அன்றன்றிருத்தல்.
அன்புள்ள ஜெ,
நேற்று நாள் முழுவதும் வீணாகிவிட்டதென்று பதற்றத்திலே இருந்தேன். “பின்தொடரும் நிழலின் குரல்” படித்த பிறகு தீர்மானமாக எந்த கருத்தியலிலும் கட்சி அரசியலிலும் ஈடுபடுவதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். அவ்வாறாகவே இருக்கிறேன். ஆனால் நேற்று நடந்த தேர்தல் முடிவுகளில் இருந்து தப்பவே முடியவில்லை, எப்படியோ இழுத்துக்கொண்டது. நாள் முழுவதும் மனதளவில் கடும் சோர்வே மிஞ்சியது. இந்த சோர்வு ஒரு வாரத்துக்கு நீடிக்கும் என்று நினைத்தபடியே மாலை ஆறு மணிக்கே உறங்கிவிட்டேன். காலை இரண்டு மணிக்கு எழுந்து உங்கள் தளத்தில் “அன்றன்றிருத்தல்” படித்தேன். மீண்டு எழ எனக்கு இதுவே போதுமானது. இனி, செயலூக்கம் இடைவிடாமல் தொடரும் என்ற நம்பிக்கையோடு விவேகசூடமணியை விட்ட இடத்திலிருந்து படிக்க துவங்குகிறேன்.
நன்றி,
தீனன் கதிரவன்.
அன்புள்ள கதிர்,
அரசியலில் பெரிதாக ஒன்றும் மாறாது, அதிகாரம் என்பது அரசியலதிகாரத்தில் இல்லை. சமூகத்தின் ஒட்டுமொத்தமான கருத்துக்களிலும், சமூக அமைப்புகளிலும் உள்ளது. சமூகத்தின் கருத்துக்களை மாற்ற, அமைப்புகளை மாற்றியமைக்க முயல்பவர்களே மெய்யான அரசியல் செய்பவர்கள். அவர்கள் அதை வாழ்நாள் முழுக்கச் செய்வார்கள்.
அவ்வாறு செய்யவேண்டும் என்றால் நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை என்பது நேர்நிலையான உணர்வுகளில் இருந்தே வரும். எதிர்ப்பவர்களுக்கு நிலையான உணர்ச்சிகள் இருக்காது. பொங்கிப்பெருகி, உடனே சோர்வின் எல்லைக்குச் சென்று, மீண்டும் பொங்கிக்கொண்டிருப்பார்கல். எதை எதிர்க்கிறார்களோ அதைப்போலவே தாங்களும் ஆகிக்கொண்டிருப்பார்கள். எதிர்ப்புக்காக எல்லாவற்றையும் எளிமைப்படுத்துவார்கள். எதிரிகளை எளிமைப்படுத்துவார்கள். ஆகவே எதிரிகளையும் நண்பர்களையும் புரிந்துகொள்ளாமல் இருப்பார்கள். தங்கள் தரப்பை எளிமைப்படுத்துவார்கள். விளைவாக பிடிவாதமும் அதன் விளைவான சோர்வும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
எதிர்மனநிலையில் இருப்பவர்கள் ‘அரசியல்நோயாளிகள்’. நம்பிக்கையுடன் தொடர்ந்து செயல்படுபவர்களே மெய்யான மாற்றத்தை உருவாக்குபவர்கள். அவர்கள் அன்றாடக் கட்சியரசியலில் திளைக்க மாட்டார்கள். தினமும் பொங்கிக்கொண்டிருக்கமாட்டார்கள். அவர்கள் அரசியலை ஒட்டுமொத்த புரிதல் மற்றும் ஒரு பகுதியாகவே வைத்திருப்பார்கள். முழுநேர அரசியல் ஈடுபாடு என்பது ஒன்றும் செய்யாமலிருப்பவர்களின் ஒருவகை கேளிக்கை மட்டுமே
ஜெ
பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
நீங்கள் பல கட்டுரை மற்றும் காணொளி வாயிலாக சொல்லியது, இன்றைய யுகம் மனிதனை ஒரு standard ரசனை கொண்டவனாக மற்றும் நுகர்வோராக மாற்றுகிறது என்று. அல்லது ஒரு பொது அரசியல் சார்பாளனாக மாற்றுகிறது. நேற்று வெளி வந்த தேர்தல் முடிவுகள் முன்னிட்டு வந்த வாதங்களை கவனித்தேன்.நான் ஒரு கிராம சுழலில் பிறந்தவன். எனது நண்பர்கள் பல வகை உண்டு. ஒரு நண்பர் தனது சூழல் காரணமாக படிக்க இயலாது 12ஆம் வகுப்பபோடு நிறுத்தி லாரி டிரைவராக சென்றவர்.
இன்னொருவர் எனது உயர் அதிகாரியாக இருந்தவர், பெங்களூரில் பிறந்தவர், வசதி மிகுந்தவர். சிங்கப்பூரில் இருக்கிறார்.இருவரிடம் பேசிய பொழுது ஒரே வகையில் காழ்புணர்ச்சி ஆற்றினர். ( அவர்கள் சொல்லிய சராம்சம், நம் மதம் ஒற்றை மதமாக மாற வேண்டும், அப்பொழுது எதிரிகள் அடங்குவர் )
அப்போது தான் தாங்கள் கூறிய standard personality பற்றிய விபரம் எனக்கு உரைத்தது. இந்த இருவருக்கும் உள்ள வாழ்வியல் வித்யாசம் பூமிக்கும், ஜூபிட்டர்கும் இருக்கும் தூரம், ஆனாலும் காழ்ப்புணர்ச்சி ஒரே போல் இருக்கிறது. இத்தனைக்கும் வேறு மாநிலம் இருவரும்.
எனக்கு ஒரு வேளை இலக்கிய அறிமுகம் இல்லாமல் போய் இருந்தாலோ, இல்லை உங்கள் எழுத்தின் அருகாமை இல்லை உரைகள் கிடைக்காமல் இருந்தாலோ எதை நான் இழந்திருப்பேன் என்று உணர்ந்தேன். அரசியல் பேதத்தால் நான் இதை சொல்லவில்லை.
பண்பாடு சார்ந்த பயிற்சி,வாசிப்பு,ஆர்வம் இல்லாத இரு வேறு வாழ்வியல் முறை கொண்டவர்கள் எப்படி ஒரே போல் சிந்திக்கிறார்கள் என்று புரிந்த பொழுது தங்கள் கூற்றின் உண்மையை உணர்ந்தேன். நான் அவர்களை விட மேல் என்ற ஆணவதில் பேசவில்லை. ஆனால் அந்த ‘Standard’ ஆளுமையாக நான் விரும்பவில்லை.
நன்றி
ராம்.
அன்புள்ள ராம்,
நேர்நிலை ஆளுமையாக மாறுதல் என்பது இன்றைய சூழலில் ஒரு பெரிய தவம் போல. மொத்த ஊடகச்சூழலே நம்மை எதிர்மனநிலை நோக்கி செலுத்திக்கொண்டிருக்கிறது. ஒன்று, எதிர்மனநிலைகொண்டவர்களை, அச்சூழலைத் தவிர்த்தல். இரண்டு, நேர்நிலையான சூழலில் இருத்தல், நேர்நிலைச் செயல்களில் நம்மை மூழ்கடித்துக்கொள்ளுதல். இரண்டுமே தேவை. இரண்டில் ஒன்று இல்லையென்றாலும் மீள முடியாது.
ஜெ