யுவன் சந்திப்பு – கடிதம்

யுவன் சந்திரசேகர் சந்திப்பு – வான்கூவர்

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் இந்த ஆண்டின் பெரும்பகுதி கனடாவில் கழிக்கவந்திருப்பதாக தெரிந்தவுடன் ஆஸ்டின் சௌந்தர் வான்கூவரில் ஒரு சந்திப்பு நிகழ்த்துவதற்காக திட்டம் வகுத்தார். வான்கூவரில் வசிக்கும் நண்பர்கள் மகேந்திராவும் ஆனந்தும் ஒரு Meet the Author கேள்விபதில் நிகழ்வை ஒருங்கிணைத்தார்கள்.

நான் கலிபோர்னியா வளைகுடாவிலிரிந்து சியாட்டிலுக்கு பறந்து, அங்கிருந்து நண்பர் ஶ்ரீனி சங்கரன் காரில் இருவரும் புறப்பட்டு,போர்ட் ஆஃப் என்ட்ரியில் ஐந்து நிமிட கேள்விகளுக்கு சரியாக விடையளித்து,கனடாவில் நுழைந்தோம். என் முதல் கனடா நுழைவு அமெரிக்காவின் இன்னொரு நகரநுழைவு போன்றே இருந்தது, சாலைபெயர்ப்பலகைகளின் எழுத்துரு (font)மாற்றத்தைத் தவிர. யுவன் அவர்களை வான்கூவர் விமானநிலையத்தில் வரவேற்று மகேந்திரன் வீட்டிற்குச் சென்று தங்கினோம். அந்நாள் இரவே யுவன் வீசப்பட்ட கேள்விகளுக்கு உற்சாகமாக பதில் சொல்ல தொடங்கினார்.

அடுத்த இரண்டு நாட்களில் வான்கூவர் நகரமையத்திற்கும் மலைத்தொடர் கார் ஓட்டுதலுக்கும் பயணித்தோம். யுவன் மிக இயல்பான உரையாடல்களை நிகழ்த்தினார். வான்கூவரில் ஒவ்வொரு அரைமணிக்கும் வெயில் மழை மந்தம் என வானம் விளையாடிக்கொண்டே இருந்தது. அவரோ தென்றலைப் போல தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருந்தார். கொண்டோலா எனப்படும் மலையேறு கயிற்றுச்சிமிழில் அமர்ந்து சில நிமிடங்களில் மூவாயிரம் அடி ஏறினோம். அதற்குள் காற்று அடர்த்தியானது குளிர் ஏறியது. யுவன், மொழி என்று நாம் பேசுவது காலத்தை மாற்றத்தின் மூலம் உணர்வதற்கே என்றார். அவருடைய படைப்புகளே அதற்கு சிறந்த சான்று என்று தோன்றியது. மொழிமாற்றம் மூலமாக வட்டார மாற்றங்களையும் கால மாற்றங்களையும் பண்பாட்டு மாற்றங்களையும், மொழிவழியாகவும் மொழியின்மைவழியாகவும் பல்வேறு மெய்மைகளையும் வெளிகொணர்பவையாக அவர் படைப்புகள் உள்ளன.

பொது அவையில் உரையாடும்போது புது வாசகர்கள் (புது எழுத்தாளர்களுமேகூட) கடைபிடிக்கத்தகுந்த சில வழிமுறைகளும் சில குட்டுகளும் கிடைத்தன: தன்கருத்துகளைத் தெரிவிக்கும்போது எல்லோராலும் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டஒரு பொதுபார்வையாக அல்லாமல் தன்னுடைய தனிப்பட்ட பார்வையாகவே முன்வைப்பதுஒரு படைப்பைப்பற்றி விமர்சகர்களின் பார்வையைப் படித்திருந்தாலும் அதையொட்டி நம் பார்வையை வளர்த்தெடுக்காமல் நம் பார்வையைத் தனியே தொகுத்துஉரைப்பதுஇவற்றைச் சாரமாக சொல்வதென்றால் ஒவ்வொருவரும் தனிப்பட்ட அழகியலையும் பார்வையையும் வகுத்துக்கொள்வது எனலாம்.

இதுவரை தமிழில் எழுத்தாளர்கள் உருவானதும் உருபெற்றதும் ஆற்றுப்பட்டதும் நில மையங்களை வைத்தே இருந்தன. அது சுந்தர ராமசாமியின் வீடாகட்டும் கோவில்பட்டி என்கிற பெரு மையம் ஆகட்டும். இனி, சீரிய எழுத்தாளர்கள் ஒருநில மையத்திலிருந்தல்லாமல் எங்கிருந்துவேண்டுமானாலும் மையம் கொண்டு வாசகர்களிடமும் புதிய எழுத்தாளர்களிடமும் உரையாடலில் இருக்கலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது. அடியமர்ந்து கற்றலில் அடி என்பது நேரடியான அடி என்ற பொருளில்லாமல் இன்னும் விரிவான பொருளை நோக்கிச்சென்றுகொண்டிருக்கிறது. இனி வரப்போகும் எழுத்துக்கும் இதுவே பொருந்தும்.

இதுவரைக்குமான தமிழ் நவீன எழுத்தாளர்களின் படைப்புகளை ஒரு நிலத்தோடும் ஒரு பண்பாட்டோடும் தொடர்புறுத்தி கொள்ளும் பழக்கம் இருந்துவந்துள்ளது. இனிவரும் படைப்புகள் மனிதரின் நிலமாற்றங்களையும் காலவெளியினூடான பண்பாட்டுமாற்றங்களையும் இன்னும் பெரிதளவில் வெளிபடுத்தும் என்றே தோன்றுகிறது.

நன்றி

விஜய் (கலிபோர்னியா)

முந்தைய கட்டுரைஒரு தலைமுறை, சுசித்ரா கட்டுரை- கடிதம்
அடுத்த கட்டுரைபாமதி