புத்தகக்கண்காட்சியில் வாங்கிய கவிஞர் இசையின் முழுத்தொகுப்பு (2008-2023), காலச்சுவடு பதிப்பகம் நூலை படித்துமுடித்தேன். அறுநூறுக்கும் மேற்பட்ட கவிதைகள்.
‘லூஸ்ஹாருக்கு மயங்குதல் அல்லது காமம் செப்பாது கண்டது மொழிதல்‘, ‘ஜிலேபிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்டவன்‘, ‘இந்தமுறை சொர்ணலதா சரியாகப் பாடவில்லை‘, ‘பேரின்பவகைப்பாட்டில் வரும் ஃப்ளம் கேக் சாப்பிடுதல்‘ என்று வித்தியாசமான தலைப்புகளில் கவிதைகள்.
எவ்வளவு பலம்கொடு ஊதியும்
அதிகாரத்தின் மயிர் அசையாதது கண்டபின்
ஒவ்வொரு மயிராக சுடத்தொடங்கியவன்
இது கவிதையல்ல, கவிதையின் தலைப்பு.
‘காலம் அல்ல, தருணங்களே நித்தியம்‘ என்ற பெருந்தேவியின் முன்னுரை பின்னுரையாக நூலின் கடைசியில் பதிப்பிக்கப்பட்டிருப்பது நல்ல உத்தி. இல்லாவிட்டால் வாசக மனங்கள் அவருடைய தெரிவில் குறுகிப்போக ஒரு வாய்ப்புண்டு. பெருந்தேவியின் பார்வையில் இசையின் கவிதை உலகத்தில் இந்த இரண்டு தளங்களில் எழுதப்பட்ட கவிதைகள் சிறப்பாகப் பரிமளிக்கின்றன. ஒன்று அன்றாடப் புழங்கு பொருட்கள் உயிரோடு உலவும் கவிதைகள், மற்றொன்று காட்சிகளை முன்னிறுத்தி அன்றாடத் தருணங்கள் கலைவழி சமைக்கப்பட்ட கவிதைகள். பகடி ஒரு உத்தி மாத்திரமே என்கிறார். ஆனால் அந்த உத்தியை மேற்சொன்ன இரண்டு வகையிலும் தாராளமாகப் பயன்படுத்தியிருக்கிறார் இசை. ஆனால் என் ஓட்டு தருணங்களை நித்தியப்படுதலுக்கே. உதாரணத்திற்கு மனைவியின் மறை நடனமும், மகளின் அதிகாரமும் இப்படிக் கவிதையாகின்றன.
நடனம்
சமையற் கூடத்தில்
என் மனைவியின்
சிறு நடனச் சுந்தரத்தை
நான் கண்டு விட்டேன்.
பிறகும்
அவள் அந்த வெண்டைக்காய்ப் பொரியலை
சுவைத்துப் பார்க்கச் சொல்வது
ஒருவித கூறியது கூறல்தான்.
—-
ஏரித்தாமரை சொன்ன கதை
முறைத்தபடியே
புகைப்படத்திற்கு நிற்கும்
தகப்பனின் கன்னச் சதையை இழுத்துப் பிடித்து
“கொஞ்சம் சிரி..”
என்று அதட்டுகிறாள் சிறுமகள்.
அப்புறம்
அவருக்கு
சிரிப்பை அடக்க
அவ்வளவு நேரம்…
அவ்வளவு நேரம் பிடித்தது.
செருப்படி வாங்காதோர் யார்? செருப்படி என்றால் செருப்படியேதானா, அதற்கு இணையான தருணங்கள். தன்னுடைய நூறாவது செருப்படியை இப்படிக் கொண்டாடுகிறார் இசை.
விகடகவி மட்டையை உயர்த்துகிறார்
முதன்முதலாக நான் செருப்படி வாங்கியபோது
வானத்தில் போன பறவைகள் அப்படியே
நின்றுவிட்டன
கடலில் எழும்பிய அலைகள் அப்படியே
ஸ்தம்பித்துவிட்டன
அசையும் பொருளெல்லாம் ஒரு நாழிகை
அப்படியே நின்றுவிட்டன
இரண்டாவது முறையாகச் செருப்படி வாங்கியபோது
பறவைகள் அதுபாட்டுக்குப் பறந்தன
அலைகள் அதுபாட்டுக்கு அடித்தன
செருப்படி வாங்குவதற்காகப் படைக்கப் பட்டவர்கள்
கடவுளின் தரவரிசைப் புத்தகத்தில்
கடைசியில் இருக்கிறார்கள்
செருப்படி வாங்கிக்கொண்டு கவிதை எழுதுபவர்கள்
அதற்கும் கொஞ்சூண்டு மேலா
அல்லது
கடைசிக்கும் கடைசியா
என்றெனக்குத் தெரியவில்லை
என்னை எல்லோரும் விகடகவி என்பதால்
நான் எல்லாவற்றையும் விளையாட்டாக்கிக் காட்ட
வேண்டியுள்ளது.
எனவே 100 ஆவது செருப்படியின்போது
இந்த உலகத்திற்கு முன்னால்
நான் ஒரு மட்டையை உயர்த்திக் காட்டினேன்.
ஆனால் 101 ஆவது செருப்படி
ரொம்பவும் வலுவாக நடுமொகரையில் விழுந்தது
நான் ஒரு விகடகவியாதலால்
வாயை இளிப்பிற்குக் கொண்டுவர முயன்றேன்
அதற்குள்
கண்ணிரண்டும் கலங்கிவிட்டன
கவிதையின் ஆரம்பத்தில் ஹேமநாதபாகவதரின் ‘திருவிளையாடல்‘ பட வசனங்களை நினைவுபடுத்தும் வரிகளைப் படிக்கும்போது
வாசகனுக்கு வரும் குறுஞ்சிரிப்பு, பின் 100 வது செருப்படிக்கு மட்டையை உயர்த்தும்போது பெருஞ்சிரிப்பாக மாறி, அவர் 101 ஆவது செருப்படியை “வலியக் கண்ல காட்டிராதரா… ச்ச்சூனா ப்பானா” என்று வடிவேலு மாதிரி சமாளிக்கும்போது வெடிச்சிரிப்பாக முடிந்துவிடுகிறது.
அட்டைப்படத்தில் தலைகீழாகச் சிரித்துக்கொண்டிருப்பது அந்த நடுமொகரையில் 101 ஆவது செருப்படி வாங்கிய இசைதான். கண் மட்டும் கொஞ்சம் கலங்கியிருக்கலாம். அடுத்த பதிப்பில் கவனிக்க.
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்