அன்றன்றிருத்தல்.

இந்தியாவில் ஒருபோதும் சலிப்பூட்டாத கொண்டாட்டமாக இருந்தது தேர்தல். பிரிட்டிஷ் ஆட்சியில் 1920 ல் மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதும் தொடங்கியது இந்த மாபெரும் கேளிக்கை.அன்று பொதுமக்கள் அனைவருக்கும் வாக்குரிமை இல்லை, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரங்களும் பெரிதாக இல்லை. ஆனாலும் அது இன்றுள்ள தேர்தல்களின் எல்லா இயல்புகளையும் கொண்டிருந்தது. சமூகத்தில் ஏற்கனவே இருந்த பிளவுகளை பெரியதாக்கியது, புதிய பிளவுகளை உருவாக்கியது. போலிவாக்குறுதிகளும், மிகையுணர்ச்சிகளும் நுரைத்தன.

நம்பமுடியாத எழுச்சி வீழ்ச்சிகள் நடைபெறும் மகத்தான சூதாட்டமாக தேர்தல் இருந்தது. புதிய தேவர்கள் தோன்றினர், பழைய கடவுள்கள் சரிந்து புதைந்தனர். 1952ல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டதும் அது உலகின் மாபெரும் ஜனநாயகக் கொண்டாட்டமாக ஆகியது. சூதாட்டமாகவும். (எந்தக் கொண்டாட்டத்திலும் கொஞ்சம் சூது இருக்குமோ?)

ஆனால் இந்தச் சித்திரத்தை நாம் வரலாற்றுநூல்களில் காணமுடியாது, அதற்கு புனைவிலக்கியங்களையே படிக்க வேண்டும். தமிழில் அந்தத் தேர்தல் சூழலை ஓரளவு காட்டிய நாவல்கள் என்றால் க.நா.சு எழுதிய ‘பொய்த்தேவு’, மற்றும் பாவை சந்திரன் எழுதிய ‘நல்ல நிலம்’தான். அச்சித்திரத்தை அளிக்கும் செவ்வியல் பண்பு கொண்ட இந்திய நாவல்கள் தகழி சிவசங்கரப் பிள்ளையின் ‘ஏணிப்படிகள்’ கிரிராஜ் கிஷோர் எழுதிய ‘சதுரங்கக் குதிரைகள்‘.

ஆனால் இந்த ஆண்டு முதல்முறையாக தேர்தல் மக்களுக்குச் சலிப்பூட்டியதைக் கண்டேன். டீக்கடையில் ஒருவர் சென்ற வாரம் தேர்தல் முடிந்து மோடி பிரதமர் ஆகிவிட்டார் என்றே பேசிக்கொண்டிருந்தார். அவரிடம் தேர்தல் முடிந்தது, முடிவு வரவில்லை என்று நான் சொன்னேன். அவரால் நம்ப முடியவில்லை. நான் கேலி செய்வதாக நினைத்துக்கொண்டார்.

பல மாதங்களாக தேர்தல்கள் நீண்டமை இதற்கு முன்பு இல்லாதது. தேர்தலை வணிகமாக கொண்டு, அதை ஒரு கொந்தளிப்பாக நிலைநிறுத்திக்கொண்டிருக்க முயலும் ஊடகங்களும் சோர்ந்துவிட்டன. ஒரு கட்டத்தில் தேர்தல் எங்கோ எவருக்கோ நடந்துகொண்டிருக்கிறது என்னும் உணர்வு உருவாகிவிட்டது. கிரிக்கெட் போல. நான் சின்னப்பையனாக இருக்கையில் டெஸ்ட்மேட்ச்கள்தான். அவை அறிவிக்கப்பட்ட நாள் முதல் கிரிக்கெட் பிரியர்கள் மப்படித்து உலவிக்கொண்டிருப்பார்கள். ஐபிஎல் எல்லாம் வந்தபின் கிரிக்கெட் பற்றிய எந்த பரபரப்பும் எங்குமில்லை.

நான் ஆறுமாதம் முன்னரே உறுதியான முடிவை எடுத்திருந்தேன், தேர்தல் மனநிலைகளில் இருந்து முழுமையாக விலகிவிடுவது என்று. ஏனென்றால் இந்தத் தேர்தலில் எந்த கனவுகளும், எதிர்பார்ப்புகளும் இல்லை. ஆகவே எல்லா தரப்பிலும் எதிர்மறை உணர்ச்சிகளே இருந்தன. கசப்புகள், காழ்ப்புகள், ஏளனங்கள், அவதூறுகள், வசைகள். அவை இன்றைய நவீன ஊடக வளர்ச்சியால், சமூக ஊடகங்களால் பேருருக்கொண்டு நம்மைச் சூழ்ந்துகொள்கின்றன. (ஊடகம் என்பது சொறிக்கிருமி. சமூக ஊடகம் என்பது நாமே மேற்கொண்டு சொறிந்து பரப்பிக்கொள்வது). எங்கோ எவரோ அதிகாரமேற நாம் நம் உள்ளத்தை எதிர்மறை உணர்ச்சிகளால் நிறைத்துக்கொண்டு உழல்வதைப்போல மடமை வேறில்லை. 

இங்கே அதிகாரம் எப்படி நிகழ்கிறது, எப்படி கைமாறப்படுகிறது, உண்மையான அதிகாரம் எங்கே எவரிடமிருக்கிறது என்பதெல்லாம் கொஞ்சம் மேலே சென்றால் தெரிய ஆரம்பித்துவிடுகிறது. சினிமா குறுக்கு வழியாகச் சென்று எல்லா உயர்மட்டத்தையும் பார்க்கச்செய்யும் ஓர் உலகம். அரசியலை நம்பி அதில் உழல்பவர்கள் நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே. ஊடகங்கள் உருவாக்கும் உலகை மெய்யென நம்புபவர்கள். (அதற்கு அப்பால் உண்மை என எது சொல்லப்பட்டாலும் அதற்கு ‘நம்பகத்தன்மை’ இல்லை என்று சொல்லிவிடுவார்கள்) அவர்கள் அறிந்தே பாய்ந்து திளைக்கும் ஓர் உலகம்தான் சமகால அதிகார அரசியல். அவர்களுக்கிருக்கும் சலிப்பை அதன் வழியாகக் கடக்க முயல்கின்றனர். எதிர்மறை உணர்வுகள் எளிதில் நம்மை ஆட்கொண்டு மூழ்கடிப்பவை. சலிப்பு அகன்று அங்கே கசப்பும் காழ்ப்பும் குடியேறுகின்றன. அவை ஓர் எல்லையில் பெரும்சோர்வாக எஞ்சுகின்றன.

நான் மிகத்தீவிரமாக ஈடுபட்ட தேர்தல் என்பது கல்லூரிக்காலத்தில் ,1977ல், நெருக்கடிநிலை முடிந்து நிகழ்ந்த பொதுத்தேர்தல்தான். நினைத்தே இருக்காதபடி ஜனதாக்கட்சி வென்றது. ஒரு பெரிய தொடக்கமாக அது தோன்றியது. மாதக்கணக்கில் களியாட்டமிட்டோம். அந்த அரசின் பூசல்கள், அதன் வீழ்ச்சி மிகப்பெரிய சோர்வாக அமைந்தது. அதன்பின் மெல்லிய ஆர்வம் வந்தது 1989ல் வி.பி.சிங் பிரதமர் ஆனபோது. அந்த நம்பிக்கையும் மறைந்தபோது பெரிய ஏமாற்றம் வரவில்லை. அதன்பின் இன்றுவரை எனக்கு எந்த தேர்தலிலும் மிக மெல்லிய ஓர் ஆர்வம் மட்டுமே. எவர் நிற்கிறார்கள், எவர் வென்றார்கள் என மேலோட்டமாகத் தெரிந்துகொள்வேன். பிரச்சாரங்களை கவனிப்பதே இல்லை.

நான் நம்பும் அரசியல் சிற்றலகு அரசியல் ( மைக்ரோ பாலிடிக்ஸ்). அது அதிகாரத்தை நம்பி இயங்குவது அல்ல. அரசைக் கைப்பற்றும் நோக்கம் கொண்டது அல்ல. சமூகத்தின் சிற்றலகுகளில், ஏதேனும் ஒரு தளத்தில், தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் செயல்படுவது. அதன் வழியாக மெல்ல மெல்ல சமூகத்தின் உளநிலைகளையும், சமூகக் கட்டமைப்பையும் மாற்றுவது. நீண்டகால அளவில் உறுதியான நீடித்த மாற்றங்களை உருவாக்குவது. காந்திய வழியிலான அரசியல் அதுதான்.நான் இதுவரை முன்வைத்துள்ள எல்லா அரசியல் ஆளுமைகளும் அந்தத் தளத்தில் செயல்படுபவர்கள் மட்டுமே.

இம்முறையும் முழுக்கவே என்னை விலக்கிக் கொண்டேன். என் உலகில் வாழ்ந்தேன். ஒன்றைக் கவனித்தேன். என் மூளை ஒரு வகையில் அதிதீவிரத்தை மட்டுமே நாடுகிறது. இந்த நாட்களில் நிறைய பயணங்கள். தத்துவ வகுப்புகள்,காணொளிப் பதிவுகள். நடுவே எளிதாக ஏதாவது வாசிக்கலாம் என்றால் ஐந்து பக்கம் தாண்ட முடியவில்லை. சுஜாதா, கர்ட் வேன்காட் என பலரை முயன்று பார்த்தேன். பாட்டு கேட்கலாம் என்றால் ஐந்து நிமிடம்கூட அமர முடியவில்லை. பொதுவாகவே என்னால் சினிமா, சீரியல் எல்லாம் பார்க்கவே முடியாது. ஆனால் கடுமையான தத்துவ, சரித்திர நூல்களை வாசிக்க முடிகிறது. எந்த அளவுக்கு ஒரு நூல் மூளையைக் குடைகிறதோ அந்த அளவுக்கு மூழ்க முடிகிறது.

ஆகவே சென்ற நாட்களில் வாசித்தவை சைவ ஆகமங்கள், பாஞ்சராத்ர ஆகமம் சார்ந்த இரண்டு சம்ஹிதைகள், சாங்கிய காரிகைக்கான உரைகள்… என்ன வாசிக்கிறீர்கள் என்று எவரேனும் கேட்டு இந்தப் பதிலைச் சொன்னால் அந்தியூர் மணி தவிர எல்லாரும் என்னை மரைகழன்றவன் என சொல்லிவிடுவார்கள். அவர் ஒருவர்தான் காலை எழுந்து காபி குடிப்பதுபோல பிரபுலிங்கலீலை அல்லது சிவஞானசித்தியார் வாசித்துக் கொண்டிருப்பார்.

இந்த நாளையும் வைகானஸ ஆகமக்குறிப்புகளில் செலவிட உத்தேசம். என்னைப்பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் முக்கியம். அதை எண்ணி எண்ணிச் செலவிடவேண்டிய நிலையில் இருக்கிறேன். அன்றன்று என்ன செய்தேன், எதை ஈட்டினேன் என்பது மட்டுமே என் கணக்கு. கற்பதெல்லாம் லாபம். எழுதிவிட்டால் வட்டியும் சேர்த்து.

இந்த நாள் கொந்தளிக்கப்போகிறது என்று காலையில் எண்ணிக்கொண்டேன், ஆனால் அதெல்லாம் என் வீட்டுக்கு வெளியே. இரவணைந்தபின் யார் பிரதமர் என்று கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று எழுத ஆரம்பித்தேன். தேர்தல்நிலவரத்தை செய்தியாளர்களிடமிருந்து அறிவதை விட வணிகர்களிடமிருந்து அறிவதே நல்லது என்பது என் எண்ணம்.  உண்மை நிலவரத்தை, எந்த மயக்கங்களும் இல்லாமல் தெரிந்து வைத்திருப்பவர்கள் பங்குச்சந்தையில் கோடிகளை கொட்டியிருப்பவர்கள் மட்டும்தான். அவர்களுக்கு கொள்கை எல்லாம் இல்லை. அதெல்லாம் காசில்லாதவர்களின் உலகம். அவர்களுக்கு யதார்த்தம் பணத்துடன் இணைந்தது. சந்தை மதிப்பு கொண்டது. அவர்கள் அனைவருமே இரண்டு மாதம் முன்னரே என்ன நிகழுமெனச் சொல்லியிருந்தனர்.

வடமாநிலங்களில் பாரதிய ஜனதாவுக்கு இழப்பு நிகழும் என்று நானும் கணித்திருந்தேன். சமஸ் உட்பட இதழாளர்களான நண்பர்களிடம் என் கணிப்பைப் பகிர்ந்திருந்தேன். நிதீஷ் கட்சிமாறும் வரை ஆட்சிமாற்றம் நிகழும் என்றே வணிகமுதலீட்டாளர்கள் உறுதியாகச் சொன்னார்கள். நிதீஷ் அக்கூட்டணியில் இல்லாமலிருந்திருந்தால் இப்போதும் பாரதிய ஜனதா ஆட்சியை பிடித்திருக்க வாய்ப்பில்லை. மோடியின் நாடகங்கள் மற்றும் தோரணை மேல் பெரும் சலிப்பை சென்ற சில ஆண்டுகளாகவே கொண்டிருந்தேன். மோடி திரும்பவும் வந்தது ஏமாற்றமளிப்பதுதான்.

ஆனால் ஒருவகையில் இதுவும் நல்லது என்று எண்ணிக்கொள்ளலாம். அரசுக்கு ஒரு மூக்குக் கயிறு போடப்பட்டிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் பாரதியஜனதாவுக்கு விழுந்த அடிதான் இத்தேர்தலின் முதன்மைச் செய்தி. மதவாதவெறி இந்தியாவால் ஒருபோதும் ஏற்கப்படாது. இந்த தேசம் பன்மையின் நிலம். இந்து மதம் இந்த இந்துத்துவ அரசியல்வாதிகளிடமிருந்து விலக்கப்பட இது வழிவகுக்குமென்றால் ஒரு திருப்புமுனை என்றுகூடச் சொல்வேன்.

ஆனால், இதோ இந்த வரியுடன் என் அரசியலார்வம் மீண்டும் மூடப்படுகிறது. இனி அரசியல்களத்தை ஐந்து நிமிடங்களுக்குமேல் கவனிக்கவேண்டுமென்றால் அடுத்த தேர்தலின்போது மட்டுமே.

 

முந்தைய கட்டுரைதத்துபூஜை
அடுத்த கட்டுரைIs Yoga for Everyone?