நான் ஆண்டில் சராசரியாக எழுபது முறை ரயிலில் பயணம் செய்கிறேன் என சென்ற ஆண்டு கணக்குகள் சொல்கின்றன. மாதம் சாதாரணமாக மூன்று பயணங்கள். காரணம் ரயில் எனக்கு மிக வசதியானது. ரயில் கிளம்புமிடம் நாகர்கோயில், நான் சென்றடையவேண்டிய இடங்கள் பெரும்பாலும் கடைசி நிறுத்தங்கள். ஆகவே தென்னிந்தியாவில் எந்தப் பயணமென்றாலும் எனக்கு ஓர் இரவுத்தூக்கத்தின் தொலைவே. நான் ரயிலில் மிகநன்றாகவே தூங்குவேன்.
எனக்கு விமானம் வசதியானது அல்ல. திருவனந்தபுரம் இங்கிருந்து 60 கிலோமீட்டருக்குள் தான். ஆனால் சென்று சேர 3 மணிநேரம் வரை ஆகும். காரில் அமர்ந்து தவம் செய்ய வேண்டும். அவ்வளவு பரிதாபகரமான சாலைகள். அவ்வளவு நெரிசல். வழியில் பகவதி ஊர்வலங்கள் அல்லது செங்கொடி ஊர்வலங்கள் மறிக்கலாம். சபரிமலை காலகட்டத்தில் சாலை பக்திக்கான ஓர் இடம், மிச்சம் பொழுதிருந்தால் மட்டுமே போக்குவரத்துக்கு அளிக்கப்படும்.
இந்தியாவில் சாலைமேம்பாடு என்று சொல்லி மேம்பாலங்களுக்காக கோடிகள் கொட்டப்படுகின்றன. ஆனால் எங்கும் சாலை வசதி மேம்படவில்லை. மேம்பாலங்கள் கட்டுவதில் இருக்கும் ஊழல் மட்டுமே அவை பெருகுவதற்கான காரணம். இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் குண்டும் குழியுமானவை. எந்த ஒழுங்குமுறையும் அற்றவை. விரைவுப்பயணம் என்பது தற்கொலை முயற்சி. ஆனால் ஆயிரக்கணக்கான கோடிகள் ‘டோல்’ வசூல் செய்கின்றன. இன்று இந்தியாவில் நிகழும் மாபெரும் கொள்ளை என்பது இதுவே.
இங்கே போக்குவரத்து பிரச்சினைகள் பற்றி எதைச் சொன்னாலும் உடனே ’முற்போக்கு’ ‘மனிதாபிமான’ ‘ஏழைப்பங்காள’ சுடர்களின் குரல்கள் எழும். ‘ஏழை எளியவர்கள் வறுமையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு சோறு இல்லை. போக்குவரத்து வசதிகளைப் பற்றிப் பேசுவது பூர்ஷுவா மனநிலை. ப்ளா ப்ளா…’ இந்த கும்பல் அத்தனைபேருமே முன்பதிவு செய்து வசதியாக பயணம் செய்பவர்கள்தான்.
ஒரு தேசம் சிறந்த பயண வசதிகளை அளிப்பதென்பது அதன் பொருளியல் முன்னேற்றத்திற்கான அடிப்படைகளில் ஒன்று. தேங்கிப்போன நாடுகளை அவற்றின் போக்குவரத்து வசதிகளைக் கொண்டே ஊகித்துவிடலாம். போக்குவரத்து என்பது ’வசதி’ அல்ல, பணம் வைத்திருப்பவர்களுக்கான ‘ஆடம்பரம்’ அல்ல. அது பொருளியல் நடவடிக்கைகளின் அடித்தளம். செய்தித்தொடர்பு ஒரு நாட்டின் நரம்பு இணைப்பு. போக்குவரத்து குருதிநாள இணைப்பு. ஏழைகளின் வாழ்வு முன்னேற முதல் தேவை அவைதான்.
நம் நாட்டில் செய்தித்தொடர்பு வளர்ச்சி ராஜீவ் காந்தியின் முயற்சியால் உருவானபோது இங்குள்ள போலிமனிதாபிமானிகள் அதே பழைய ‘மக்களுக்குச் சோறில்லை, செல்போன் தேவையா?’ என்ற பிலாக்கணத்தையே பாடினர். ஆனால் நவீனச் செய்தித்தொடர்பு நம் வேலைவாய்ப்பில், பொருளியலில் எத்தனை பெரிய புரட்சியை உருவாக்கியது என்பதை கண்கூடாகக் காண்கிறோம்.
அதேபோன்ற புரட்சி போக்குவரத்தில் நிகழவில்லை. விமானப்போக்குவரத்தில் நரசிம்மராவ் காலகட்டத்தில் ஒரு புரட்சி தொடங்கியது. விமானக் கட்டணங்கள் குறைந்தன, பயணவழிகள் பல மடங்காயின. ஆனால் அந்த எழுச்சி பின்னர் சீரழிக்கப்பட்டது. இந்த பத்தாண்டுகளில் விமானப்போக்குவரத்து முழுமையாகச் சிதைந்துவிட்டது. மீண்டும் எழுபதுகளின் சூழல். எந்த விமானநிலையத்திலும் விமானங்கள் முன்னறிவிப்பின்றி ரத்துசெய்யப்பட்ட அறிவிப்பை எப்போதுமே காணலாம். தனியார் விமான நிறுவனங்கள் பல மூடப்பட்டுவிட்டன. எஞ்சியவற்றை மூடுவதற்கு அவற்றிலுள்ள ஊழியர்கள் முனைப்பாக இருக்கிறார்கள்.
பெரும்பாலான விமானநிறுவனங்களில் அக்கறையே அற்ற சேவையே உள்ளது. குடிநீர் கூட அளிக்கப் படுவதில்லை. கூடவே ஊழியர்கள் கூடுதல் ஊதியத்திற்கான போராட்டமும் செய்கிறார்கள். அண்மையில் டாட்டா விமானநிறுவனத்தில் அத்தனை ஊழியர்களும் ஒரே சமயம் விடுப்பு எடுத்து போராட்டத்தில் குதிக்க பயணிகள் விமானநிலையத்தில் பரிதவித்தனர். பாக்டோரா விமானநிலையத்தில் பிள்ளைகுட்டிகளுடன் அலைமோதியவர்களைக் காண வருத்தமாக இருந்தது.
பாக்டோராவில் இருந்து டெல்லி, மும்பை, தென்நகர்கள் எதற்கும் நேரடி ரயில் இணைப்பு இல்லை. பாக்டோராவில் தங்கும் விடுதிகளும் இல்லை. கல்கத்தாவுக்கு காரில் சென்று அங்கிருந்து பேருந்துகள் வழி மேற்கொண்டு பயணம் செய்யவேண்டும். அப்பயணிகளின் வாழ்க்கையில் ஒரு கொடுங்கனவாக அது அமையும். கல்கத்தா பேருந்துகளில் பயணம் செய்வதென்பது ’கான்ஸன்ட்ரேஷன் காம்ப்’களில் கொலைக்களங்களுக்கு கைதிகளை கூட்டிச்செல்வதுபோல் இருக்கும்.
ரயில்பயணம் மிகப்பெரிய சிக்கலாக ஆகிக்கொண்டே இருக்கிறது. வந்தேபாரத் போன்ற ‘ஆடம்பர’ ரயில்களை அறிவித்து பெரிய பாய்ச்சல் நிகழ்வதுபோல பாவலா காட்டிக்கொண்டிருக்கிறார்கள். வந்தேபாரத் என்பது ஒரு மோசடி. ஒருமணிநேரம் மிச்சமாகும் பயணத்துக்கு இருபது சதவீதம் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வந்தேபாரத் ரயில்பெட்டிகள் மிகமோசமாக தயாரிக்கப்பட்ட டப்பாக்கள். பலவும் இதற்குள் பழுதாகிவிட்டிருக்கின்றன. குறிப்பாக வளைவான கழிப்பறை கதவுகள் மூடமுடியாமலுள்ளன. பொருள்வைக்கும் நிலைகள் உடைந்துவிட்டன. அவ்வளவு மோசமான தயாரிப்புகள் அவை.
(இன்னொரு மோசடி, தத்கால் என்னும் தற்சமய இருக்கைப் பதிவு. ஏராளமான இருக்கைகள் தத்கால், பிரிமியம் தத்கால் என ஒதுக்கப்பட்டு இருமடங்கு மும்மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நேரடிப்பதிவில் குறைவான இடங்களே ஒதுக்கப்படுகின்றன).
வட இந்தியா செல்லும் ரயில்களில் ‘ஸ்லீப்பர் கோச்சு’களில் பயணம் செய்யமுடியாத நிலை கடந்த பல ஆண்டுகளாகவே உள்ளதுதான். டிக்கெட் இல்லாதவர்கள், அல்லது பொதுப்பெட்டிகளுக்கு டிக்கெட் எடுத்தவர்கள் பெருங்கூட்டமாக ஏறி முன்பதிவு இருக்கைகளை நிரப்பிவிடுவார்கள். எவரும் தட்டிக்கேட்க முடியாது. படுக்கை வசதி முன்பதிவு செய்திருந்தாலும் இருக்கைகூட கிடைக்காத நிலை உருவாகலாம். டிக்கெட் பரிசோதகர் வருவதே இல்லை. வந்தாலும் அவரால் ஒன்றும் செய்யமுடியாது.
குறிப்பாக ஒரிசா, கல்கத்தா, அஸாம் செல்லும் ரயில்களில் ஒரு ஸ்லீப்பர் பெட்டியில் டிக்கெட்டே இல்லாத இருநூறு முந்நூறுபேர் ஏறுவது அன்றாடம் காண்பது. ஒருமுறை ஈரோடு ரயில்நிலையத்தில் நானும் நண்பர்களும் நின்றபோது கவனித்தோம். ஸ்லீப்பர் கோச்சுகளில் நெருங்கிப் பிதுங்கும் கூட்டம். வழிகளை மூடி தொங்கிக்கிடந்தனர். கடைசியாக ஒருவர் பெரிய ஒரு பிளாஸ்டிக் டிரம்முடன் தொற்றிக்கொண்டார்.
இவர்கள் டிக்கெட் எடுக்க பணமில்லா ஏழைகள் அல்ல. டிக்கெட் ஒன்றும் அவ்வளவு அதிகம் இல்லை. ஒருநாள் ஒருவர் மது அருந்த செலவிடப்படும் தொகைக்கு ஐநூறு கிலோமீட்டர் பயணம் செய்யலாம். டிக்கெட் எடுக்கத் தேவையில்லை என நினைக்கிறார்கள். ஒருவர் டிக்கெட் எடுத்தால் மற்றவர்கள் ஏளனம் செய்வார்கள் என ஒருவர் சொன்னார். பயணத்தில் பல நூறு ரூபாய்க்கு குடித்தபடியே இருப்பார்கள். டிக்கெட் எடுத்தாலும் இதேபோல தொங்கித்தான் செல்லவேண்டும் என்றால் எடுப்பது வீண்தான்.
சென்ற பத்தாண்டுகளில் இந்தக் கும்பல் குளிர்வசதிப் பெட்டிகளிலும் ஏற ஆரம்பித்துவிட்டார்கள். இப்போதெல்லாம் முதல்வகுப்பு குளிர்வசதிப் பெட்டியிலேயே ஏறி வழி முழுக்க நிரம்பி அமர்ந்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக சமூகவலைத்தளங்களில் முன்பதிவு செய்த பயணிகள் புலம்புகிறார்கள். எந்த நடவடிக்கையும் இல்லை. எந்தப் பதிலும் ரயில்வே நிர்வாகத்தால் சொல்லப்படுவதில்லை.
இப்போது தென்னிந்திய ரயில்களிலும் இந்த வழக்கம் தொடங்கிவிட்டது. முதலில் இங்கே வேலைக்கு வந்த வட இந்தியப் இளைஞர்கள் இப்படி நம்மூர் முன்பதிவுப் பெட்டிகளில் நிறைந்தார்கள். அவர்களை ரயில்வே ஒன்றும் செய்வதில்லை என்று கண்டு இப்போது உள்ளூர் இளைஞர்களும் ஸ்லீப்பர் கோச்சுகளில் நிறைகிறார்கள்.
அண்மையில் கேரளத்தில் இருந்து வட இந்தியா சென்ற ஒரு ரயிலில் டிக்கெட் இல்லாத வட இந்திய இளைஞர்களிடம் டிக்கெட் கேட்ட ஒரு பரிசோதகர் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு உயிரிழந்தார். உருப்படியான எந்த நடவடிக்கையும் ரயில்வே சார்பில் எடுக்கப்படவில்லை என்று ஒரு டிக்கெட் பரிசோதகர் சொன்னார். ஆகவே இனிமேல் அவர்களிடம் டிக்கெட் கேட்பதில்லை என முடிவெடுத்துள்ளனராம். ’போலீஸ் வேண்டுமென்றால் நடவடிக்கை எடுக்கட்டும், எங்களால் முடியாது. எங்களுக்குப் பாதுகாப்பில்லை’ என்றார் ஒரு டிக்கெட் பரிசோதகர்.
இந்த டிக்கெட் இல்லா பயணிகள் பெரும்பாலானவர்கள் குடித்து போதையில் இருக்கிறார்கள். முன்பதிவு செய்து டிக்கெட் எடுத்தவர்களை பிடித்து வெளியே தள்ளுகிறார்கள். அடிக்கிறார்கள். பெண்களிடம் அத்து மீறுகிறார்கள். பொருட்களை திருடிச்செல்கிறார்கள். ரயில் கழிப்பறைப்பகுதிகளில் இவர்கள் வாந்தி எடுத்து வைத்திருப்பதை பலமுறை கண்டிருக்கிறேன். அண்மையில் ஒரு பெண்மணி அழுது புலம்பி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்ததைக் கண்டேன்.
இச்சீரழிவுக்கு முதன்மையான காரணம் ஒன்று உண்டு, இதைச் சொன்னால் உடனே பிரிவினைவாதம் என்பார்கள். நம் ரயில்கள் முழுக்க பெரும்பாலான ஊழியர்கள் இந்தி பேசும் வட இந்தியர்கள். ரயில்வேக் காவலர்கள் வட இந்தியர்கள். வட இந்தியர்களைப் பற்றிய எந்த புகாரையும் அவர்கள் பொருட்டாக நினைப்பதில்லை என்பதுடன், அப்படி புகார் சொல்வதை வட இந்தியர்களுக்கு எதிரான மனநிலையாகவே எடுத்துக் கொள்கிறார்கள்.
எனக்கே அந்த அனுபவம் உண்டு. நான் தமிழகத்தில் பயணம் செய்த ரயிலில் இருந்த கடைநிலை ஊழியர்கள் கதவருகே சாமான்கள் வைக்கும் பகுதியில் இழுப்புப் பலகையை இழுத்துப்போட்டு தூங்கிக் கொண்டிருந்தார்கள். ரயில் என் நிறுத்தத்தை வந்தடைந்து விட்டது. அவர் எழுந்தால்தான் கதவை திறக்க முடியும். எழுப்பினால் எழவில்லை, மூன்றுபேரும் நல்ல போதை. நான் டிடியிடம் சொன்னேன். அவர் ‘இந்தியில் பேசு’ என என்னை அதட்டினார். அவர்களிடம் அவர் ஒன்றும் சொல்லவில்லை. மூச்சிரைக்க பெட்டியுடன் மறுபெட்டிக்கு ஓடி பாய்ந்து இறங்கிக்கொண்டேன்.
ரயில்பெட்டிகளை தூய்மை செய்வதில்லை. கழிப்பறைகள் தூய்மை செய்யப்படுவதில்லை. கம்பிளிகள் புழுதி படிந்துள்ளன. ரயில் நின்றதும் வரும் இந்திபேசும் கும்பல் கம்பிளிகளை இழுத்து வெறுந்தரையில் போடுவதை காணலாம். அந்தக் கம்பிளிதான் மீண்டும் தரப்படுகிறது. அண்மையில் புதியதாக வைக்கும் தலையணைகளை ஒரு பையன் தரையிலேயே போட்டு வைத்திருந்தான். அவனிடம் எந்த மொழியில் சொல்ல என எனக்குப் புரியவில்லை
எந்தப் புகாருக்கும் ரயில்வே பதில் அளிப்பதே இல்லை. நான் ரயிலில் பயணம் செய்ய தொடங்கிய இந்த நாற்பதாண்டுகளில் இதுதான் ரயில்வே உச்சகட்டச் சீரழிவில் இருக்கும் காலம். புகார்கள் சொல்ல எண்கள், மின்னஞ்சல்கள் எல்லாம் உண்டு. எல்லாவற்றிலும் இயந்திரப் பதில்கள் மட்டுமே கிடைக்கும். நம்பமுடியாத ஆச்சரியமும் உண்டு, அரைமணிநேரம் கழித்து ‘உங்கள் புகார் சரிசெய்யப்பட்டது’ என்ற பதில் வந்துசேரும்.
இப்போது அரசியல்வாதிகள் ரயிலில் பயணம் செய்வதில்லை, வசதியான கார்களோ விமானமோதான் அவர்களின் தெரிவு. ஆகவே இதையெல்லாம் பாராளுமன்றத்தில் பேச இன்று எவருமே இல்லை. நம் எம்பிக்கள் எவரேனும் பாராளுமன்றத்தில் ரயில்பயணிகளின் அவலம் பற்றி ஒரு முறையேனும் பேசினால் நல்லது. அதை வடக்குக்கு எதிரான குரலாக உடனே மடைமாற்றி விடுவார்கள். ஆனாலும் பேசியே ஆகவேண்டும்.