இன்று தேர்தல் செய்திகள் பக்கமே செவி சாய்க்கக் கூடாது என்று சூளுரை. ஆனால் மாலை தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த செய்தித்தொகுப்பில் போகிற போக்கில் இந்தக் காட்சி கண்ணில் பட்டது. ஹேமா மாலினி ஏதோ ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்தார். மதுராவில் போட்டியிட்டார் போல. வெற்றிப்பெற்றாரா இல்லையா என்று கவனிக்கவில்லை. ஆனால் அவருக்குப் பின்னால் மாட்டப்பட்டிருந்த ஓவியம் கவனத்தை பறித்தது. வெண்முரசு ஓவியம்! பிரிண்ட் போட்டு தாராளமாக வினியோகஸ்தம் நடக்கிறது என்று நினைக்கிறேன்.
சுசித்ரா
நீலம் நாவலுக்காக ஷண்முகவேல் வரைந்த ஓவியம் அது. நீலம் நாட்களை நினைத்துக் கொள்கிறேன். வெண்முரசு நாவல்களில் கிட்டத்தட்ட எல்லா அத்தியாயங்களையும் அன்றன்று எழுதியது நீலம் நாவலில்தான். ஒவ்வொரு அத்தியாயமும் சிறியது, ஆனால் ஒன்றை எழுத பல மணிநேரம் ஆகியது. சிலசமயம் எட்டு மணி நேரம்கூட.
சில அத்தியாயங்கள் தொடங்கவே முடியாதபடி அசையாமல் நின்றுவிட்டன. முட்டி மோதி தவித்து, உயிர்விடலாம் என்னும் எல்லை வரைச் சென்று, சட்டென்று ஒரு சொல்லில் திறந்துகொண்டவை உண்டு. வெறிகொண்டு உள்ளத்திலெழும் சொற்களையெல்லாம் எழுதி எழுதிக் குவித்து அழித்து மீண்டும் எழுதி ஒரு கட்டத்தில் ஒரு படிமத்தில் இருந்து பற்றிக்கொண்டவை உண்டு.
அந்த கொந்தளிப்பின் நாட்களை, சாவுக்கும் வாழ்வுக்குமான மெல்லிய கோடு வழியாக நடந்த தருணங்களை, பித்துக்கும் அப்பாலுமென துடித்த நிலைகளை ஏன் இன்று இத்தனை ஏக்கத்துடன் எண்ணிக்கொள்கிறேன் என்று தெரியவில்லை. அவை உச்சநிலைகள். எல்லா உச்சநிலைகளும் துன்பமா இன்பமா என்று பிரித்தறியமுடியாதவை. அச்சமூட்டி விலக்குபவை, ஆழ இழுத்து கொண்டுசெல்பவையும்கூட.
அன்றெல்லாம் பெரும்பாலான நாட்களில் அத்தியாயத்தை மதியம் கடந்தபின்னரே அனுப்புவேன். ஸ்ரீனிவாஸன் அழைக்கத் தயங்குவார், சுதா நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார். சில அத்தியாயங்கள் இரவு எட்டு மணிக்கு அனுப்பப்பட்டன. ஷண்முகவேல் அதற்குப்பின்னர்தான் வரைய ஆரம்பிப்பார். இரவு 12 மணிக்கு படத்துடன் அத்தியாயம் வலையேறிவிடும். என்னைப்போலவே அவரும் ஒரு பைத்தியநிலையில் இருந்தார். முழுநேரமும் வெண்முரசில் வாழ்ந்தார். இன்று அவருக்கும் ஏக்கம் நிறைக்கும் நினைவுகள் அவை.
அப்படி ஒரு வேகத்தில், சில மணிநேரத்தில், வரையப்பட்ட நீலம் நாவலின் ஓவியங்கள்தான் வெண்முரசு ஓவியங்களிலேயே தலைசிறந்தவை. தமிழில் புனைகதைகளுக்கு வரையப்பட்ட ஓவியங்களிலேயே அவைதான் சிறந்தவை. அவை சட்டென்று இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்குமே புகழ்பெற்றுவிட்டன. பல்வேறு இணையப்பக்கங்களில் சொல்லியும் சொல்லாமலும் எடுத்தாள்கின்றனர். பல ஓவியர்கள் அவற்றை சற்றே உருமாற்றி அட்டைப்படங்களாக ஆக்கிக்கொண்டனர். ஓரிரு முறை வழக்கறிஞர் அறிவிப்பை அனுப்பி ஷண்முகவேலுக்கு ஊதியம் வந்துள்ளது. ஆனால் அதையே முழுநேரமாகச் செய்யவும் முடியாது.
இந்த ஓவியங்களை வணிகரீதியாக அச்சிட்டு விற்பது மதுராவில் மட்டுமல்ல உடுப்பி, பண்டரிபுரம் போன்ற எல்லா புகழ்பெற்ற கிருஷ்ணன் ஆலயங்களிலும் நிகழ்கிறது. நானே பார்த்திருக்கிறேன். பிளாஸ்டிக் தாள்களிலும், துணித்திரைகளிலும் டிஷர்ட்களிலும் அச்சிடப்பட்ட இந்த ஓவியங்களைக் கண்டிருக்கிறேன். அண்மையில் கூட காசியில் இவை ஆட்டோ ரிக்ஷாக்களின் பின்பக்கம் அச்சிடப்பட்டிருந்ததைக் கண்டேன். ராதையின் மடியில் கிருஷ்ணன் படுத்திருக்கும் ஓர் ஓவியம் கிட்டத்தட்ட ஒரு பொதுச்சொத்துபோல. அதற்கு பல உருமாற்றங்களும் அமைந்துள்ளன.
காப்புரிமை மீறல்தான். ஆனால் கண்டறிந்து சட்டநடவடிக்கை எடுப்பது ஓர் அமைப்பால் மட்டுமே இயல்வது. இளையராஜா போராடுவது அதற்காகவே. தனிநபர்களால் ஒன்றும் செய்யமுடியாது.
நீலம் ஓவியங்களை மட்டுமே கொண்டு ஓர் அழகிய காலண்டரை விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் 2017ல் வெளியிட்டது. ஆனால் அந்த விற்பனைத்தொகையை விற்பனையாளர்களிடமிருந்து திரும்ப பெற முடியவில்லை. நிதியிழப்பு. இப்போது நீலம் நாவலுடன் அந்த படங்கள் உள்ளன. என் பார்வையில் தமிழில் அச்சிடப்பட்ட நூல்களிலேயே நீலம் போல அழகான இன்னொன்று இல்லை. பார்க்கவும், சொல் சொல் என வாசிக்கவும்.
*
வெண்முரசு முன்விலைத்திட்டத்தில் செம்பதிப்பாகவும், பின்னர் ஓவியங்கள் இல்லாமல் பொதுப்பதிப்புகளாகவும் தொடர்ச்சியாக வெளிவந்தபடியே உள்ளது. பலநூல்கள் நான்காம் பதிப்பை நோக்கிச் செல்கின்றன. ஆனால் நீலம் மட்டும் படங்களில்லாமல் அச்சிடப்படவே இல்லை. அப்படி அந்நாவலைப் பார்க்க எவருமே விரும்பவில்லை. படங்களுக்காகவே அதை வாங்கிக்கொண்டே இருந்தவர்கள் உண்டு. என்னிடம் இருபது பிரதிகள் இருந்தன, ஒன்றுகூட இப்போது இல்லை. புதிய பதிப்பைத்தான் வாங்கவேண்டும்.
வெண்முரசு அனைத்து நூல்களும் ஒரே சமயம் கிடைக்கும்படி அச்சிடப்படுகின்றன. 100 பேருக்குமேல் அனைத்து நூல்களுக்கும் முன்பதிவுசெய்து பணம் அனுப்பியுள்ளனர். பிழைதிருத்தம் பார்த்து அச்சுக்கு அனுப்பும் பணியும் அச்சுப்பணியும் இணைந்தே நிகழ்கின்றன. ஜூலையில் நூல்கள் பணம் கட்டியவர்களுக்கு அனுப்பப்படும். கடைகளிலும் கிடைக்கத் தொடங்கும்.
வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு
விஷ்ணுபுரம் பதிப்பகம் இணையப்பக்கம் https://www.vishnupurampublications.com/