திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியின் நிறுவனர் முருகசாமி காலமானார். தனிப்பட்ட முறையில் எனக்கு அறிமுகம் உடையவர். காதுகேளாதவர், காதுகேளாதவர்களுக்கான கல்விநிறுவனம் ஒன்றை உருவாக்கி நிலைநிறுத்தியவர். ஒருகட்டத்தில் தமிழகத்திலேயே பெரிய காதுகேளாதோர் பள்ளியாக அது திகழ்ந்தது. மிகக்கடுமையான பாலியல்குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார், அந்தப் பள்ளி மூடப்பட்டது, அவருடைய சொத்துக்கள் பறிபோயின. இறுதிப் பத்தாண்டுகள் தனிமையில் கைவிடப்பட்டவராக வாழ்ந்தார். ஆயினும் காதுகேளாதோருக்காகப் பணியாற்றிக்கொண்டுதான் இருந்தார்.
திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி அவரது சொந்த சொத்து, மற்றும் பொதுமக்கள் நன்கொடையால் உருவானது. திருப்பூரின் வளர்ச்சியால் அது ஒரு பெரும் சொத்தாக ஆனபோதுதான் அவர் பலிகொள்ளப்பட்டார். நம் குடும்பம், நம் நீதிமுறை, நம் அரசியல்வாதிகள் அனைவரும் இணைந்தால் என்ன செய்ய முடியும் என்பதற்கான சான்று முருகசாமி என்னும் பலி.
அஞ்சலி