சைதன்யாவுடன் நடை சென்றிருந்தேன். நாகர்கோயிலில் மழை தொடங்கி பதினைந்து நாட்கள் ஆகிறது. நான் சென்ற மே மாதம் 5 ஆம் தேதி கிளம்பும்போதே மழைதான். அதன்பின் அடைமழை. இப்போது அதற்கும் அப்பால். ஆரஞ்சு அலெர்ட் எல்லாம் விட்டிருக்கிறார்கள். ஆனால் குமரிமாவட்டத்தவர் மழையில் நீரில் மீன்கள் போல வாழ்பவர்கள். வெயிலைப்பற்றித்தான் புலம்புவார்கள்.
இப்பகுதியின் நிலமே மாறிவிட்டது. ஆறுவழிச் சாலைக்காக கண்டபடி தோண்டி கண்டபடி கட்டி சேறும் சகதியும் சிமிண்டும் கம்பியுமாக இப்பகுதியை மாற்றிவிட்டனர். ஒவ்வொரு முறையும் புதிய வழியில் நடை செல்லவேண்டும். அந்த வழியிலும் பாதியில் தடை அமைய சுற்றி வரவேண்டும்.
ஆனாலும் இங்கே ஏதேனும் இடங்கள் எங்கோ எஞ்சியிருக்குமென தோன்றுகிறது. எத்தனை குப்பை குவித்தாலும் மழை என்பது ஒரு வரம். அது பசுமையை, மலர்களை நிறைத்துவிடுகிறது. விருஷ்டி என மழை அழைக்கப்படுகிறது. வளர்ப்பவள் என்று நேர்ப்பொருள்.
சோழர்காலத்து ஏரி ஒன்று என் வீட்டுக்குப் பின்னால், ரயில்பாதைக்கு அப்பால் உண்டு. எங்கள் நிலத்தடிநீரே அதனால்தான். 1930ல் இருந்த அளவில் 15 சதவீதம்தான் இப்போது எஞ்சியுள்ளது என கணக்கு. பெரும்பகுதி ஆக்ரமிக்கப்பட்டு பட்டா நிலங்களாக ஆகிவிட்டது. அப்பகுதியில் இன்றிருக்கும் ஒரு பெரிய குடியிருப்பே ஏரிநிலம்தான். எஞ்சியிருக்கும் பகுதியிலும் மழைநீர் சேர்ந்தால்தான் உண்டு. ஆனால் ஆண்டு முழுக்க நீர் இருக்கும். காரணம் அருகிருக்கும் வேளிமலை.
மொத்த ஏரியும் தாமரைதான் மூடியிருக்கும். செந்தாமரை, பட்டுத்தாமரை எனப்படும் வெளிர்சிவப்புத் தாமரை, வெண்தாமரைதான் பெரும்பாலும். மிக அரிதாக நீலத்தாமரை. ஏரியில் வெண்கல உருளியில் ஏறி கையால் துழாவிச்சென்று தாமரைமலர் பறித்து விற்பது ஒரு தொழில். தாமரை பெருமாளுக்கு மிக உகந்த மலர். இங்கே விஷ்ணுவின் பெயரே பத்மநாபன்தான். நீலத்தாமரைக்கு சந்தை மதிப்பு கூடுதல், அது கிருஷ்ணனுக்கு உகந்தது.
இப்போது மலர்கள் இல்லை. வெறும் இலைகள். ஆனால் இலைகள் தோறும் மழைமுத்துக்கள் அந்தியின் மங்கலொளியில் சுடர்விட்டன. பல்லாயிரம் விழிகள் போல. காற்று வீசியபோது அவை இலைகள் மேல் இணைந்தும் பிரிந்தும் ஒளிநடனமிட்டன.
நளினிதலகத ஜலமதி தரளம்
தத்வத் ஜீவனம் அதிசய சபலம்
என்ற சங்கரரின் வரி நினைவிலெழுந்தது. ஒவ்வொரு முறையும் நினைவிலெழுகிறது. தாமரையிலைநீர் போல ததும்பும் இவ்வாழ்க்கை ஓர் அதிசயமான மாயம் என்கிறார். அதை உபன்னியாசகர்கள் யாக்கை நிலையாமைக்கான வரி என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு அது மகிழ்வும் வியப்பும் கொண்ட வரியாகவே தோன்றுகிறது.
எத்தனை தற்காலிகமானதாக இருந்தாலும் இந்த வாழ்க்கை எத்தனை ஒளிகொண்டது. என்றே எண்ணிக்கொள்கிறேன். சங்கரர் தத்துவஞானியும் கவிஞருமானவர். ஆயிரமாயிரம் வயதுகொண்டு அவருள் உறைந்த தத்துவ ஞானி யாக்கை நிலையாமையை எண்ணியிருக்கலாம். கவிஞனாகிய அந்த இளைஞன் குதூகலத்துடன் அவ்வரியை எழுதியிருப்பான், அதிசயமாயை!