எழுத்தாளர்களின் வாழ்க்கை, கடிதம்

சூடாமணியின் வாழ்க்கையை வைத்து கமலதேவி எழுதிய கதையினைப் பற்றிய கேள்வியில் இப்படிச் சொல்லியிருந்தீர்கள். (எழுத்தாளர்களைப்பற்றி கதை எழுதலாமா?)

ஒருவர் உடற்குறைபாடு உள்ளவர் என்று சொல்வதே அவரை இழிவுசெய்வது என ஒரு பழைய உள்ளத்துக்குத் தோன்றும், ஏனென்றால் அவர் உள்ளூர அப்படி நினைக்கிறார்.

இந்த விஷயத்தை நானும் உணர்ந்திருக்கிறேன். பொதுவாக சிறப்புக் குழந்தையின் பெற்றோருக்கு டயக்னோஸிற்கு பிறகு முதலில் ஒரு மறுத்தல் கட்டம் வரும். அதன் பின் மெல்ல மெல்ல ஏற்றுக் கொண்டு, குழந்தையை வளர்ப்பதற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டம் ஒன்றுண்டு. சிலபல பெற்றோர்கள் அந்த இரண்டாவது கட்டத்திற்கு வரவே மாட்டார்கள்.  மீண்டும் மீண்டும் வெவ்வேறு மருத்துவர்களைப் போய் பார்ப்பார்கள். யாரேனும் உங்க பிள்ளைக்கு ஒன்னுமில்லீங்க என்று சொல்லிவிட மாட்டார்களா என்ற எதிர்பார்ப்புதான் காரணம். அடுத்தது குணப்படுத்துகிறோம் என்று வலைவிரிக்கும் போலி மருத்துவர்களிடம் போய் கொஞ்சம் பணத்தை இழப்பார்கள்.  பின்னர் அப்படியே குழந்தையை ஏதேனும் பள்ளி/டே  கேர் செண்டரில் விட்டுவிட்டு, தங்கள் பொறுப்பே பணம் தருவது மட்டுமே எனும் அளவிற்கு மாற்றிக் கொள்வார்கள்.

இதைச் செய்யக் காரணம் அவர்களுக்கு பொதுவாக மாற்றுத்திறனாளிகளின் மீது பழமையான ‘பாவம் செய்தவர்கள்’ எனும் பார்வையோ அல்லது வாழத் தகுதியற்ற குறைபட்டவர்கள் என்ற எண்ணமோ உள்ளூர இருப்பதுதான். கடைசிவரை தன் குழந்தைக்கு இருக்கும் குறைபாட்டை வெளியே பேசவே கூசுவார்கள். எனவே தங்களது கூற்றை நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட புனைவுக்கான எல்லைகளை சுட்டியிருந்தீர்கள். அதன் மூலம் எனக்கிருந்த சில தயக்கங்கள் உடைந்தன. தெளிவு தந்தமைக்கு நன்றி.

அன்புடன்,

லக்ஷ்மி

அன்புள்ள லக்ஷ்மி

நம் சமூகத்தின் பொதுவான மனநிலை அது. எனக்கும் அப்படி ஒரு மனநிலையே இருந்தது. 1992ல் நித்ய சைதன்ய யதியைச் சந்திக்கும் வரை. அவருக்கு உடற்குறைபாடு உடையவர்கள் மேல் ‘அனுதாபம்’ கொஞ்சம்கூட இல்லை என்று முதலில் கவனித்தபோது அதிர்ச்சியாகக்கூட இருந்தது. அதுவே இயல்பான உளநிலை என உணர கொஞ்சம் பிந்தியது. அவர் அனைவரிடமும் அவர்களின் தகுதிகளையே பார்த்தார். பிரியம், அறிவு ஆகியவற்றையே கவனித்தார். அனைவருமே ஏதேனும் குறைபாடு கொண்டவர்கள்தான். ஒரு மனிதர் இன்னொருவரிடம் இசைவுடன் இருக்கவேண்டும், ஆனால் அனுதாபம் கொள்வது அபத்தமானது. இங்கே எவரும் அப்படி அரிதான பிறவிகள் அல்ல. வாழ்ந்து செல்லும் சில ஆண்டுகளில் என்னென்னவோ சிக்கல்களைச் சந்திக்கிறோம். நோய், இழப்புகள், உறவுச்சிக்கல்கள், தனிமை… இதில் எவர் எவர்மேல் அனுதாபம் கொள்வது? ஆனால் அந்த உளநிலை நோக்கிச் செல்ல சமூகமே கொஞ்சம் முன்செல்லவேண்டியுள்ளது

ஜெ

முந்தைய கட்டுரைகுரு நித்யா காவிய முகாம் பதிவு – ரம்யா
அடுத்த கட்டுரைபாஞ்சராத்ரம்