அன்புள்ள ஜெ,
படுகளம் கதைச்சூழல் எந்த அளவுக்கு யதார்த்தமானது? இதை நீங்கள் ஒரு திரில்லர் வகை நாவலாக எழுதுகிறீர்கள். பொதுவாக திரில்லர்கள் நமக்குத் தெரியாத ஒரு களத்தில் நடைபெறும். அண்டர்வேர்ல்ட் , போலீஸ் மாதிரி. இப்படி தெரிந்த ஒரு களத்தில் நிகழும்போது அவற்றின் நம்பகத்தன்மை எந்த அளவுக்கு என்ற கேள்வி எழுகிறது. நானும் நெல்லைக்காரன் என்பதனால் இதைக் கேட்கிறேன்.
மா.கிருஷ்ணமூர்த்தி
படுகளம் மின்னூல் வாங்க
படுகளம் வாங்க
அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி,
தமிழில் எதையேனும் ஒன்றை எழுதிய அனைவரும் அது என்ன என அவர்களேதான் விளக்க வேண்டியிருந்திருக்கிறது.
நான் உலகப் புனைகதைப் பரப்பை தொடர்ச்சியாகக் கூர்ந்து கவனித்து வருபவன், வேறெவரும் அப்படி ஒரு கவனம் கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. பலர் அங்கிங்கு கிடைக்கும் உதிரி நூல்செய்திகள் வழியாக ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியான வாசிப்புக்கான வாழ்க்கைச் சூழலும் இங்கே பெரும்பாலவர்களுக்கு இல்லை என்றும் சொல்லலாம்.
ஐரோப்பாவிலேயே இலக்கிய வாசிப்பு ஒரு சமூகநிகழ்வாக இல்லாமலாகிக் கொண்டிருக்கிறது. பயன்தரு நூல்களுக்கான வாசிப்பும் விற்பனையுமே முதலிடத்திலுள்ளன. இலக்கியம் மிகக்குறுகிய வட்டத்துக்குள், ஓப்பரா அல்லது சிம்பனி ரசிப்பு போல ஆகிக்கொண்டிருக்கிறது. இங்கே ஏற்கனவே இலக்கியவாசிப்பு பரிதாபநிலையில் இருந்தது, பொதுவான வாசிப்பே சொல்லும்படி இல்லை.
இன்று வாசிப்புக்குள் அடுத்த தலைமுறை வந்தாகவேண்டும். இன்று அதில் இருக்கும் நடுவயது சென்றவர்கள் சென்றகால கருத்துநிலைகள், உளநிலைகள் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாசிப்பு இலக்கியத்தை மேலும் தேங்கச் செய்கிறது. அவர்களின் ஆதிக்கம் வாசிப்பில் இருக்குமென்றால் இலக்கியம் முன்னகர முடியாது. எங்கும்போல இலக்கியத்திலும் பழையன கழிதல் வேண்டும், அதில் முக்கியமான கழிதல் தேங்கிப்போன பழைய வாசகர்கள் அகற்றப்படுதல்.
இன்று விரைவாக இரு கருத்துக்கள் காலாவதியாகி வருகின்றன. ஒன்று ‘தூய இலக்கியம்’ என்ற பேரில் முன்வைக்கப்படும் வரண்ட சமூக யதார்த்தம் மற்றும் தனிநபர் உளப்பதிவுகள். யதார்த்தவாதம் அரசியலியக்கங்களாலும், சமூகவியலாளர்களாலும் அதிகமாக முன்நிறுத்தப்பட்டது. அவர்களுக்கான ஆய்வுப்பொருள் அதில் உள்ளது, அவர்களுக்கு அது மட்டுமே புரிகிறது.
யதார்த்தவாத படைப்புகளில் சிறந்த படைப்புகளுக்கேகூட ‘நேர்மையான சித்தரிப்பு’ என்னும் இடம் மட்டுமே உண்டு. ஆனால் இன்று இதழியல், காணொளிப் பதிவுகள் அதைவிட நுணுக்கமான விரிவான நேரடிப்பதிவுகளை தர ஆரம்பித்துவிட்டன. உலகமெங்கும் பலகோடிப்பேர் அந்தரங்க உலகங்களை எழுத ஆரம்பித்துவிட்டனர். புகைப்படம் வந்தபின் ஓவியத்தில் எப்படி நேரடி பதிவுக்கு முதன்மையிடம் இல்லாமலாகி விட்டதோ அப்படித்தான். இன்று மிக அரிதான யதார்த்தப்பதிவுகள், தனிநபர்ப்பதிவுகள் தவிர பிறவற்றுக்கு பெரிய இலக்கிய இடமெல்லாம் இல்லை.
இரண்டு, எண்பதுகள் முதல் புகழ்பெற்ற புனைவுவிளையாட்டு எனப்படும் சிடுக்கெழுத்துமுறை இன்று வாசிக்கப்படுவதில்லை. எண்பதுகளுக்குப் பிறகு வெவ்வேறு துணைஅறிவியல் துறைகள் (மானுடவியல், சமூகவியல், மொழியியல் போன்றவை) உருவாகி அவை இலக்கியத்தை பேசுபொருளாக எடுத்துக்கொண்டபோது இவ்வகை எழுத்தின் மேல் ஒரு கவனம் விழுந்தது. கல்வித்துறைக் கவனம் அவற்றுக்கு பெரிய அளவிலான இலக்கிய முக்கியத்துவத்தை உருவாக்கியளித்தது. இலக்கியத்தை அழகியலனுபவமாகவோ, உணர்வுரீதியாகவோ அணுகாமல் வெறுமே பிரித்து ஆராயும் பார்வையை மட்டுமே கொண்டிருப்பவர்களின் வாசிப்பு அது.
ஆனால் கல்வித்துறைக்குள் அன்று பேசப்பட்டு அதனாலேயே கவனம் பெற்ற பல நூல்கள் இன்று வாசிக்கப்படுவதில்லை. கல்வித்துறைக்குள் அவை இடமிழந்து கொண்டிருக்கின்றன. கல்வித்துறைக்கு வெளியே அவற்றை வாசிக்கும் மனநிலையே இல்லை. கல்வித்துறை இன்று அன்று இலக்கியத்துக்குப் பயன்படுத்திய அதே ஆய்வுமுறைகளை பிரபல ஊடகச்செய்திகளுக்கு பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.
இன்றைய பிரச்சினை ‘வாசிக்கச் செய்வது’ தான். சொல்லப்போனால் எல்லாவகை எழுத்துமே இன்றியமையாதவை என்னும் நிலை உலகளாவ உருவாகி வந்துள்ளது. முந்தைய தலைமுறையில் நாம் சிற்றிதழ்ச் சூழலில் வணிக – கேளிக்கை எழுத்தை எதிர்த்தோம். அவ்வாறு எதிர்த்து செயல்பட்டவன் நான். அன்று வணிகக்கேள்விக்கை எழுத்தே இலக்கியம் என்னும் சூழல் நிலவியதனால் இலக்கியத்தை முன்வைக்கவேண்டிய தேவை இருந்தது. இன்றைய பார்வை என்பது வேறு. ‘வாசிப்பு’ என்பது ஒரு காடு போல. காட்டிலுள்ள எல்லா மரமும், எல்லா தாவரமும் அந்த சூழலமைப்புக்கு தன் பங்களிப்பை ஆற்றுகிறது. காட்டில் களை என ஒன்று இல்லை. இன்று வாசிப்பை ஓர் இயக்கமாக நிலைநிறுத்தும் வணிகக்கேளிக்கை எழுத்துக்கள் நிறையவே வந்தாகவேண்டும் என்பதை இருபதாண்டுகளாகச் சொல்லி வருகிறேன்.
அவற்றுக்கும் மேல், இலக்கியத்தின் ஒரு பகுதியாகவேகூட, ஈர்ப்புள்ள வாசிப்புத்தன்மை கொண்ட புனைவுகள் உருவாக வேண்டும். இலக்கியத்தின் எல்லா பகுதியும் அப்படி இருக்கவேண்டியதில்லை, இருக்கவும் இயலாது. ‘கதாநாயகி’ போன்ற நாவலை, அடுக்குக்குள் அடுக்காகச் செல்லும் அதன் கதைகளை, கூர்ந்த வாசகன் உழைத்து வாசித்தால் மட்டுமே அடையமுடியும். அதன் வரலாற்றுச் சரடுதான் அதன் மையக்கரு. அதை அந்த சூழல்களை ரோமாபுரிக் காலம் முதல் பிரிட்டிஷ் காலம் வரை உள்வாங்கினால்தான் வாசகன் பெற முடியும். ஆனால் இலக்கியத்தின் ஒரு பகுதி வாசகர்களை தீவிரமாக உள்ளிழுக்கும் தன்மை கொண்டதாக, வாசிப்பை தானே அளிப்பதாக இருக்கவேண்டும். அதைச் சொல்லிவந்தேன், நான் சொல்வன எல்லாவற்றையும் நானே எழுதிக்காட்டுவதும் என் வழக்கம். கன்னிநிலம், பத்துலட்சம் காலடிகள், ஆலம், படுகளம் போன்றவை அத்தகைய எழுத்துக்கள்.
தீவிர இலக்கியத்திலும்கூட வாசிப்பின் ஈர்ப்புக்காக வேகப்புனைவு ( Thriller ), மர்மப் புனைவு (Mystry), திகில்புனைவு (Horror) என புனைவின் எல்லா சாத்தியக்கூறுகளும் பயன்படுத்தப்பட வேண்டும். இவ்வகை எழுத்துக்கள் இன்று உலகமெங்கும் உருவாகி வருகின்றன. இந்த எழுத்து வகைமை ஒவ்வொன்றுக்கும் அவற்றுக்கான புனைவுசார்ந்த இலக்கணம் உருவாகி வந்துள்ளது. அந்த வடிவத்தை எடுத்துக்கொண்டு அதற்குள் இலக்கியத்தின் சாத்தியமென்ன என்று பார்ப்பதுதான் இந்த எழுத்துமுறை. ஆலம், படுகளம் எல்லாம் அந்தவகையான எழுத்துக்கள். அவற்றின் வடிவம் வேகப்புனைவுக்குரியது. உள்ளே வாழ்க்கையின் சித்திரமும், உணர்வுவிவரிப்பும், மானுட வாழ்க்கை சார்ந்த ஓர் அடிப்படை தேடலும் உள்ளன. அவை இலக்கியக்கூறுகள்.
இவற்றை வழக்கமான வேகப்புனைவுகள், மர்மப் புனைவுகள் மற்றும் திகில்புனைவுகளுடன் ஒப்பிட்டு மதிப்பிட முடியாது. ஒரு வழக்கமான வணிக ரீதியான வேகப்புனைவில் யதார்த்தமான வாழ்க்கைச் சித்திரங்களோ, நுணுக்கமான அகநிகழ்வுகளோ, வாழ்க்கை குறித்த பார்வையோ இருக்காது. அவை நிகழ்வுகளை ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மிக விரைவாக எடுத்துச்சென்றுகொண்டே இருக்கும். வாசித்து முடித்ததுமே அவை அங்கேயே முடிந்துவிடும். துப்பறியும் கதைகள் வாசகனுடன் ஓர் அறிவார்ந்த விளையாட்டை மட்டுமே ஆடுகின்றன, நாவல் முடிந்ததுமே விளையாட்டும் முடிந்துவிடும். இந்தக் களங்களில் எழுதப்பட்ட உலகப்புகழ்பெற்ற நாவல்கள் எல்லாமே இவ்வகையானவை.
ஆனால் இலக்கியம் அந்த கட்டமைப்புக்குள் இலக்கியத்தை நிகழ்த்த முயல்கிறது. வேகப்புனைவு அல்லது மர்மப்புனைவு நாவலுக்குரிய இலக்கணப்படி அவை இலக்கணமீறல்கள்தான். அவற்றை வாசித்துப் பழகிய வாசகர்களுக்கு அப்பகுதிகள் தேவையற்ற திசைதிரும்பல்கள் என்று தோன்றும். ஆலம் நாவலில் சந்தானத்தின் பிள்ளைப்பாசம் பற்றி வரும் பகுதிகள், படுகளம் நாவலில் அம்மாவுக்கும் கதைநாயகனுக்குமான உரையாடல் வரும் பகுதிகள் உதாரணம். அவற்றை புகழ்பெற்ற அமெரிக்க வேகப்புனைகளில் காணமுடியாது. அங்குள்ள நாவல்களில் அவை தேர்ந்த தொகுப்பாளர்களால் வெட்டி சுருக்கப்பட்டு , மிகச்சுருக்கமாக என்ன நிகழ்ந்தது என்று மட்டுமே சொல்லிச் செல்லும் அமைப்பு கொண்டிருக்கும். ஆனால் ஆலம், படுகளம் போன்றவை இலக்கியமாக ஆவதே இந்த மீறலால்தான். இவற்றிலுள்ள யதார்த்தப்பகுதி, நுண்ணிய உணர்வுநிலை, வாழ்க்கைப்பார்வை ஆகியவை வாசகனிடம் வேறொரு தளத்தில் உரையாடுகின்றன.
ஒரு யதார்த்த நாவலில் உள்ள ‘அப்பட்டமான நேரடி யதார்த்தம்’ இந்தவகை எழுத்துக்களில் அமைய முடியாது. வேகப்புனைவு அல்லது திகில்புனைவு என்பதே ஒரு யதார்த்த மீறல்தான். ஏனென்றால் வாழ்க்கை அப்படி ஒற்றை உணர்வு சார்ந்து நிகழ்வது அல்ல. வாழ்க்கைக்கு பல உணர்வுத் தளங்களுண்டு, ஒரே சமயம் அவையனைத்திலும் நாம் வாழ்கிறோம். வாழ்க்கைக்கு பல பக்கங்களுண்டு, எல்லாமே ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன. இவ்வகை புனைவுகள் அவை முன்வைக்கும் ஓர் உணர்வை மட்டுமே தொகுத்து அதையே யதார்த்தமாகச் சொல்கின்றன. திகில் என்றால் திகில் நிகழ்வுகள் மட்டுமே இருக்கும். வேகப்புனைவு என்றால் அதற்குரிய நிகழ்வுகள் மட்டுமே ஒன்றுடனொன்று தொடுக்கப்பட்டிருக்கும். அதற்கேற்ப ஓரிரு கதாபாத்திரங்களில் மட்டுமே குவிந்து கதை முன்செல்ல்வும். இதை clipped realism என்று சொல்லலாம்.
இவ்வகை எழுத்தின் இயல்பே குவிதலும் ஒடுங்குதலும்தான். ஓர் இலக்கியப்படைப்பின் இயல்பென்பது விரிவதும் சிக்கலாவதும்தான். விஷ்ணுபுரம் அல்லது பின் தொடரும் நிழலின் குரல் அல்லது வெண்முரசு வரிசை நாவல்களுக்கும் இவ்வகை படைப்புகளுக்குமான வேறுபாடே இதுதான். ஒரு வாழ்க்கையை ‘முழுக்கச் சொல்ல’ முயல்பவை பெருநாவல்கள்.’ஒன்றை மட்டுமே’ சொல்பவை இத்தகைய நாவல்கள்.
இவை யதார்த்தத்தை காட்டும் முறையும் எல்லைக்குட்பட்டது. ஒன்று ,உரையாடல்கள் ‘மிக யதார்த்தமாக’ அமைய முடியாது. அவை நீளமாக, சலிப்பாக ஆகிவிடும். அவை சட்டென்று புரியாமல் போகலாம். புரியாவிட்டால் வாசிப்பு வேகம் தடைபடலாம். ஆகவே வேகத்தின் பொருட்டு எல்லாமே சற்று உருமாற்றப்பட்டிருக்கும். வட்டாரச் சொற்கள் அல்லது வட்டார மொழி எளிமையாக்கப் பட்டிருக்கும். காட்சிச்சித்தரிப்புகள் முடிந்தவரை சுருக்கமாக, வேகமான ஒருசில சொற்றொடர்களில் சொல்லப்பட்டிருக்கும். ( உதாரணம், நம்பியாற்றங்கரையும் தென்கரை மகாராஜா ஆலயமும் எத்தனை சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன என்பது) தேவையான தரவுகள் இருக்கும், ஒரு சூழலை அல்லது நிகழ்வை புரியவைக்கும் அளவுக்கு. ஆனால் வாசிப்பைத் தடைசெய்யுமளவுக்கு மிகையாக இருக்காது.
பொதுவாக, உலகளாவிய தளத்தில் வேகப்புனைவுகள், திகில்புனைவுகள் போன்றவை அதற்கென்றே உருவாக்கப்பட்ட செயற்கையான கதைக்களங்களிலேயே நிகழும். நிழல் உலகம், ஒற்றர்களின் உலகம், வன்மேற்கு உலகம், அறிவியல் சோதனைகளின் உலகம், விண்வெளி உலகம் என அதற்கென்றே பல உலகங்கள் ஒட்டுமொத்தமாக அனைத்துப் புனைவாளர்களாலும் உருவாக்கப்பட்டுள்ளன. புராணங்கள் நிகழ்வதுபோல அவை ஓர் அந்தரத்தில் உள்ளன. அனைவரும் அதற்குள் சென்று எழுதலாம். அது செயற்கையானது என வாசகனுக்குத் தெரியும். ஆனால் அதை அவன் அந்த வாசிப்பில் , வாசிப்பனுபவத்தின் பொருட்டு நம்ப தயாராக இருக்கிறான். (நம்நாட்டில் அப்பாவித்தனமாக அதை உண்மையுலகு என நம்புபவர்களும் இருக்கலாம்)
உண்மையான இடங்களை வேகப்புனைவு நாவல்களில் பயன்படுத்தும்போதுகூட அதை உருமாற்றி புனைவாக ஆக்கிக்கொள்வதே வழக்கம். ஏனென்றால் வேகப்புனைவுக்கு அதற்கான ஓர் உலகமே தேவை. ஜேம்ஸ் ஹேட்லி சேஸின் பெரும்பாலான வேகப்புனைவு நாவல்கள் மயாமி கடற்கரையில் நிகழ்பவை, அவருக்கு அந்த உலகம் பெரிதாகத் தெரியாது. அவர் தகவல்களைக் கொண்டு புனைந்தது அது. நம்மில் பலர் அறியாத ஒன்றுண்டு, தமிழகத்தில் ஊட்டியை பின்புலமாகக் கொண்டு சில பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் வேகப்புனைவு நாவல்களை எழுதியுள்ளனர். அவர்கள் இங்கே ஒரு முறைகூட வந்தது இல்லை. அது அவர்கள் உருவாக்கிய ஊட்டி.
வேகப்புனைவுநாவல் அதற்குரிய வகையில் கதைக்களத்தை உருமாற்றி புனைந்தே ஆகவேண்டும். வேகப்புனைவை இலக்கியப்படைப்புக்குப் பயன்படுத்தும்போது அதை எந்த அளவில் செய்வதென்பது ஒரு சிக்கலான கேள்விதான். யதார்த்தத்தை அகவயமாக நிலைநிறுத்திக்கொண்டு புறவயமாக எல்லாவகை உருமாற்றங்களையும் செய்யலாம் என நான் முயன்றிருக்கிறேன். வேறு படைப்பாளிகள் அவர்களுக்கான வகையில் அதை செய்யலாம்.
ஓர் இலக்கியவாசகன் படுகளம் நாவலில் நவீன இலக்கியம் எங்கே எவ்வகையிலுள்ளது என எளிதில் அறியமுடியும். அதன் உண்மையான கதாபாத்திரங்களில், ஒவ்வொரு உள்ளம் செயல்படும் நுணுக்கமான ஊடுவழிகளில், அது மானுடவாழ்வின் அடிப்படையான இயல்பொன்றை தொடுவதில் அது உள்ளது. ஆனால் புதிய வாசகன் இதன் விரைவுக்காகவே இதை வாசிப்பான். அவனை அறியாமலேயே இதன் இலக்கிய அம்சத்தால் கவரப்படுவான். அதைநோக்கி அவன் கூர்கொண்டு செல்வான்.
இந்தவகை புனைவுகள் வந்துகொண்டே இருக்கவேண்டும் என நினைக்கிறேன். இலக்கியச் சூழலிலேயே இதைப்போன்ற படைப்புகள் ஆண்டுக்கு இருபது என்னும் அளவிலேனும் வருமென்றால் வாசிப்பு ஓர் இயக்கமென இங்கே நிலைபெறும். இந்நாவல்கள் பெறும் பெரும் வரவேற்பு, உள்ளே கொண்டு வரும் புதியவாசகர்களின் பரப்பு அதையே காட்டுகிறது. இன்று எழுதும் இளம் எழுத்தாளர்கள் இவ்வகையிலான புனைவுகளையும் எழுதவேண்டும். நுட்பம் என எண்ணி எழுதப்படும் வரண்ட புறயதார்த்தம் மற்றும் அகஓட்டங்கள் இன்று முற்றிலும் வாசிக்கப்படாமலாகி விட்டிருக்கின்றன என அவர்கள் உணரவேண்டும்.
எல்லா எழுத்தாளர்களாலும் அவ்வண்ணம் எழுத முடியாதுதான். தொடர்ச்சியான வாசிப்பும், வெவ்வேறு வாழ்க்கைக் களங்களில் ஆர்வமும், வெவ்வேறு அறிவியக்கங்கள் சார்ந்த அறிதலும் அதற்குத்தேவை. புனைவின் வெவ்வேறு வடிவங்களை தொடர்ந்து பயில்வதும் அவசியம். அவ்வாறு எழுதப் புகும் ஒருவருக்கு தமிழ்விக்கியே ஒரு பெரிய தகவல்களஞ்சியம். அவ்வாறு எல்லா வகையிலும் எழுத புதுமைப்பித்தனே மாபெரும் வழிகாட்டி
ஜெ