அப்படியென்றால் நீங்கள் இதுவரை பேசிய மார்க்ஸியமும் திராவிடக்கொள்கையும் எல்லாம் பொய்யா?’ என்றெல்லாம் புலம்பியிருந்தார்கள்.

பொதுவாக இந்தவகையான மதவெறியர்கள்தான் தளராத மூர்க்கத்துடன் இருப்பார்கள். கும்பலாகச் செயல்படுவார்கள். அமைப்புசார்ந்த பலமும் உண்டு. இவர்கள் இப்படி பல தரப்புகளில் ஊடுருவிச் செய்யும் கருத்துப்பிரச்சாரம்தான் இங்கே பெரும்பாலும் சாமானியர்களின் அபிப்பிராயங்களையும் தீர்மானிப்பதாக உள்ளது. 2020 வரை என்னுடைய அபிப்பிராயங்களும் இவர்களால்தான் உருவாக்கப்பட்டிருந்தன என்று இன்றைக்கு தெரிகிறது.

இதை எழுதுவதற்கு காரணம் அது மட்டும் அல்ல. நான் இலக்கியப்படைப்பாளிகள், விமர்சகர்களைப் பற்றித்தான் கவலையாக இருக்கிறேன். நான் அவர்களின் கருத்துக்களைப் பார்க்கிறேன். இலக்கியப்படைப்புகளை வாசிக்கிறார்கள், விமர்சனக் கருத்துக்கள் சொல்கிறார்கள். ஆனால் அந்த எல்லா கருத்துக்களையும் அவர்கள் வந்தடைவது அவர்களின் மதவாத அடிப்படையில்தான். அவர்களின் பார்வை இலக்கியம் சார்ந்தது அல்ல.

இலக்கியத்திலுள்ள அழகியலோ, வாழ்க்கைநுட்பங்களோ, வேறு தத்துவசிந்தனைகளோ அவர்களுக்கு ஒரு அளவுகோலே அல்ல. ஓர் எழுத்தாளர் நம் மதத்திற்கு ஆதரவாளரா எதிர்ப்பாளரா என்பதுதான் கேள்வி. அவர்களுக்கு அது முதல் நிபந்தனை மட்டும் அல்ல அது மட்டும்தான் கடைசிக்கட்ட அளவுகோலும். அவர்களின் மதத்தின் எல்லாச் செயல்பாடுகளையும் அப்படியே ஆதரிப்பவர்கள் மட்டும்தான் அவர்கள் பார்வையில் ஏற்புக்குரியவர்கள்.

அண்மையில் ஓர் இலக்கிய விமர்சகரை தொடர்ச்சியாக வாசித்து வந்தேன். கல்லூரிப்பேராசிரியர், சில நல்ல இலக்கியக் கட்டுரைகளை எழுதியவர். ஆனால் அடிப்படையில் அவரிடமிருப்பது தன் மதம் சார்ந்த அளவுகோல் மட்டும்தான் என்பது பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.

நான் நேரடியாகவே கேட்கிறேன், சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களில் மதம்சார்ந்த முன்முடிவு இல்லாமல் நீங்கள் உருவாக்கிய இலக்கிய உலகை அணுக முடிந்த ஒரு விமர்சகரையாவது நீங்கள் அறிந்ததுண்டா?

ஜே.கிருஷ்ணகுமார்

அன்புள்ள கிருஷ்ணகுமார்,

உண்டு, எம்.வேதசகாய குமார். ஆனால் அவர் மட்டும்தான்.

ஈழ இலக்கியச் சூழலை எடுத்துப் பாருங்கள். சிங்கள இலக்கியம் உலக அளவில் கவனிக்கப்படுவது. சிங்கள நாடகமும் சினிமாவும் கலைமதிப்பு கொண்டவை. நமக்கு அங்குள்ள ஈழ இலக்கிய ஆளுமைகள் எவரேனும் சிங்கள இலக்கியம், சினிமா, நாடகத்தை அறிமுகம் செய்தார்களா? சரத்சந்திர எதிரிவீர அல்லது பிரசன்ன விதானகே பற்றி தமிழில் எவரேனும் எழுதியுள்ளனரா?

நம்மவரின் பார்வை ஒரு சிங்களரை கலைஞராக அல்லது சிந்தனையாளராக அணுகுவது அல்ல. சிங்களராக மட்டுமே அணுகுவது. அவர் தமிழருக்கு ஆதரவாளரா என்று மட்டுமே பார்ப்பது. தமிழர்களின் தரப்புக்காகப் பேசி கொல்லப்பட்ட சிங்களச் சிந்தனையாளர்களைக்கூட எதிரிகளாகவே நம்மவர் அணுகினார்கள், இன்றும் அணுகுகிறார்கள், இல்லையா?

உண்மையில் ஒரு தமிழ் அறிவுஜீவி  சிங்களக் கலையிலக்கியத்தை ரசித்துப் பாராட்டியிருந்தால் அவரை நாம் எப்படி அணுகியிருப்போம்? அவரை துரோகி என முத்திரைகுத்தியிருப்போம்.  சரி, இலங்கையில் இனப்போர் நடைபெற்றது. ஆகவே அந்த தீவிரமனநிலை. மலேசியாவில் இருந்து எத்தனை மலாய இலக்கியவாதிகள் தமிழுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்?

அது ‘சிறுபான்மையினர் மனநிலை’. ஒரு சமூகச்சூழலில் சிறுபான்மையினராக வாழ்பவர்கள் பாதுகாப்பில்லாதவர்களாக உணர்கிறார்கள். அவர்கள் சிறுபான்மையினர் என்னும் அடையாளத்துடன் திரள்கிறார்கள். அந்த திரளடையாளத்தையே முன்வைக்கிறார்கள். ஒவ்வொருவரும் அந்த திரளைச் சார்ந்து இருக்கிறார்கள். அது அவர்களின் அரசியல் சார்ந்த தற்பாதுகாப்பு வழிமுறை. அதை குறை சொல்ல முடியாது.உலகமெங்கும் அது அப்படித்தான் செயல்படுகிறது.

மதச்சிறுபான்மையினரான சாமானியர்கள் அப்படித்தான் செயல்படுவார்கள். அவர்களின் உணர்வுநிலைகளும் அப்படித்தான் இருக்கமுடியும். அவர்களிடம் சமநிலை இருக்காது. அவர்கள் எதிர்த்தரப்பு என நினைப்பவர்கள் மேல் நல்லெண்ணமும் இருக்காது. எதிர்மனநிலை, மிகையுணர்ச்சி ஓங்கியிருக்கும். அவர்கள் உருவாக்கும் உணர்ச்சிகளால் அவர்களே அடித்துச்செல்லப்படுவார்கள்.

இந்த கட்டுரையையே அவர்களில் ஒருவர் எப்படி வாசிப்பார் என என்னால் எளிதில் சொல்லிவிட முடியும். ஓராண்டு இலக்கியச்சூழலில் புழங்கிய எவரும் சொல்லிவிட முடியும். ஏனென்றால் அந்த மனநிலைக்கு ஒரே ஒரு ‘டெம்ப்ளேட்’தான் உள்ளது. சிந்தனையாளர், பாமரர் எல்லாருமே அந்த டெம்ப்ளேட்டில் மட்டும்தான் புரிந்துகொள்வார்கள். அவர்கள் நாம் சொல்வதை வேண்டுமென்றே திரிப்பதாக நமக்கு தோன்றும். ஆனால்  அவர்களுக்கு உண்மையிலேயே எல்லாமே உருமாறி அந்த கோணத்திற்குள்தான் தெரியும். இன்னொரு பார்வைக்கே வாய்ப்பில்லை.

இந்த டெம்ப்ளேட்டில் மாட்டிக்கொள்வது சிந்தனையில் மிகப்பெரிய ஒரு தளை. உண்மையில் வரலாற்றின் விளைவாக சிறுபான்மையினராக வாழநேர்வதே சுதந்திர சிந்தனையாளனுக்கு ஒரு சாபம்தான். முளைத்து தளிர் விடும் நம் சிந்தனை மீது பலநூறு டன் எடைகொண்ட பாறை நாம் பிறக்கும்போதே வைக்கப்பட்டுவிடுகிறது. பலநூறு முன்முடிவுகள் உணர்ச்சிகரமாக நம்மில் நிலைகொள்கின்றன. அவற்றை உடைத்துக்கொண்டு மேலெழவேண்டும்.

அத்தகைய சூழலில் நம் தனியடையாளத்தை உருவாக்கிக்கொள்வது மிகக்கடினம். நம் தனிரசனையை, தனித்தேடலை திரட்டிக்கொள்வதற்கு நம் சூழலை ஒட்டுமொத்தமாக எதிர்த்து நிற்கவேண்டும். அச்சூழலோ அரசியல்நோக்குடன் வலிமையாக ஒருங்கிணைக்கப்பட்டது. மிக மிக ஆற்றலுடன் ஊடகங்களை நிறைத்திருப்பது. அதை எதிர்த்துக் கடப்பது சாதாரணமாக இலக்கியம் மற்றும் சிந்தனைக்களங்களில் செயல்படுபவர்களால் இயல்வது அல்ல.

இங்கே இலக்கியம், சிந்தனை ஆகியவை சமூக மதிப்பற்றவை. சாதாரணமாகவே ஒருவர் கொஞ்சம் தலைமறைவாகச் செய்யவேண்டியவை. இந்திய, தமிழ்ச்சூழலில் மிகப்பெரும்பாலானவர்கள் தங்கள் வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியாக, ஒரு தனிப்பட்ட பொழுதுபோக்கு போல இலக்கியம் மற்றும் சிந்தனையை வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் சுயசிந்தனைக்காகப் போராடு என நாம் எப்படிக் கோரமுடியும்?

’இலக்கியம் அல்லது சிந்தனையே என் வாழ்க்கை, என் வாழ்வும் சாவும் அதற்காகவே, அதன்பொருட்டு எதையும் இழப்பேன்’ என இருப்பவர்கள் எவரும் அனேகமாக தமிழில் இல்லை. ’என் அளவுகோல்கள் என் ரசனை மற்றும் அறிவு சார்ந்தவை மட்டுமே’ என்று நிலைகொள்பவர்கள் மிகமிகமிக அரிதானவர்கள்.  சாதாரணமாக எழுதுபவர்களெல்லாம் அப்படி இலட்சியவடிவமாக இருக்கவேண்டும் என்பது அதீத எதிர்பார்ப்பு.

இலக்கியவாதியாக, சிந்தனையாளராக மட்டுமே தன் அடையாளத்தை கொண்டு; இலக்கியத்தின், சிந்தனையின் பொருட்டு முழுவாழ்க்கையையும் அமைத்துக் கொள்ளும் ஒருவரால் மட்டுமே நீங்கள் கோரும் தகுதியை ஈட்டிக்கொள்ள முடியும். ஆனால் அது ஒரு தியாகம். தன்னை களப்பலியாக ஆக்கும் துணிவு. அதை ஒரு நிபந்தனையாக நீங்கள் எவர் மீதாவது சுமத்த முடியுமா என்ன?

வேதசகாயகுமார்கள் உருவாவது எளிதல்ல.

ஜெ

முந்தைய கட்டுரைதிருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்
அடுத்த கட்டுரைOn Protecting Hinduism…