இலங்கைக்குச் செல்வது…

அன்பின் ஆசிரியருக்கு,

கூகுள் வரப்படத்தில் இலங்கையை பார்த்துகொண்டு இருந்தேன்

ஊர் பெயர்கள்குறிக்கப்பட்ட கடைகளின், சாலைகளின் பெயர்கள், எதோ தமிழ்நாட்டின்ஒரு மாவட்டம் என தோன்றுமளவுக்கு பெயர்கள்,

உடனே ஒருஎண்ணம் வந்ததுஇது வரை  நீங்கள் இலங்கை பயணம் மேற்கொண்டதுஇல்லை ;

உங்கள் எழுத்தில் இலங்கையை காண ஆசை; மேலும்இலங்கை வரலாறு வாசிப்புக்கு பரிந்துரைக்கவும்

 பிரகாஷ்

கோவை

அன்புள்ள பிரகாஷ்,

என்னுடைய வெளிநாட்டுப் பயணங்கள் பெரும்பாலும் இலக்கியப் பயணங்களே. கம்போடியா, இந்தோனேசியா பயணங்கள்கூட இலக்கிய வாசகரும் நண்பருமான சரவணன் விவேகானந்தன் ஏற்பாடு செய்தவை. 

ஈழ இலக்கியம் பற்றிய தொடர்ச்சியான கவனம் எனக்கு உண்டு. ஈழ இலக்கியம் பற்றி நிறைய எழுதியுள்ளேன். ஈழ இலக்கியம் என்னும் தொகுப்பாக அக்கட்டுரைகளில் ஒரு பகுதி வெளியாகியுள்ளது. தமிழில் ஈழ இலக்கியம் பற்றி விரிவாகவும் முழுமையாகவும் எழுதிய இலக்கிய விமர்சகன் நான் ஒருவனே. தொகுக்கப்படாத கட்டுரைகள் அடங்கிய இன்னொரு நூல் வெளிவரவுள்ளது.

ஈழம் சார்ந்த விரிவான பதிவுகள் இப்போது தமிழ் விக்கியில் உள்ளன. அவை ஒன்றுடனொன்று இணைக்கப்பட்டு விரிவான ஒரு வரலாற்றுப் பரப்பாகவே உருமாறிக்கொண்டிருக்கின்றன. அத்தகைய ஒரு பெரிய சித்திரமும் இன்று வேறேங்கும் இல்லை. நீங்கள் தமிழ் விக்கியில் ஈழ வரலாறு, இலக்கியம் சார்ந்த ஏதேனும் ஒரு பதிவில் இருந்து இணைப்புகள் வழியாக விரிவாகப் பயணம் செய்ய முடியும். வட்டுக்கோட்டை குருமடம் என எடுங்கள், உதாரணமாக.

நான் இலங்கைக்கு இலக்கியப் பயணம் செய்ய முடியாது. ஏனென்றால் இன்று இலங்கையில் எனக்கு அனேகமாக வாசகர்களே இல்லை. 2005 வரைக்கும் கூட மிகச் சிலர் அங்கே என்னை வாசித்துக் கொண்டிருந்தார்கள். என் நூல்கள் ஓரிரு பிரதிகள் அங்கே சென்றன. விஷ்ணுபுரம் 2010 வரை  அங்கே ஆண்டுக்கு ஐந்து பிரதிகள் அளவுக்கு விற்றிருக்கிறது – அது மிக அதிகமான விற்பனை. இன்று என் நூல்கள் மீதான வாசிப்பு அங்கே அறவே இல்லை. கல்விநிலையங்களில்கூட. இன்று என் நூல்கள் ஒரே ஒரு பிரதிகூட அங்கே செல்வதில்லை. ஒரு வாசகர் கடிதம் கூட பதினைந்தாண்டுகளில் எனக்கு வந்ததும் இல்லைஎன் படைப்புகளின் வாசகர் என ஒருவர் கூட அங்கில்லை என்பதே நேரடியான உண்மை. 

எனக்கு இலங்கையில் நண்பர்கள் என இரண்டே இரண்டுபேர்தான். மதிப்பிற்குரிய பெரியவர் ஒருவர். வாசகர் கடிதம் வழியாக தொடர்பு கொண்டவர் வேறு இரண்டுபேர். இலங்கையுடனான தொடர்பு என்பது மொத்தமே அவ்வளவுதான். ஆனால் அரசியல் சார்ந்த வசைகளைப் பெய்யும் பெருங்கூட்டம் உள்ளது  என அறிகிறேன். அங்கே செல்லும் எல்லாரையும் ஜெயமோகன் ஆதரவாளர்கள் என அடிக்க வருகிறார்கள் என்று கேள்விப்பட்டேன், சாரு நிவேதிதாவையே கூட ஒருவர் அப்படிச் சொல்லியிருந்தார். சமூகவலைத்தளங்களில் எல்லா இடங்களிலும் வந்து அவர்களே முகம் காட்டுகின்றனர். அவர்களில் கணிசமானவர்கள் எளிய மதவெறியை அரசியலாக ஆக்கி, அதையே இலக்கியக் கருத்தாகக் கொண்டவர்கள். அதேபோன்ற தேசியவெறியும் உண்டு . எதிர்ப்பவர்களில் நான் பொருட்படுத்தத் தக்க எவரும் இதுவரை கண்ணுக்குப் படவில்லை.

அன்றுமின்றும் இலங்கையின் வாசிப்புச் சூழல் என்பது நூறு விழுக்காடு அன்றாட கட்சி- அதிகார அரசியல் சார்ந்தது. இனவாதம், மதவாதம் போன்றவை அதன் அடிப்படை உணர்வுகள். அரசியல் நிலைபாடுகள் மற்றும் வம்புகளை மட்டுமே எல்லா இலக்கியத்திலும் அங்குளோர் கவனிப்பார்கள். தங்களுக்குரிய அரசியலை பேசும் சிலரை வழிகாட்டிகளாகக் கொண்டு, அவர்களையே தீவிரமாக ஆதரித்து, பின் தொடர்வார்கள். அங்கே அரசியலமைப்பைச் சேர்ந்தவர்களே இலக்கியத்தை முடிவுசெய்பவர்களாக இருந்துள்ளனர். அதற்கப்பால் இலக்கியத்தில் அழகியல், வாழ்க்கைநுட்பங்கள், மெய்யியல் என பல உண்டு என்ற செய்தியே அங்கே அனேகமாக எவருக்கும் தெரியாது.

இங்கே தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையிலான நல்ல வாசகர்களுக்கு அழகியல், வாழ்க்கைநுட்பங்கள், மெய்யியல் சார்ந்த நுண்ணுணர்வும் புரிதலும் உண்டு. அவர்கள் க.நா.சு மரபால் உருவாக்கப்பட்டவர்கள். யார் எழுதுவதானாலும் அந்த வாசகர்களை நம்பியே இங்கே இலக்கியம் எழுதப்படுகிறது. அங்கே அப்படி ஓர் அழகியல் மரபு முற்றிலும் இல்லை. அங்குள்ள இலக்கியத்தில் மெய்யியல் பேசிய மரபின் தொடக்கப்புள்ளி மு.தளையசிங்கம். ஆனால் அவருக்கு அங்கே தொடர்ச்சியே இல்லை. நான் நேர்நிலை மனநிலையில் இலக்கியத்தை விவாதிக்கும் எவரையும் அங்கே இதுவரை கண்டதில்லை. எல்லாமே அரசியல் சார்ந்த உச்சகட்ட மிகையுணர்ச்சிகளும் கசப்புகளும் நிராகரிப்புகளும்தான். அது ஓர் இருண்ட உளச்சூழல்.

ந்த அரசியலைச் சார்ந்தவராக இருந்தாலும் ஓர் அரசியல்வாசகர் என்னைப்போன்ற ஓர் இலக்கியப் படைப்பாளியை வாசிக்க முடியாது. ஏனென்றால் இலக்கியம் வாசகனுக்குரிய இடைவெளியை விட்டு , அவன் அதை நிரப்பிக் கொள்வான் என நம்பி இயங்குவது. அந்த வாசகன் எளிய அன்றாட அரசியலை, சில்லறைக் காழ்ப்புகளை அதில் தன் தரப்பில் இருந்து நிரப்பிக்கொள்வானேயானால் இலக்கியம் அவனுக்கு அப்படியே உருமாறித் தோற்றம் அளிக்கும். அது தான் நிரப்பிக்கொண்ட தன்னுடைய கசப்பும் நஞ்சும்தான் என அந்த அரசியல் வாசகன் உணர்வதே இல்லை. அந்த வகையான தீவிர முன்முடிவுகள் கொண்டவர்களை இலக்கிய அழகியல் சென்று தொடாது, அவர்களிடம் பேசுவதும் மாபெரும் நேர விரயம் என்பது என் எண்ணம். ஆகவே நானும் பொருட்படுத்துவதில்லை.

இந்திய அமைதிப்படை இலங்கை சென்றதை எதிர்த்து நான் எழுதிய கட்டுரைகளால் நீண்டகாலம் எனக்கு விஸா சிக்கல் இருந்தது. அதன்பின் இலங்கை செல்வதற்கான திட்டத்தை நானும் என் பயணத்தோழர்களான நண்பர்களும் இருமுறை போட்டோம். நண்பர்களின் நடைமுறைச் சிக்கல்கள். கடைசி முறை திட்டமிட்டபோது ஈஸ்டர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. மீண்டும் திட்டமிடவேண்டும். அடுத்த ஆண்டு செல்லக்கூடும். இலக்கியப்பயணமாக அல்ல, தனிப்பட்ட தொல்லியல் சுற்றுலாவாக. காதும் காதும் வைத்ததுபோல சென்று வந்துவிடுவோம்.

ஆனால் மிக அண்மைக்காலமாக பயணம், புது இடங்களுக்குச் செல்வது ஆகியவை சலிப்பை அளிக்கின்றன. எங்காவது பேசாமல் அமர்ந்திருப்பதே பிடித்திருக்கிறது. அமைதியாக, என்னுள் எழும் மெல்லிய இனிமையொன்றை உணர்ந்தபடி, மணிக்கணக்காக அமர்ந்திருக்கிறேன். இப்படி ஓர் அனுபவநிலை முன்பு அமைந்ததில்லை. ஆகவே இலங்கைக்கே செல்லாமலிருக்கவும் வாய்ப்புண்டு.

ஜெ

முந்தைய கட்டுரைபி.சி.சேகர்
அடுத்த கட்டுரையோகம் மதம் சார்ந்ததா?