அன்புள்ள ஜெ,
இலங்கைக்குச் செல்வது படித்தேன். பழம்பெருமை பேசுவதில் எனக்கு எப்போதும் உடன்பாடில்லை. இன்றைக்கு யானைக்கு வாழைப்பழம் இருக்கின்றதா என்பதே என்னுடைய எண்ணமாக இருக்கும். ஈழத்தின் இலக்கிய சூழல் குறித்து தாங்கள் எழுதியிருப்பது முற்றிலும் சரியானது.
சில ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் புத்தகத்தை நீங்கள் ஈழத்தில் பதிப்பிக்க வேண்டும், இங்கு மிகப்பெரிய வரவேற்பு எங்களுக்கு உள்ளது. நாங்கள் உங்களை… என்று பேராசை காட்டியது ஒரு பதிப்பகம். பதிப்பகத்தின் உரிமையாளரே நாட்டில் இல்லை. அவருடைய பதிப்பக புத்தகங்களையே அவர் தமிழகத்தில் பதிப்பித்து ஈழப்பதிப்பகம் என்று மார்த்தட்டிக்கொள்ள வேண்டிய நிலமை!கள யதார்த்தம் புரிவதற்கு பலருக்கும் நீண்ட காலம் தேவைப்படுகின்றது.
என்னுடைய இலக்கியம் என்பது தமிழகத்தின் வாசகர் பரப்பையே பெருமளவு நம்பியுள்ளது. ஈழ வாசகர்கள் ( புலம்பெயர் தமிழர்களையும் சேர்த்து) எண்ணிக்கை அவ்வளவு குறைவாகத்தான் இருக்கிறது என்பதை மறைத்து என்ன ஆகப்போகின்றது?. அதில் மாற்றம் ஏற்பட்டு ஈழ வாசகர்கள் பரப்பு வளர்ச்சி அடைந்தால் நானும் பெருமையுடன் கூறிக்கொள்ளத் தயாராகவே உள்ளேன்.
ஓர் ஈழ எழுத்தாளன் நிலமையே இதுதான். இப்படி கூறுவதை சிலர் தவறாக பரப்புரை செய்யக்கூடும். இதற்கு முன்பும் எனக்கு அது பலதடவைகள் நடந்ததுதான். என்ன செய்வது நானும் அறம் படித்து வளர்ந்துவிட்டேன்.
நன்றி
வாசு முருகவேல்
அன்புள்ள வாசு,
என்னுடைய இணையதளம் தமிழகத்திலும், ஐரோப்பா அமெரிக்கா உட்பட பலநாடுகளிலுமாக பல்லாயிரம் பேரால் தினமும் வாசிக்கப்படும் ஒன்று. தமிழ் நவீன இலக்கியத்தில் இந்த இணையதளமே முதன்மையானது, மையமானது. கிட்டத்தட்ட இருபதாண்டுகளாக வெளிவருவது. செய்திகளுக்குக்கூட இதையே நம்பியிருக்கிறார்கள் பலர். இதில் வெளிவரும் ஒரு செய்தி இலக்கியச் சூழலில் உடனே கவனிக்கப்படும்
ஆனால், ஈழம் பற்றிய அக்குறிப்பு வெளியாகி எந்த எதிர்வினையும் எழவில்லை என்பதை நீங்கள் கவனிக்கலாம். அதை எவரோ சமூக வலைத்தளங்களில் பேசிய பின்னரே அதைப்பற்றிய எதிர்வினைகள் வருகின்றன. என் இணையப்பக்கத்தின் கணக்குகளின்படி அது இலங்கையில் மிகமிகக்குறைவாகவே வாசிக்கப்படுகிறது – அதை விட கூடுதலாக ஆஸ்திரேலியாவிலும் ஜப்பானிலும் வாசிக்கப்படுகிறது.
சமூகவலைத்தளங்களில் பேசுபொருள் ஆனபின் வரும் எதிர்வினைகளும் வேடிக்கையானவை. காழ்ப்பு கக்கும், கருத்து சொல்லும் பெரும்பாலானவர்களுக்கு நான் என்ன எழுதியிருக்கிறேன் என்றே தெரியவில்லை.சமூகவலைத்தள வெட்டிச்சர்ச்சைகள் வழியாகக் கிடைத்த உதிரிக்கருத்துக்களை மட்டுமே அறிந்துள்ளனர். ஈழம் பற்றி நான் என்னென்ன எழுதியுள்ளேன் என்றே தெரியவில்லை.
அதைவிட ஆச்சரியம், இந்த சர்ச்சைக்குப்பின்னர்கூட பலர் அந்த மூலக்கட்டுரையை வாசிக்கவில்லை. சமூகவலைத்தள சர்ச்சைகளைக் கொண்டே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் கட்டுரையிலேயே ஈழ இலக்கியம் பற்றி நான் எழுதிய நூலின் படம் உள்ளது. ஆனால் நான் ஈழம் பற்றி என்ன எழுதியிருக்கிறேன் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இதுதான் உண்மையான நிலைமை. இதை நாம் புரிந்துகொண்டே ஆகவேண்டும். இலக்கியம், அறிவியக்கம் என்பது மக்கள் அன்றாடம் பேசிக்கொண்டிருக்கும் கட்சியரசியலின் சண்டைகளோ, முகநூல் வம்புகளோ அல்ல என்று அங்கே ஓங்கிச்சொல்லவேண்டிய நேரம் வந்துவிட்டிருக்கிறது. இலக்கியம் என்பது வாசிப்பு – அதைச்சார்ந்த சீரிய விவாதம், நேர்நிலை அணுகுமுறை, வாழ்க்கைநுட்பங்கள் சார்ந்த அவதானிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்று வலியுறுத்தவேண்டியுள்ளது. இலக்கியத்தில் சல்லித்தனமான அரசியல் காழ்ப்புகளை, முகநூல் வம்புகளைக் கொண்டுவருபவர்கள் இலக்கியத்தின் எதிரிகள், அவர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்படவேண்டும் என கற்பிக்கவேண்டியுள்ளது.
சாரு நிவேதிதாவுக்கு நிகழ்ந்தவற்றை நான் இப்போதுதான் வாசித்தேன். போருக்குப் பிந்தைய சூழலில் இலங்கை இலக்கியக்களத்தில் ஓங்கியுள்ள முக்காடு போட்ட மதவெறி அடையாளம் காணப்பட்டாக வேண்டும். தமிழின் ஒரு முதன்மைப் படைப்பாளி இப்படி அவதூறு வழியாக சிக்கலுக்குள்ளாக்கப்பட்டார் என்பது மிகுந்த கண்டனத்துக்குரியது.
-ஜெ