அனல் காற்று (குறுநாவல்) : 8

சுசி, அங்கே ஆரம்பித்தது இதெல்லாம். என்ன நடந்தது எப்படி நடந்தது என்று என்னால் சொல்ல முடியாது. அவை என் நெஞ்சில் கோர்வையாக இல்லை. அவை என்னுள் காலத்தால் வரிசைப்படுத்தப்படவில்லை. என்னுடைய நினைவால், இல்லை என் காமத்தால் வரிசைப் படுத்தப்பட்டிருக்கின்றன.

காமத்தை அறிவது பெரும் ஞானிகளான முனிவர்களுக்கே வசப்பட்டதில்லை என்கிறார்கள். என் காமத்தைப் பற்றி நான் மீண்டும் மீண்டும் தனித்த இரவுகளில் எண்ணிக் கொண்டிருக்கிறேன். நம் காமத்தைப் பற்றி நாம் முழுக்க அறிவதேயில்லை. அறிய அறிய எஞ்சிக் கொண்டேயிருக்கின்றன சில. அந்த எஞ்சும் பகுதிகளே எப்போதும் முக்கியமானவை. பிரக்ஞைக்குச் சிக்காமல் ஒளிந்து கொள்வதில் முடிவிலாத மாயங்கள் கொண்டது காமம். தன்னை காதலாக, கனிவாக, கடமையாக, ரசனையாக உருமாற்றிக் கொள்கிறது. வெறுப்பாகவும் அருவருப்பாகவும் மாறிக்கொள்கிறது. ஏன் காமத்தைக் கட்டுப்படுத்தும் சக்தியாகவும் காமத்தைக் கண்காணிக்கும் கண்ணாகவும்கூட காமமே மாறிக்கொள்கிறது.

நான் எட்டுநாள் சந்திராவைப் பார்க்காமலிருந்தேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் அவளையே நினைத்துக்கொண்டு. அப்போது நான் அறிந்தேன், அவளைப் பார்ப்பது எனக்கு எவ்வளவு தேவையாக இருக்கிறது என்று. அவள் உடல். அவளுடைய முகம் .சிரிப்பு. அம்மாவின் ஆல்பத்தை எடுத்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் படத்தை என் நடுங்கும் கரங்களால் தொட்டேன். மார்போடு அவளை அணைத்துக் கொண்டேன். சுசி, அவள் கல்லூரிக்குச்செல்லும்போது சாலையோரம் மறைந்து நின்று அவளை பார்த்தேன். அவளுடைய எடுப்பான நடையையும் தோற்றத்தையும். பின்னர் தனிமையில் நின்று ஏங்கி கண்ணீர் மல்கினேன்.

எட்டாம் நாள் அவளே அம்மாவுடன் எங்கள் வீட்டுக்கு வந்தாள். வெளியே அவர்கள் பேசிக்கோண்டு வரும் ஒலியைக் கேட்டதுமே பதற்றம் கொண்டேன். என் கையில் இருந்து வாசித்துக் கொண்டிருந்த இதழ் நழுவியது. என் சொற்கள் அனைத்து நெஞ்சுக்குள் இறங்கி இறுகிக் கொண்டன. அவர்கள் சிரித்துப் பேசியபடி உள்ளே வந்தார்கள். சந்திரா என்னைப் பார்த்து மிகச்சாதாரணமாகச் சிரித்து ”என்ன வாசிப்பா?” என்றாள்.

அம்மா என்னிடம் ”உனக்கு லயோலாவிலே அப்ளிகேஷன் வாங்கிட்டு வந்திருக்காடா… விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கணும்னு சொன்னியாமே..”

நான் எப்படி என் முகபாவனையை மறைத்தேன் என்று எனக்கே தெரியவில்லை.

”எல்லாத்தையும் பாத்து ·பில்லப் பண்ணுங்க…” என்றபடி அம்மா உள்ளே சென்றாள்.

சந்திரா என் முன்னால் அமர்ந்தாள் ”உன் சர்டி·பிகெட்ஸ்லாம் எங்க? கொண்டுவா” என்றாள்.

நான் எழுந்தேன். ”போட்டோகிராபிக்குகூட ஏதோ அவார்ட் கெடைச்சிருக்குல்ல? அதுக்கு சர்டிபிகெட் இருக்கா?”

நான் தலையசைத்தேன்.

”கொண்டுவா” அறைக்குள் சென்று நான் என் பெட்டிகளையே அர்த்தமில்லாமல் துழாவிக் கொண்டிருந்தேன். அவள் முன் செல்லவே கூடாது என்ற தயக்கமும் அவளை விட்டு ஒரு கணம் கூட சிந்தனை விலகாத மாயமும் சேர்ந்து என்னை செயலற்று அமரச் செய்தன.

”வர்ரியா?” என்றாள். நான் என் ·பைல்களுடன் சென்றேன். அவள்: முன் சோபாவில் மெல்ல அமர்ந்தேன். சோபா நழுவி என்னை வீழ்த்திவிடும்போல் இருந்தது.

”இந்தா இப்பவே ·பில்லப் பண்ணு… நாளைக்கே மணிசார்ட்ட குடுத்து குடுக்கச் சொல்லிடறேன். அங்க சாம்னு ஒரு ஃபாதர் இருக்கார். மணிசாருக்கு நெருக்கமானவர்…”

நான் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப ஆரம்பித்தேன். என் கைகள் நடுங்கின. மனம் நிலைகொள்ள மறுத்தது.

சந்திரா என்னருகே வந்து குனிந்து பார்த்தாள். ”சேச்சே… என்ன நீ கிறுக்கறே… இது காலேஜுக்கு குடுக்கற ·பார்ம்… பாத்து எழுது” நான் திரும்பியபோது அவளுடைய மார்புகள் என்னருகே இருந்தன. நிறைந்த முலைகளின் வெண்ணிறமான இடுக்கு. அவை எனக்கு எத்தனை தூரம் அறிமுகமானவை என்று அறிந்தேன். உதிரிக்கணங்களின் காட்சிகளாக அவை என்னுள் சேர்ந்திருக்கின்றன. நான் அவற்றை எண்ணாத நாளே இல்லை.

முந்தானையை போட்டுக்கொண்டு ”நோ” என்றாள் ”நீ படிக்கிற பையன்… இந்தமாதிரி பார்வையெல்லாம் வேண்டாம். மனசு கெட்டிரும். என்ன… நல்ல பிள்ளை இல்ல? சொன்னா கேப்பேல்ல?”

என் கண்கள் நிறைந்தன. ”சீச்சீ… என்னடா இது?” என்று என் தொடையை தொட்டாள்.

”ஐயம் ஸாரி” என்றேன் தலை குனிந்து.

”சும்மாரு… உன் மேலே எனக்கு ஒண்ணும் கோபம் இல்லை. ஏதோ வெளையாட்டாச் சொன்னே… விடு…·பார்மை பில்லப் பண்ணு”

”சத்தியமா கோபம் இல்லல்ல?”

”சொன்னேன்ல?”

நான் அக்கணமே மலர்ந்து புன்னகை செய்தேன். மனதிலிருந்த எடைகள் முழுக்க அகன்றன. ” உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு…நீ தப்பு பண்ணினாக்கூட அந்த பிரியம் அப்டியேதான் இருக்கும் என்ன? சும்மா மனசைப்போட்டு அலட்டிக்கக் கூடாது”

நான் படிவங்களை எழுதினேன். அவள் அதை குனிந்து பார்த்து திருத்தினாள் என் காதைப் பிடித்து திருகி தப்பைச் சுட்டிக்காட்டினாள். சிரித்தாள். நான் மீண்டும் அவள் மார்புகளையும் தோள்களையும் கழுத்தையும் பார்த்தபோது ”நோ” என்று விரலை ஆட்டினாள்.

சுசி, அவள் என்னுடன் விளையாடினாள் .அல்லது தன்னுடன். அல்லது தன் காமத்துடன். அல்லது தன்னைப் பற்றி தான் கொண்டிருக்கும் எண்ணத்துடன். நான் விளைவுகளைப் பற்றி எண்ணவே இல்லை. அந்த நிகழ்காலத்து பரவசம் அன்றி என் மனதில் எதுவுமே இருக்கவில்லை. அவள் என் கண்முன் மெல்ல மெல்ல வெறும் உடம்பாக ஆகிக் கொண்டிருந்தாள்.

மீண்டும் அவள் வீட்டுக்குச் செல்ல ஆரம்பித்தேன். நவீனுடன் விளையாடினேன். அவள் வீட்டுக்கு குற்றேவல்கள் செய்தேன். அவள் துவைத்த துணிகளைக் காயப்போட்டேன். அவளுக்கு பாத்திரங்கள் கழுவிக் கொடுத்தேன். ஆனால் எங்களுக்கு நடுவே இப்போது அவள் உடல் எப்போதும் இருந்தது. சுசி, ஒரு ஆண் ஒரு பெண்ணை உடம்பாகப் பார்க்க ஆரம்பித்தானென்றால் அந்தப்பெண்ணும் மெல்ல மெல்ல உடம்பாக ஆக ஆரம்பிக்கிறாள். அவனை அவள் வெறுக்கலாம், அருவருக்கலாம். ஆனாலும் அதை அவளால் தடுக்க முடியாது. புத்தியுடன் விளையாடலாம், மனதுடன் விளையாடலாம், ஆத்மாவுடன் விளையாடலாம், ஒருபோதும் நாம் உடலுடன் விளையாடலாகாது

ஏனென்றால் உடல் நம் மனம் போல புத்தி போல ஆத்மா போல நம்முடையது அல்ல. அது இந்த பிரபஞ்சத்தின் ஒரு துளி. பிரபஞ்சத்தின் மாற்றமில்லா பெருநியதிகளுக்குக் கட்டுப்பட்டது. பிரபஞ்சத்தை நம்மால் புரிந்து கொண்டாலொழிய உடலைப் புரிந்துகொள்ள முடிவதில்லை

அவள் ஒவ்வொரு கணமும் தன் உடலைப் பற்றிய கவனத்துடன் இருப்பதைக் கவனித்தேன். என் கண்கள் அவளை மீண்டும் மீண்டும் நாடின. பக்கவாட்டில் நிற்கையில் தெரியும் இடையின் சரிவு ஒவ்வொரு முறையும் என்னை கிளர்ச்சியுறச் செய்தது. முப்பதைத் தாண்டிய குழந்தை பெற்ற பெண்களுக்கே உரிய இடை அது. என் கண்களுக்கு அன்று ஓர் இளம்பெண்ணின் இடை எவ்வகையிலும் அழகாக தெரியவில்லை– அது ஓரு பையனின் இடையாகவே தெரியும்.

அவள் உடல்… அந்த ஒவ்வொரு கணத்தையும் என்னால் நினைவுகூர முடிகிறது குனியும்போது புடவை விலகும்போது தெரியும் மென்மையான வயிறின் குழைவு. பிரசவத்தின் வெண்தழும்புகள் ஆற்றுநீரோடிய மணல்வரிகள் போல… கழுத்தின் மெல்லிய சதைவரிகள். கொழுத்து உருண்ட கன்னங்கள். காதோரத்துப் பூனைமுடி. அனைத்துக்கும் மேலாக அசையும், திமிறும், பெரிய முலைகள்.

முலைகளின் கோடானுகோடிக் கணங்கள். ஆயிரம் பல்லாயிரம் அசைவுகள். முலை ஏன் ஆண்மனதை இழுக்கிறது. அவனை குழந்தையாக ஆக்குகிறதா? இல்லை பலசமயம் அது அவனை ஆணாகத்தான் ஆக்குகிறது. அதன் உயிர்த்தன்மை வேறு எந்த மானுட உறுப்புக்கும் இல்லை. கருணையும் காமமும் கலந்த ஓர் உறுப்பு. உணர்ச்சிகளின் குறியீடாக மட்டுமே இருக்கும் தசைகள்…

சமையலறையில் காய்கறி வெட்டியபடி பேசிக் கொண்டிருந்தபோது அவளுடைய கூந்தல் என்னருகே இருந்தது. பின்னால் திரும்பி பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள். நான் மெல்ல மெல்ல நகர்ந்தேன். இரை நோக்கி நகரும் சிறுத்தை போல. அவளுடைய கூந்தலை மெல்ல முகர்ந்தேன். அதை அவள் உணரவில்லை. மேலும் முகர்ந்தபோது சட்டென்று அவள் கை நின்றது. நான் விலகவில்லை. அவள் சாதாரணமாக கூந்தலை அள்ளி முன்னால் போட்டுக்கொண்டு விலகிச்சென்றாள். பருப்பு டப்பாவை எடுத்துக் கொண்டு ”எப்ப காலேஜ் தெறக்குது?” என்றாள்

நான் ”மண்டே”என்றேன்.

அவள் ”டிரெஸ்லாம் எடுத்தாச்சுல்ல?”என்றாள்.

”யா” திரும்பியபோது அவள் கண்களைச் சந்தித்தேன். அவற்றில் முதல்முறையாக அவளுடைய காமத்தைக் கண்டேன். ஒரு கணத்தில் அவள் விலக அந்த காமம் என்னை மெல்லிய அச்சத்துடன் பின் வாங்கச்செய்தது.

கல்லூரியில் முதல்நாளே ஒரு டிஜிட்டல் காமிரா வாங்கவேண்டும் என்று சொன்னார்கள். நண்பர்களுடன் சென்று ஒரு காமிரா வாங்கினேன். காமிராவுடன் நேராக அவள் வீட்டுக்குத்தான் சென்றேன். சாதாரணமான நைட்டியுடன் டிவி பார்த்துக்கொண்டிருந்தாள். ”சந்திரா ஆன்ட்டி… கெஸ் வாட் ஐ ஹேவ்”என்று குதித்தேன்.

”என்ன?” என்று சிரித்தபடி எழுந்தாள்.

”போய் டிரெஸ் பண்ணிட்டுவாங்க…. போங்க”

”ஏண்டா?”

”போங்க சொல்றேன்”

”என்னடா அது?”

”டிஜிட்டல் காமிரா… மொதல் ஷாட் உங்களைத்தான்… ப்ளீஸ் டிரெஸ் சேஞ்ச் பண்ணுங்க”

”நவீன் வரட்டுமே..அவனை எடுக்கலாம்”

”நான் உங்களைத்தான் எடுக்கணும்… ப்ளீஸ்”

அவள் சென்று உடைமாற்றி வந்தாள். நீலநிற ஷிபான் சேலை. அதேநிறமான பொட்டு. அவள் எத்தனை பேரழகி என்று எண்ணிக் கொண்டேன். வெண்ணிறமான அவள் கைகளும் தோள்களும் நீலப்புடைவையிலிருந்து பூத்து விரிந்தவை போலிருந்தன.

அவளை மீண்டும் மீண்டும் பல கோணங்களில் புகைப்படம் எடுந்தேன். ”ப்ளீஸ் இன்னொரு ஸாரி ஆன்ட்டி…ப்ளீஸ்”

”நோ… வேண்டாம்…” என்றாள் கண்களில் பூரிப்பும் அதே சமயம் எச்சரிக்கை உணர்வுமாக.

”ப்ளீஸ் ஆன்ட்டி ப்ளீஸ்”

மேலும் மேலும் உடைகள். எத்தனை எடுத்தேன் என்றே நினைவில்லை. அதன்பின் ஒவ்வொரு படத்தையாக கம்ப்யூட்டரில் போட்டுப்பார்த்துக் கொண்டிருந்தோம் ..”சந்திரா ஆன்ட்டி, இன்னைக்குள்ள எந்த மாடலும் உங்க அளவுக்கு அழகு கெடையாது” என்றேன்.

”போடா” என்றாள்.

அடுத்த படம் எங்களை அமைதியாக்கியது. காற்றில் முந்தானை விலக அவள் மார்புகளின் முழுமை தெரிந்தது. ”சீ”என்று அவள் கீயைஅழுத்த படம் மாறியது.

நான் திரும்பி அந்தப்படத்தை எடுத்தேன். ”நோ மாத்து… டிலிட் பண்ணு அதை”

”நோ”’ என்றேன் அதைபார்த்தபடி.

”சொன்னதைச் செய்டா” என்று கோபத்துடன் அதை அழித்தாள்

”காமிராவிலே இருக்கே”

அவள் பாய்ந்து காமிராவை என்னிடமிருந்து பிடுங்க முயன்றாள். நான் ”சரி காமிராவை அழிச்சாலும் என் கண்ணுலே இருக்கே…” என்றேன்

அவள் என் கண்களைப் பார்த்தாள். சட்டென்று திரும்பி உள்ளே போய்விட்டாள்.

நான் ஹாலிலேயே தயங்கி நின்றேன். பின்னர் மெல்ல நடந்து உள்ளே எட்டிப் பார்த்தேன். உள் அறையில் சன்னல் வழியாகப் பார்த்தபடி நின்றிருந்தாள்

அருகே சென்றேன். அவள் திரும்பி என்னைப் பார்த்தாள். அழுது கொண்டிருக்கிறாள் என்பதை அப்போதுதான் கண்டேன். அத்துடன் புகைப்படத்துக்காக அவள் கண்களுக்கு மையிட்டிருக்கிறாள் என்பதும் தெரிந்தது. கன்னங்களில் மையின் தீற்றல்.

என் மனம் கொந்தளித்தது. ”ஸாரி ஆன்ட்டி”என்றேன்

”இட் இஸ் ஓகே”

”நான் ஏன் அப்டில்லாம் சொன்னேன்னு எனக்கே தெரியல்லை” என்றேன்.

”எனக்கு ரொம்ப பயமா இருக்கு… பிளீஸ் வேண்டாம்”

”ஸாரி.நான் அப்டி நெனைச்சு சொல்லலை. வாயில வந்திட்டுது”

”நான் என்னை நெனைச்சு பயப்படறேன்… உன்னைப்பத்தி இல்ல… ப்ளீஸ் இனிமே இங்க வராதே…ப்ளீஸ்”

நான் அடிபட்டவன் போல் நின்றேன்

”உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். உன் அம்மாகிட்ட உனக்கு ஒரு தூரம் இருக்குல்ல? அந்த தூரம் என் கிட்டயும் வச்சுகோ. இனிமே தனியா இருக்கிறப்ப வராதே… வெலகிருவோம்..”

”ஏன் ஆன்ட்டி?”

”இது போற எடம் சரியில்லை… வேண்டாம்”

”ஸாரி” என்றேன். பேசமல் திரும்பி காமிராவை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

”அருண்… ப்ளிஸ் கோவிச்சுட்டு கெளம்பாதே”

நான் ஒன்றும் சொல்லாமல் கிளம்பி வெளியே சென்றேன். ராஜம்மா கிழவி லிப்ட் அருகே நின்றிருந்தாள் ”இப்பதான் போறியா?”என்றாள். என்ன கேட்கிறாள் என்று எனக்கு புரியவில்லை

லிப்டில் கிழவியும் வந்தாள் ”காலேஜிலே சேந்திருக்கியா?”

”ஆமா”

”படம் புடிக்க வந்தியாக்கும்?”

நான் கிழவியின் கண்களைப் பார்த்தேன். அவள் என்ன சொல்கிறாள் என்று எனக்குப் புரிந்துவிட்டது. கீழே இறங்கிச்சென்று என் சைக்கிளில் ஏறி விரைந்தேன்.

பதினெட்டு நாள் நான் அவளைச் சந்திக்க போகவில்லை. முதல் இரண்டுநாள் எந்தக் கணத்திலும் கிளம்பி அவளைத் தேடிச் சென்று திரும்பிவந்த நாய்க்குட்டி போல அவள் வாசலில் நான் நிற்பதற்கான சாத்தியம் இருந்தது. ஆனால் இரண்டுநாள் தாண்டியதும் அது எனக்கு தன்னம்பிக்கையை அளித்தது. நான் வல்லமையோடிருக்கிறேன். ஆண்மகனாக இருக்கிறேன். என்னை நான் எங்கும் எதற்கும் அடிமைப்படுத்தவில்லை….

ஆனால் ஆறேழு நாட்கள் தாண்டியதும் அவள் ஏன் என்னைப்பார்க்க வரவில்லை என்று என் மனம் தவிக்க ஆரம்பித்தது. அப்படியானால் அவளுடைய பிரியம் பொய்யானது. அவளுடைய காமத்துக்கு ஒரு முகம்தான் நான். நான் அவளை விட்டுவிட்டால் அவளுக்கு ஒன்றுமில்லை இன்னொருவனை தேடிக்கொள்வாள்—

அந்த எண்ணத்தில் தடுக்கி நின்றுவிட்டேன். உண்மையாகவா? அதற்கான வாய்ப்பு இருக்கிறதா? அவளுக்கு யாரையாவது தெரியுமா? கல்லூரியில் அவளுக்கு நெருக்கமான எவராவது இருப்பார்களா? மூர்த்தி சார் அவளை இருமுறை காரில் கொண்டு விட்டிருக்கிறார். ஆனால் மூர்த்தி சார்—- ஏன் இருக்க கூடாது? ஏன்? எனக்கும் அவளுக்குமான உறவேகூட பிறிதொருவர் கேட்டால் சேச்சே என்று ஒதுக்கும்படியானதுதானே?

அவள் அந்த உறவுக்கும் தயாராக இருப்பவள். காமத்தால் கட்டிழந்தவள். உண்மையில் அதெல்லாம் நான் முயன்று உருவாக்கிக் கொண்ட உணர்ச்சிகள். எனக்கு அந்த இம்சை வேண்டும் போலிருந்தது. பொறாமையும் கசப்பும் சுயவெறுப்புமாக நான் அறைக்குள் முடங்கிக் கிடந்தேன். அடிபட்ட எலும்பு போல மனம் எப்போதும் தெறித்துக் கொண்டிருந்தது.

இரண்டு முறை அவளையும் மூர்த்தியையும் வேவுபார்க்க நான் கல்லூரி வரைக்கும் சென்றேன். ஆனால் உள்ளே செல்லவில்லை. ஏனென்றால் நான் உள்ளூர அது பொய் என்று அறிந்திருந்தேன். அந்தப் பொய்யை நம்ப விரும்பி நான் அவர்களை பலவகையான கோணங்களில் கற்பனை செய்துகொண்டு என் உள்ளத்தின் மென்சதைமீது அமிலத்தைப் பூசிக்கொண்டேன்

ஆனால் அபப்டியே பதினெட்டுநாள். ஆம், பதினெட்டுநாள் நான் தவிர்த்துவிட்டேன். அந்த மூன்று வாரகால மன உளைச்சல் என்னை மூன்று வருட மனவளர்ச்சியை அடையச் செய்தது. என் இளமையின் துள்ளல் முற்றிலும் இல்லாமலாகியது. முற்றிலும் எனக்குள் ஒடுங்கியவன் ஆனேன்.

பத்தாவது நாள் நான் தற்செயலாக எதையோ படிக்க ஆரம்பித்தேன். பலமாதங்களாக நான் வாசிப்பதை நிறுத்திவிட்டிருந்தேன். ஒருவரிகூட என் சிந்தனையை எட்டாமல் வெறும் எழுத்துக்களையே வாசித்துச் செல்பவனாக மாறிவிட்டிருந்தேன். ஆனால் அப்போது ஹிண்டு ஞாயிறு இதழில் வந்த ஏதோ ஒரு இலக்கியக் கட்டுரையை வாசித்தபோது என் மனம் முற்றிலும் அதில் குவிந்ததை உணர்ந்தேன்.

என் மனதின் வலி சட்டென்று நிறுவிட்டது போலிருந்தது. என்னால் வாசிப்பதை நிறுத்தவே முடியவில்லை. மீண்டும் மீண்டும் நூல்களை நோக்கிச் சென்றேன். எந்த அளவுக்கு புத்தகம் செறிவானதாக இருந்ததோ அந்த அளவுக்கு நான் அதில் ஆழ்ந்தேன். மேடம் பவாரியை அப்போதுதான் படித்தேன். அதன் பின் வுதரிங் ஹைட்ஸ். அதன்பின் கான் வித் த விண்ட். அதன்பின் பிரைட் ஆண்ட் பிரஜுடிஸ்…

அந்த நூல்களை பிறிதொரு மனநிலையில் நான் பத்துபக்கம் தாண்டியிருக்க மாட்டேன்… கனமான நூல்களையே என் கைகள் தேடி எடுத்தன. இரவுபகல் இடைவேளையில்லாமல் ஒருநாள் அதிகபட்சம் இரண்டு மணிநேரம் மட்டும் தூங்கியபடி நான் வாசித்துக் கொண்டிருந்தேன். சுசி, அப்போது வாசித்த நாவல்கள் அனைத்தும் எனக்கு வரிவரியாக நினைவிருக்கின்றன என்றால் என் மனம் எந்த அளவுக்கு அதில் மூழ்கியிருந்திருக்கிறது….

சுசி, அது ஒரு மனநோய். இல்லை மனநோயின் விடுவிப்பு. மனம் நிறைந்த ஏரி போல. ஏரியின் ஒவ்வொரு துளியும் அழுத்தத்தால் நெரிபடுகிறது. விடுவித்துக் கொள்ளத் துடிக்கிறது. ஒரு சிறிய வழியை கண்டடைந்ததும் அதன் வழியாக பீரிட்டு வெளிப்பட்டு தன்னை உடையாமல் காத்துக் கொள்கிறது. என் இயல்பு அன்று நூல்களை நாடியது. நான் எப்போதுமே நல்ல வாசகன். என் அம்மா இலக்கிய ஆசிரியை என்பதனால் வந்த பழக்கம். அல்லது அம்மா என்னை நல்ல பையனாக வளர்க்க வேண்டுமென்று நூல்களுக்குள் அடைவைத்திருந்தாள்

பதினெட்டாம் நாள் அவள் வந்தாள். அம்மாவைப் பார்க்க வந்ததுபோல. நான் கூடத்தில் வாசித்துக் கொண்டிருந்தேன். என் புகைபறந்த கண்கள் முன் அவள் உருவம் திரைபோல ஆடியது. சாதாரணமாக ”ஹாய்” என்றபின் உள்ளே சென்றாள்.

நான் உதடசையாமல் ”ஹாய்” என்றேன். எழுந்து என் அறைக்குச் சென்றேன்.

அவள் விடை பெறும்போது அம்மா வந்து ”டேய் சந்திரா கெளம்புறாடா” என்றாள்.

நான் வெளியே சென்று ”பை” என்று சாதாரணமாகச் சொன்னேன். சந்திராவின் கண்கள் என் கண்களைச் சந்தித்தன. அவை திகைத்திருந்தன. என் கண்களில் அவள் ஏதோ விபரீதத்தைக் கண்டுவிட்டாள்.

காலேஜ் விட்டு வெளியே வந்தபோது கேட் வாசலில் ஸ்கூட்டரில் சந்திரா நின்றிருந்தாள். நான் அவளைப் பார்த்தேன். ஒருகணம் தயங்கியபின் அருகே சென்று சாதாரணமாக ”ஹாய் ஆன்ட்டி” என்றேன்.

”வா.. உங்கூட பேசணும்”

”வாங்க டீ சாப்பிட்டுட்டே பேசலாம்”

”நம்ம வீட்டுக்குப் போகலாம்”என்றாள்

நான் ”வேண்டாம்” என்றேன் ”நீங்க சொல்றதுதான் சரி… இதை விட்டுடலாம்…. வேண்டாம் தப்பா போயிடும்” என்றேன்

”டேய் வாடா”என்று உரக்கக் கத்திவிட்டாள். கழுத்தில் ஒரு பச்சை நரம்பு தெரிந்து மறைந்தது.

நான் திகைத்து சுற்றுமுற்றும் பார்த்தேன். என் மனம் அறைபட ஆரம்பித்தது

”வர்ரியா இல்லியா?” என்று மூச்சிரைத்தபடி கேட்டாள்.

நான் அவளை பின்னால் அமரச்செய்து முன்னால் ஏறிக்கொண்டேன். அவள் என்னை தொடவில்லை. அவளுடைய வெப்பமான மூச்சு மட்டும் என் முதுகுச் சட்டையை தொட்டுக்கொண்டிருந்தது. அவளுடைய அபார்ட்மெண்டை அடையும் வரை நாங்கள் ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை.

மாடி ஏறி மேலே சென்றபோது நான் ராஜம்மா கிழவியை தேடினேன். ”என்ன பாக்கிறே?”

”ராஜம்மாகெழம் வேவுபாக்குமே அதான்”

”அவளுக்கு உடம்பு சரியில்லை” என்றாள். இருவரும் மிகச்சாதாரணமாக இருந்தோம். நிதானமாக. ஆம், இருவருக்குமே தெரிந்திருந்தது, அது முடிவுக்கு வந்து விட்டது என்று. நாடகம் முடிந்துவிட்டது, திரை தாழ்த்தியாகிவிட்டது.

கதவை திறந்து உள்ளே சென்றதும் நான் சோபாவில் அமர்ந்துகொண்டேன். அவள் ”காபி சாப்டறியா?” என்றாள்

”வேண்டாம்”

அவள் எதிரே டீபாயை இழுத்துப்போட்டு அமர்ந்துகொண்டு ”நீ ஏன் பாக்கவே வரதில்லை?” என்றாள்.

”நீங்கதானே சொன்னீங்க?”

”சொன்னா?” குரலைத்தாழ்த்தி ”பாக்கணும்னே தோணாதா?”

நான் நிமிர்ந்து அவளைப் பார்க்கவில்லை.

”தோணும்..ஆனா வேண்டாம்” என்றேன்

”ஏன்?” அவள் குரலில் மெல்ல மெல்ல ரகசியம் மிக்க ஒரு கனம் உருவாகிச் சென்றது. என்னை பின்னாளில் பித்துபிடிக்கச் செய்த அந்த அடிக்குரலை அப்போதுதான் கேட்டேன்.

”வேண்டாம்..அவ்ளவுதான்” என்றேன் வீம்புடன்

”என்னை வெறுக்கிறே இல்ல?” இந்த கேள்வியை ஆணிடம் கேட்காத பெண் எங்காவது உண்டா?

”சும்மா வெளையாடாதீங்க… இதெல்லாம் வேண்டாம். என் மனசு என் கன்ட்ரோலிலே இல்ல”

”என் மனசும் என் கன்ட்ரோலிலே இல்ல… அருண் நான் ராத்திரி நிம்மதியா தூங்கி பதினெட்டுநாள் ஆச்சு… மாத்திரை போட்டு தூங்கறேன்…”

”அதுக்கு நான் என்ன பண்னணும்?” என்றேன் சட்டென்று நிமிர்ந்து, கோபத்துடன்

”நீ வரணும்… நீ இல்லாம என்னால முடியலை. பதினைஞ்சு வருசமா உன்னை எனக்கு தெரியும். உன்னை என் இடுப்பிலே தூக்கிட்டுப் போய் கொஞ்சியிருக்கேன்… ப்ளீஸ்டா… நீ இல்லாம என்னால இருக்க முடியல்லை”

”வேண்டாம்.. நான் வரமாட்டேன்” என்றேன்.

”என் மனசை புரிஞ்சுக்கோ… நீ வெறுத்திட்டு போனேன்னா என் வாழ்க்கையில அப்டி ஒரு வெறுமைதான் இருக்கு… எனக்கு பேசிக்கறதுக்கு கூட யாருமில்ல. நீ இல்லேன்னா எனக்கு ஒண்ணுமே இல்லைடா”

”நான் வந்தா உங்களுக்குப் பிரச்சினைதானே?”

”எப்படா இப்டி எல்லாம் தப்பா ஆச்சு? நமக்குத்தெரியாம தப்பா ஆயிடிச்சு.. அதை சரி பண்ணிகிடலாம். நீ பழைய மாதிரி இருடா… நானும் பழையமாதிரி இருக்கிறேன்… நீ நவீன் மாதிரியேதானே இருந்தே” அவள் எட்டி என் கைகளைப் பிடித்தாள்.

கைகளை உதறி ”அப்பநான் சின்னப்பையன்… இப்ப இல்லை” என்றேன். அவள் என்னை பிரமித்து பார்த்தாள். அவளை ஏறிட்டுப் பார்த்து ”இப்ப என்னால உங்கள அப்டி பாக்கமுடியாது… நான் சும்மா பொய்யெல்லாம் சொல்ல விரும்பலை… எனக்கு மனசு முழுக்க உங்க உடம்புதான் இருக்கு… அதான் வரமாட்டேன்னு சொல்றேன்”

அவள் திகைத்துப் போய்விட்டாள்.

நான் எழுந்தேன் ”இனிமே வரவே மாட்டேன்… குட்பை” என்று சொல்லிக் கொண்டு கிளம்பினேன்.

”அருண் ப்ளீஸ்… என்னை விட்டுட்டு போகாதே… பதினைஞ்சு வருஷமா நான் ஒவ்வொரு நாளும் உன்னை நெனைச்சிட்டு இருந்திருக்கேன்… நீ இல்லாம என்னால ஒருநாள்கூட இருக்கமுடியாது… டேய் நில்டா”

பின்னால் வந்து என்னைப் பிடித்தாள். கண்களில் ஆவேசத்துடன் ”இப்ப என்ன வேணும் உனக்கு? சொல்டா” என்றாள்

எனக்குள் உறைந்த அந்தப் புராதனமான ஆண் கண்டுகொண்டான், அதுதான் அந்தக் கணம் என. நான் அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டேன். ஆவேசமாக அவள் கழுத்திலும் கன்னங்களிலும் முத்தமிட்டேன்.

”அருண் பிளீஸ்.. ப்ளீஸ்… வேண்டாம்டா..” என் மார்பைப் பிடித்துத்தள்ளி பின்னுக்கு முகத்தைக் கொண்டு சென்றாள். மார்பகங்களின் பிதுக்கமும் சிவந்து கனிந்த தோள்களும் இழுபட்ட கழுத்தின் மென்மையான வெண்மையும்–

நான் அவளை சுழற்றி சுவரோடு வைத்து அழுத்தி அவள் உதடுகளைக் கவ்விக்கொண்டேன். என் வலக்கையால் அவள் மார்பகத்தை பற்றினேன். அவள் மேலாடையை விலக்கி ஜாக்கெட்டை கிழித்து மார்பகங்களை ஏந்திக்கொண்டேன்.

அவள் உடல் தளர்ந்தது. மெல்லிய விம்மல் போலவோ கேவல் போலவோ ஒரு ஒலியைக் கேட்டேன். அது அரைக்கணம் என்னை தளரச்செய்தது. ஆனால் அவள் என்னை பொங்கி எழுந்த ஆவேசத்துடன் அணைத்து என் உதடுகளை கவ்வி முத்தமிட்டாள். என்னை அவளே உந்தி சோபாவில் படுக்கச் செய்தாள். நான் அவள் உடலைக் கையாள ஆரம்பித்தேன். ஆண் உடலும் பெண் உடலும் ஒன்றை ஒன்று உணரும்போது எப்போதும் உணர்ந்து வந்த ஒன்று மறைகிறது. உடலின் முழுமையின்மை எனலாம் அதை.

பின்பு எழுந்து அவளை பார்த்தேன். அவள் புடவையை இழுத்து தன் மீது போட்டுக் கொண்டாள். முலைக்கண்கள் மெல்லிய ஷிபான் புடவைக்கு மேல் தெரிந்தன. நான் புன்னகை செய்தேன்.

அவள் தலையை பக்கவாட்டில் சரித்து கிடந்தாள். கண்கள் நிறைந்து காதில் வழிந்தன. நான் சரிந்து அவள் கண்களை துடைத்தேன். என் கைகளை தட்டி விட்டாள்.

”நான் ஸாரின்னெல்லாம் சொல்லப்போறதில்லை” என்றேன். ”ஏன்ன இப்ப செஞ்சதையெல்லாம் நான் மனசால பல தடவை செஞ்சாச்சு..அது இப்பதான் தெரிஞ்சுது…”

அவள் என் சொற்களைக் கேட்கவில்லை. மௌனமாக அழுது கொண்டிருந்தாள். நான் எழுந்து சமையலறைக்குச் சென்று இரண்டு காபி போட்டுக்கொண்டு வந்தேன். அவள் இல்லை. அவளுடைய புடவை கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தபடி காபியை குடித்தேன்.

அவள் பாத்ரூமில் இருந்து மார்பில் பாவாடையைக் கட்டிக்கொண்டு வந்தாள். அவளுடைய நடுவயதுப் பெண்களுக்குரிய பெரிய தோள்களையே தாகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

”காபி சாப்பிடு” என்றேன்.

அவள் வந்து காபியை எடுத்துக் கொண்டதும் மீண்டும் அவளைக் கட்டிக்கொண்டு தோள்களில் முத்தமிட ஆரம்பித்தேன். அவள் என் முகத்தைப் பிடித்து தூக்கி கண்களில் கண்ணீருடன் கேட்டாள் ”அருண் நான் ஒண்ணு கேக்கட்டுமா? பிராமிஸ் இல்லை வரம்.. ப்ளீஸ்”

”கேள்”

”உன் அம்மாவுக்கு இது தெரியக்கூடாது… எக்காரணத்தாலும் தெரியக்கூடாது. தெரிஞ்சா அதுக்குப் பின்னாடி நான் உசிரோட இருக்கிறதிலே அர்த்தமில்லை

”தெரியாது.. கண்டிப்பா தெரியாது போதுமா?”

அவள் என்னை முத்தமிட்டாள். காமம் எரியும் பெண் விழிகள். காட்டை எரிக்கும் கனல் துண்டுகள் போல. முனகலாக ”என்னை சந்திரான்னு கூப்பிடு” என்றாள்

”சந்திரா”

”அடியே சந்திரான்னு கூப்பிடு”

”சந்திரா. அடி சந்திரா… என்னடி நெனைச்சிருக்கே நீ?”

அவள் என்னை இறுக்கி வெறியுடன் முத்தமிட்டாள். இம்முறை அது அவளுடைய உறவு.

[மேலும்]

ஜெயமோகனின் குறுநாவல் அனல் காற்று – 7, அனல் காற்று – 6 அனல் காற்று – 5, அனல் காற்று – 4, அனல் காற்று – 3, அனல் காற்று – 2, அனல் காற்று – 1

முந்தைய கட்டுரைஅனல் காற்று (குறுநாவல்) : 7
அடுத்த கட்டுரைபடைப்புகள்:கடிதங்கள்