அருவ சிந்தனை எனும் பயிற்சி

அன்புள்ள ஜெ

கடந்த சில வருடங்களுக்கு முன்பு நான் வெளிநாட்டில் ஒரு exam attend செய்திருந்தேன் அது ஒரு physical exam என்று சொல்லலாம் general knowledge மற்றும் நம்முடைய own safety சம்பந்தமான ஒரு தேர்வு. இதில் காலையிலிருந்து மதியம் 3 மணி வரை அவர்கள் தெளிவாக எல்லாம் குறிப்பிட்டு சொல்லித் தருகிறார்கள். அதன் பின் ஒரு இருபது கேள்வி பதில்களை அவர்கள் சொல்லித் தந்ததில் இருந்து எழுத சொல்கிறார்கள். எளிதான multiple choice கேள்வி பதில்கள் தான்.

நாங்கள் 18 பேர் கலந்து கொண்டதில் ஐந்து பேர் இந்தியர்கள் மீதம் அனைவரும்  ஐரோப்பா, இங்கிலாந்து, மற்றும் ரஷ்ய நாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் சுமாரான கல்வித்தகுதி கொண்டவர்கள். நமது இந்தியர்கள் அனைவரும் பட்டதாரிகள் மற்றும் பொறியாளர்கள்.

இறுதியில் இந்தியர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் தேர்வில் பாஸ் செய்து விட்டார்கள் நான் உட்பட. எனக்கு அந்தத் துறையில் நல்ல அனுபவம் இருந்ததால் நான் பாஸ் ஆகி விட்டேன். மற்ற நான்கு இந்தியர்களும் பகுதி மதிப்பெண்கள் கூட பெறவில்லை ! விசாரித்ததில் இவர்கள் நான்கு பேரும் கல்லூரிகளில் முதல்வகுப்பு பெற்றவர்கள்!

இதை இங்கே குறிப்பிடுவதற்கு காரணம் இது போன்று நான் காண்பது முதன் முறையல்ல. நான் இது பற்றி வில்லியம்ஸ் என்ற எனது ஒரு ஸ்காட்டிஷ் நண்பனிடம் சற்று விவாதித்தேன். அவன் என்னுடைய கேள்வியை பற்றி சரியாக உள்வாங்கிக் கொண்டு ஒரே வரியில் சொன்னது, பொதுவாக இந்தியர்கள் ஒரு வேலையின் concept பற்றி சரியாக உள்வாங்கி கொள்வதில்லை, அதைச் சரியாக புரிந்துகொள்வதில்லை. ஆனால் அவர்கள் கொடுத்த வேலைகளை விரைவாகவும் திறமையாகவும் செய்வதில் வல்லுனர்களாக இருக்கிறார்கள். இது அவனுடைய அவதானிப்பு. இதை மிகவும் தயக்கமாக சொல்லிவிட்டு என்னிடம் sorry வேறு கேட்கிறான்.

ஒரு விதத்தில் இதை புரிந்து கொள்ள முடிகிறது. இது சரியா ? நீங்கள் ஒரு வகுப்பில்நாம் ஒரு விஷயத்தை philosophize செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்என்று கூறியிருந்தீர்கள். அதன் குறைபாடா, இல்லை வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா. பொத்தாம் பொதுவாக நமது கல்வி முறையைப் பற்றி குறை சொல்லலாகாது என்பது என்னுடைய எண்ணம்.

சுரேஷ் கோவை

அன்புள்ள சுரேஷ்,

இதை நான் நம்முடைய கல்லூரிகளில் பார்த்திருக்கிறேன். மிகப்புத்திசாலிகள் எனப்படும் மாணவர்கள் கூட ஒரு புத்தகத்தில் உள்ளவற்றை நினைவில் கொண்டு அவற்றை மிகச்சரியாக திரும்ப எழுதக்கூடியவர்கள்தான். ஒரு கட்டுரை அல்லது கதையின் மொத்தத்தைச் சுருக்கிச் சொல்பவர்கள் அரிதினும் அரிதானவர்கள். தன் கருத்தைச் சொல்லக்கூடியவர்களை நான் கண்டதே இல்லை. 

அந்த வகையில் ஒரு மொத்த நூலையுமே நினைவில் வைத்துக்கொள்ள கடும் பயிற்சியும் உழைப்பும் தேவை. அந்தப்பயிற்சியும் உழைப்புமனநிலையும் நமக்கு நம் கல்விநிறுவனங்களில் இருந்து வருகிறது. ஆகவே நம் மாணவர்கள் வேலைக்குச் சென்றால் தீவிரமாக, நேரம்காலம் இல்லாமல் மூளையுழைப்புக்கு தயாரானவர்களாக இருக்கிறார்கள். ஆகவே சலிப்பூட்டும் வேலைகளைச் செய்யும் மனித இயந்திரங்களாக திகழ்கிறார்கள். அவர்களுக்கு வேலை கிடைப்பது இதனால் மட்டுமே. 

இது நம் கல்விமுறையின் அடிப்படைச் சிக்கல். சுயசிந்தனை என்பது அங்கே சொல்லிக்கொடுக்கப்படுவதே இல்லை. நான் படிக்கும் காலகட்டத்திலேயே சுயமாக ஏதாவது எழுதுபவனைஒப்பேற்றுபவன்என்றும் அப்படியே அச்சுஅசலாக எழுதுபவனை படிப்பவன் என்றும் நம்முடைய ஆசிரியர்கள் வகைப்படுத்துவார்கள். நான் பிடிவாதமாக என் கருத்தையே எழுதி வந்தேன். ஆச்சரியமென்ன என்றால் பல பல்கலை அளவிலான தேர்வுகளில் எனக்கு மிகச்சிறந்த மதிப்பெண்கள் கிடைத்துமுள்ளன.

பேராசிரியர்களிடம் இதைப்பற்றிப் பேசியதுண்டு. அவர்கள் சொல்லும் சிக்கல் இன்னொன்று. இந்தியக் கல்விமுறையின் முதன்மைச் சவால் என்பதுபுறவயத்தன்மை’ ‘வெளிப்படைத்தன்மைஆகியவற்றை பேணுவதுதான். ஆசிரியர் சாதி பார்த்து, மதம் பார்த்து, பணம் பெற்றுக்கொண்டு மதிப்பெண் வழங்காமலிருக்க அதுவே வழி. அப்படி அவர் வழங்கவில்லை என நிரூபிக்கவும் அதுவே வழி. இல்லையேல் கல்விநிலையங்கள் சூதுக்களங்களாகி விடும்.

தேர்வுத்தாளைத் திருத்துபவர்களுக்குசரியான விடைகொடுக்கப்படுகிறது. அதற்கு அருகில் வரும் பதில்களுக்கு மதிப்பெண் அளிக்கப்படுகிறது. அவர் அந்தப் பதில் அசலானதா என பார்க்க முடியாது, அந்த முறையில் அதற்கு இடமே இல்லை.  அப்படிப் பார்க்கலாமென்றால் அதை விடைத்தாள் திருத்துபவர்கள் தவறாகப் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள் என்பதற்கு உறுதி இல்லை. 

அனைத்துக்கும் மேலாக கற்பிக்கும் ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்துபவர்கள் ஆகியோருக்கே அசலான சிந்தனை இருந்தாகவேண்டும். அவர்களுக்கு அந்த பாடம் புரிந்தாகவேண்டும், அவர்களுக்கு அது வெறும் மனப்பாடம் என்றால் அவர்கள் எப்படி அசலான புரிதலை, சிந்தனையை அளிக்க முடியும்? அடையாளம் காண முடியும்? அதற்கான வாய்ப்பு நம் கல்விமுறையில் இன்றில்லை. 

இப்படி பயின்று வந்தவர்கள் உருவாக்கும் சிக்கலை சமூகவலைத்தளங்களில் காணலாம். நான் எந்தக் கட்டுரை எழுதினாலும் அதில் உதிரி வரிகளை எடுத்துக்கொண்டு அதை விவாதிப்பவர்களை காண்கிறோம். ஓரிரு தகவல்களை மட்டுமே எடுத்து மேலே பேசுபவர்களைக் காண்கிறோம். அந்தக் கட்டுரையின் மையக்கருத்தைப் பேசுபவர்கள் அனேகமாக இல்லை. 

இதை இவர்கள் வேண்டுமென்றே செய்கிறார்கள் என்று  நண்பர்கள் சீற்றமடைவது உண்டு. நான் அவர்களிடம் சொல்வேன், வேறு எந்தக் கட்டுரைக்காவது மையம் சார்ந்து மேலதிக விவாதம் நடைபெற்றுள்ளதா என்று பாருங்கள் என. ஓர் உதாரணம் கூட கண்ணுக்குப்படாது. ஏனென்றால் அது அடிப்படைப் பிரச்சினை. ஒரு நூல், அல்லது கட்டுரையில் சில வரிகளை அடிக்கோடிட்டு வாசித்து அதையே அந்நூல் அல்லது அக்கட்டுரையில் இருந்து எடுத்துக்கொள்வதே நமக்கு நம் கல்விமுறை அளிக்கும் ஒரே பயிற்சி.

நான் தத்துவப்படுத்துதல் என்று சொல்வது இன்னொன்றை. அதை நுண்சிந்தனை என்று சொல்வேன். உண்மையில் சிந்தனை என்பது அதுதான். வரும்காலத்தில் மனிதன் செய்யப்போகும் மூளையுழைப்பு என்பது அதில் மட்டுமே, எஞ்சிய அனைத்தையும் செயற்கை நுண்ணறிவே செய்யும். நமக்கு அளிக்கப்பட்டவற்றில் உள்ள தர்க்கத்தை மேற்கொண்டு முன்னெடுத்து அச்சிந்தனையை விரிவாக்குதல் (தர்க்கம்),  அதைக்கொண்டு புதியவற்றை உருவாக்குதல்வா  (கற்பனை) முற்றிலும் புதிய தளத்திற்கு அதில் இருந்து தாவிச்செல்லுதல் (நுண்ணுணர்வு) ஆகியவையே நமக்கு இன்று தேவையான அருவநுண்வடிவ சிந்தனை.  

ஆனால் அது அடுத்தபடி. இப்போது நமக்கு முதலில் தேவை சாராம்சப்படுத்திக் கொள்ளுதல் அல்லது சுருக்கிக்கொள்ளுதல். அதன்பின்றகே அடுத்தபடிக்குச் செல்லமுடியும். ஒரு கட்டுரை, அல்லது நூலை எப்படி பல கருத்துப் புள்ளிகளாக அணுகி, தொகுத்து, அட்டவணையிட்டு, மனவரைபடத்தை உருவாக்கிக் கொள்ளுதல், அந்த மனவரைபடத்தை எப்படி விரிவாக்கிக்கொள்ளுதல் என்பதையே கற்பிக்கவேண்டும்.

தத்துவ வகுப்புகளில் நுண்சிந்தனை, அல்லது தத்துவப்படுத்தல் சொல்லிக்கொடுக்க முயல்கிறோம். வாசிப்புப் பயிற்சி வகுப்புகளில் சாராம்சப்படுத்தும் பயிற்சியை அளிக்கிறோம். அதற்கு வரவேண்டியவர்கள் மாணவர்கள், ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. ஓரிருவர்கூட இல்லை. பல்வேறு வேலைகளுக்குச் சென்று, அங்கே இக்குறைபாடு தங்களிடமிருப்பதை உணர்ந்து, வருபவர்களே மிகுதி

ஜெயமோகன் 

முந்தைய கட்டுரைஉமா வரதராஜன்
அடுத்த கட்டுரைமுழுமைக்கல்வியில் அரசியல் தேவையா?