காட்டின் இருள்

  1. மானஸாவின் காலடியிலிருந்து…
  2. மழைப்பாடகர்கள்
  3. எஞ்சும் நிலங்கள்
  4. தெய்வத்தளிர்
  5. பெண்பேராற்றல்
  6. முகிலில் எழுதல்!
  7. எண்முக அருமணி
  8. வில்துணை வழிகள்
  9. அளித்துத் தீராதவன்
  10. களம் அமைதல்

  11. படைக்கலமேந்திய மெய்ஞானம்

கிராதம் வெண்முரசு நாவல்களில் முற்றிலும் புதிய ஒரு கதைக்களத்திற்குள் மட்டுமல்ல, புதிய ஒரு தத்துவக்களத்திற்குள்ளும் நுழையும் படைப்பு. வெண்முரசின் தலைவன் இளைய யாதவன் என்பதனால் முதன்மையாக அது ஒரு வைணவப்படைப்பாகவே அறியப்படுகிறது, அவ்வண்ணமே பெரும்பகுதியும் இருக்கிறது. மகாபாரதத்திலேயே அர்ஜுனன் பாசுபதம் தேடிச்செல்லும் பகுதி மட்டுமே முற்றிலும் சைவர்களுக்குரியதாக சிவனை முதன்மை தெய்வமாக முன்வைப்பதாக உள்ளது. அப்பகுதியை எழுதத்தொடங்குகையில் வெண்முரசின் இந்நாவல்கள் மெல்ல மெல்ல திரட்டிக்கொண்டுவரும் ஒரு மையத்தரிசனத்தின் குறிப்பிட்ட பகுதியை தெளிவுபடுத்துவதற்கான ஒரு தருணமாகக் கண்டேன்.

பன்னிரு படைக்களத்தில் வேதங்களின் போர் குறித்த விவாதம் தொடங்கிவைக்கப்படுகிறது. அசுரர்களும் நாகர்களும் கொண்டுள்ள வேதங்கள் அனைத்தும் பிரம்ம தரிசனம் கொண்ட வேதங்களால் மறுக்கப்பட்டும் பலபகுதிகள் உள்வாங்கப்பட்டும் திரண்டு புது வடிவம் கொள்வதை அந்நாவல் உணர்த்தியது. அதர்வம் என்று இன்று சொல்லப்படும் வேதத்தின் பெரும்பகுதி அதன் கிருஷ்ண சாகை, அவ்வாறு திரண்டுருவானதே. இந்நாவல்கள் அந்த தத்துவ விவாதம் பின்னகர்ந்து வேதங்கள் உருவாகி வந்த களத்தை சொல்ல முயல்கின்றன. இவை வெறும் கற்பனைகள் அல்ல. வேதங்களை ஆய்வு செய்த ப்ளூம் ஃபீல்ட் (Maurice Bloomfield), மோனியர் வில்லியம்ஸ் (Sir Monier Monier-Williams) ஷெர்பாட்க்ஸ்கி (Fyodor Shcherbatskoy)  என முதன்மை பேரறிஞர்களால் வெவ்வேறு காலங்களில் குறிப்பிடப்பட்டவையும்  தொடர்விவாதங்களை உருவாக்கியவையுமான பார்வைகள்.

வேதங்கள் மிகத்தொன்மையான காலத்தில் கற்காலத்தில் இங்கிருந்த (Proto Culture) தொல் பண்பாடு மறைந்து ஒரு முனையிலிருந்து நீண்ட மறதிக்குப்பின் முளைத்தெழுந்தவையாக இருக்கலாம். தொல்பழங்காலத்துக்கும் நவீனகாலத்திற்கும் நடுவே இருந்த மாபெரும் பனியுகம் அந்த மறதியை உருவாக்கியிருக்கலாம். ஆகவேதான் பாபிலோனிய மெசபடோமிய எகிப்திய தொல்நூல்களுக்கும் வேதங்களுக்கும் இடையே மிக அணுக்கமான உறவுள்ளது. தொன்மங்கள் ஒற்றைப் பெருநூலில் இருந்து கிளைத்தெழுந்தவை போலவே மாயம் காட்டுகின்றன. இவை உருவான களம் மைய ஆசியாவாக இருக்கலாம். ஏனெனில் தொல் பண்பாடுகள் எல்லாமே பாலை நிலங்களிலேயே முளைத்தெழுந்தன. அங்கு மட்டுமே கற்காலமக்கள் வாழமுடியும். அவர்கள் காடுகளை வெட்டுவது உலோகங்களை கண்டடைந்த பின்னரே. எங்கு இயற்கை நீரளிக்க, வெட்டி அழிக்க காடில்லாத மழையின்மையும் உள்ளதோ அங்கே தொல்பண்பாடுகள் உருவாயின என்பது ஜாரேட் டைமன்ட் (Jared Diamond) முதலிய  பேரறிஞர்களின், புவியியலாளர்களின் ஊகம்.

வேதங்கள் ஆறென பிரிந்துள்ளன. வாருணம், இந்திரம், ஆக்னேயம், சௌரம் ஆகிய நான்கும் அவற்றில் முதன்மையானவை. வருணன் தொல்தெய்வம். அவனே வேதத்தின் முதல் நாயகன். அனலோன் அடுத்தபடியாக. மைய ஆசியாவின் பாலைநில மக்களின் முதன்மை தெய்வமெனத்திகழ்வது  பெரும்பாலும் நெருப்பே. யகோவா கூட நெருப்பு வடிவ தெய்வமே. வேதம் விரிவடைகையிலேயே சூரியன் அதன் தெய்வமாகிறான். இடிமின்னலின் தலைவனாகிய இந்திரன் தெய்வமாகிறான். இந்திரனுக்கும் சூரியனுக்குமான போர் தொல் நூல்கள் அனைத்திலும் உள்ளது. இவ்வாறு வேதம் உருவாகிவந்த பெருமுரணியக்கத்தை கிராதம் குறிப்பிடுகிறது.

வேத தெய்வங்கள் எல்லாம் அசுரர்களாகவே பிறந்து வேள்விக்கொடைகளினூடாக தேவர்களாக நிலைநாட்டப்பட்டவர்களென்று வேதத்தொன்மம் சொல்கிறது. வருணன், யமன், இந்திரன், குபேரன் அனைவருமே பிறப்பால் அசுரர்கள். சூரியன் மட்டுமே ஆதித்யர்களில் ஒருவன். அதுவே இத்தெய்வங்கள் எல்லாமே வேதங்களை யாத்தவர்களுக்கு நெடுந்தொலைவெனத் தெரிந்த தொல்காலத்தைச் சேர்ந்த தெய்வங்கள் என்றும் தாங்கள் வேள்விகளினூடாக அவற்றைத் தங்கள் தெய்வங்களாக்கிக்கொண்டோம் என்றும் வேதங்களை யாத்தவர்கள் எண்ணினார்கள் என்றும் தெரியவருகிறது. அந்தப்பரிணாமத்தின் கதையும் கூட இது.

பேரிலக்கியங்களின் ஒரு வடிவம் ஒரு வீரனின் அகப்பயணம் அல்லது ஆழ் பயணம் என்பது. யுலிசஸின் பயணமாக இருக்கலாம். அதற்கு முன்பு சென்றால் சூரியனின் எகிப்திய வடிவமாகிய ரா பாதாள உலகங்களுக்கு செல்லும் பயணம் உலகில் கிடைக்கப்பெற்ற மிகத்தொன்மையான நூல் எனக் கருதப்படும் எகிப்தின் இறப்பு நூலில் (The Book of Death) உள்ளது. என்றும் அது காவியங்களின் ஒரு  அடிப்படைக்கட்டமைப்பாக உள்ளது.

பாண்டவர்களின் வனவாசத்தில் அர்ஜுனனின் திசைப்பயணம் கூறப்பட்டுள்ளது. அதை வேதம் திகழ்ந்த நிலங்களுக்கு அவன் செல்லும் பயணமாக விரித்துக்கொண்டேன். வேத முதல்வனாக அவன் சென்று கண்டடைவது பாசுபதம் ஏந்திய முக்கண்ணனை. எந்தப் பழங்குடித் தொன்மையிலிருந்து வேதம் முளைத்தெழுந்ததோ அந்த பழங்குடித்தொன்மையின் அடியாழத்தில் குடிகொள்ளும் சிவனையும் சக்தியையும். பாசுபதம் என்பது அந்த மறுக்க முடியாத தொன்மையிலிருந்து எழுந்து வந்த ஒரு மெய்ஞானமே.

பாசுபதம் என்றால் என்ன  என்பதை மகாபாரதத்தைக் கொண்டு புரிந்துகொள்ள முடியாது.  அதில் உள்ளது ஒரு கதை மட்டுமே. அதை ஓர் அம்பு என்று மகாபாரதம் என்று சொல்கிறது. ஆனால் அத்தனை பெருந்தவம் இயற்றி அர்ஜுனன் அடைந்த அத்தகைய ஓர் மூவுலகையும் அழிக்கும் அம்பை போர்க்களத்தில் எங்கும் பயன்படுத்தவில்லை. (சில மகாபாரத வடிவங்களில் ஜயத்ரதனைக் கொல்ல பாசுபதத்தை பயன்படுத்தியதாக உள்ளது) களம் முழுக்க எங்கும் எவரும் பாசுபதம் பற்றி அஞ்சி விவாதிக்கும்  குறிப்பும் இல்லை. அது பிற்காலத்தில் மகாபாரத்தில் இணைக்கப்பட்ட ஒரு தனிக்கதை, சைவம் சார்ந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதை ஒரு மெய்ஞானம் என்றே நான் எடுத்துக்கொள்கிறேன். கீதை அர்ஜுனனுக்கு சொல்லப்படும் தருணத்தில் அந்த மெய்ஞானம் அவனுக்குள் இருந்து அதை வாங்கிக்கொண்டது என்று விரித்துக்கொள்கிறேன்.  வேத முதல்வன் என முக்கண்ணன் எழுந்தருளிய இந்நாவல் அதனாலேயே அதன் தீவிரத்துடன் வெறியாட்டுடன் பித்துடன் எனக்கு மிக அணுக்கமானது.

இதை முதலில் வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்திற்கும் இப்போது வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் எனது நன்றி.

ஜெ

03.05.2024

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : [email protected] 

Phone 9080283887)

‘கிராதம்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன்

வட்டவானவில்- கிராதம்

கிராதம் – On the job Training for Arjuna

கிராதம் என்னும் பயணம்- ராமராஜன் மாணிக்கவேல்

 

முந்தைய கட்டுரைகுத்தூசி குருசாமி
அடுத்த கட்டுரைமூத்தோர் அன்பகம், உடுமலை திறப்புவிழா