கசகிஸ்தான், சென்றதும் மீண்டதும்

நண்பர் கிருஷ்ணன் தான் கசகிஸ்தான் திட்டத்தைப் போட்டது. அவர் கருதியது ஒன்றே, விசா தொல்லைகள் இல்லை. டிக்கெட் கட்டணம் கம்மி. நேராகச் சென்றிறங்கி, சுற்றிப்பார்த்து திரும்பி விடலாம். நானும் அவருடைய பயணத்திட்டங்களில் இணைந்துகொள்வதையே இப்போதெல்லாம் செய்கிறேன். தனியாக திட்டமிடுவதில்லை. மண்டை வேறு வேறு விஷயங்களில் மாட்டிக்கிடக்கிறது.

நாகர்கோயிலில் இருந்து ரயிலில் பெங்களூர் சென்று அங்கிருந்து டெல்லி சென்று, டெல்லியில் இருந்து கசகிஸ்தான் செல்லும்படி கிருஷ்ணன் திட்டமிட்டார். அனைவரும் ஒன்றாக திரண்டு செல்வதற்கு அது உகந்தது என்பது அவர் கணக்கு. நானும் யோசிக்கவில்லை. செல்வேந்திரன் “ஏன் சார் நான் மெட்ராஸிலே இருந்து பெங்களூர் வந்து டெல்லி போகணும்?” என்றபின்னர்தான் அந்த அபத்தம் உறைத்தது. ஒன்றும் செய்வதற்கில்லை, டிக்கெட் போட்டாகிவிட்டது.

பெங்களூர் ரயில்நிலையம் விமானநிலையம் போல கட்டியிருக்கிறார்கள். ஆகவே அங்கே கட்டண ஓய்வறை இருக்கும், அங்கேயே குளித்து உடைமாற்றி விமானநிலையம் செல்லலாம் என நினைத்தேன். பல ஊர்களில் அப்படிச் செய்ததுண்டு. ஆனால் அங்கே இலவச காத்திருப்பு அறைதான் இருந்தது, கழிப்பறை நாறிக்கிடந்தது.

வெளியே வந்து ஓர் ஆட்டோ பிடித்து ஒரு விடுதியை கண்டுபிடிக்கலாம் என முயன்றேன். ஆயிரம் ரூபாய் கேட்டார்கள், மூன்று மணிநேரத்துக்கு. ஆட்டோ டிரைவர் “நான் கொண்டுட்டு போறேன் சார், நல்ல நல்ல ஓட்டல்லாம் இருக்கு” என அழைத்துச் சென்றார். முக்கால் மணிநேரம் அவரே சுற்றித்தேடியும் அப்பகுதியில் ஓட்டல்களே இல்லை. இருந்த இன்னொரு ஓட்டலிலும் அதே ஆயிரம் ரூபாய். ஆட்டோவுக்கு கூடுதலாக முந்நூறு ஆயிற்று.

அப்போதே ‘புறப்பட்ட ராசி’ சரியில்லை என தோன்றியது. டெல்லியில் இருந்து பின்னிரவில் விமானம் ஏறி மறுநாள் காலை நான்கரை மணிக்கு கசகிஸ்தான் சென்றோம். விசா இல்லை என்பதனால் நேராக எமிக்ரேஷனில் சென்று நின்றோம். மற்றவர்கள் கடந்துவிட்டனர். என் பாஸ்போர்ட்டை அதிகாரி உற்று உற்று பார்த்தார். எழுந்து சென்றுவிட்டார். நான் நின்றுகொண்டே இருந்தேன். முக்கால் மணிநேரம்.

நடுவே ஒரு போலீஸ்காரர் வந்து என்னிடம் மீண்டும் ‘வரிசையில் சென்று நில், அங்கே நிற்கக்கூடாது’ என்று சைகையால் அதட்டினார்.

நான் “என் பாஸ்போர்ட், என் பாஸ்போர்ட்” என்று கூச்சலிட்டேன்.

அவருக்கு கஸாக் மொழி தவிர எந்த மொழியும் தெரியாது.

அந்த அதிகாரி திரும்பி வரும் வரை வெவ்வேறு ஆட்களிடம் “என்ன பிரச்சினை” என மன்றாடினோம். எல்லாருமே சைகைதான்.

ஓர் உயரதிகாரி அம்மாள் வந்தார். உதிரி ஆங்கிலம் தெரிந்தவர். என் பாஸ்போர்ட்டில் பக்க எண்கள் மாறியுள்ளன என்றும், ஆகவே நான் கசகிஸ்தானுக்குள் செல்ல முடியாது என்றும் சொன்னார். நான் அந்த பாஸ்போர்ட்டுடன் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா எல்லாம் சென்றிருக்கிறேன். எல்லா விசாக்களும் அதில் உள்ளன. அது ஓர் அச்சுப்பிழை.

ஆனால் அதைச் சொன்னால் அந்த அம்மையாருக்கு அதையெல்லாம் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஆங்கில அறிவில்லை. திரும்ப திரும்ப “நோ ரூல். யூ காண்ட் கோ” அவ்வளவுதான்.

“சரி, நான் திரும்பிச் செல்கிறேன். நீங்கள் கிளம்புங்கள்… உங்கள் பயணம் தடைபட வேண்டாம்” என்று நான் நண்பர்களிடம் சொன்னேன்.

அரங்கசாமி “இல்லை சார், அதெப்படி…” என்றார்.

“நீங்கள் சென்றால்தான் எனக்கு தேவையென்றால் உதவமுடியும். மேலும் பெரும்பணம் செலவழித்து நண்பர்கள் வந்துள்ளனர். அவர்களிடம் நாம் பணத்தை இழக்கும்படிச் சொல்ல முடியாது” என்றேன். ஒருவழியாக பயணத்தைத் தொடர அரங்கசாமி சம்மதித்த பிறகுதான் மற்ற நண்பர்களின் முகமே தெளிவடைந்தது.

அவர்கள் சென்றபின் என்னை ஒரு நாற்காலியில் அமரச்செய்தனர். காலை ஐந்தரை மணிக்கு அமர்ந்தேன். காலை ஒன்பது வரை அங்கேயே இருந்தேன். நாற்காலியில் இருந்து எழுந்தால் ஒரு போலீஸ்காரர் கையால் உட்கார் உட்கார் என ஆணையிட்டார். மீண்டும் அமர்ந்தேன். தாகம், பசி. ஆனால் சிறுநீர் கழிக்கக்கூட அனுமதியில்லை.

விமானநிலையமே காலியாகியது. அலமாட்டி கசகிஸ்தானின் இரண்டாம் தலைநகரம். ஆனால் தூத்துக்குடி அளவுதான் இருக்கும் அந்த விமானநிலையம். எந்த அதிகாரியும் இல்லை. போலீஸ்காரர்கள் அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். நான் ஒவ்வொருவரிடமாக ஆங்கிலத்தில் “என்ன நடக்கிறது? ஏன் என்னை அமரச்செய்திருக்கிறீர்கள்?” என மன்றாடினேன். அதே சைகை, கைகளால் அதட்டல்.

என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. ஒரு போலீஸ்காரரிடம் உரக்க “சிறுநீர் கழிக்கவேண்டும்” என்றேன். பாண்டின் ஸிப்பை அவிழ்த்தால்தான் நான் சொன்னது அவருக்கு புரிந்தது. அவர் அழைத்துச்செல்ல, துப்பாக்கி முனையில் சிறுநீர் கழித்தேன். கழிப்பறையில் தண்ணீர் இல்லை, காகிதமும் இல்லை.

மீண்டும் சில விமானங்கள் வந்தன. பழைய அதிகாரிகள் அனைவரும் சென்று புதியவர்கள் வந்தனர். எவருக்கும் எதுவும் தெரியவில்லை. என் செல்பேசியில் இணைய இணைப்பு இல்லை. அங்கே இலவச இணைய இணைப்புக்கு வழியில்லை. ஐரோப்பா முழுக்க ஆங்காங்கே கிடைக்கும் இலவச இணையத்தை வைத்தே சமாளித்த நினைவில் நான் ‘இண்டர்நேஷனல் ரோமிங்’ போடவுமில்லை. அங்கே வைத்து அரங்கசாமி போட்ட நெட்பேக் ஐந்து நிமிடம் கழித்து வேலை செய்யவில்லை.

ஒரு வழியாக இணைய இணைப்பு வந்தது. ஆனால் ஐந்து நிமிடம் இணையம் வேலைசெய்தால் இந்திய ரூபாயில் முந்நூறு ரூபாய் காலியாகிவிடும். ஒரே ஒரு ஃபோன் பேசினால் ஆயிரம் ரூபாய் கரைந்துவிடும். ஒரே நாளில் மூவாயிரம் ரூபாய்க்கு செல்போன் பயன்படித்து சாதனை புரிந்தேன்.

ஆனாலும் என் பிரச்சினையை ஆங்கிலத்தில் எழுதி கூகுள் வழியாக கசாக் மொழிக்கு மொழியாக்கம் செய்து அதை அவர்களிடம் காட்டினேன். அப்போதுதான் ஒன்று தெரிந்தது, காவலர்களில் பாதிப்பேருக்கு கஸாக் மொழியும் வாசிக்க தெரியாது. போலீஸ்காரர் இன்னொருவரிடம் காட்டி படிக்கச் சொல்லி தெரிந்துகொண்டார். அங்கே பலருக்கு எந்த மொழியுமே எழுதப்படிக்கத் தெரியாது. முழுக்க முழுக்க கல்வியறிவில்லாதவர்கள்!

கடைசியாக வந்த அதிகாரியிடம் என் மொழியாக்கத்தைக் காட்டினேன். அவருக்கு அப்போதுதான் தோராயமாக விஷயம் புரிந்தது. அவருடைய காபினில் என் பாஸ்போர்ட் இருந்தது, என்ன தகவல் என்று ஏதும் அவருக்கு தெரியவில்லை. அவர் உடனே என்னை ஓர் அறைக்கு கொண்டுசென்றார். விமானநிலைய ‘லாக்கப்’ அது. உடைசல்கள், சிக்கு பிடித்த மெத்தை போட்ட இரு கட்டில்கள். ஒரு நாற்காலி. சன்னல்கள் இல்லை. புழுதிவாடை.

உள்ளே ஏற்கனவே இருவர் இருந்தனர். இருவருமே போலி பாஸ்போர்ட் பயணிகள். கஸகிஸ்தானின் பிரச்சினையே அதுதான். சுற்றிலுமுள்ள தாஜிஸ்தான், அசர்பைஜான், துர்க்மேனிஸ்தான் உட்பட பல்வேறு அரைப்பட்டினி நாடுகளில் இருந்து கசகிஸ்தானுக்குள் ஊடுருவ முயன்றபடியே இருக்கிறார்கள். அந்த வழியாக ஐரோப்பாவுக்குள் செல்ல ஏதோ மார்க்கம் இருக்கிறது.

வியட்நாம் பையன் இயல்பாக ரேடியோ கேட்டுக்கொண்டிருந்தான். அந்த ரேடியோ அவனை இடைவிடாமல் அதட்டுவதுபோல் இருந்தது. இன்னொரு ஆள் அவனுடைய ‘ரக்ஸாக்’கில் இருந்து ஏகப்பட்ட பொருட்களை வெளியே எடுத்து வைத்து மீண்டும் உள்ளே வைத்து மீண்டும் வெளியே எடுத்து உள்ளே வைத்துக்கொண்டிருந்தான். காலை பத்துமணி கடந்துவிட்டது. எனக்கு வேகவைத்த உருளைக்கிழங்கு, இரண்டு துண்டு ரொட்டி, ஒரு கோப்பை பழச்சாறு தந்தார்கள்.

நண்பர்கள் இந்தியாவுக்கு கூப்பிட்டுச் சொல்ல, உயர் அதிகாரம் கொண்ட என் நண்பர்கள் இந்திய தூதரகத்தை அழைத்துப்பேச, என்னிடம் தூதரக அதிகாரி பேசினார். அவர்களுக்கே மொழிச்சிக்கல். கஸாக் மொழிதான் அங்கே பேசவேண்டும், ஆனால் தூதரகத்தில் அம்மொழி தெரிந்தவர்கள் சிலர்தான். பேசிய வரையில் அவர்களுக்கு என் பாஸ்போர்ட் பலத்த சந்தேகத்தை கொடுத்துள்ளது என தெரிந்தது. அதில் அமெரிக்க விஸா இருந்ததனால் அந்த ஐயம் பெருகியிருந்தது.

அவர்களின் நடைமுறை என்பது இதுதான். அந்த பாஸ்போர்ட்டை அவர்கள் பறிமுதல் செய்துவிடுவார்கள். அதிலுள்ள செய்திகளை நம் தூதரகத்துக்கு தெரிவிப்பார்கள். நம் தூதரகம் அதை இந்தியாவிற்கு அனுப்பி, சோதித்து, நான் இந்தியக் குடிமகனே என உறுதிசெய்து அதிகாரபூர்வமான கடிதம் ஒன்றை அவர்களுக்கு அளிக்கவேண்டும். என்னை அதன்பின் இந்தியத் தூதரகத்தில் ஒப்படைப்பார்கள். இந்தியத் தூதரகம் என்னை தனி ஆணைப்படி இந்தியாவுக்கு அனுப்பவேண்டும். அதுவரை நாலைந்துநாள் என்னை சிறையில் வைத்திருப்பார்கள். என் பாஸ்போர்ட் திரும்பக் கிடைக்காது.

என் பாஸ்போர்ட்டில் பல விசாக்கள் இருந்தன. அதை நான் இழக்க முடியாது. அதிகாரி அதை அவர்களிடம் பேசினார். “அப்படியென்றால் அந்த பாஸ்போர்ட்டில் ‘டீபோர்ட்டட்’ என முத்திரை குத்தித்தான் தருவோம்” என்றனர். அப்படி முத்திரை குத்தினால் உலகில் பெரும்பாலான நாடுகளில் அதன்பின் நுழைய முடியாது. விசா எடுக்கும்போதெல்லாம் பிரச்சினை. அது முடியாது என்று தூதரக அதிகாரி அவர்களிடம் பேசினார்.

பிற்பகல் முழுக்க அந்தப் பேச்சுதான் போய்க்கொண்டிருந்தது. என்ன நடக்கிறது என எவரிடமும் கேட்க முடியாது, ஒரே ஒருவருக்கு மட்டும்தான் ஆங்கிலம் தெரியும். அவருக்கும் எந்த விஷயமும் தெரியாது. அந்த சின்னஞ்சிறு அறையில் வியட்நாம் மொழியின் அதட்டல் ஒலித்துக்கொண்டே இருந்தது. பிறகு இருவரையும் அழைத்துக்கொண்டு சென்றனர். இன்னொருவன் வந்து சேர்ந்தான்.

செய்யவேண்டியதைச் செய்தாகிவிட்டது, இனி யோசிக்கவேண்டாம் என முடிவு செய்தேன். மடிகணினியை எடுத்து வைத்து எழுத ஆரம்பித்தேன். தமிழில் வேண்டாம், ஆங்கிலத்தில் எழுதலாமென முடிவு செய்தேன். நீண்டநாட்களாகிறது, ஆங்கிலத்தில் எழுதி. மண்டை முழுக்க தமிழ். தாய்மொழி மலையாளமே கூட தடுமாற்றம்தான். இருந்தாலும் எழுதினேன். நான்கு ஆங்கிலக் கட்டுரைகள் எழுதி முடித்தேன். எல்லாமே அத்வைத வேதாந்தம் பற்றி. அவற்றை திரும்பத் திரும்ப செப்பனிட்டேன்.

ஆங்கிலத்தில் எழுதுவது காமிராவில் இரண்டு லென்ஸ்களை அணுக்கி, விலக்கி ‘போகஸ்’ செய்வது போலிருந்தது என் மனதையும் மொழியையும் இசைவடையச் செய்வது. ஆனால் அதன்பின் கட்டுரையை வாசித்தபோது பரவாயில்லை என தோன்றியது. ஆங்கிலத்துக்குரிய நடையழகு இல்லை, அது எளிதில் வரவும் வராது. ஆனால் எனக்குரிய மொழி ஒன்று இருந்தது. எந்த மொழியானாலும் ஒரு மனிதனின் மனம் தான் மொழிநடை என்பது. Style is the man.

மாலை நான்கு மணிக்கு நான் டெல்லி திரும்ப ஒத்துக்கொண்டார்கள். என் பாஸ்போர்ட்டும் என்னிடம் ஒப்படைக்கப்படும் என்றார்கள். அதன்பின் அரங்கசாமி என்னிடம் அளித்திருந்த கடன் அட்டையால் டிக்கெட் போட்டேன். டிக்கெட் போட்டதும் ஒரு நிம்மதி, சரி கிளம்பவிருக்கிறோம். ஆனால் அதற்குள் தூதர அதிகாரி அழைத்தார். “பாஸ்போர்ட்டில் அமெரிக்க விஸா இருப்பதனால் யோசிக்கிறார்கள்” என்றார்.

விமானம் இரவு எட்டரைக்கு. ஏழரை மணி வரை எந்த தகவலும் இல்லை. ஏனென்றால் இன்னொரு அதிகாரி வந்துவிட்டார். அவருக்கு ஒன்றும் தெரியாது, ஆங்கிலமும் தெரியாது. மீண்டும் பழைய நிகழ்வுகள். எட்டு மணிக்கு என்னை ஒரு காவலருடன் விமானத்திற்கு அனுப்பினார்கள். காவலர் என்னை ஒரு கேட் முன் அமரச் செய்துவிட்டு டிவி பார்க்கலானார். நான் பார்த்தபோது என் விமானம் கிளம்பும் கேட் வேறு ஒன்று.

காவலரிடம் என் கேட் வேறு என எழுதி கஸாக் மொழியில் மொழியாக்கம் செய்து காட்டினேன். அவருக்குப் படிக்க தெரியவில்லை. இன்னொருவரிடம் காட்டி படிக்கச் சொல்லி புரிய வைத்தேன். சுருக்கமாக “அங்கே உட்கார்” என்றபின் டிவியில் மூழ்கினார்.

நான் மெல்ல பின்னகர்ந்து அப்படியே கூட்டத்தில் கரைந்து வந்து இண்டிகோ விமானத்தில் ஏறிவிட்டேன். போலீஸ்காரர் என்னானார் என தெரியாது. விமானம் மேலேறும் வரை பதற்றம்.

டெல்லி விமானநிலையம் வந்தேன். அப்படியே டார்ஜிலிங் சென்று சிலநாட்கள் இருந்துவிட்டு வரலாமென அரங்கா சொன்னதனால் டிக்கெட் போட்டிருந்தேன். காலை ஒன்பது மணிக்கு விமானம். இங்கே வந்து பார்த்தால் என் செல்பேசியில் சார்ஜ் இல்லை. சார்ஜ் போடுவதற்கான கேபிள் அரங்காவிடம் சென்றுவிட்டது. அரங்கா என்னிடம் ஒரு பேக்கப் பேட்டரி தந்திருந்தார். அந்த பேக்கப் பேட்டரியும் காலி. என் டிக்கெட் செல்போனில் இருந்தது.

மீண்டும் பதற்றம், பிறகு ஒன்றை கண்டுபிடித்தேன். என் லேப்டாப் கேபிளால் பேக்கப் பேட்டரியை சார்ஜ் போட்டு அதனுடன் செல்போனை இணைத்து ஒருவழியாக சார்ஜ் செய்தேன். கண்கள் சொக்க டார்ஜிலிங் விமானத்தை பிடித்தேன். பாக்தோரா சென்றிறங்கியபோது மீண்டுவிட்டிருந்தேன்.

கசகிஸ்தான் முன்னாள் ருஷ்ய நாடுகளில் எண்ணை வளம் மிக்கது. ஆகவே பணபலம் உடையது. ஆனால் ஜனநாயகம் இல்லை. 16 டிசம்பர் 1991 ல் கசகிஸ்தான் சுதந்திரம் பெற்றது சோவியத் ருஷ்யாவின் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்த நுருசுல்தான் நாசர்பயயேவ் அதன் சர்வாதிகாரியானார். அவருடைய குடும்பம்தான் மொத்த நாட்டையும் ஆட்சி செய்தது. எண்ணை நிறுவனங்களின் ஆதரவுடன் அவர் 2019 வரை ஆட்சி செய்தார். தன் பெயரையே தலைநகருக்கு போட்டார். காசிம் ஜோமார்ட் டோகயேவ் (Kassym-Jomart Tokayev) இப்போதைய அதிபர். இப்போதும் அதே சர்வாதிகாரம்தான், பழைய சர்வாதிகாரி குடும்பத்தின் உள்ளடி எதிர்ப்புகளும் உண்டு.

நான் டார்ஜிலிங்கில் ஸ்டெர்லிங் விடுதியில் தங்கியிருந்தேன். காஃபி கிளப்பில் ஒரு முன்னாள் வெளியுறவு அதிகாரியுடன் பேச நேர்ந்தது, அவர் ராணுவ மேஜராகவும் இருந்தவர். அவர் நான் சொன்ன கதையை கேட்டுவிட்டு வெடித்துச் சிரித்தார். “உங்களுக்கு வலுவான அரசியல் தொடர்புகள் இருந்தது அதிருஷ்டம். நல்லவேளை உங்களுடன் பெண்கள் இல்லை. உங்கள் மனைவியின் பாஸ்போர்ட் இப்படி இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? நமது பெண்கள் அந்த ஊர் சிறையில் நான்கு நாட்கள் இருந்தார்களென்றால் அதன்பின் அவர்கள் உளரீதியாக மீண்டெழுவது கடினம்!”

அவர் சொன்னார்; பயணச்செலவு குறைவு, விசா இல்லை, பலர் செல்கிறார்கள் என்பதெல்லாம் சுற்றுலா செல்வதற்கு ஓர் இடத்தை தேர்வுசெய்ய காரணங்கள் அல்ல. சொல்லப்போனால் இதெல்லாம் அவர்கள் நம்மை கவர்வதற்காக வைக்கும் பொறிகள் என்றே சொல்லவேண்டும். நாம் பார்க்கவேண்டியது மூன்றே விஷயங்கள்தான்.

ஒன்று, அந்த நாடு இந்தியாவுடன் இயல்பான நல்லுறவுடன் இருக்கிறதா என்பது. சிறிய அளவில் தூதரகப்பூசல்கள் இருந்தால்கூட தவிர்த்துவிடவேண்டும். ஏனென்றால் சிறிய அளவில் வெளியே தெரிகிறது என்றால் பெரிய அளவில் உள்ளே சிக்கல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன என்று பொருள்.

இரண்டு, அந்த ஊரில் ஜனநாயகம் உள்ளதா என்பது முக்கியம். நாம் ஜனநாயகத்தை மட்டுமே பார்த்தவர்கள். ஆகவே நமக்கு ஒரு துணிச்சலும், அரசு, சட்டம், மனித உரிமை, சட்டபூர்வ உரிமை எல்லாவற்றின் மீதும் நம்பிக்கையும் உண்டு. நாம் எங்கும் சட்டம் பேசுவோம். ஆனால் ஜனநாயகம் இல்லாவிட்டால் எந்த அதிகாரிக்கும் உண்மையான அதிகாரம் இல்லை என்பதே பொருள். எவரும் எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள். ஒத்திப்போடுவார்கள், தவிர்ப்பார்கள், இன்னொருவரிடம் தள்ளிவிடுவார்கள். ஏனென்றால் எவருடைய அதிகாரமும் வரையறை செய்யப்பட்டிருக்காது. முடிவெடுத்தவர் சிக்கிக்கொண்டால் வாழ்க்கை அழிந்துவிடும். நீதிமன்றம், காவல்துறை, ராணுவம் எல்லாமே டம்மிதான். சர்வாதிகாரியின் உள்வட்டம் மட்டும்தான் முடிவு எடுக்க முடியும். மிகச்சிறிய முடிவுகளைக்கூட அவர்களே எடுக்க முடியும்.

ஒரு ஜனநாயக நாட்டில் ஓர் அதிகாரி சட்டப்படி தன் வேலையைச் செய்யலாம், முடிவெடுக்கலாம், தப்பாகப் போனாலும் எவரும் எதுவும் செய்யமுடியாது, நீதிமன்றம் இருக்கிறது, தொழிற்சங்கங்கள் இருக்கின்றன, ஊடகங்கள் இருக்கின்றன. பார்க்கலாம் என்னும் தைரியம் இருக்கும். சர்வாதிகார நாடுகளில் சட்டம் எல்லாம் ஒரு கண் துடைப்பே. முறையான விசாரணை எல்லாம் இருக்காது. சிறை சென்றால் சென்றதுதான். வெளியே வர எந்த காரணமும் உதவாது. அங்கே தூதரகச் செல்வாக்கு மட்டுமே நம்மை மீட்கும். அதுவும் இல்லையேல் மூக்குப்பொடி டப்பாவை கீழே போட்ட குற்றத்துக்கு மரணதண்டனைகூட கிடைக்கக்கூடும். பல இஸ்லாமியச் சர்வாதிகார நாடுகளிலுள்ள ‘மதஅவமதிப்பு’ சட்டங்கள் கொடூரமானவை. ஓர் இஸ்லாமியர் இஸ்லாமியர் அல்லாத ஒருவர்மேல் குற்றம் சாட்டினாலே போதும், நேரடியாகச் சிறைதான்.

மூன்று, குறைந்த அளவிலேனும் ஆங்கிலம் பேசத்தெரிந்த நாடுகளுக்கே பயணம் செய்யவேண்டும். இல்லையேல் சிக்கல்கள் வரும்போது திகைத்து விடுவோம்.

அவர் இரண்டு வாரம் முன்புதான் இதே போல மாலத்தீவில் இருந்து ஒரு குடும்பத்தை மிகுந்த சிரமங்களுக்கிடையே மீட்டார் என்றார். அங்கே ஒரு விடுதியில் பரிமாறுதல் தாமதமாகியது, வெள்ளைக்காரர்களை மட்டும் கவனிக்கிறார்கள் என்று  குடும்பத்தலைவர் ஏதோ கத்திவிட்டார். மதநிந்தனை செய்ததாக இரு ஊழியர்கள் புகார் செய்ய மொத்தக் குடும்பத்தையும் அப்படியே தூக்கி உட்கார வைத்துவிட்டனர். எந்த  தண்டனை வேண்டுமென்றாலும் கிடைக்கலாம். மீண்டும் வெளிச்சத்தையே பார்க்கமுடியாமலாகலாம். இவர் தன் முழுத்தொடர்புகளையும் பயன்படுத்தி கடுமையாக போராடி, பேரம் பேசி, பெரும் பணம் செலவிட்டு அவர்களை மீட்டார்.

இவர் அவர்களிடம் கேட்டார். “மாலத்தீவுதான் நம்மிடம் நல்லுறவுடன் இல்லையே. அங்கே இன்றைய அதிபரின் பிரச்சாரத்தால் கடும் மதவெறி தலைதூக்கியிருக்கிறது. ஒருவகையான சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் இந்தியாவை அங்கிருந்து வெளியேற்றிவிட்டனர். அங்குள்ள சாமானியர்கள் கூட இந்தியர்களை வெறுக்கின்றனர். எதை நம்பி அங்கே சென்றீர்கள்?”

அவர்கள் வங்காளிகள், கல்லூரி ஆசிரியர்கள். குடும்பத்தலைவர் சொன்னார். “மாலத்தீவு அமைச்சர் சுற்றுலாப்பயணிகளை வரும்படி மன்றாடிய செய்தியை கண்டோம். எங்களுக்கு மோடியையும் பிடிக்காது. மனிதாபிமானக் கொள்கை அடிப்படையில் சென்றோம்”

இவர் அதை நம்பவில்லை. சிரித்தபடி மேலும் விசாரித்தார். உண்மை வெளிவந்தது. அண்மையில் இந்தியச் சுற்றுலாப்பயணிகள் மாலத்தீவு செல்லாமாலானபோது அவர்கள் கடுமையான கட்டணத் தள்ளுபடிகள் அறிவித்திருக்கிறார்கள். செலவு குறைவாக ஆடம்பரச் சுற்றுலா என நினைத்து இவர்கள் கிளம்பியிருக்கிறார்கள்.

“ஒரு நாடு மிகையான சுற்றுலா தள்ளுபடிகள் அறிவிக்கிறதென்றாலே ஐயப்படவேண்டும்” என்றார்.

நான் பெருமூச்சு விட்டேன்.

(மேலே படத்திலுள்ளது கஸகிஸ்தான் அல்ல, சென்னை. நான் விமானத்தில் இருந்து எடுத்த படம்)

முந்தைய கட்டுரைதம்புரான் விளையாட்டு
அடுத்த கட்டுரைஇந்துமதத்தை கற்று அறியமுடியுமா?