கற்களில் எஞ்சும் கனவு

திரும்பத் திரும்ப வரலாற்றுக்குச் செல்வது எதற்காக என்று வெவ்வேறு வகையில் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அறிவை தீட்ட, நான் எவரென உணர, என் பண்பாட்டை அறிய…. ஆனால் சுருக்கமான பதிலென்பது கனவினில் வாழ என்பதே.

நனவு மீது சலிப்பென்பது எந்த எழுத்தாளனுக்கும் உரிய அடிப்படைப் பண்பு. இலக்கியம் என்னும் செயல்பாடே நனவிலிருந்து கனவு நோக்கி ஒரு பயணம்தான். வரலாறென்பது நாம் நம் நினைவுகளில் இருந்தும் எதிர்காலக் கற்பனைகளில் இருந்தும் நிகழ்காலத்திற்கென உருவாக்கிக்கொள்ளும் கனவின் அடித்தளம்.

நான் வரலாற்றை விரிவாக்கிக் கொண்டே செல்கிறேன். வரலாறு எனக்குப் போதவில்லை. என் திருவிதாங்கூர் நிலத்தின் கதைகள். சேரர் வரலாறு. சோழர்கள். அதற்கு முன் ஆய் அண்டிரன். அதற்கும் முன் இங்கிருக்கும் தொன்மையான நடுகற்கள், பெருங்கற்கள், குடைவரைகள். அதற்கும் அப்பால்? அதற்கும் அப்பாலுள்ளதற்கு இடமில்லை, காலமும் இல்லை. அது உலகமெங்கும் பரவியிருக்கும் ஒற்றைப்பெரும்படலம். ஒரே அகம், ஒரே நுண்மை.

அதைத்தேடியே பிம்பேட்காவுக்கோ தேன்வரந்தைக்கோ செல்கிறேன். பாறைக்குடைவு ஓவியங்களை, தொன்மையான மலைக்குகைகளை நாடுகிறேன். நான் அங்கு உணரும் ஒரு அகால உணர்வை மலைமுடிகளின் அடியில் மட்டுமே உணர்ந்திருக்கிறேன். இமையத்தில், அதற்கிணையாகவே மௌண்ட் சாஸ்தாவில்.

சென்ற மே 30 அன்று நண்பர்களுடன் கேரளத்திலுள்ள தொன்மையான தொப்பிப்பாறை அல்லது குடைப்பாறைகளையும், கல்லறைகளையும் பார்ப்பதற்காகச் சென்றேன். முந்தையநாளே நானும் கிருஷ்ணனும் சிபியும் பிரபுவும் ஈரோட்டில் இருந்து கிளம்பி கோவை வந்தோம். நடராஜனின் நட்சத்திரவிடுதி வசதி கொண்ட இல்லத்தில் தங்கினோம். அங்கிருந்து மே 31 அன்று காலையில் கேரளம். நடராஜன், நான், கிருஷ்ணன், பிரபு, பவித்ரா, சிபி, டாக்டர் ஜெகன், திருப்பூர் ஆனந்த்குமார் என ஏழுபேர் இரண்டு கார்களிலாக

குருவாயூர் அருகே இருக்கும் செறுமன்காடு அருகே குடக்கல்பறம்பு என்னும் இடத்தில் சிறிதும் பெரிதுமாக 69 குடைக்கற்கள் உள்ளன. உலகமெங்குமுள்ள கற்காலத்து சின்னங்கள் நெடுங்கல், (Menhir) கல்லறை (cist), கல்வளையம் (Round) என மூன்றுவகை. தமிழகத்திலும் அவை ஏராளமாகவே உள்ளன. அடுத்தகாலகட்டத்தைச் சேர்ந்தவை குகை ஓவியங்கள், பாறையோவியங்கள். அதற்கும் அடுத்த, சற்றே பண்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்தவை இந்த குடைக்கற்கள்.

இவற்றை கல்அறைகளின் அடுத்த கட்டம் என்றே சொல்லவேண்டும். செதுக்கப்பட்ட கற்களை சீராக அடுக்கி கல்லறைகளை உருவாக்கியுள்ளனர். அவை மழையில் நனையக்கூடாது என கூரை போல குடைபோல பாறையைச் செதுக்கி தூக்கி வைத்துள்ளனர். அவை காளான் போன்ற அமைப்புடன் பல்லாயிரமாண்டுகளாக நின்றுகொண்டிருக்கின்றன. கல்லறைக்குமேல் கூரை என்பது தொல்சின்னங்களில் மிக அரிது – ஆசியாவில் சில இடங்களில் உள்ளது என்கிறார்கள்.  காளான் வடிவ தூபிகள் எனக் கொண்டால் இவற்றை நெடுங்கற்களின் வளர்ச்சி வடிவங்கள் என்றும் சொல்லலாம்.

இவற்றின் காலத்தை தோராயமாகவே ஊகிக்க முடியும். இவற்றிலுள்ள தொழில்நேர்த்தியைக்கொண்டு ஐந்தாயிரம் முதல் ஆறாயிரம் ஆண்டுகள் வரை தொன்மையானவையாக இருக்கலாமென கணிக்கப்படுகிறது. அதற்கும் முன்னராகக்கூட இருக்கலாம். ஏனென்றால் இவ்வகையான தொல்சின்னங்களின் காலக்கணிப்புகள் எல்லாமே தொடர்ச்சியாக மேலும் தொன்மை நோக்கி நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

லாட்டரைட் எனப்படும் செம்மண்படிவப்பாறையில் இவை செதுக்கப்பட்டுள்ளன. (சொறிப்பாறை என்கிறார்கள். வெட்டி வீடுகட்ட பயன்படுத்தப்படுவதனால் வெட்டுகல் என்றும் சொல்லப்படுவதுண்டு) இந்தப்பாறை நீர் ஊறினால் சற்று மென்மையானதாக ஆகும். நீரை உள்ளிழுத்து மண்ணுக்குள் செலுத்தும். இவற்றின்மேல் மரங்களும் வளரும். மழைக்காலத்தில் இந்தப்பாறை ஊறி மென்மையாக இருக்கையில் கடினமான கருங்கல்பாறைத்துண்டுகளைக் கொண்டு இவற்றை வெட்டிச் செதுக்கி எடுத்துள்ளனர்.

கற்கால இறுதியில் செய்யப்பட்டவை இவை என்று கொள்கையில் இவற்றிலுள்ள வடிவநேர்த்தி திகைப்பூட்டுவது. மானுடனின் படைப்பூக்க நிலையின் சான்று இது. அது மனிதனின் நிகழலாம், ஆனால் மனிதனை மீறிய ஒன்று. தூக்கணங்குருவியில் கூடு உறைவதுபோல மானுடனில் கலை வாழ்கிறது. இந்த கல்காளான்களின் நடுவே சுற்றி வருகையில் அறிவால் புரிந்துகொள்ள முடியாத, ஆழுள்ளம் அடையாளம் கண்டுகொண்ட ஒரு கலைப்படைப்பின் முன் நின்றிருக்கும் தவிப்பு உள்ளத்தை ஆட்கொள்கிறது.

இன்னொரு தொப்பிக்கல் வைப்பிடம் அரியன்னூர். அருகில்தான் உள்ளது. 1951ல்தான் இது முறையாக ஆவணப்படுத்தப்பட்டது. அதுவரை இது இங்கிருந்த ஏதோ ஆலயத்தின் இடிபாடு என்றே எண்ணப்பட்டது. இங்கும்  கல்குடைகள் காலத்தின் அமைதியுடன் நின்றிருக்கின்றன.

அதன்பின் மூன்று புதைகுகைகள். இய்யால், சொவ்வன்னூர், கக்காடு, கட்டக்கம்பல். இவை அனைத்துக்கும் ஒரே அமைப்புதான். லாட்டரைட் பாறையில் தோண்டி மண்ணுக்கு அடியில் உருவாக்கப்பட்டவை இந்த குடைவறைகள். ஒரு சதுரவடிவப் பள்ளத்தில் இறங்கி, சிறிய வழியினூடாக ஊர்ந்து உள்ளே சென்றால் அங்கே ஓர் அறை. அதில் பெஞ்சு போன்ற இரு படுக்கைகள். கக்காடு குடைவறையின் உட்கூரை குடைபோல அரைக்கோள வடிவமானது.

இந்த அறைகளில் இருந்து முதுமக்கள் தாழியில் வைக்கப்பட்ட எலும்புகளை எடுத்துள்ளனர். (கேரளத்திலுள்ள முதுமக்கள்தாழிகள் சிறியவை, நன்னங்காடி என அவை அழைக்கப்படுகின்றன) இங்கே எலும்புகளை போட்டு கொண்டுவந்து வைத்துள்ளனர். இறந்தவர்கள் வாழும் பாதாள உலகுக்கு அவர்களை அனுப்பும் நோக்கம் கொண்டவை. இவற்றை எகிப்திய பிரமிடுகளிலுள்ள புதைவறைகளுடனும், மெசபடோமிய பாறைக்குடைவு அறைகளுடனும் ஒப்பிட முடியும். உலகமெங்கும் இத்தகைய குடைவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் நம் தொல் இலக்கியங்களில் இவை குறித்த செய்திகள் இல்லை. நம் நாட்டார்மரபிலும் இல்லை. நம் அறிவுத்தொகைகள் உருவான காலம் என்பது மிஞ்சிப்போனால் மூவாயிரமாண்டுகளுக்குள்தான். இவை ஐந்தாயிரமாண்டு தொன்மை கொண்டவை. இவற்றைச் செய்த மக்களுக்கும் நமக்குமிடையே ஆழுள்ளத் தொடர்பு மட்டுமே இருக்கக்கூடும். நம் கனவுகளின் வழியாகவே நாம் அவர்களுடன் தொடர்புகொள்ள முடியும்.

பகல் முழுக்க இரண்டு வகை மனநிலைகளில் இருந்தேன். இந்த குகைகளுக்குள் புகுந்து, மேலிருந்து நீர் கசிந்து சொட்டும் ஈரமான பாறையறைக்குள் அமர்ந்திருக்கையில் காலம்கடந்த ஒருவனாக. பின்னர் காரில் ஏறி வெவ்வேறு இடங்களைத் தேடித்தேடி ஊடுவழிகளினூடாகச் செல்கையில் இந்த காலகட்டத்தில் உழல்பவனாக. சில இனிமைகளும் அமைந்தன. வழியில் ஓரிடத்தில் சாலையோரமாக பாலடைப்பிரதமன் விற்றார் ஒருவர். அது நடுக்கேரளப் பாயசம். பால், வெல்லம், அரிசி கொண்டு தயாரிப்பது. தென்கேரளப்பாயசம் என்பது தேங்காய்ப்பால், வெல்லம் அரிசி அடை அல்லது பருப்பால் தயாரிக்கப்படுவது.

மாலை மூன்று மணிக்கே திரும்பிவிட்டோம். கோவை வந்தடைய ஏழு மணி. ஏழரைக்கு எனக்கு நாகர்கோயில் ரயில்.

கற்காலத்து மழை – பயணக்கட்டுரை

கற்காலக் கனவுகள் – பயணக்கட்டுரை

தேன்வரந்தை, தென்னகப் பிம்பேத்கா

குடைக்கற்கள் கட்டுரை

முந்தைய கட்டுரைபி. கோதண்டராமன்
அடுத்த கட்டுரைGurukula – A letter