குரு நித்யா காவிய அரங்குக்கு சென்றுவிட்டு திரும்பி வரும் வழியில், செல்பேசி தொடர்பு அமைந்ததுமே, மின்னஞ்சல்களும் வாட்ஸப் செய்திகளும் வரத்தொடங்கின. என்ன என்று பார்த்தால் பரத்வாஜ் ரங்கனுக்கு நான் அளித்த பேட்டியில் இன்றைய இசையமைப்பாளர்கள் கவிதைவரிகளுக்கு போதிய இடமளிப்பதில்லை என நான் சொன்னதை இளையராஜா பற்றி நான் ’குற்றம்சாட்டியதாக’ சில சினிமா இணையதளங்கள் எழுதியிருப்பதை பலர் பார்த்திருக்கிறார்கள். அதையொட்டிய கருத்துகள்.
இந்த இணையதளங்கள் செய்யும் மோசடிகள் இரண்டு, ஒன்று மூலத்தை திரிக்கின்றன, வரிகளை வெட்டி வேறுபொருள் வரவழைக்கின்றன, வரிகளுக்குமேல் தங்கள் கருத்தை சேர்த்து வெளியிடுகின்றன. இரண்டு, மூலத்தின் தொடர்பு அளிப்பதுமில்லை. இன்றைய மூளைச் சோம்பல்ச் சூழலில் பலர் அந்த இரண்டு மூன்று வரிகளை வாசித்து கருத்து உதிர்த்து, வசைபாடிச் சென்றுவிடுகிறார்கள்.
எனக்கு இவர்களைப் பற்றிய கருத்து இதுதான், இதெல்லாம் இணையத்தில் இரண்டுநாள் கூத்து. எனக்கு ஒரு நூறு புதிய வாசகர்கள் அமைவார்கள் என்பது நன்மை. ஆயிரம் புதிய வசைகள் வருமென்பது தீமை, ஆனால் அந்த வசைகள் எனக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆகவே மகிழ்ச்சிதான்
*
இளையராஜா பற்றி நண்பர்கள், எழுத்தாளர்கள் சிலரும் எழுதியிருந்தனர். இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டு இளையராஜா பற்றி சில குற்றச்சாட்டுக்களைச் சொல்லி, அவற்றை நான் ஆதரிப்பேன் என எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்காகச் சில சொற்கள்.
இளையராஜா பற்றி நான் சொன்ன, சொல்லும் இரண்டு வரிகள் நண்பர்கள் வட்டாரத்தில் சர்ச்சை ஆவதுண்டு, கேலியுமுண்டு என தெரியும். ஒன்று, இளையராஜா இசையில் அனேகமாக எல்லா பாட்டுமே எனக்கு நல்ல பாட்டுகள்தான். இரண்டு, இளையராஜா ஒரு பாட்டுக்குக் கூட இசையமைக்காமலிருந்தாலும் அவர்மேல் இன்றிருக்கும் இதே பெரும் பணிவும் பக்தியும் எனக்கிருக்கும்.
இரண்டு கருத்தையும் நான் விளக்கமுடியாது. முதல் கருத்தைப் பற்றி இப்படிச் சொல்கிறேன். இலக்கியம் சார்ந்து மட்டுமே என் கருத்துக்கு இன்று தமிழில் எழுதும் எவர் கருத்தைவிடவும் முதன்மை உண்டு. மிகமிகச் சிலரை மட்டுமே நான் எதிர்த்தரப்பாக பரிசீலிக்க முடியும். இந்திய தத்துவம், தென்தமிழக – தென் கேரள வரலாறு ஆகிய இரண்டு தளங்களில் மட்டுமே என் கருத்துக்களுக்கு கற்றோன் கருத்து என்னும் தகுதி உண்டு. மற்ற அனைத்துத் தளங்களிலும் அது ஒரு பொதுக்குடிமகனின் பொதுவான உளப்பதிவு மட்டுமே.
ஆகவே இசை பற்றிய என் கருத்தை பொதுரசிகனின் கருத்தாக எடுத்துக் கொண்டால்போதும். நான் ராஜாவுடன் சேர்ந்து வளர்ந்தவன். என் வாழ்க்கையின் எல்லா தருணங்களுடனும் ராஜா இருக்கிறார். ஆகவே எல்லா பாட்டும் முக்கியம்தான். அண்மையில் காட்டுக்குயில் பாட்டுச் சொல்ல என்ற பாட்டை இருபது முறை தொடர்ந்து கேட்டேன் என நான் சொல்ல ஒரு நல்ல நண்பர் பக் என்று சிரித்துவிட்டார். சிரித்துவிட்டுப் போகட்டும், நமது கனவு நம்முடையது என்று நான் நினைத்தேன்.
ஆனால் ராஜாவின் பிற்காலப் பாடல்கள் பலவற்றில் வரிகள் எனக்கு ஒவ்வாமையை அளிப்பவை. பெரும்பாலும் நான் அவற்றின் கரோக் வடிவை, குரல் இல்லாமல் கேட்கிறேன். அல்லது அவை வாத்தியங்களில் வாசிக்கப்பட்டால் கேட்கிறேன். ஏனென்றால் நான் எழுத்தாளன், கவிதை ரசிகன், கவிதை விமர்சகன். இந்த ஒவ்வாமையை நான் அடையக்கூடாது என எவரும் சொல்லமுடியாது. நான் ராஜாவிடமே இதைச் சொன்னதுண்டு.
இரண்டு, இளையராஜாவிடம் நான் உணர்வது ஒன்று உண்டு. அதை நான் ஆன்மிகமானது என்பேன். அது அவருடைய பக்தியாலோ அல்லது இந்துமதச் சார்பாலோ அல்ல. நான் அவ்வகை பக்திக்கு மாற்றான வழியில் செல்பவன். நான் உணர்வது பிறிதொன்று, அதை ஆன்மிகமானது என்பேன். அவர்முன் அமர்ந்திருக்கையில் எல்லாம் அதை உணர்ந்துள்ளேன். அவருடைய அறையில், மயங்கும் அந்தியொளியில், ஒரு மகத்தான சிற்பம்போல அவரை பார்த்த காட்சிகள் என்றும் என்னிடமிருக்கும். எனக்கு எழுதச் சொல் அமையா நிலை உருவானால் அவர் அருகே இருபது நிமிடம் அமர்ந்து மீள்வதையே அதை கடக்கும் வழி என கண்டுகொள்வேன். ஆகவேதான் வெண்முரசின் முதல் தொகுதியை அவருக்கு சமர்ப்பணம் செய்தேன்.
முதல் கருத்து என்னுள் வாழும் எளிய இசை ரசிகனுடையது. இரண்டாவது கருத்து என்னுள் வாழும் ஆன்மிகவாதியுடையது. இரண்டையும் நான் அறிவுஜீவிகளிடம் விளக்கிவிடமுடியாது. ஆகவே என் பதில் புன்னகை மட்டுமே.
*
நண்பர்கள் சொன்ன இரண்டு கருத்தை மட்டும் எதிர்கொள்கிறேன்.
ஒன்று, ராஜா ஆணவம் மிக்கவர் என்பது. நான் பலமுறை அவரிடம் பேசியுள்ளேன். எல்லா உரிமைகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறேன். பிரியமான ஒரு மூத்தவராக மட்டுமே அவரை அறிந்திருக்கிறேன். ஆணவம் அல்லது தோரணை என எதையும் கண்டதே இல்லை, ஒரு கணம்கூட. ஆனால் தன் அகத்தனிமையை அவர் பேணியே ஆகவேண்டும். அதை ஓர் எழுத்தாளனாக நான் புரிந்துகொள்கிறேன். அவர் உபச்சாரங்களை, சம்பிரதாயங்களை, பொதுமரபுகளை பேணிக்கொண்டே இருக்கமுடியாது. அவர் வாழுமிடம் முற்றிலும் வேறு.
இரண்டு, அவர் ராயல்டி சார்ந்து தொடுத்துள்ள வழக்கு பற்றி. இந்த குறிப்பே முதன்மையாக அதைப் பற்றித்தான்.
*
நாம் உணர்ந்தாகவேண்டிய ஒன்று உண்டு, ’உழைப்பு’ (Labour) வேறு ’படைப்புத்திறன்’ (Creativity) வேறு. நம்மூரில் சில்லறை மார்க்ஸியர்கள் உழைப்பைப் புனிதப்படுத்துகிறேன் என கிளம்பி படைப்புத்திறனை மட்டம்தட்டி, நம் மக்கள் மனதில் அதைப் பதியவைத்துவிட்டனர். நம் மொத்தச் சமூகமே படைப்பூக்கத்திற்கு எதிரான ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. ஆனால் உலகம் நம்முடைய இந்த மௌடீகத்தை கடந்து வேறொரு திசையில் வளர்ந்து சென்றுகொண்டிருக்கிறது.
பரத்வாஜ் ரங்கன் பேட்டியிலேயே பாருங்கள், ஓரிருவர் வந்து படைப்புத்திறன் என்பது ‘பயிற்சித்திறன்’ மட்டுமே என வாதிடுகிறார்கள். இந்த மொண்ணைத்தனத்திற்கு உலகில் எங்குமே இன்று இடமில்லை, இவர்கள் இங்கே அதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எங்கு நீங்கள் அசலான படைப்பூக்கம் பற்றிச் சொன்னாலும் ஓடி வந்து இதை சொல்வார்கள். எத்தனை பயிற்சிபெற்றாலும் நான் இளையராஜா ஆக முடியாது, இளையராஜா ஜெயமோகனும் ஆகமுடியாது. அது ஜெயமோகனுக்கும் இளையராஜாவுக்கும் தெரியும், நம்மூர் பாமரருக்குப் புரியாது.
படைப்புத்திறன் என்பது ’புனிதமானது’ ஒன்றும் அல்ல. அது மானுட மூளையின் ஓர் தனி இயல்பு. அதை மிக விரிவாக நவீன நரம்பியல் விளக்கிவிட்டது. தன் படைப்புத்திறன் எதில் என இளமையிலேயே கண்டறிவது, அதற்கேற்ற கடுமையான பயிற்சியை அளிப்பது, அதன் உச்சம் நோக்கிச் சென்றுகொண்டே இருப்பதுதான் எல்லா அசல் சிந்தனையாளர், கலைஞர்களின் இயல்பு. கடுமையான பயிற்சி படைப்புத்திறனை அளிக்காது. ஆனால் கடுமையான பயிற்சி இல்லாவிட்டால் படைப்புத்திறன் வெளிப்படாது.
நம் இந்தியச் சூழலை இன்று கவனியுங்கள். இப்போது ‘உழைப்பு’க்குதான் மதிப்பு. ‘படைப்பு’க்கு அல்ல. உடலுழைப்பும் மூளையுழைப்புமே எல்லாவற்றிற்கும் அளவுகோல். தர்க்கம், கற்பனை, உள்ளுணர்வு ஆகியவை அல்ல. அவை இங்கே பெரும்பாலும் இலவசமாகவே உள்ளன.
இப்போதல்ல, சென்ற பல நூற்றாண்டுகளாகவே அப்படித்தான். ஒரு கணக்குப்பிள்ளைக்கு கிடைக்கும் ஊதியம் கவிஞனுக்குக் கிடைப்பதில்லை. ஒரு கணக்கு ’பயனுள்ளது’ ஆகவே ’பணமதிப்பு கொண்டது’ என்பது நம் எண்ணம். மாறாக ஒரு கவிதை ‘பயன் அற்றது’ ஆகவே அது எவ்வகையிலும் ’விலையுள்ள பொருள்’ அல்ல என நாம் நம்புகிறோம். இந்தியாவில் வீட்டுக்குப் பெயிண்ட் அடிப்பவருக்கு ஊதியமுண்டு, ஓவியன் வரைந்துவிட்டு பிச்சைதான் கேட்கவேண்டும்.
ஒரு கணக்கை அதைப் பயின்ற எவரும் போடலாம், அதைவிட பலமடங்கு அகக்கூர்மையும் செய்திறனும் ஒரு கவிதைக்குத் தேவை. ஒரு கணக்குப்பிள்ளையாக ஒருவர் ஆவதற்கு எவ்வளவு உழைப்பை, அர்ப்பணிப்பைச் செலுத்தவேண்டுமோ அதைவிட பலமடங்கு உழைப்பும் அர்ப்பணிப்பும் கவிஞனாக ஆவதற்குச் செலுத்த வேண்டும். ஆனால் அது நம் சமூகத்தின் நோக்கில் எவ்வகையிலும் மதிப்புக்குரியது அல்ல.
பல்வகை கலைகள், இசை, இலக்கியம் எல்லாவற்றின் நிலையும் இதுவே. படைப்பு என்பது இந்தியாவில் ஒரு விந்தையான இரட்டைநிலையில் பார்க்கப்படுகிறது. அதாவது அது தெய்வீகமானது, அரிதானது, ஆனால் வாழ்க்கை மதிப்பு அற்றது. கவிஞனும் கலைஞனும் போற்றப்பட வேண்டும், ஆனால் அவன் வறுமையில் வாடவும் வேண்டும். கம்பன், பாரதி முதல் புதுமைப்பித்தன் வரை; இன்றும்கூட இதுதான் நம் சூழல்.
கலைஞனை, கவிஞனை வானளாவ புகழ்ந்து கொஞ்சம் காசை கையில் கொடுத்து தன்னை கொடை வள்ளலாக கருதிக்கொள்ள நமக்குப் பிடிக்கும். அக்கலைஞன், அல்லது கவிஞன் அதன்பொருட்டு வள்ளல்களை புகழ்ந்து பணிந்து கொண்டாடவும் வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர் முன், செல்வந்தர் முன் கலைஞர்களும் கவிஞர்களும் கூழைக்கும்பிடு போட்டு குனிந்து நிற்கும் காட்சிகள் நமக்கு மிகமிகப் பழக்கமானவை. அவர்கள் அதிகாரத்திலிருப்பவர்களையும் செல்வந்தர்களையும் திகட்டத் திகட்ட புகழ்வது மிகச் சாதாரணம். சென்ற தலைமுறைக் கலைஞர்களும் கவிஞர்களும் அதில் பிழையேதும் இருப்பதாக நினைக்கவுமில்லை. ஏனென்றால் நமக்குச் சங்ககாலம் முதல் அதுதான் மரபு.
இன்றும் இம்மனநிலையே நம் பொதுமக்களை ஆள்கிறது. ஆகவே தன் மகன் ஒரு கலைஞன், எழுத்தாளன், கவிஞன் ஆவதை நம் சூழலில் எவரும் விரும்புவதில்லை. ஏழு தலைமுறைக்குச் சொத்து வைத்திருப்பவர்கள்கூட தன் பிள்ளைகள் மேலும் சம்பாதிக்கவே விரும்புகிறார்கள். தன் மகன் புத்தகம் படிப்பதை, இலக்கியம் பேசுவதைக் கண்டால் பதறுகிறார்கள். நான் பலமுறை கண்ட உண்மை இது.
சென்ற இருநூறாண்டுகளில் தமிழில் நிகழ்ந்த இலக்கியச் செயல்பாடுகள் அனைத்துமே இலவச உழைப்புதான். அவற்றுக்கு ஊதியம் அளிக்கப்பட்டதில்லை. மிகமிகமிகக் குறைவான ‘சன்மானம்’ அளிக்கப்பட்டது (பரிசில்). எவரும் எழுதி வாழ முடிந்ததில்லை. தமிழில் எழுதிக் குவித்தவர்கள்கூட மூன்றுவேளை எளிய உணவு சாப்பிடும் அளவுக்குக் கூட அதிலிருந்து பணம் பெற்றதில்லை. ஒருவர் இங்கே எழுதுகிறேன், கலையில் செயல்படுகிறேன் என்று சொன்னாலே ‘சாப்பாட்டுக்கு என்ன செய்கிறீர்கள்?’ என்பதே இங்குள்ள கேள்வி.
இன்று தமிழகம் முழுக்க நிகழும் அறிவுச்செயல்பாடு அனேகமாக முழுமையாகவே இலவச உழைப்புதான். நம் அறிவியக்கத்தில் சிறிதும் பெரிதுமாகச் செய்யப்படும் ஒட்டுமொத்த உழைப்பை எண்ணிப் பாருங்கள். எத்தனை மணிநேரம் மானுட உழைப்பு. அதற்கு என்ன ஊதியம் அளிக்கப்படுகிறது? தமிழ் எழுத்த்தாளனுக்கு அவனுடைய நூல்களை தட்டச்சு செய்தமைக்கான ஊதியம் அளிக்கப்பட்டாலே அது பெரிய வருமானமாக இருக்கும்.
நம் சூழலில் இன்றும்கூட கலை, இலக்கியம், சிந்தனை எல்லாமே இலவசமாக கொடுக்கப்படவேண்டும் என நினைக்கிறார்கள். ஓர் உரைக்கு கட்டணம் வைத்தால் குமுறிக் கொந்தளிக்கிறர்கள். அறிவை விற்பதா என்கிறார்கள். அந்த அரங்கின் செலவைக்கூட அந்த ஆசிரியனே அளித்துத்தான் கூட்டம் நடக்கவேண்டும், வருபவர்களுக்குச் சொந்தச் செலவில் டீ காபி கொடுக்கவேண்டும், ஏனென்றால் அறிவு புனிதமானது!
ஒரு நூலுக்கு அந்த நூலின் காகிதவிலைக்குமேல் விலை வைத்தால் கொந்தளிக்கிறார்கள். இங்குள்ள நூல்களில் செலவிடப்படும் மெய்ப்பு நோக்குதல், செம்மை செய்தல் போன்ற எல்லா உழைப்பும் இலவச உழைப்பு என்பதை நினைவில் கொள்ளவேண்டும் நாம்.
ஆச்சரியமென்ன என்றால் இப்படி கொந்தளிப்பவர்கள் வேறு, பணம் கொடுத்து கூட்டங்களுக்கு வருபவர்களும் நூல்களை வாங்குபவர்களும் வேறு. முந்தையவர்கள் நமது ‘பொதுமக்கள்’. அவர்களுக்கு அறிவும், படைப்புத்தன்மையும் இலவசமாகவே இருக்கவேண்டும் என்னும் புரிதல் நம் மரபிலிருந்து வந்து உள்ளே பதிந்துள்ளது. பாமரத்தனமான ஓர் எண்ணம் அது. ஆனால் மிக அபாயமானது.
ஓர் ஆசிரியர் ஒரு நூலை எழுதி அச்சில் வெளிவந்தால் உடனே அது பிடிஎஃப் ஆக மாற்றப்பட்டு இலவச சுழற்சிக்கு விடப்படுகிறது. அவற்றை கூச்சமில்லாமல் வாங்கிக்கொள்கிறார்கள். எங்கு எந்த நூலைப் பற்றிப் பேசினாலும் ‘இலவசப் பிடிஎஃப் கிடைக்குமா?’ என்று கேட்கிறார்கள். என்னிடமே ஒவ்வொருநாளும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது திருட்டு என்றே நினைப்பில்லை. ஏனென்றால் கலையும் அறிவும் புனிதமானவை. காற்றுபோல, தண்ணீர்போல, இலவசமாக கிடைக்க வேண்டியவை. அவற்றை உருவாக்கியவன் முனிவரைப்போன்றவன். அவன் செய்வது தவம், ஆகவே அவன் காற்றை உண்டு வாழ்ந்து மடியவேண்டியவன்.
ஏதேனும் ஒரு வழியில் ஓர் எழுத்தாளன், கலைஞன் பணம் ஈட்டிவிட்டால் பொதுமக்களின் உள்ளம் குமுறிவிடுகிறது. அவன் ஏதோ பெரும் பிழை செய்துவிட்டவன், புனிதத்தை அழித்துவிட்டவன் என எண்ணுகிறார்கள். அவனை வெவ்வேறு கோணங்களில் இழிவுசெய்து வசைபாடிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் சாகக்கிடக்கும் ஓர் எழுத்தாளனுக்காக பணம் கேட்டுப்பாருங்கள், பத்துபைசா தேறாது. கோயில் உண்டியல்களில் குவியும் பணத்தில் அரைச் சதவீதம் தமிழகத்தில் கலையிலக்கியத்திற்கு வந்தால் நாம் எங்கே இருப்போம் என்று எண்ணிப் பார்க்கிறேன்!
ஓர் எழுத்தாளன் பட்டினி கிடந்து மடிந்தால் நம் கூட்டுப்பாமர உள்ளம் உள்ளூர மகிழ்கிறது. ’நல்லவேளை நான் அப்படி சாகவில்லை’ என உணர்கிறது. சூதானமாக இருந்துகொண்ட புத்திசாலி நான். ஆனால் ‘உச் உச் உச், மகா கலைஞன்யா’ என்று அனுதாபம் காட்டுகிறது. கூடவே மூன்றுவேளை சோறு உண்ணும் அத்தனை கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் செத்துப்போனவருடன் ஒப்பிட்டு வசைபாடுகிறது, ‘இங்கயும் சிலபேர் இருக்கானுகளே…’ என்கிறது. பிரான்ஸிஸ் கிருபா மறைந்தபோது எழுந்த உச் உச்களை நினைவுகூருங்கள். இப்போது எவர் அவர் பற்றிப் பேசுகிறார்கள்? அது ஒரு இரண்டுநாள் அனுதாபம், ஒரு பாவனை, அவ்வளவுதான்.
இந்த வெற்றுப் பாமரர்களே இளையராஜா ’பணத்தாசை பிடித்து ஆடுகிறார்’ என்கிறார்கள். அவருக்கு ’பெருந்தன்மை வேண்டும்’ என ஆலோசனை சொல்கிறார்கள்.
நான் எப்போதுமே உணரும் ஒன்றுண்டு, பாமரன் என்பவன் புனிதமானவன் என அவனை அரசியல்வாதிகள் நம்பவைத்துள்ளனர், ஆனால் பாமரன் என்பவன் நடைமுறையில் முற்றிய குற்றவாளியை விட அயோக்கியன். குற்றவாளி குற்றம் செய்யும் தைரியம் கொண்டவன், பாமரன் தைரியமில்லா குற்றவாளி, அவ்வளவுதான். குற்றவாளியிடம் குற்றம் பற்றி பேசமுடியும். பாமரனிடம் அவனுடைய அரசியல்சரிகள், ஒழுக்கப் பாவனைகள், விபூதிப்பட்டைகளைக் கடந்து பேசவே முடியாது.
*
இளையராஜா செய்துகொண்டிருப்பது இன்றைய சூழலுக்கு மிக முக்கியமான ஒரு பணி. அதை அவரே செய்யமுடியும், அதற்கான பின்னணியும், பொதுமக்களெனும் பாமரர் என்ன சொல்வார்கள் என்பதை ஒரு பொருட்டாக நினைக்காத கலைநிமிர்வும் அவரிடமே உள்ளது. இந்தியச் சூழலில் இங்குள்ள பாமரரை அஞ்சி புகழ்மிக்கவர்கள் அனைவரும் செய்துவரும் எந்த மேடைப் பசப்பலையும் எவ்வகையிலும் செய்யாத சமகால மேதை அவர் ஒருவரே.
செயற்கை நுண்ணறிவு வந்து நாம் வாழும் அறிவுலகை முழுமையாக உருமாற்றவிருக்கும் காலம் இது. மிக விரைவிலேயே படைப்பூக்கம் கொண்ட வேலைகள் மட்டுமே மானுடர் செய்வதாக ஆகும். ’கணக்குப்பிள்ளை’ வேலைகள் மதிப்பிழந்துகொண்டே செல்லும். படைப்பூக்கத்திற்கான மதிப்பு மேலும் மேலும் அதிகரிக்கும்.
இன்னும் இருபதாதாண்டுகளில் படைப்பூக்கம் மதிப்பு மிக்கதாகி, உழைப்பு இரண்டாமிடத்துக்கு வந்துவிடலாம். ஓர் அசலான சிந்தனை அல்லது கற்பனை மிகமிக மதிப்பு கொண்டதாக ஆகிவிடலாம். அதை மட்டுமே மானுடர் செய்யும் நிலைகூட வந்துவிடலாம். அந்தக் காலகட்டத்திற்கான மனநிலைகளை நாம் உருவாக்கிக் கொள்ளவேண்டும். அதற்கான சட்டங்களும் நடைமுறைகளும் நமக்கு வேண்டும்.
எண்ணிப்பாருங்கள், நீங்கள் சற்று படைப்பூக்கம் தேவைப்படும் வேலையில் இருப்பவர் என்றால் அந்த படைப்புத்திறன் இன்று உழைப்பாக மட்டுமே அடையாளப்படுத்தப் படுகிறது என்பதைக் காண்பீர்கள். அந்த உழைப்புக்கு மட்டுமே ஊதியம் அளிக்கப்படுகிறது. அதே காலஅளவில், அதே வேலையை படைப்பூக்கமே இல்லாமல் செய்பவருக்கும் உங்களுக்கும் ஒரே ஊதியம். நீங்கள் இளையவர் என்றால் குறைவான ஊதியம். நீங்கள் பேரம்பேச முடியாதவர் என்றால் பல மடங்கு குறைவான ஊதியம்.
இன்று உங்கள் கற்பனை, உங்கள் உள்ளுணர்வு வழியாக நீங்கள் உருவாக்கும் படைப்புகளின் எல்ல லாபமும் உங்களுக்குச் சம்பளம் தருபவருக்குச் சொந்தம். படைப்புத்திறனுக்கு ஒரு சந்தைமதிப்பு உண்டு என்பதையே நம் தொழிற்சூழல் ஏற்றுக்கொள்ளவில்லை. அதாவது அது முற்றிலும் இலவசம். ஆற்றலுள்ள எவனும் அள்ளிக்கொண்டு செல்லலாம். முற்றிலும் இந்த திகைப்பூட்டும் சூழலை ஒருவேளை நீங்கள் விலகிநின்று பார்த்திருக்கக்கூட வாய்ப்பில்லை.
இன்று இந்தியாவில் சினிமா என்ற ஒரே ஒரு துறை தவிர எங்குமே அசலான சிந்தனை – கற்பனைக்கு ஊதியம் இல்லை என்பதே அப்பட்டமான உண்மை. கல்வித்துறையில் கருத்துச் சுரண்டல் என்பது அதி உச்சம். ஓர் ஆய்வுமாணவர் தன் ஆய்வுக்கருத்துக்களை மூத்த பேராசிரியர்களுக்கு அளித்தே ஆகவேண்டும். கூச்சமே படாமல் கேட்பார்கள், மிரட்டுவார்கள், தப்பவே முடியாது.
இந்தியாவில் பல தொழில்துறைகளில் மேலதிகாரிகளுக்கு உங்கள் சிந்தனைகளை, கற்பனைகளை அளித்தே ஆகவேண்டும். இன்னும் பல துறைகளில் அசல் சிந்தனையோ படைப்பாற்றலோ கொண்டிருந்தால் நீங்கள் ஒதுக்கப்படுவீர்கள், வெறுக்கப்படுவீர்கள், வேட்டையாடப்படுவீர்கள். விளம்பரம் போன்ற சில துறைகளில் படைப்பூக்கமே விற்பனைப்பொருள், ஆனால் அதை அளிப்பவனுக்கு வெறுமே உழைப்புக்கான ஊதியமே அளிக்கப்படுகிறது.
இந்நிலை மேலைநாடுகளில் மாற ஆரம்பித்து நீண்டநாட்களாகிறது. அங்கே ஒருவர் தன்னுடைய சொந்தமான கருத்தை, கற்பனையை எங்கும் முன்வைக்கலாம். அதன் உரிமை அவருக்கே. அது திருடப்படுமா என்றால் அங்கும் அதற்கு ஓரளவு வாய்ப்புண்டு. ஆனால் பிடிபட்டால் அது கடும் குற்றம், இழிவான செயல். இங்கே அப்படி அல்ல, அறிவுத்திருட்டும் கற்பனைத்திருட்டும் இங்குள்ள எல்லா நிறுவனனங்களிலுமுள்ள அன்றாடம்.
இந்தியச் சட்டங்கள் காப்புரிமை சார்ந்து மிகமிக மேம்போக்கானவை. இருபதாண்டுகள் முன்பு வரை நீதிமன்றங்கள் காப்புரிமை வழக்குகளிலேயே ஒரு படைப்புக்குச் செலவழித்த ‘உழைப்பின் சந்தை மதிப்பை’ மட்டுமே கருத்தில் கொண்டன. சினிமாவில் இருபதாண்டுகளுக்கு முன்புவரை எவ்வளவு படைப்புகளின் உரிமைகள் சுரண்டப்பட்டன என்பது திகைப்பூட்டும் கதை. ஒரு கற்பனையின், அசலான கருத்தின் மதிப்பு அதை உருவாக்கியவருக்கு முற்றாகவே தெரியாமல்தான் இருந்தது.
இன்றுகூட படைப்பியக்கத்தின் மதிப்பு நம் பாமரரருக்கு தெரியவில்லை. ‘கட்டிடம் கொத்தனாருக்குச் சொந்தமா என்ன?’, ‘அதான் பணம் குடுத்திட்டானே’ என்றெல்லாம் அறிந்தவர்கள்போல பலரும் உளறுவதைக் கேட்கிறேன். ஓர் அசல் சிந்தனை, ஒரு படைப்பு அதை உருவாக்கியவருக்கே முழுமையாகச் சொந்தம். அதன்மேல் பிறருடைய உரிமை என்பது வரையறைக்குட்பட்டது. அதாவது ஒரு சினிமாவுக்காக ஒருவர் ஓர் இசைக்கு பணம் செலவழித்தால் அந்த சினிமாவுக்கு அதை பயன்படுத்தும் உரிமை என்பது மட்டுமே அதில் அவருடைய உடைமையம்சம். அவர் பணம் செலவிட்டார், ஊதியமளித்தார் என்றால் அதற்காக மட்டும்தான். சட்டப்படி அவருடைய உரிமை அதற்குமேல் இல்லை, ஒரு துளிகூட இல்லை. உலகமெங்கும் அவ்வாறே.
இருபதாண்டுகளுக்கு முன்பு வரை இயக்குநருக்கு தெரியாமல் அவர் படங்களின் உரிமைகள் விற்கப்பட்டன. மணிச்சித்திரத்தாழ் படத்தின் விவகாரம் உங்களுக்கு தெரிந்திருக்கும். அதன் ஆசிரியர் மது முட்டம். மலையாளப்படத்திற்கு அவர் கதையை அளித்தார். ஆனால் தயாரிப்பாளர் அதை கன்னடம், தெலுங்கு, தமிழ் என விற்றுவிட்டார். விற்றவர் ஃபாஸில், மூத்த இயக்குநர். மது முட்டம் பல ஆண்டுகள் நீதிமன்றத்தில் வழக்காடினார். வழக்குக்குச் செலவழித்த தொகையில் மூன்றிலொரு பங்கை இறுதியில் நஷ்ட ஈடாகப் பெற்றார். அதை திருவனந்தபுரம் மஸ்காட் ஓட்டலில் மது அருந்தியபடி என்னிடம் சொல்லி அவர் சிரித்ததை நினைவுகூர்கிறேன்
இங்கே கற்பனைத் திருட்டு, கருத்து திருட்டு நிலை மாறியது அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் திரைத்துறைக்கு வந்தபோதுதான். இன்றுவரை நாங்கள் போடும் ஒப்பந்தங்களெல்லாம் அந்த ஒப்பந்தங்களின் நேர்நகல்கள்தான். 2006க்குப்பின் காப்புரிமைச் சட்டங்கள் இன்னும் கொஞ்சம் தெளிவாயின. ஆனால் இன்றும்கூட காப்புரிமைக்காக நீதிமன்றம் சென்றால் உண்மையான நீதி கிடைக்காது என்பதே மது முட்டத்தின் கசப்பான சிரிப்பு என்னிடம் சொன்ன செய்தி.
நாம் செல்லவேண்டிய தொலைவு மிகுதி. நம் நீதிமன்றங்கள் இன்னும்கூட படைப்புத்திறன் என்பது மிகப்பெரிய உற்பத்தித்திறன் என்றும், அதுவே வரும்காலத்தின் முதன்மையான செல்வம் என்றும், அதற்குச் சட்டபூர்வ பாதுகாப்பு தேவை என்றும் புரிந்துகொள்ளவில்லை. சட்டபூர்வமான கடுமையான பாதுகாப்பு நம் சிந்தனைகளுக்கு, படைப்புகளுக்கு இல்லையேல் சர்வதேச நிறுவனங்களால் நாம் சுரண்டப்படுவோம். புதிய சிந்தனைகள் வந்தால் அதை எவரும் நம்பி வெளிப்படுத்தாமல் இருக்கலாம். அது செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் மிகப்பெரிய தேசிய இழப்பாக ஆகும். இதை நம் நீதிபதிகள் உணர்வதே இல்லை. சட்டமியற்றும் அரசியல்வாதிகளுக்கும் இதைப் புரியவைக்க முடியவில்லை.
இன்னும் சிக்கலான ஒன்று உண்டு. இன்றைய நவீன படைப்புகள் பெரும்பாலானவை கூட்டுப்படைப்புகள். சினிமாக்கள், விளம்பரங்கள், பாடல்கள் போன்றவை. (மென்பொருட்களையும் அப்படிச் சொல்லலாமா என்று தெரியவில்லை, சொல்லலாம் என ஒரு நண்பர் சொன்னார்) அவற்றின் காப்புரிமையை எப்படி வடிவமைப்பது? auteur theory என ஒன்று உண்டு. அதாவது ஒரு கூட்டுப்படைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை எவர் உருவாக்குகிறாரோ, எவர் பிறர் பங்களிப்பைப் பெற்றுக்கொண்டு அதை நிகழ்த்துகிறாரோ அவர் அந்த படைப்பின் படைப்பாசிரியர். அவருடையது அந்த படைப்பு. சினிமாவில் அது இயக்குநர், பாடலில் அது இசையமைப்பாளர்.
அல்லது இனிவரும் காலகட்டத்துக்காக இன்னும் முந்திய வகையில் இந்த உரிமைகள் சட்டபூர்வமாக வரையறைச் செய்யப்படலாம். புதிய சட்டங்கள் வந்தால் அதன்படி புதிய ஒப்பந்தங்கள் அமையலாம். ஒவ்வொருவரின் பங்களிப்பும் உரியமுறையில் வரையறை செய்யப்பட்டு, அவருக்கான உரிமை வகுக்கப்படலாம். எதுவானாலும் நீதிமன்றம் வழியாகவே இதை இன்று செய்யமுடியும். நீதிமன்றத்தில் நிகழும் வாதங்கள், வரும் தீர்ப்புகள், மேல்முறையீடுகள், அறுதித் தீர்ப்பு வழியாகவே ஒரு தெளிவு கிடைக்கும்.காப்புரிமை சார்ந்து புதிய சட்டங்கள் வரலாம்.
இங்கே ஒவ்வொருவரின் கற்பனையும், சிந்தனையும் முழுமையான சட்டப்பாதுகாப்புடன் வெளிவருமென்றால் எப்படி ஒரு சூழல் அமையும் என எண்ணிப்பாருங்கள். சிந்தனைகளும் எண்ணங்களும் முட்டிமோதி சிறந்தவை வெல்லும் சூழல் அமையும். சிந்தனைக்கும் படைப்புக்கும் முதன்மை மதிப்பு உருவாகும். சிந்திப்பவர், படைப்பவர் முதன்மை ஊதியம் பெறுவார். உழைப்பைச் செய்யும் இயந்திரங்களும் மென்பொருட்களும் அவருடைய கருவிகளாக அமையும். அதுதான் எதிர்காலம். இளையராஜா அந்தக் காலத்தை நோக்கி முதல் அடியை எடுத்து வைத்துள்ளார். சினிமாவில் படைப்புசார்ந்து செயல்படும் அனேகமாக அனைவருக்குமே இது தெரியும். அனேகமாக அனைவருமே அவரை இதன்பொருட்டு மிகுந்த மதிப்புடன்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன நிகழுமென எதிர்நோக்குகிறார்கள்.
இன்று காலத்தேவையான இந்த வினாவை நீதிமன்றம் வழியாக கடைசி வரை கொண்டுசென்று சேர்க்கும் நிதி ஆற்றல் இளையராஜா போன்ற சிலருக்கே உள்ளது. அவர் அதைச் செய்வது நமக்காகவும், நாளை பிறக்கவிருக்கும் தலைமுறைக்காகவும்தான். அவ்வகையில் அவர் இயற்றிக்கொண்டிருப்பது ஒரு பெரும் முன்னோடிப் பணி. நம் முகநூல் வம்புகளின் எச்சிலை அவர் மேல் தெளிக்கும் சிறுமையையாவது நாம் செய்யாதிருப்போம்.