ஈழம் -கடிதம்

இலங்கைக்குச் செல்வது…

இலங்கை, கடிதம்

ஈழம், சயந்தன் கடிதம்

ஈழம், கடிதம்

அன்புள்ள ஜெ,

அனைத்து வாசகரும் எழுத்தாளருக்கு தங்களை வெளிகாட்டி கொள்வதில்லை என்று நினைக்கிறேன். ஒருவேளை தனிப்பட்ட பயணமாக இலங்கை வந்து வாசகரை சந்திக்கிறேன் என்று நீங்கள் அறிவித்தால் வியப்படையும் அளவுக்கு வாசகர்கள் இருப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது.

அன்புடன்,

அனு

அன்புள்ள அனு,

நிறைய வாசகர்கள் இருப்பதென்பது ஒரு கௌரவம் ஒன்றும் அல்ல. அதில் பெருமைகொள்ளவும் எதுவுமில்லை. தமிழில் அத்தகைய நோக்குடன் எழுதும் எழுத்தாளர் எவரும் காலப்போக்கில் ஏமாற்றமும் கசப்புமே அடைவார்கள்.

நான் எழுதுவது, செயல்படுவது என் நிறைவுக்காக. நான் செய்யவேண்டியவற்றைச் செய்தேன் என்பதற்காக. அந்நிறைவு இன்றே எனக்கு உள்ளது. வாசகர்கள் வாசிக்கவேண்டியது அவர்களுக்காக, அவர்களின் வழித்தோன்றல்களுக்காக

ஜெ

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய ஜெயமோகன் அவர்கட்கு,

வணக்கம். இலங்கையிலிருந்து எழுதுகிறேன்.

தங்கள் 3ந் திகதிய ‘இலங்கைக்குச் செல்லல்’ பதிவு இப்போதுதான் பார்த்தேன்.

கவலையாயிருந்தது. தங்களுக்கு இங்கே வாசகர்கள் இல்லை என்று அதில் கூறியிருந்தீர்கள்.அது தவறு. பலர் இருக்கிறார்கள்.நூல் நிலையங்களில்  தங்கள் ஆக்கங்களும் உள்ளன.

இதை எழுதுகிற நானும் தங்களுடைய வாசகன். எல்லாப்படைப்புகளும் வாசித்தேன் என்று சொல்ல முடியாவிட்டாலும் தங்கள் எழுத்தையும் உழைப்பையும் பார்த்து வியப்பவன். முக்கியமாகப் ‘பின் தொடரும் நிழலின் குரல்'(நானும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவன்), ஏழாம் உலகம், மற்றும் கிளிக்காலம் முதலிய கதைகள்.

இப்போதும் ‘நாவல் கோட்பாடு’ என்முன் உள்ளது; அது என் உசாத்துணை நூல்.’காடு’ தந்த ஈர்ப்பில் – 15 வருடங்களுக்கு முன்னராக இருக்கலாம்?- தங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தேன்.பதில் வரவில்லை. என் கடிதம் தங்களை வந்தடைந்திருக்குமா என்ற யோசனை பிறகு வந்ததது; சிலவேளை தங்கள் பதில் கூடத் தொலைந்திருக்கலாம்.

நான் பொதுவாக எழுத்தாளர்களுக்குக் கடிதங்கள் எழுதுவதில் தயக்கம் உள்ளவன். அதோடு நிறுத்திக்கொண்டேன். மதிப்பு, மரியாதை, அன்பு, அபிப்பிராயம் எல்லாம் மனதோடே!

இதை எழுதுகிற இப்போது நள்ளிரவு தாண்டி விட்டது. பார்த்துப்பிறகு எழுதுகிறேன்.

வணக்கம், வாழ்த்துகள்.

அன்புடன்,

சாந்தன்.

அன்புள்ள சாந்தன்,

நாம் சிலவற்றை நமக்கு வரும் எதிர்வினைகளைக் கொண்டே மதிப்பிடுகிறோம். இலங்கையில் சிலர் வாசகர்களாக இருப்பதை இப்போது அறிந்துகொண்டேன். மகிழ்ச்சி.

பொதுவாக வாசகர்கள் அமைவதும் அமையாமலிருப்பதும் எழுத்தாளர் கவனிக்கவேண்டிய விஷயம் அல்ல. நான் என் வாசகர்களைக் கூட்டிக்கொள்ள முயல்வதில்லை என்பதை 1991 முதலே முடிவுசெய்திருக்கிறேன். நான் நிகழ்த்துவதெல்லாம் பொதுவான அறிவியக்கம் ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளை மட்டுமே.

ஜெ

முந்தைய கட்டுரைThe Hindu Religion & Indian Nationalism
அடுத்த கட்டுரைவ. அதியமான்