- மானஸாவின் காலடியிலிருந்து…
- மழைப்பாடகர்கள்
- எஞ்சும் நிலங்கள்
- தெய்வத்தளிர்
- பெண்பேராற்றல்
- முகிலில் எழுதல்!
- எண்முக அருமணி
- வில்துணை வழிகள்
வெய்யோன் எனும் நாவலின் தலைப்புச்சொல்லை கம்பராமாயணத்திலிருந்து எடுத்துக்கொண்டேன். ‘வெய்யோனொளி தன்மேனியில் விரிசோதியில் மறைய’ என்று கம்பன் பாடுகிறான். அவ்வரிக்கு ஒரு தத்துவார்த்தமான பொருளும் உண்டு. இந்தியாவெங்கும் முதன்மைப் பெருமதமாக ஒருகாலத்தில் இருந்தது சௌரம். சூரியனை வழிபடும் அந்த மதம் பின்னர் வைணவத்தில் இணைந்தது. சூரியனுக்கு சௌரம் அளித்த பண்பு நலன்கள் அனைத்துமே விஷ்ணுவுக்கு அளிக்கப்பட்டன. விஷ்ணுவின் சிலை என பொ.யு. எட்டாம் நூற்றாண்டுக்குப்பின் உருவாக்கப்பட்ட அனைத்துமே சூரியனின் சிலையின் இன்னொரு வடிவங்களாக இருப்பதைப் பார்க்கலாம். குறிப்பாக சமபங்கநிலை என்பது சூரியனுக்குரியது. அது விஷ்ணுவுக்கு உரியதாக மாறியது. இந்தியாவெங்கும் சூரியநாராயணர் ஆலயங்கள் உள்ளன. வெய்யோனின் ஒளி ராமனின் மேனியின் விரிசோதியில் மறைந்தது என்பதுதான் வரலாறு.
உண்மையில் மகாபாரதத்திலும் அவ்வண்ணம் நிகழ்ந்தது என்று தோன்றுகிறது. கிருஷ்ணனின் ஜோதி முன் மறைந்த வெய்யோனென்றே கண்ணனை எண்ணத்தோன்றுகிறது. நான் 1984-85 ஆண்டுகளில் தனியனாக ஒரிசாவிலும் மத்தியப்பிரதேசத்திலும் பயணம் செய்யும்போது முதன்முறையாக சூரியனுக்குரிய தனி ஆலயங்களைப்பார்த்தேன். பின்னர்தான் இந்தியாவெங்கும் இருந்த மாபெரும் சூரியக்கோயில்களைப் பற்றிய செய்திகளை அறிந்தேன். ஒரிசாவின் வடபகுதி மகாபாரதத்தில் அங்க நாடென்று சொல்லப்படுகிறது என்று தெரிந்துகொண்டபோது மெய்யாகவே அங்கு வெய்யோன் வழிபடப்பட்டான் என்றும் அதுவே கர்ணனின் இயல்பில் ஏற்றப்பட்டது என்றும் புரிந்துகொண்டேன்.
கர்ணனுக்கு அளிக்கப்பட்ட சூரியனின் கூறு பலவகையில் அவனுடைய ஆளுமையாக விரிகிறது. சூரியன் அள்ளிக்கொடுப்பவன். எங்கிருந்தும் எவரிடமிருந்தும் எதையும் பெற்றுக்கொள்ளாதவன். தன்னெறியில் மாறாது ஒழுகுபவன், ஒளிமிக்கவன். தன் பாதையில் முற்றிலும் தனியன். இவை அனைத்துமே கர்ணனின் ஆளுமை சித்திரத்திற்கு முற்றிலும் பொருந்துவனவாக பின்னால் எழுந்து வருவதை புனைவாற்றலின் உச்சமென்று கருதுகிறேன்.
வெய்யோனென இந்நாவலுக்கு பெயரிட்டதுமே இதில் விரியும் கர்ணனின் இயல்புகள் அனைத்தும் ஒன்றுடனொன்று மிகச்சரியாகப் பொருந்தித் திரளத்தொடங்கின. வெண்முரசின் எழுத்தாக்கத்தில் தன்னியல்பாக வந்தமைந்த நெறிகளில் ஒன்று. எங்கும் எந்தக் கதைத்தலைவனையும் விதந்தோதி இறைவடிவு நோக்கி செலுத்தவில்லை என்பது. அவ்வாறு செலுத்தாமலேயே இறைத்தன்மை கூடியது கிருஷ்ணனின் ஆளுமை. கர்ணனைப்பற்றி இந்தியாவில் பிற்காலத்தில் எழுதப்பட்ட படைப்புகளில் எல்லாவற்றிலுமே கர்ணனுக்கு ஒரு பெருங்கதைத்தலைவனின் மணிமுடியை அளிக்க ஆசிரியர்கள் முயன்றிருக்கிறார்கள். இந்நாவலில் அதற்கு எதிரான புனைவுப்போக்குதான் ஓங்கியிருந்தது என்றாலும் எவ்வகையிலோ மாபெரும் கதைத்தலைவனாக தன் வீழ்ச்சியினூடாக அவலக்கதைத்தலைவனாக கர்ணன் உருவாகி வந்தான்.
என்னுள்ளிருந்து கர்ணன் திரண்டு வந்து என் முன் நிற்பதை ஒரு திகைப்புடனும் மகிழ்வுடனும் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். கர்ணனின் பேருடல் பற்றி வியாசர் கூறுவது அர்ஜுனனும் பீமனும் ஒன்றாக இணைந்த வடிவமென அவனை உருவகிப்பது பலவகையிலும் குறிப்பிடத்தக்கது. நாகபாசன் என அவன் தெற்கத்திய ஆலயங்கள் தோறும் நின்றிருக்கிறான். அதுவும் ஓர் அரிய குறியீடே. அம்புக்குப் பதில் பாம்பு. பதுங்கியிருப்பது, பறப்பது, நஞ்சு கொண்டது. ஆயினும் நெறிகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டது.
கர்ணனில் துளியினும் துளியென எஞ்சிய அந்த நஞ்சை வெய்யோன் விரித்து விரித்து வைக்கிறது. ஆகவே இது நஞ்சின் கதையும் கூட அவ்வகையில் பார்த்தால் இந்நாவல் தான் முதற்கனலின் மையக்கருவுடன் மிகச்சரியான ஒரு தொடர்ச்சி கொண்டிருக்கிறது. நஞ்சில் நிரம்பி இந்நாவல் முழுமையடைகிறது. சூரியனிலும் அந்த நஞ்சு சற்றே உண்டு. அதன் ஒளிரும் வெண்வட்டத்தின் உள்ளில் ஒருகணத்தில் நீலம் வந்து செல்கிறதல்லவா? ஆண்டுக்கொருமுறை நஞ்சால் விழுங்கப்பட்டு நஞ்சால் மீண்டு வருகிறதல்லவா?
அனைத்து சிறப்புகளும் ஒருங்கிணைந்த ஓர் ஆளுமையில் கூடும் துளி நஞ்சின் ஆற்றல் முடிவற்றது. அது அனைத்து அழகுகளும் கூடிய ஓர் உருவத்தில் அமையும் சிறு குறை பேரழகென மாறுவது போல எடையும் விசையும் கொண்ட பொருட்களின் நடுவில் அமையும் ஒரு வெற்றிடம் பேராற்றல் கொண்டதாக ஆவதைப்போல அந்த நஞ்சின் கதையென வெய்யோனை சொல்வேன்.
எரிந்தமைந்த காண்டீப வனத்திலிருந்து கர்ணனின் அம்புத்தூளியில் வந்தமைந்த அச்சிறு நஞ்சின் கதையை ஓர் ஆடிவரிசை ஓராயிரம் பாவைகளென காட்டுவது போல வெவ்வேறு கதைகளினூடாக சொல்ல முயன்ற நாவல் இது. ஆகவே இது சிதறி சிதறிப்பரந்து எங்கோ ஒரு புள்ளியில் தன்னை ஒரே கோடென தொகுத்துக்கொள்கிறது.
இந்நாவலின் முதற்பதிப்பை வெளியிட்ட கிழக்குப்பதிப்பகத்திற்கும் இப்போது வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.
ஜெ
03.05.2024
(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : [email protected]
Phone 9080283887)
வெய்யோன்,பன்னிரு படைக்களம்-பலராம கிருஷ்ணன்
‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்